
அறிவியல் புனைகதைகள் மற்றும் துப்பறியும் கதைகள் மூலம் புகழ்பெற்றாலும் மனித மனங்களின் நுட்பமான உளவியலையும் சமூகத்தின் கோர முகங்களையும் யதார்த்தமாகப் பதிவு செய்ததில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு முக்கிய இடமுண்டு.
இவரது ‘நகரம்’ எனும் சிறுகதை, கிராமப்புறத்திலிருந்து தன் மகளின் உயிரைக் காப்பாற்ற மதுரை பெரிய மருத்துவமனைக்கு வரும் பாமரத் தாயின் (வள்ளியம்மாள்) தத்தளிப்பையும் பெருநகரத்தின் இயந்திரத்தனமான அதிகாரவர்க்க அலட்சியத்தையும் பேசுகிறது.
எளிய மனிதனின் வாழ்வியலை பெருநகரத்தின் அதிநவீன அமைப்புகளும் மருத்துவ முறைகளும் எவ்வாறு அந்நியப்படுத்துகின்றன என்பதையும் கல்வி மற்றும் விழிப்புணர்வற்ற எளிய மக்களின் துயரங்களைச் சமூகம் எப்படிக் கடந்து செல்கிறது என்பதையும் இக்கதை
கதையின் தொடக்கத்தில் சுஜாதா மதுரையை அறிமுகப்படுத்தும் விதம் மிகச் சிறப்பானது. விளம்பரங்கள் நிறைந்த சுவர்கள், பைப் அருகே குடங்களுடன் வரிசைத் தவம் இருக்கும் மனிதர்கள், டெட்டனஸ் கவலையின்றி மண்ணில் விளையாடும் சிறுவர்கள், டீசல் புகையைக் கக்கும் பேருந்துகள் என மதுரை சாதாரண தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
நகரின் மனித இயக்கத்தை இயற்பியல் விதியான ப்ரோவ்னியன் (Brownian Movement) இயக்கத்துடன் சுஜாதா ஒப்பிடுகிறார். அதாவது, எந்தவித ஒழுங்குமின்றி, இலக்கின்றித் தங்களின் அன்றாடப் பிழைப்புக்காக அலைமோதும் மனிதக் கூட்டத்தின் குறியீடே இந்த நகரம்.
செருப்பில்லாத எளிய மக்களின் நடுவே, விலைவாசி உயர்வை எதிர்த்து ஊர்வலம் செல்லும் மனிதர்கள், மீனாட்சி கோவிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் மற்றும் வற்றிய வைகை ஆகியவை பெருநகரத்தின் வறட்சியான மற்றும் முரண்பட்ட வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த மாபெரும் நகர இயந்திரத்திற்கு முன்பு தனிமனிதனின் உயிரும் வலியும் எந்தளவிற்குப் பொருட்டற்றதாக இருக்கிறது என்பதை இதன் மூலம் எழுத்தாளர் உணர்த்துகிறார்.
கதையின் மையக் கதாபாத்திரமான வள்ளியம்மாள், கணவனை இழந்தவள்; கிராமத்து விழிப்புணர்வற்ற எளிய தாய். அவளது பன்னிரண்டு வயது மகள் பாப்பாத்திக்கு தீவிர மூளைக்காய்ச்சல் (Acute Meningitis) ஏற்படுகிறது. கிராமத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பயமுறுத்தியதால், பதறி அடித்துக் கொண்டு மதுரை பெரிய மருத்துவமனைக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறாள்.
மருத்துவமனையில் நுழைந்தவுடன் சீட்டு வாங்குவதிலிருந்து, வருமானம் கணக்கிடுவது வரை ஒவ்வொரு இடத்திலும் வள்ளியம்மாள் படும் பாடு, அவளது அறியாமையின் வெளிப்பாடாகும். தனக்குத் தெரிந்ததெல்லாம் “மூணாண்டிப்பட்டி” என்பதும் தனது வருமானம் “அறுப்புக்குப் போன நெல்லும் கம்பு கேழ்வரகும்தான்” என்பதுமான எளிய கிராமிய யதார்த்தம், அந்த நவீன மருத்துவமனை வளாகத்தில் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.
பெரிய டாக்டர் மாணவர்களுக்குப் பாப்பாத்தியின் நோயைக் கற்பிப்பதற்காக அவளைப் பரிசோதிக்கிறாரே தவிர, அந்தத் தாயின் பதற்றத்தையும் துயரத்தையும் மனித நேயத்துடன் அணுகவில்லை. “acute case of meningitis. notice this..” என்ற ஆங்கில மருத்துவச் சொற்கள், வள்ளியம்மாளுக்குப் புரியாத வேற்றுமொழி போல, அவளது வாழ்வியலுக்கும் அந்த நவீன மருத்துவ உலகத்திற்கும் இடையேயான எல்லையற்ற தூரத்தைக் காட்டுகின்றன.
மருத்துவமனையின் பதிவேடுகள், கிளார்க்குகள், நாற்காலிகள் மற்றும் வரிசைகள் ஆகியவை தனிமனிதனின் உணர்வுகளை முற்றிலும் நசுக்கும் எந்திரங்களாகச் செயல்படுகின்றன.
சீட்டு வாங்குவது, வருமானம் மதிப்பிடுவது, 48ஆம் நம்பர் அறையைக் கண்டுபிடிப்பது என மருத்துவமனை வளாகத்திற்குள் வள்ளியம்மாள் அலைக் கழிக்கப்படும் விதம், அரசு மற்றும் மருத்துவ நிறுவனங்கள் எளிய மக்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதன் நேரடி விமர்சனமாகும்.
“இப்ப எல்லாம் க்ளோஸ், சரியா மூணு மணிக்கு வா” என்று சொல்லும் அதிகார வர்க்கத்தின் குரல், மரணத்தின் விளிம்பில் நிற்கும் குழந்தையின் வலியைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாதது. மனித உயிர்களைவிட அலுவலக நேரங்களும் நடைமுறைகளுமே பெருநகரத்திற்கு முக்கியம் என்ற கோர யதார்த்தத்தை இது வெளிப்படுத்துகிறது. அறைக்கதவுகள் பூட்டப்பட்டதும் பயம் திகிலாக மாறி நடுநடுங்கத் தொடங்கும் வள்ளியம்மாளின் அழுகை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.
கதையின் உச்சக்கட்டத் திருப்புமுனையாக, பெரிய டாக்டர் தனது மாணவர்களிடம் “அந்தப் பொண்ணு எங்கே?” என்று தேடும் போதுதான் மருத்துவ அமைப்பின் குளறுபடிகள் வெளிப்படுகின்றன.
காகிதங்களில் தீவிரமாகப் பேசப்படும் மருத்துவ அறிவியலும் ஏசி அறைகளில் நடக்கும் வகுப்புகளும் தரமட்டத்தில் கீழே கிடக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கையோடு எங்குமே சந்தித்துக் கொள்வதில்லை.
டாக்டர் குழந்தையை உடனே அட்மிட் செய்ய உத்தரவிட்டாலும் கீழ்நிலை ஊழியர்களின் அலட்சியமும் கடினமான நடைமுறைகளும் சேர்ந்து அந்தத் தாயை விரட்டியடித்துள்ளன. இறுதியில், மருத்துவமனை தன் கடமையைச் செய்யத் தவறியதால், அந்தத் தாய் தன் மகளை அள்ளி அணைத்துக் கொண்டு மீண்டும் கிராமத்திற்கே திரும்ப முடிவு செய்கிறாள்.
மருத்துவமனை வளாகத்தின் இயந்திரத்தனமான துயரத்திலிருந்து தப்பியோடும் வள்ளியம்மாள், தன் மகளை ரிக்சாவில் ஏற்றிக்கொண்டு பஸ் நிலையத்திற்குச் செல்கிறாள்.
“பாப்பாத்திக்குப் சரியாய் போனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறைய காசு காணிக்கையாக அளிக்கிறேன்” – என்று அவள் வேண்டுவது, நவீன மருத்துவ முறைகள் மீதான அவநம்பிக்கையையும், அவளது மரபுசார்ந்த ஆன்மிக நம்பிக்கையையும் காட்டுகிறது.
பெருநகரத்தின் குளிர்சாதன மருத்துவமனைகள் தங்களுக்கு உதவவில்லை என்ற உண்மையை உணரும் எளிய மக்கள், மீண்டும் தங்களுடைய கிராமியத் தெய்வங்களிடமும் நாட்டு வைத்தியங்களிடவுமே சரணடையும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதை எழுத்தாளர் சுஜாதா பதிவு செய்துள்ளார்.
எழுத்தாளர் சுஜாதாவின் ‘நகரம்’ சிறுகதை, மருத்துவமனையின் பின்னணியில் பெருநகரத்தின் அதிகார மையங்களையும் எளிய மனிதர்களின் வாழ்வியல் துயரங்களையும் காட்டியுள்ள சிறந்த இலக்கியப் படைப்பாகும்.
வள்ளியம்மாள் என்ற தாயின் கண்ணீரின் ஊடாக, நவீன நாகரிகம் மற்றும் மருத்துவ உலகத்தின் மனிதநேயமற்ற முகத்தை விமர்சிக்கும் இக்கதை, தனிமனித வாழ்வியலின் ஆழமான பரிதாபங்களை வாசகரின் மனத்தில் ஆழமாகப் பதித்துச் செல்கிறது.
– – –
