
சமகால மனிதர்களின் அக முரண்பாடுகளை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்து ஆண்களின் போலித்தனங்களையும் பாலியல் ஏக்கங்களையும் அப்பட்டமாகக் காட்டுபவர்களில் எழுத்தாளர் அராத்து தனித்துவமானவர். அவர் எழுதிய ‘நள்ளிரவின் நடனங்கள்’ என்ற சிறுகதை, கோவா நகரின் கொண்டாட்டங்களுக்கும் சாதாரணக் குடும்பத் தலைவனின் குடும்ப வாழ்க்கைக்குமான இடைவெளியில் எழும் உளவியல் மோதல்களை விவரிக்கிறது.
வெளிப்புறச் சூழலில் சுதந்திரமாகக் கொண்டாடத் துடிக்கும் ஒருவனின் ஆழ்மனம் எத்தகைய குற்ற உணர்ச்சிகளுடனும் பாலியல் விரக்திகளுடனும் ஊசலாடுகிறது என்பதை இக்கதை தனிமனித வாழ்வியல் சார்ந்து பேசுகிறது.
கதையின் தொடக்கமே கமலக்கண்ணனின் இரட்டைவேடப் போக்கினைத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. அலுவலகப் பணிச் சுமை, உடல்நலக் குறைவு, குளிர் மற்றும் மழை போன்ற பல காரணங்களைக் கூறிவிட்டு, நண்பர்களின் வற்புறுத்தலால் கோவா செல்வதாக அவன் நாடகமாடுகிறான்.
தன் மனைவி சாந்தியிடம் எப்படியாவது ஒப்புதல் வாங்கியே தீர வேண்டும் என்ற அவனது வெறித்தனமான முயற்சி, குடும்பத் தலைவனின் சுயநலத்தை வெளிப்படுத்துகிறது. மனைவி சமையல், குழந்தை வளர்ப்பு மற்றும் வீடு பராமரிப்பு எனத் தன் கடமைகளில் மூழ்கியிருக்க, இவன் நண்பர்களுடன் சென்று கும்மாளமடிக்கத் திட்டமிடுகிறான்.
“செலவு அவன் பண்றதா சொன்னாலும் நம்ம வேலையை யாரு செய்வா?” என்று மனதுக்குள் புலம்பினாலும் கோவா செல்லும் வாய்ப்பை இழக்க அவன் விரும்பவில்லை. வீட்டில் இருந்து புறப்படும்போதே புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுச் செல்லும் கமலக்கண்ணன், கோவாவிற்குச் சென்றதும் தன் குடும்பத்தையே மறந்துவிட்டுப் பெண்களைச் சுற்றும் வேளையில் இறங்குகிறான்.
கோவாவின் கடற்கரைகளும் விடுதிகளும் ‘டிஸ்கோ’க்களும் கமலக்கண்ணன் மற்றும் அவனது நண்பர்களுக்குக் கற்பனைக் காடாகக் காட்சிளிக்கின்றன. அங்கே அவர்கள் நடத்தும் வேட்டைகளும் அடையும் ஏமாற்றங்களும் இன்றைய நுகர்வுவாதச் சமூகத்தின் பாலியல் உளவியலைக் கறாராகச் சாடுகின்றன.
விமான நிலையத்திலிருந்து கோவா கடற்கரை வரை செல்லும் இடங்களிலெல்லாம் கண்ணில்படும் பெண்களையெல்லாம் போகப் பொருளாகவே கமலக்கண்ணன் குழு பார்க்கிறது. ரஷ்யப் பெண்களின் மீது அவர்கள் காட்டும் ஈர்ப்பு, காதலைத் தாண்டிய ஒருவித பாலியல் வெறியும் மோகமுமே ஆகும்.
மேங்கோ ட்ரீ ரெஸ்டாரண்டாக இருக்கட்டும் அல்லது கர்லீஸ் பீச் பார்ட்டியாக இருக்கட்டும் – அவர்கள் எங்குச் சென்றாலும் பெண்களிடம் சென்று மாட்டிக்கொள்வதும் அவர்கள் இவர்களைத் துச்சமாக மதித்துவிட்டுச் செல்வதும் தொடர்கிறது. 20,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே தேவதைகள் போன்றவர்கள் பேசுவார்கள் என்ற பணப் பொருளாதாரத்தின் யதார்த்தம் அவர்களைச் சுடுகிறது. போதையின் உச்சத்தில் யாரோ ஒரு பெண்ணிடம் சென்று திணறி முத்தமிட்டுவிட்டு, அவளிடம் அவமானப்பட்டு விலகுவது கமலக்கண்ணனின் பரிதாபகரமான (அதேசமயம் கேவலமான) உளவியலை வெளிப்படுத்துகிறது.
இக்கதையில் போதை என்பது வெறும் மதுவை மட்டும் குறிப்பதன்று; அது அந்த நவீனச் சூழல் தரும் செயற்கையான உற்சாகத்தின் குறியீடு.
குடும்பப் பொறுப்புகள், அலுவலக அழுத்தம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க கோவா ஒரு புகலிடமாக அவர்களுக்குத் தெரிகிறது. ஆனால், அங்கும்கூட அவர்கள் தங்களின் பழைய ஏகாதிபத்திய, ஆணாதிக்க மனநிலையையே சுமந்து செல்கிறார்கள்.
இரவு முழுவதும் டிஸ்கோக்களிலும் கடற்கரைகளிலும் சுற்றித் திரிந்துவிட்டு, அதிகாலையில் தனித்து நிற்கும் கமலக்கண்ணனுக்குக் கிடைக்கும் பரிசு என்ன? போதை தெளிந்தவுடன் எஞ்சும் தனிமையும் பயமும் குற்ற உணர்ச்சியுமே அவனுக்கு மிஞ்சுகின்றன. தனியாக வரும் வெளிநாட்டுப் பெண் வழி கேட்பதைக்கூடத் தன் பாலியல் வேட்டைக்குப் பயன்படுத்த முயலும் அவனது குணம் மாறவே இல்லை.
கதையின் இறுதிப் பகுதி மனிதர்களின் போலித்தனமான பாசாங்குத் தனத்திற்குச் சிறந்த சான்றாகும். கோவாவின் நியூ இயர் கொண்டாட்டங்கள் முடிந்து, அதிகாலை நான்கு மணிக்குக் களைத்துப் போய் ரிஸார்ட்டுக்குத் திரும்புகிறான் கமலக்கண்ணன். உடற்சோர்வு, போதையின் தலைவலி, சிகரெட் துர்நாற்றம் என அனைத்து அவஸ்தைகளுக்கும் நடுவில் அவனது மொபைல் போனைப் பார்க்கிறான். தன் மனைவியிடமிருந்து வந்த பல மிஸ்டு கால்களையும் மெசேஜ்களையும் பார்க்கும்போது அவனுக்குள் திடீரெனக் ‘காதல்’ பொங்குகிறது.
அரைத் தூக்கத்தில் இருந்துகொண்டே தன் மனைவிக்கு “ஐ லவ் யூ செல்லம்” என டைப் செய்து அனுப்புகிறான். மறுநிமிடமே மனைவியிடமிருந்து வந்த “ஐ டூ லவ் யூ டியர்” என்ற பதிலைப் பார்த்துக்கொண்டே உறங்கிப் போகிறான். இந்த முடிவுதான் இக்கதையின் கறாரான விமர்சனப் புள்ளி. கோவா முழுவதும் பரத்தமை எண்ணத்துடனும் பெண்களை ஏமாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுவிட்டு, கடைசி நொடியில் தூக்கக் கலக்கத்தில் மனைவியைக் காதலிப்பதாக நாடகம் போடும் கமலக்கண்ணனின் கதாபாத்திரம், இன்றைய நவீன நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பல ஆண்களின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது.
எழுத்தாளர் அராத்தின் இந்தச் சிறுகதை, கேளிக்கைகளின் பின்னணியில் இயங்கும் மனித மனங்களின் போலித்தனங்களைத் துல்லியமாகக் காட்டுகிறது.
வெளியே சுதந்திரமாகக் கொண்டாடுவதாக நினைத்துக்கொள்ளும் மனிதர்கள், உண்மையில் தங்களின் தாழ்வு மனப்பான்மைக்கும் போலி நாகரிகத்திற்கும் எப்படி அடிமையாகிறார்கள் என்பதை இக்கதை நகைச்சுவையுடன் கலந்த விமர்சனமாக முன்வைக்கிறது. கமலக்கண்ணனைப் போன்ற மனிதர்களின் அகவாழ்வு எப்போதுமே அமைதியற்றது; நள்ளிரவின் நடனங்கள் முடிந்து விட்டால் எஞ்சுவது தனிமையும் வெறுமையும் மட்டுமே என்ற உண்மையை இப்படைப்பு ஆழமாக உணர்த்துகிறது.
– – –
