இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 131.நிழல்வெளியில் மௌனப்போர்  (கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘கலைத்து எழுதிய சித்திரம்’ சிறுகதையை முன்வைத்து…)

 

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் அவர்களின் மன அடுக்குகளையும் யதார்த்தமாகவும் உளவியல் ஆழத்துடனும் பதிவுசெய்து வருபவர்களில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா முக்கியமானவர். மனிதர்களின் ஆழ்மன வாசனை, மறைக்கப்பட்ட காமங்கள், குடும்ப அமைப்புகளுக்குள் நிகழும் மௌனமான முரண்கள் மற்றும் சமூகத்தின் பொதுப்புத்திக் கற்பிதங்களை அவர் தன் படைப்புகளில் சமரசமின்றி விசாரணைக்கு உட்படுத்துகிறார். 

அந்த வரிசையில், வளைகுடா நாடுகளின் பொருளாதாரச் சுரண்டலில் இருந்து தாயகம் திரும்பும் இளைஞனின் அக உலகையும் அவனது குடும்பச் சூழலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘கலைத்து எழுதிய சித்திரம்’ என்ற சிறுகதை, தனிமனித வாழ்வியலின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடுகின்றது.

இக்கதை எளிய கிராமப்புறப் பின்னணியில் தொடங்குகிறது. இதன் அடிநாதம் தனிமனிதனின் ஏக்கங்கள் மற்றும் பாலியல்ரீதியான பிரமைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. வளைகுடா நாட்டில் இரண்டு வருடங்கள் உழைத்துவிட்டு ஊருக்குத் திரும்பும் கதைசொல்லி, தனது ஊரின் மாறிய முகத்தை எதிர்கொள்கிறான். அவனது இளமைத் துடிப்பும் வெளிநாட்டுப் பணத்தின் மீதான மிடுக்கான மனநிலையும் ஒருபுறம் இருக்க, அவனது ஆன்மாவை உலுக்கும் அத்தர் மணம் அவனுக்குள் பெரும் புயலைக் கிளப்புகிறது. கேரளத்து முகவெட்டுக் கொண்ட, விசித்திரமான தோல் பையைத் தோளில் சுமந்து அத்தர் விற்கவரும் பரீதா என்னும் இளம்பெண், கதையின் மையப்புள்ளியாகவும் ஒரு குறியீடாகவும் ஒளிர்கிறாள்.

இங்குத் தனிமனித வாழ்வியல் சார்ந்து கவனிக்கப்பட வேண்டிய முதல் புள்ளி, ஆசைகளின் வயது வரம்பு குறித்த சமூகத்தின் கற்பிதங்களை எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா கேள்விக்குள்ளாக்கும் விதமே. அறுபது வயதைக் கடந்த, தொழுகையையும் மார்க்க வழிமுறைகளையும் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் தந்தை, பரீதாவின் வருகையால் ஈர்க்கப்படுவதும் அவளிடம் அத்தர் வாங்குவதும் அவனது மகனுக்கு விசித்திரமாகத் தெரிகிறது. ஆனால், தாயோ இதனை அறச்சீற்றத்தோடும் வசியமாகப் பார்க்கிறாள். குடும்பத்திற்குள் கணவன் – மனைவிக்கு இடையே இருக்கும் வயது இடைவெளி, உடலியல் தேவைகள் மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் ஆகியவை எத்தகைய மௌனப் போர்களாக உருவெடுக்கின்றன என்பதை இக்கதை அப்பட்டமாகப் பேசுகிறது.

வளைகுடா நாடுகளுக்குச் சென்று பொருளீட்டிவரும் இளைஞர்களின் மனநிலை என்பது பெரும் உளவியல் சிக்கல் நிறைந்ததாகும். குடும்பத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் தங்களது இளமையையும் சுதந்திரத்தையும் வறண்ட பாலைவனங்களில் தொலைத்துவிட்டுத் திரும்புபவர்கள், ஊரில் எல்லாமும் பழையபடியே இருக்கும் என்ற பிரமையுடன் திரும்புகின்றனர். ஆனால், காலம் யாருக்காகவும் நிற்பதில்லை. நண்பர்கள் மாறுபட்டுவிடுகிறார்கள்; உறவுகளின் கணக்குகளும் திசைகளும் மாறிவிடுகின்றன. இந்தக் வெற்றிடத்தை நிரப்ப முயலும் கதைசொல்லிக்கு, பரீதா ஒரு கற்பனை உலகைக் கட்டமைக்கிறாள்.

பரீதாவின் வருகையை எதிர்பார்த்து அவன் காத்துக்கிடப்பதும் அவளுடன் மாயக் காதலை மனதுக்குள் வளர்த்துக்கொள்வதும் அவனது தனிமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. வளைகுடாவின் இயந்திரத்தனமான வாழ்க்கை தந்த வறட்சியைத் தீர்த்துக்கொள்ள அவன் பெண் மீது பித்துக்கொள்ளத் தயாராகிறான். ஆனால், இந்தக் கதையின் உச்சகட்ட திருப்பமாக அமையும் முடிவு, அவனது கற்பனைக் கோட்டையைச் சிதறடிக்கிறது.

இரண்டாம் முறை பரீதா ஊருக்கு வரும்போது, அவளது பையின் முகப்பில் வரையப்பட்டிருந்த சித்திரம் கலைக்கப்பட்டு, புதியதொரு உருவம் வரையப்பட்டிருக்கும். அது வேறாருவருமல்லர், கதைசொல்லியின் தந்தையேதான்! பரீதாவின் தோளில் சாய்ந்துகொண்டு, வயது முதிர்ந்த தந்தை அவளுடன் செல்வதைக் காணும் கணத்தில், கதைசொல்லியோடு இணைந்து வாசகரும் உறைந்துபோகிறார்.

இது வெறும் ஒழுக்க மீறல் சார்ந்த குற்றச்சாட்டு அன்று; தனிமனிதர்களின் உணர்ச்சிப் பசிக்கு வயது தடையில்லை என்பதைச் சொல்லும் கறாரான உளவியல் யதார்த்தம். சமுதாயத்தின் கண்களுக்குப் ‘பத்தரை மாற்றுத் தங்கம்’ போலவும் தொழுகையாளியாகவும் தெரியும் தந்தை, தனக்குள் இருக்கும் காமத்தையும் தோழமையையும் தேடுவதைச் சமூகம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? உம்மாவுக்குத் தெரிந்த உண்மையும் தந்தையின் இந்தத் தெரிவும் குடும்பத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்குகிறது.

இங்கே எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எந்த ஒரு தார்மீகத் தீர்ப்பையும் அவசரமாக வழங்குவதில்லை. மனித மனம் எவ்வளவு சிக்கலானது, அதன் இச்சைகளும் ஏக்கங்களும் எத்தகைய எல்லைகளையும் தாண்டிச் செல்லக்கூடியவை என்பதை கலைஞனின் கறார்ப் பார்வையுடன் வெளிப்படுத்துகிறார்.

‘கலைத்து எழுதிய சித்திரம்’ என்பது வெறும் ஒருதலைக் காதலோ அல்லது குடும்பச் சிக்கலோ குறிக்கவில்லை. இது மனிதர்களின் முகமூடிகளுக்குப் பின்னால் இருக்கும் நிஜ முகங்களைக் காட்டும் கண்ணாடி. வறுமை, புலம்பெயர்தல், தனிமை, வயது முதிர்வு மற்றும் பாலியல் தேடல்கள் ஆகியவை எளிய குடும்பத்தின் வழியே எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா படைத்துக் காட்டியுள்ளார். தனிமனித வாழ்வியலின் ஆழமான ரகசியங்களைத் தொட்டுச் செல்லும் இப்படைப்பு, நவீனத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிற்கக் கூடிய  விமர்சனப்பூர்வமான சித்திரம்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *