
விளிம்புநிலை மக்களின் நிலையற்ற வாழ்வியல் குறித்தும் அவர்களின் மீதான வர்க்க-சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றியும் எதிர்த்துக் குரலெழுப்பி வருபவர்களில் எழுத்தாளர் அழகிய பெரியவன் முக்கியமானவர். அவரது படைப்புகள் எப்போதுமே பெருநகர மாயைகளையோ நடுத்தர வர்க்கத்தின் புனைகதைகளையோ பேசுபவை அல்ல; வறண்ட செம்மண் நிலமும் சாதிய அடுக்கதிகாரமும் வறுமையும் பிணைந்த கிராமப்புற எளிய மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வியலைப் பதிவு செய்பவை.
அவர் எழுதிய ‘வனம்மாள்’ என்ற சிறுகதை, நிலத்துக்கான போராட்டம், மரங்களின் மீதான மூதாட்டியின் தாயுள்ளம் மற்றும் நவீன நீதித்துறையின் வறண்ட ‘லாஜிக்’ ஆகியவற்றுக்கு இடையேயான மோதலைப் பற்றிப் பேசுவதாகும்.
கதையின் தலைப்பான ‘வனம்மாள்’ என்பது வெறும் பெயரன்று; அது இயற்கையையும் மரங்களையும் தன் குழந்தைகளாகப் பாவித்து வாழும் மூதாட்டியின் அடையாளமாகும். கதைத் தலைவி சாலம்மாள் தனிக்கட்டை; பிள்ளையில்லாததால் கணவனால் துரத்தப்பட்டவள்; நாதியற்றவளாக ஊருக்கு ஒதுக்குப்புறமான மோட்டாங்காட்டிலும் மேட்டுநிலத்திலும் வாழ்ந்து வருபவள்.
சமூகத்தால் கைவிடப்பட்ட, குடும்பத்தாரால் ஒதுக்கட்ட பெண்ணின் தாய்மை எங்குப் போய் முட்டும்? அந்தத் தாய்மைதான் மாஞ்செடிகளின் மீது பாய்கிறது.
“மரம், மரமின்னு பைத்தியமா கீறாளே! காட்டுலேர்ந்து எறங்கிவந்துட்டாளா!” என்று ஊரார் அவளைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். ஆனால், சாலம்மாளுக்கு அந்த மரங்கள் வெறும் தாவரங்கள் அல்ல; அவளது வயிற்றில் பிறக்காத பிள்ளைகள்.
இயேசு சபையினர் தரும் இலவசச் செடிகளையும் அரசாங்கப் பண்ணையில் வாங்கிவரும் மல்கோவா, பங்கனப்பள்ளி செடிகளையும் அவள் தன் பச்சைப்பிள்ளைகளைப் போலக் கையாண்டு வளர்க்கிறாள்.
ஊரின் பொதுவெளியில் இருக்கும் அரசமரத்தையும் நாகமரத்தையும் வெட்ட வரும்போது தலைவிரி கோலமாக எதிர்த்து நிற்பவள் சாலம்மாள். அவளது அந்த வெறித்தனமான எதிர்ப்பு வெறும் பித்து நிலையன்று; தன் வாழ்நாளில்தான் இழந்த உறவுகளையும் அரவணைப்பையும் அந்த மரங்களின் மீது ஏற்றிவிட்ட ஜீவனின் பிழைப்புக்கான போராட்டம் அது.
சாலம்மாளின் வாழ்க்கையில் ரங்கமணியின் வருகை பெரும் சோகத்தின் தொடக்கமாகும். கிராமத்துச் சாதிய-வர்ணக் கட்டமைப்பில் ஓரளவு பலம் பொருந்திய நடுத்தெருவைச் சேர்ந்த ரங்கமணியும் அவளது மச்சினன்மார்களும் சாலம்மாள் போன்ற நாதியற்ற எளிய விளிம்புநிலை மனிதர்களின் நிலத்தின் மீதும் வாழ்வின் மீதும் எப்போதும் ஒருகண்ணை வைத்திருக்கிறார்கள்.
சாலம்மாள் தன் ரத்தத்தைச் சிந்தி வளர்த்த மாஞ்செடிகளை ரங்கமணி வெட்டிச் சாய்க்கும் செயல், வெறும் மரங்களின் மீதான வன்முறையன்று; அது வலிமையற்ற தனிமனிதனின் அக உலகை நொறுக்கும் அதிகாரத்தின் வன்முறை.
கன்றுகளை வைத்து, குளம் குட்டைகளிலிருந்து தண்ணீர் சுமந்துவந்து வளர்த்த செடிகள் ஒரே இரவில் வெட்டி வீழ்த்தப்பட்டபோது, சாலம்மாள் படும்வேதனை ஒரு தாய் தன் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டதால் அடையும் வேதனைக்கு நிகரானதைக் குறிக்கிறது.
“அய்யோ எம் புள்ளிங்களே! என் செல்லங்க போச்சே” என்று வயிறிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அவள் அழும் அழுகை, இந்தச் சமூகம் ஏழைகள் மீது நடத்தும் அமைதியான வன்முறையின் வெளிப்பாடாகும்.
இக்கதையின் முக்கியமான திருப்புமுனையும் எழுத்தாளர் அழகிய பெரியவனின் கறாரான விமர்சனமும் நிலைகொள்வது ‘கோர்ட்டு’ வாசலில்தான். சாலம்மாள் தன் மரங்களை வெட்டியவர்களைத் தண்டிக்கக் கோரி காவல் நிலையம், வக்கீல், கோர்ட் என்று அலையாத இடமில்லை. தன் வாழ்நாளின் அத்தனை சேமிப்பையும் உழைப்பையும் அந்த வழக்கிற்காகச் செலவிடுகிறாள்.
ஆனால், நீதிபதியின் தீர்ப்பு அவளது உலகத்தையே தலைகீழாகப் புரட்டிவிடுகிறது:- “மரங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் வெட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவை புதிதாக நடப்பட்டிருந்த மாஞ்செடிகள் என்பதனால் வேர் பிடிக்காமலும் செத்திருக்கலாம்.”
இந்த இடத்தில்தான் நவீனச் சமூகத்தின் சட்டமும் நியாயமும் எவ்வளவு தூரம் எளிய மனிதர்களின் உணர்வுகளிலிருந்து விலகி நிற்கின்றன என்பது தெரியவருகிறது. சட்டம் ‘லாஜிக்’கைப் பேசுகிறது; ஆதாரங்களைக் கேட்கிறது. ஆனால், ஒருசெடி வளர்வதற்குப் பின்னால் இருக்கும் ஒருதாயின் கண்ணீரையும் உழைப்பையும் எந்தச் சட்டத்தாலும் அளவிட முடியாது. ரங்கமணியும் அவளது கூட்டாளிகளும் செய்த குற்றத்தை நிரூபிக்க சாட்சியில்லை என்ற பெயரில் தப்பிப்பதும் நீதிபதி தன் வறண்ட அறிவால் சொன்ன தீர்ப்பு சாலம்மாளுக்கு மரண வலியைத் தருகிறது.
கோர்ட்டில் தோற்றுப்போய், தன் செடிகள் கொடூரமாக அழிக்கப்பட்டதை உணர்ந்தும் சாலம்மாள் தளர்ந்துபோவதில்லை. அவள் மீண்டும் தன் மோட்டாங்காட்டிற்குத் திரும்புகிறாள்.
பேத்தி சிவப்பிக்கு கோடை விடுமுறையில் துணிமணி வாங்கித்தர உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைக்கூட உடைத்து, புதிய மாங்கன்றுகளுக்கு முதலீடு செய்கிறாள்.
“போட்டும், இந்த ஒரு வருசம். பொறகால எம்புள்ளிங்க நீங்களே பாத்துகுக மாட்டீங்களா ராசாத்தியெ” என்று மாமரங்களை நோக்கிக் கேட்கும் சாலம்மாள், தனிமனித வாழ்வியலின் உச்சபட்சத் தியாகத்தின் குறியீடாக மாறுகிறாள்.
மனிதர்கள் தன்னை ஏமாற்றினாலும் சட்டம் தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினாலும் இயற்கையும் மரங்களும் தன்னை ஒருபோதும் கைவிடாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே அவளது தொடர்ச்சியான இயக்கத்திற்குக் காரணமாகிறது.
இந்தச் சிறுகதை இலக்கியத்தில் விளிம்புநிலை மக்களின் அக உலகையும் அவர்களின் நிலப் போராட்டத்தையும் மிகத் தீவிரமாகப் பதிவுசெய்துள்ளது. அதிகார வர்க்கத்தின் ஏளனமும் நீதித்துறையின் வறண்ட பார்வையும் எளிய மூதாட்டியின் வாழ்வை எப்படி நசுக்குகின்றன என்பதை இக்கதை எந்தவித சமரசமுமின்றிப் பேசுகிறது. சாலம்மாள் இயற்கையோடு இயைந்து வாழ முயன்று, மனிதர்களின் வன்முறையால் சிதைக்கப்பட்ட ஒட்டுமொத்த எளிய மக்களின் ஆன்மாவின் குரலாவாள்.
– – –
