
எதார்த்தவாதத்தின் வழியே மனித மனங்களின் ஆழங்களை நேர்த்தியாகப் பதிவு செய்த எழுத்தாளர்களுள் அய்க்கண் குறிப்பிடத்தக்கவர். அவர் எழுதிய ‘மண்’ என்ற சிறுகதை, கிராமியச் சூழலின் வறுமை, பெண் சிசுக்கொலை என்ற கொடூரமான சமூக அநீதி, தாயுள்ளத்தின் தவிப்பு மற்றும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்பாட்டு உயர்வு ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்பாகும்.
வெளிநாட்டில் வளர்க்கப்பட்ட பெண் தன் தாய் மண்ணைத் தேடிவரும் கதையாகத் தொடங்கும் இச்சிறுகதை, வறுமைக்கும் சுயமரியாதைக்கும் இடையிலான கோட்டை மனித வாழ்வியல் சார்ந்து எவ்வாறு வரையறுக்கிறது என்பதை இந்தச் சிறுகதை வெளிப்படுத்துகிறது.
இக்கதையின் தொடக்கப் புள்ளியே சமூகத்தின் சாபக்கேடான பெண் சிசுக்கொலைதான். வறுமையில் உழலும் கிராமத்தில் பெண் குழந்தை பிறப்பது என்பது மகிழ்ச்சியான நிகழ்வன்று. அது குடும்பத்தின் ‘இழவு வீடு’ போன்ற சோகத்தை ஏற்படுத்துகிறது.
ராமாயி மற்றும் கருப்பையா தம்பதியரின் வாழ்க்கை அரைவயிற்றுக் கஞ்சிக்கும் நாள்கூலி வேலைக்கும் மட்டுமே உரியது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தவிக்கும் அவர்களுக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறக்கும்போது, கள்ளிப்பால் கொடுத்துக் கொல்வதே அன்றாட வழக்கமாக இருந்த கொடூர சமூகச் சூழலை எழுத்தாளர் அய்க்கண் வெளிப்படுத்துகிறார்.
மற்ற கிராமத்துப் பெண்கள் கள்ளிபாலுடன்கூடிநின்று சிசுவைக் கொல்ல முயலும்போது, ராமாயி படும் வேதனை தனிமனித உளவியலின் உச்சம். “பெத்த வயிறு துடிக்கிறது; கள்ளிப்பால் கொடுக்க மனசு கேட்கவில்லை” என்று கதறித் தன் குழந்தையைக் காப்பாற்றும் அவள், அந்தச் சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒற்றைப் பெண்ணாக மாறுகிறாள்.
கோவிராஜ் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் – லிஸி தம்பதியருக்குக் குழந்தையைத் தத்துக் கொடுக்கும் நிகழ்வு, கதையில் திருப்புமுனையை உருவாக்குகிறது.
வெள்ளைக்காரர்கள் தத்து எடுப்பார்கள் என்றதும் கிராம மக்கள் “கறுப்பு நிறம் என்றால் வெள்ளைக்காரர்களுக்குப் பிடிக்காது”, “நம் பொண்ணை கஷ்டப்படுத்துவார்களா?” என்று ஐயப்படுவது இயல்பான கிராமிய உளவியலைக் காட்டுகிறது. ஆனால், குழந்தைக்கு எங்குச் சென்றாலும் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற தாயின் உன்னதத் தியாகமே இங்கு மேலோங்குகிறது.
இருபத்தோரு ஆண்டுகளுக்குப் பின்பு ‘சின்னத்தாயி’ தன் பெற்றோரைப் பார்க்கத் தமிழில் சரளமாகப் பேசி வருவதும், ஜி.யூ. போப் பரம்பரையாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வெள்ளைக்காரத் தம்பதிகளும் மனிதநேயத்தின் எல்லைகளைக் கடந்து நிற்கிறார்கள்.
விமான நிலையத்தில் கோவிராஜிடம் ரிச்சர்ட் தம்பதியினர் சுமார் இரண்டு லட்சம் ரூபாயை ராமாயி குடும்பத்திற்கு உதவிக்காகத் தருகிறார்கள். தங்களது மகள் வறுமையில் வாடுவதைப் பார்த்தும் அவளது பெற்றோர்கள் வறுமையில் உழல்வதைப் பார்த்தும் வெள்ளைக்காரத் தம்பதிகள் உருகுகின்றனர். சின்னத்தாயிகூடத் தன் பெற்றோர் கஷ்டப்படுவதைக் கண்டு வருந்தினாலும் தன் வளர்ப்புப் பெற்றோரின் அனுமதியின்றி அவர்களிடம் பணம் கேட்கவில்லை.
ஆனால், கோவிராஜ் மூலமாக அந்தப் பணம் சென்றடைந்தபோது, ராமாயியும் கருப்பையாவும் அதனை மறுத்துவிடுகிறார்கள்.
“நாங்கள் குழந்தையைக் கொடுத்தது பணத்திற்காக இல்லை; எங்களிடம் குழந்தைச் செல்வம் இருந்ததால் அவர்களுக்குத் தானம் கொடுத்தோம். விலைக்குக் கொடுக்கவில்லை” என்று அவர்கள் கூறிய பதில், வறுமையில் உழன்றாலும் மானத்தை விற்காத அந்த மண்ணின் மக்களின் தனிமனித உயரிய மாண்பைக் காட்டுகிறது.
இக்கதையின் தலைப்பான ‘மண்’ என்பது வெறும் புழுதியையோ பூமியையோ குறிப்பதன்று; அது அந்த மண்ணில் பிறந்து வளர்ந்த மனிதர்களின் உதிரத்தில் கலந்திருக்கும் சுயமரியாதை, விருந்தோம்பல் மற்றும் தூய அன்பைக் குறிக்கிறது.
நவீன உலகத்தில் பணம் எல்லாவற்றுக்கும் விலையாக மாறக்கூடிய சூழலில், ‘பெற்ற குழந்தையைத் தானமாகக் கொடுத்தார்களே தவிர விற்றுவிடவில்லை’ என்ற ராமாயியின் உறுதி, நவீன மனிதர்களின் வணிகமயமான மனநிலைக்கு விடப்பட்ட அறைகூவலே.
வெள்ளைக்காரத் தம்பதியர் இதைக் கண்டு வியந்து, “தீஸ் டமிலியன்ஸ் – கிரேட்டர் தேன் த கிரேட்டஸ்ட் பீப்பிள்!” என்று சிலிர்ப்பது, எளிய மக்களின் உயர்ந்த உள்ளத்திற்குச் சான்றாக அமைகிறது.
இந்தச் சிறுகதை, ஒருபுறம் கிராமங்களின் அவலங்களையும் பெண் சிசுக்கொலை போன்ற சாபக்கேடுகளையும் தோலுரித்துக் காட்டினாலும் மறுபுறம் அந்த மண்ணின் எளிய மனிதர்களின் மாறாத சுயமரியாதையையும் மனிதநேயத்தையும் கம்பீரமாக நிலைநிறுத்துகிறது.
பணத்தைவிட மனிதமும் பாசமும் பெரிது என்ற உயர்ந்த வாழ்வியல் விழுமியத்தை இச்சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.
– – –
