இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 129.வர்க்கச் சரிவு (ஆதவன் தீட்சண்யாவின் ‘காலத்தைத் தைப்பவனின் கிழிசல்’ சிறுகதையை முன்வைத்து…)

 

விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் சிக்கல்களை, வரலாற்றுப் பின்புலத்துடன் மிக ஆழமாகவும் கறாராகவும் பதிவு செய்துவரும் எழுத்தாளர்களுள் ஆதவன் தீட்சண்யா குறிப்பிடத்தக்கவர். அவர் எழுதியுள்ள ‘காலத்தைத் தைப்பவனின் கிழிசல்’ என்ற சிறுகதை, எளிய தையற்காரனின் பரம்பரையை வரலாற்றைக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காட்டி, நவீன நுகர்வுவாதச் சமூகமும் முதலாளித்துவச் சூதாட்டமும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.

கதையின் தொடக்கப் பகுதி மராட்டிய மன்னர்களின் காலம் தொட்டுத் தொடரும் தையற்காரர்களின் பரம்பரையை விவரிக்கிறது. தஞ்சை மராட்டிய சாம்ராஜ்யம், யோகாம்பா பாயியின் வரலாறு, மைசூர் மகாராஜாவின் தையற்காரரான வெங்கோஜி இங்கிலாந்து போய் தையற்பயிற்சி பெற்றதுவரை விரிவடையும் இந்த வரலாறு, வெறும் தகவல்களின் தொகுப்பு அன்று; அது உழைக்கும் மக்களின் உழைப்பு எவ்வாறெல்லாம் அரசர்களால் பயன்படுத்தப்பட்டு, பின்னர்க் கைவிடப்பட்டது என்பதன் குறியீடாகும்.

மராட்டிய மன்னர்களின் அந்தப்புர வரலாறுகளும் காமக்கிழத்தியர்களின் கதைகளும் ஒருபுறமிருக்க, அந்த அரசப் பரம்பரையின் ஆடையலங்காரப் பொறுப்பைச் சுமந்தவர்கள் இவர்களது முன்னோடிகள்தான். தங்களைத் தனித்துவமான சாதியப் பிரிவாகவும் (ராவ்), கலைநயமிக்க கைவினைஞர்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்ட இவர்கள், காலம் மாறியதும் அரண்மனைகளை விட்டுவெளியேறி சாதாரண மக்களின் தையற்காரர்களாக மாறுகின்றனர்.

பிரிட்டிஷ் ராணுவத்திற்குச் சீருடை தைப்பதிலிருந்து மாகாணங்களின் ஜமீன்தார்களுக்கு ஆடைகள் தைப்பது வரை இவர்களது கைநயம் தொடர்கிறது. ஆனால், காலவோட்டத்தில் இந்தத் தொழில் வெறும் பிழைப்புக்கான எளிய கைத்தொழிலாகச் சுருங்கிவிடுகிறது.

மனோகர்ராவின் தந்தையான சாம்பாஜிராவ் காலத்தில் தையற்கடை என்பது நாகரிகமான, வசீகரமான இடமாகப் பரிணமிக்கிறது. நாகை ஜி.வியின் கைவண்ணத்தில் மிளிரும் பெயர்ப்பலகை, எலக்ட்ரிக் பேனா ஸ்கெட்ச், பித்தளையிலான கத்தரிக்கோல் என அந்தக்காலம் தந்த நவீனத்தை ஏற்றுக்கொண்டு செழிப்பாக இருந்தவர்கள் இவர்கள். சாம்பாஜிராவ் அணியும் பூணூலும் அதுகுறித்த அவனது தத்துவங்களும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சிறிய எதிர்ப்பாகப் பேசப்பட்டாலும் அது இறுதியில் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளமாகவே நின்றுவிடுகிறது.

ஜோதிராவ் பூலேவின் சத்தியசோதக் மண்டலின் வழிவந்ததாகச் சொல்லிக் கொள்ளும் இந்த மரபு, நாள்களாக நாள்களாகச் சமூகத்தின் பொருளாதாரச் சுமைக்குள் சிக்கித் தவிக்கத் தொடங்குகிறது. சாம்பாஜிராவின் மரணத்திற்குப் பின்னர், கல்வியைப் பாதியில் விட்டுவிட்டுத் தன் தந்தையின் கடையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான் மனோகர்ராவ். இங்குத் தனிமனித விருப்பங்களைக் காட்டிலும் குடும்பப் பிழைப்பும் பரம்பரைத் தொழிலும் பிரதானமாகிவிடுகின்றன.

மனோகர்ராவின் காலத்தில் உலகம் முழுமையாக மாறிவிடுகிறது. திறந்த சந்தைப் பொருளாதாரமும் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களும் சூரத் துணி ஆலைகளும் களம் காண்கின்றன.

‘ப்ரைட் ஸ்கூல் மணிகண்ட மூர்த்தி’ போன்றவர்கள் தங்களது பள்ளியின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான சீருடைகளை ஒரே தையற்காரரிடம் ஒப்படைப்பது எளிய தையற்காரர்களுக்குப் பொன்னான வாய்ப்பாகத் தோன்றலாம். ஆனால், அதுவே அவர்களின் அழிவுக்கான புள்ளியாகவும் மாறுகிறது.

தன் மகனின் திருமணத்தை ஊர் மெச்ச நடத்த வேண்டும் என்ற நடுத்தர வர்க்கத்தின் எளிய கனவும் தன் பரம்பரைத் தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணமும் மனோகர்ராவைப் பெரிய நிதிச்சுமைக்குள் தள்ளுகின்றன. சூரத்திலிருந்து மலிவாகத் துணி வாங்கி லாபம் பார்க்க நினைக்கும் அவனது பேராசை, நவீனப் பொருளாதாரச் சூதாட்டத்தின் முன் கோரமான விபத்தாக மாறுகிறது.

இச்சிறுகதையின் இறுதிக்கட்டப் பகுதி, எளிய மனிதர்கள் மீது வரலாறு நடத்தும் வன்முறையை வெளிப்படுத்துகிறது. சூரத்திற்குத் துணி வாங்கச் செல்லும் மனோகர்ராவும் அவனது மூத்த மகன் தாமோதரனும் எதிர்கொள்ளும் அவமானங்களும் இழப்புகளும் நடுத்தர வர்க்கத்தின் பலவீனத்தைக் காட்டுகின்றன.

பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, நிர்க்கதியாய் நிற்கும் அந்தத் தந்தை-மகன் ஜோதியின் அவலம், நவீனச் சந்தைப் பொருளாதாரம் இரக்கமற்றது என்பதை நிரூபிக்கிறது. 

ஒருகாலத்தில் மைசூர் மகாராஜாவின் கோட்டுக்குத் தங்கஜரிகை இழைத்த பரம்பரையின் வாரிசுகள், இன்று பன்னாட்டு வணிகச் சக்கரத்தில் சிக்கித் தரைமட்டமாவதே இக்கதைக் காட்டும் கசப்பான உண்மையாகும். தலைமுறை தலைமுறையாகத் துணியைத் தைத்து மனிதர்களின் நிர்வாணத்தை மறைத்தவர்கள், இன்று தங்களது வாழ்வின் மானத்தையே காப்பாற்ற முடியாமல் தவிப்பதுதான் ‘காலத்தைத் தைப்பவனின் கிழிசல்’ ஆகும்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் இந்தச் சிறுகதை, வெறும் ஒரு தையற்காரனின் கதையன்று; இது இந்தியாவின் பொருளாதார மாற்றங்களையும் சாதிய வரலாற்றையும் நவீனச் சந்தை வன்முறையையும் ஒருசேரப் பேசும் மகத்தான இலக்கியப் படைப்பாகும்.

வரலாற்றின் பெருமிதங்களைச் சுமந்துகொண்டு, பசி மற்றும் பிழைப்புக்காகப் போராடும் எளிய மனிதர்களின் வாழ்வியலை எந்தவிதச் சமரசமுமின்றி விமர்சிக்கும் இப்படைப்பு, சமகாலச் சமூகத்தின் முகத்தில் எறியப்பட்ட குத்தீட்டியாக என்றும் நிலைத்து நிற்கும்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *