
தமிழ்ச் சிறுகதை உலகில் நவீன வாழ்வியலின் சிக்கல்களையும் தனிமனிதர்களின் ஆழ்மனப் புதிர்களையும் நுட்பமாகப் பதிவுசெய்த எழுத்தாளர்களுள் அழகிய சிங்கர் குறிப்பிடத்தக்கவர். அவர் எழுதிய ‘தவறு’ என்ற சிறுகதை, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மேலோட்டமான அறிமுகம் எவ்வாறு அக உலகக் கற்பனைகளாக மாறி, இறுதியில் நடைமுறை யதார்த்தத்தின் முன் சுக்குநூறாக உடைகிறது என்பதை விவரிக்கிறது.
பணம், அந்தஸ்து, சுயநலம் மற்றும் மனித உறவுகளின் போலித்தனம் ஆகியவற்றைச் சுற்றியே நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல் இயங்குகிறது என்பதை இக்கதை விமர்சனப் பார்வையோடும் வெளிப்படுத்துகிறது.
கதையின் கதைசொல்லி (சங்கர்) தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை எழுத்தாளனின் கண்கொண்டு பார்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டாலும் அவனது எண்ண ஓட்டங்கள் அனைத்தும் சுயநலமும் அகந்தையும் நிறைந்த நடுத்தர வர்க்க மனப்பான்மையின் வெளிப்பாடே ஆகும்.
பத்மா தன்னைத் தேடி அலுவலகத்திற்கு வருவதும் தன் முதல் கதையான ‘செருப்பு’ பற்றிப் பாராட்டுவதும் அவனுக்குள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், அவளது அறிமுகம் எந்தளவுக்குத் தூய்மையானது என்பதைவிட, அவனுக்குக் கிடைக்கும் கவனமும் ஈர்ப்பும்தான் அவனுக்கு முக்கியமாகப் படுகிறது.
பத்மாவிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட செய்தி கேட்டதும் அவனுக்குள் எழும் எதிர்வினை மிகவும் விசித்திரமானது. பத்மாவிற்கு இதயநோய் ஏற்பட்டு, அவளது வருங்கால கணவன் கைவிட்டுவிட, இவன் சென்று அவளது கண்ணீரைத் துடைப்பதாக அவன் எழுதும் கற்பனைகள், அவனது ஆண் மைய அகந்தையின் வெளிப்பாடே ஆகும். யதார்த்தத்தில் எதையும் எதிர்கொள்ளத் திராணியில்லாமல், தன் கற்பனை உலகத்திலேயே கதாநாயகனாக வலம் வரத் துடிக்கும் அவனது குணம் நடுத்தர வர்க்கத்தின் கோழைத்தனத்தைக் காட்டுகிறது.
இக்கதையில் பத்மா எந்த இடத்திலும் ‘காதல் நாயகியாக’ச் சுடரவில்லை. அவளும் சமூகத்தின் பொருளாதாரச் சுமைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் உட்பட்ட சராசரிப் பெண்தான்.
சங்கருடன் பழகும் பத்மா, கம்ப்யூட்டர் வகுப்பு செல்வது வரை அவருடன் இயல்பாகப் பழகுவது போல் தோன்றினாலும் திருமணத்திற்குப் பணம் தேவைப்படும் சூழலில் அவன் தாயின் மூலமாக ‘சொசைட்டி கடன்’ பற்றிக் கேட்கிறாள். இது காதலைத் தாண்டிய பொருளாதாரத் தேவையாக மாறுகிறது. அப்போது இவர்களுக்கு இடையிலுள்ள உறவு பயன்பாட்டு உறவாக (Utilitarian Relationships) மாறிவிடுகிறது.
சங்கரால் அந்தக் கடனுக்குப் பொறுப்பேற்க முடியாது என்று தெரிந்தவுடன், அவள் எந்தவித உணர்ச்சிப் போராட்டமும் இன்றி உடனடியாக அவனிடமிருந்து விலகிவிடுகிறாள். பத்மாவின் இந்தப் போக்கு, உறவுகளைக் காட்டிலும் பொருளாதாரப் பாதுகாப்பே நடுத்தர வர்க்கத்திற்கு முக்கியம் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
சங்கரும் பத்மாவும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக நேசிக்கவில்லை; தங்கள் தனிமைக்குப் புகலிடமாகவும் அகந்தைக்குத் தீனியாகவுமே ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ளமுயல்கின்றனர். இது தனிமனித உறவுகளின் போலித்தனம்தான்.
பத்மாவின் தாயார் சங்கரை வீட்டுக்கு அழைத்து அவனிடம் பணம் கேட்பதும் அவனது அலுவலகச் ‘சொசைட்டி’ மூலம் கடன் வாங்கித் தருமாறு வற்புறுத்துவதும் உறவுகளின் மீது பூசப்பட்டிருக்கும் மேபூச்சுப் பொய்யை உடைத்து எறிகிறது. இங்கு மனித உறவுகள் யாவும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே அளவிடப்படுகின்றன.
சங்கர் தன் குடும்பத்தின் எச்சரிக்கையால் கடன் தர மறுத்ததும் பத்மாவும் அவளது குடும்பமும் அவனுடன் உள்ள தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொள்கிறார்கள். எழுத்தாளனாகத் தன்னை நினைத்துக்கொள்ளும் சங்கரும் நாகரிகமாக நடந்துகொள்ளும் பத்மாவும் பணத்தின் முன் எப்படிச் சாதாரண மனிதர்களாகச் சுருங்கி விடுகிறார்கள் என்பதை எழுத்தாளர் அழகிய சிங்கர் காட்டுகிறார்.
கதையின் இறுதியில் பத்மாவின் திருமணத்திற்குச் செல்லும்போது சங்கர் வழிமாறி வேறு ஒரு திருமணமண்டபத்திற்குச் சென்று, அங்கே வயதான தம்பதியைப் பார்த்து அதிர்ச்சியடைவதும் பின்னர் சரியான மண்டபம் கண்டுபிடித்துச் சென்று பத்மாவைப் பார்ப்பதும் வெறும் நகைச்சுவை அன்று; அது மனித வாழ்வியலின் மிகப்பெரிய முரண்நகையாகும்.
தன் வாழ்நாளில் தான் எதை அடைக்க நினைக்கிறோம் எதைத் தேடிப் போகிறோம் என்பதைக்கூடத் துல்லியமாக அறியாமல், வழிகெட்டுக் குழப்பத்தில் தவிக்கும் நவீன மனிதனின் குறியீடாகவே சங்கரின் இந்தக் குழப்பம் அமைகிறது.
இறுதியில் உண்மையான திருமண மண்டபத்திற்குச் சென்று பத்மாவை வாழ்த்தினாலும் அங்கும் அவன் தனிநபராகவே, யாருடனும் ஒன்றாமல் ஒதுங்கிச் செல்கிறான். அவனுக்கு மிஞ்சுவது வெறும் தாம்பூலப் பையும் ஏமாற்றமும் மட்டுமே.
இந்தச் சிறுகதை, மனிதர்களின் அக உலகக் கனவுகளுக்கும் புற உலகப் பொருளாதார யதார்த்தத்திற்கும் இடையிலான மோதலைத் துல்லியமாகக் காட்டுகிறது.
கற்பனைக் கோட்டைகளில் வாழ்ந்துகொண்டு நடைமுறை வாழ்வியலின் கடினமான உண்மைகளை எதிர்கொள்ள அஞ்சும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் பலவீனங்களைத்தான் இக்கதை காட்டியுள்ளது. இலக்கியத்தின் வழியே மனித மனத்தின் சுயநல முகங்களைச் சாடும் ஆவணமாக இப்படைப்பு உள்ளது.
– – –
