இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 155.மேட்டுக்குடி மனப்பான்மை (என். சொக்கனின் ‘கனவான்களின் ஆட்டம்’ சிறுகதையை முன்வைத்து…

 

நடுத்தர வர்க்கத்தின் போலித்தனங்களையும், அவர்களின் அக உலகத்தில் புதைந்திருக்கும் வர்க்கப் பிரக்ஞையையும் துல்லியமாகவும் எள்ளல் பார்வையோடும் பதிவு செய்துவரும் எழுத்தாளர்களில் என். சொக்கன் குறிப்பிடத்தக்கவர். 

அவர் எழுதிய ‘கனவான்களின் ஆட்டம்’ என்ற சிறுகதை, மேலோட்டமாகப் பார்த்தால் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட எளிய கதையாகத் தோன்றலாம்; ஆனால், அதன் அடி அடுக்கில் வர்க்க வேறுபாடுகள், நிறம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையிலான பாகுபாடுகள், நவீன நாகரிகப் போர்வையில் இயங்கும் நடுத்தர வர்க்கத்தின் வக்கிரமான உளவியல் ஆகியவற்றைக் காணமுடிகிறது.

கதையின் தொடக்கத்தில் ‘காந்தி பார்க்’ என்ற பொதுவெளி விவரிக்கப்படுகிறது. அங்குப் பல்வேறு விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் எனச் சமத்துவமான முறையில் பலரும் இயங்கிவருகிறார்கள். ஆனால், ‘சேட்டுப் பொண்ணு’ என்று அழைக்கப்படும் நிஷாவின் வருகை அந்தப் பூங்காவின் ஒட்டுமொத்தச் சமநிலையை மாற்றிவிடுகிறது. நுனி நாக்கு ஆங்கிலமும் இறுக்கமான ஜீன்ஸ் உடையும் அணிந்து வரும் நிஷா, அந்த மைதானம் ‘சேவல் பண்ணை’யைப் போல இருந்ததாகக் கருதுகிறாள்.

நிஷா கிரிக்கெட் விளையாட்டின் மீது காட்டும் தீவிர ஆர்வம், அந்தப் பூங்காவில் இருந்த மற்ற விளையாட்டுகளை ஒழித்துவிட்டு, மொத்த மைதானத்தையும் கிரிக்கெட்டின் ஆதிக்கத்திற்குக் கீழ்க் கொண்டுவருகிறது. இங்கே கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டன்று; அது நவீன வர்க்கத்தின், மேட்டுக்குடி மனப்பான்மையின் அடையாளம். திறமைக்கும் விதிகளுக்குமுமான மரியாதை என்று அவர்கள் பேசினாலும் அந்த விதிகள் யாவும் தங்களுக்குச் சாதகமான மேட்டுக்குடிச் சூழலிலேயே கட்டமைக்கப் படுகின்றன.

கிரிக்கெட் மட்டுமே உலகமாகச் சுழன்று கொண்டிருந்த அந்த மைதானத்திற்குள், எதிர்பாராதவிதமாகத் தர்மன் நுழைவது கதையின் திருப்புமுனையாக அமைகிறது. அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால் என்று பின்தங்கிய விளிம்புநிலை வாழ்வியலின் அடையாளமாகத் தர்மன் களமிறங்குகிறான்.

தொடக்கத்தில் அவனது தோற்றத்தைக் கண்டு எரிச்சலடையும் இளைஞர்கள், நிஷாவின் தலையீட்டால் வேறு வழியின்றி அவனை விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், தர்மன் தனது அசுரத்தனமான வேகத்தாலும், இயற்கையான திறமையாலும் (Natural Talent) ஒட்டுமொத்த மைதானத்தையும் தன்வசப்படுத்தும்போது, நடுத்தர வர்க்கத்தின் அகத்தில் புதைந்திருந்த வர்க்கப் பொறாமை விழித்துக்கொள்கிறது.

“எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, நாலு வார்த்தை கௌரவமாப் பேசவராது, அழுக்குப் பட்டறை, ஏற்கெனவே கல்யாணமாகி மூன்று பிள்ளை பெற்றவன்… இவனிடம் என்னத்தைக் கண்டாள் இவள்? ஏன் இந்தப் பொருந்தாத ஜொள்ளு?”

இந்தக் கேள்விகள் வெறும் நிஷா மீதான பொறாமையால் எழுந்தவை அல்ல; எத்தகைய முறையான பயிற்சியும் நவீன நாகரிகச் சடங்குகளும் இல்லாத ‘அழுக்குப்பயல்’, தாங்கள் இவ்வளவு நாளாகக் கட்டிக் காப்பாற்றிய ‘கனவான்களின்’ விளையாட்டில் தங்களைவிடத் திறமையாக மிளிர்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதன் வெளிப்பாடாகும்.

தர்மனின் திறமையைச் சரிசமமாக ஏற்க முடியாத அந்த இளைஞர்கள், அவனுக்குள் இருக்கும் ‘காட்டடி கோவிந்தன்’ என்ற பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்துகிறார்கள். 

நிஷா அவனது இயற்கையான திறமையைப் பாராட்டும்போது, இவர்களுக்குள் புகைச்சல் அதிகரிக்கிறது. அப்போது கதையின் நாயகன் ஆபத்தான, அதேசமயம் நடுத்தர வர்க்கத்தின் வழக்கமான தந்திரமான முடிவை எடுக்கிறான்.

தர்மனின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு, அவனுக்குத் தன் தந்தையின் ‘ஃபேக்டரி’யில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் ‘செக்யூரிட்டி’ (காவலாளி) வேலையும் அங்கேயே தங்குவதற்கு குவார்ட்டர்சும் ஏற்பாடு செய்து தருகிறான். மேலோட்டமாகப் பார்த்தால் இது உதவி போலத் தோன்றலாம்; ஆனால், இது கறாரான முறையில் செய்யப்படும் ஒரு வர்க்கச் சுத்திகரிப்பு (Class Cleansing) ஆகும்.

“அதன்பிறகு, தர்மன் அந்தப் பூங்காப் பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் விளையாடினோம்.”

இந்த இறுதி வரிகள் மிகச் சக்திவாய்ந்தவை.

‘கண்ணியமாகவும் நிம்மதியாகவும்’ என்ற வார்த்தைகள் எதை உணர்த்துகின்றன? விளிம்புநிலை மனிதர்களின் வியர்வையும் திறமையும் தேவைப்படும் வரை அவர்களைப் பயன்படுத்திக்கொள்வதும் அவர்கள் தங்களின் எல்லைக்கு மீறி மையத்திற்குவர முயலும்போது, அவர்களைப் பாதுகாப்பான முறையில் மீண்டும் விளிம்புகளுக்கே (காவலாளி வேலை போன்ற அடிமைத் தொழில்களுக்கு) துரத்தி அடிப்பதும்தான் நடுத்தர வர்க்கத்தின் நாகரிகம் என்பதை இந்தக் கதையின் முடிவு முகத்தில் அறைந்தாற்போலச் சொல்கிறது.

எழுத்தாளர் என். சொக்கனின் ‘கனவான்களின் ஆட்டம்’ சிறுகதை, கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில் சமூகம் எப்படித் தகுதி, திறமை, நாகரிகம் என்ற பெயர்களில் வர்க்க வேறுபாடுகளைப் பேணிப் பாதுகாக்கிறது என்பதை மிகக் கறாராகக் காட்டுகிறது. விளிம்புநிலை மனிதர்களின் உழைப்பையும் திறமையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் இருத்தலைத் தாங்கள் ஆளும் பொதுவெளியிலிருந்து எப்படித் திட்டமிட்டு அகற்றுக்கிறார்கள் என்ற நவீன மனிதர்களின் சுயநல உளவியலை இந்தச் சிறுகதை திறம்படப் பதிவுசெய்துள்ளது. 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *