இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 162.அறத்தின் குரல்  (கந்தர்வனின் ‘சாசனம்’ சிறுகதையை முன்வைத்து…)

 

விளிம்புநிலை மக்களின் குரலாகவும் நிலப்பிரபுத்துவ அமைப்பின் கொடூரமான முகத்தை அகச்சோதனை செய்து காட்டும் படைப்பாளியாகவும் விளங்கியவர் எழுத்தாளர் கந்தர்வன். அவர் எழுதிய ‘சாசனம்’ என்னும் சிறுகதை, நில உரிமை, சாதிய ஒடுக்குமுறை, தலைமுறைகளைக் கடந்து தொடரும் குற்ற உணர்ச்சி மற்றும் தனிமனிதனின் அகப்போராட்டம் ஆகியவற்றை ஆழமாகவும் கறாராகவும் பேசும் சிறந்த படைப்பாகும்.

கதையின் தொடக்கமே நிலப்பிரபுத்துவத்தின் வேர்களை மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது. தாத்தா காலத்தில் சமஸ்தானத்தின் பேஷ்காராக இருந்தவர், மகாராஜா திக் விஜயம் செய்தபோது விருந்துகள் வைத்து, அதற்குக் கைமாறாக இருபத்தோரு கிராமங்களின் சாசனங்களையும் பட்டயங்களையும் பெற்றுக்கொள்கிறார். அந்தச் சாசனங்களைக் காட்டி, பாரம்பரியமாக அந்த மண்ணை உழுது வாழ்ந்த எளிய மக்களை விரட்டியடிப்பதும் கொலைகள் செய்வதும் அதிகாரத்தின் கொடூரத்தை வெளிப்படுத்துகிறது.

“தாத்தா அரண்மனைக்குப் போய் சாசனங்களையும் பட்டயங்களையும் வாங்கி வந்த நாளிலிருந்து எட்டு நாள்களுக்குள் இருபத்தோரு கிராமங்களில் ஆட்களைத் திரட்டினார். தங்களுடையதென்று எண்ணி உழுது கொண்டிருந்த குடியானவர்களை நிலங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் மஹாராஜாவின் சாசனங்களைக் காட்டி விரட்டினார்.”   

இந்தச் சாசனங்கள் என்பவை நீதிக்கான ஆவணங்கள் அல்ல; வஞ்சகமும் அதிகாரமும் இணைந்து எளிய மக்களின் உழைப்பைச் சுரண்டிடப் பயன்படுத்தப்பட்ட அடிமைச் சான்றுகள். தாத்தா தொடங்கிவைத்த இந்தச் சுரண்டலை, அப்பாவுக்குப் பின்வரும் தலைமுறையும் அப்படியே தொடர்கிறது. ஆனால், அந்த அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் அப்பாவுக்குள் குற்ற உணர்ச்சி நச்சரவமாய் ஊர்ந்து கொண்டேயிருக்கிறது.

உரிமையின்மையும் மறைக்கப்பட்ட உண்மையும்அப்பாவுக்குச் சொந்தமான அத்தனை நஞ்சை புஞ்சை நிலங்களைவிடவும் அவர் உயிராய் நேசிப்பது ஊர்க்கோடியில் குறவர் குடிசைகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமாய் நிற்கும் அந்தப் புளியமரத்தைத்தான். அந்த மரத்தின் செழிப்பும் அது தரும் புளியும் குடும்பத்தின் ஆண்டு வருவாய்க்கு முக்கியமானது. ஆனால், இவ்வளவு பெரிய சொத்தாக விளங்கும் அந்த மரத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் தாத்தாவால் கொண்டுவரப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான சாசனப் பத்திரங்கள் எதிலுமே இல்லை; சின்ன துண்டு காகிதத்தில்கூட அது பதியப்படவில்லை. ஏன் அந்த மரம் சாசனத்தில் இல்லை?

காரணம், அது குறவர்களின் நிலத்தில், அவர்களின் உழைப்பிலும் வேர்வையிலும் செழித்த மரம். அதனைத் தன் சொந்தம் என்று கூறிக்கொள்ள அப்பாவுக்கு எந்தச் சட்டபூர்வமான உரிமையும் இல்லை என்றாலும் பலவந்தத்தின் மூலமும் ஆதிக்கத்தின் மூலமும் அதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். இந்த முரண்பாடுதான் அப்பாவின் அக உலகைக் குலைக்கும் முதல் புள்ளியாக அமைகிறது.

அப்பாவின் அந்தரங்க முரண்கள்அந்தப் புளியமரத்தின் அருகே உள்ள குடிசையில் வாழும் கிழவியும் அவளது மகளும் அப்பாவின் வாழ்க்கையோடு ரகசியமாகப் பிணைக்கப்பட்டவர்கள். தாத்தா ஜாடையில், தாத்தா நிறத்தில் இருக்கும் அந்தப் பெண்ணுக்கும் அப்பாவுக்கும் இடையே உள்ள உறவு, நிலப்பிரபுத்துவ எஜமானர்களின் வர்க்க வன்முறையையும் பாலியல் ஆதிக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குறவர் கூட்டத்திலிருந்து விலக்கித் தனியாக வைக்கப்பட்டுள்ள அந்தக் குடிசையும் அதன் சுற்றியுள்ள தீவட்டமும் சாதியத் தூய்மைவாதத்தின் குறியீடு. அப்பாவின் வருகைக்காகக் காத்துநிற்கும் அந்தப் பெண்ணின் வாஞ்சையும் அவர் செல்லும் போது குப்பைக்கூளங்களைத் தன் காலால் தள்ளி வழி செய்யும் கீழ்ப்படிதலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பரிதாபகரமான நிலையைச் சித்தரிக்கிறது. அப்பாவிற்குத் தெரியும், ‘அந்த மரமும் அந்த நிலமும் தனக்குச் சொந்தமானதல்ல’ என்று. ஆனாலும் அதிகார மமதையாலும் பரம்பரைச் சொத்து என்ற திமிராலும் அதனை ஏற்றுக்கொண்டு வாழ்கிறான். 

கணக்குப் பிள்ளையிடம் கேட்டு மரத்தைத் தன் பெயருக்கு மாற்றிக்கொள்ள நினைத்தாலும், “மரம் இருக்கும் இடம் நம் பெயரில் இல்லை என்று கணக்குப்பிள்ளைக்கு நாமே சொல்லிக் கொடுத்தது போலாகிவிடும்” என்ற பயம் அவனுக்குத் தடையாக இருக்கிறது.

கதையின் திருப்புமுனை புளியம்பழம் உலுக்கும் திருநாளில் நடக்கிறது. ஆண்டுதோறும் கிழவியும் அவளது மகளும் மரத்தைத் தொட்டு அழுது கும்பிடுவதும் அப்பா எஞ்சிய புளியைக் காலாலுகந்து குவித்துத் தருவதும் வழக்கம். ஆனால், ஒருநாள் அந்தப் பெண்ணின் கணவன் அந்த அவமானத்தைத் தாங்காமல் கோபப்பட்டு, கிழவியை இழுத்து வந்து, அந்தப் புளியையும் சேர்த்து அள்ளிச் செல்லச் சொல்கிறான். அடுத்த ஆண்டு புளியம்பழம் உலுக்கச் செல்லும் அப்பாவுக்குக் காத்திருப்பது பெரிய அதிர்ச்சி. 

குறவீட்டு ஆள்கள் மொத்தமும் திரண்டு நிற்கிறார்கள். அந்தப் பெண் துணிச்சலாகக் குரல் கொடுக்கிறாள்: “இனிமேற்பட்டு இந்த மரத்தை நாந்தான் உலுக்குவேன்… இதிலே எனக்குப் பாத்தியதை உண்டு…”இந்த வார்த்தைகள் அப்பாவின் காலடியில் பூமியைப் பிளக்கின்றன. அவனுக்குக் கால் நடுங்குகிறத; உதடு கோணுகிறது.

தலைகுனிந்து அங்கிருந்து திரும்பி வரும் அப்பா, அதன் பின்னபு தன் வாழ்நாளில் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்ததில்லை. இந்த இடத்தில் ‘சாசனம்’ என்ற தலைப்பு ஆழமான பொருளைப் பெறுகிறது. அரண்மனையிலிருந்து தாத்தா கொண்டுவந்த சாசனங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகலாம்; நிலத்தை அபகரிக்க உதவலாம். ஆனால், உழைக்கும் மக்களின் உரிமை உணர்வுக்கு முன்னால், அந்தத் தாள்களும் மைத்துளிகளும் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன. இயற்கைக்கும் உழைப்புக்கும் சொந்தமானவர்களிடமே அந்த மரம் மீண்டு செல்வதை எந்தச் சாசனத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.

அப்பா நிலப்பிரபு; அதிகாரம் படைத்தவர். ஆனால் அவர் மனதளவில் சுதந்திரமானவரா? இல்லை. குற்ற உணர்ச்சியும், தான் ஆக்கிரமித்திருக்கும் வாழ்வு பொய்யானது என்ற உண்மையும் அவரை உள்ளூரச் செதுக்கிக் கொண்டே இருக்கின்றன. புளியமரத்தின் அடியில் நடக்கும் ஒவ்வொரு சடங்கிலும் அவர் அடையும் அமைதியின்மை, அவரது அகவாழ்வின் வறட்சியை வெளிப்படுத்துகிறது.

இறுதியில், ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு முன்னால் தனது அதிகாரம் பலமிழந்து நிற்பதைக் கண்டவுடன், அவர் தன் அதிகார அடையாளங்களை முற்றிலுமாகத் துறக்கிறார். சாசனப் பெட்டியைத் திறக்காமல் இருப்பது என்பது வெறும் சடங்கு விலகல் அன்று; அது தன் குடும்பத்தின் அநீதியான வரலாற்றின் தோல்வியை அவர் மௌனமாக ஒப்புக் கொள்வதாகும்.

எழுத்தாளர் கந்தர்வனின் ‘சாசனம்’ சிறுகதை, வெறும் நில உரிமைப் போராட்டம் பற்றிய கதை மட்டுமன்று; அது அதிகாரத்தின் பலம் கொண்டு மனிதர்களை அடக்கி ஆளும் முறைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் எழுப்பும் அறத்தின் குரலாகும். 

தனிமனிதனின் குற்ற உணர்ச்சி, சாதியக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றைத் தனது கூர்மையான எழுத்துநடையால் சாடியுள்ள எழுத்தாளர் கந்தர்வன், தமிழ் இலக்கிய வரலாற்றில் மறக்க முடியாத சமூக ஆவணத்தைப் படைத்துள்ளார். காலங்கள் கடந்தாலும் அதிகாரத்தின் சாசனங்களை மனித உரிமைகள் அடித்து நொறுக்கும் என்பதற்கு இக்கதை என்றைக்கும் ஒரு சாட்சியாக விளங்கும்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *