இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 165.வாழ்வாதாரம் (கு. ப. ராஜகோபாலனின் ‘பண்ணைச் செங்கான்’ சிறுகதையை முன்வைத்து…)

 

தமிழ்ச் சிறுகதை உலகின் நவயுகப் பாதையை நிர்ணயித்த முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் (கு. ப. ரா.) எழுதிய ‘பண்ணைச் செங்கான்’ என்னும் சிறுகதை, நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஊடே இயங்கும் மனித உணர்வுகளின் ஆழத்தையும், நிலத்திற்கும் உழைக்கும் விவசாயிக்கும் இடையிலான பிரிக்க முடியாத ஆன்ம பந்தத்தையும் காட்டும் உன்னதப் படைப்பாகும். 

தலைமுறை தாண்டித் தொடரும் ‘குத்தகை’ உறவையும் நகர நாகரிகத்திற்கும் கிராமிய உழைப்புக்கும் இடையிலான முரண்பாட்டையும் இக்கதை தனிமனித வாழ்வியல் தளத்திலிருந்து மிகக் கறாராகப் பேசுகிறது.

 கதையின் தொடக்கத்திலேயே எழுத்தாளர் கு.ப.ரா. கதைசொல்லியின் குரலாக (நகரத்து மனிதனின்) உளவியலைச் செங்கானின் உரையாடலினூடே வெளிப்படுத்துகிறார். பாட்டன் காலத்தில் வைக்கப்பட்ட மாமரமும் தாமாகத் தடம்பார்த்து நடக்கும் சூழலும் நகரத்துப் பாமரத்தனமான நடைமுறையும் கிராமியப் பின்னணியில் வெளிப்படுகின்றன.

“வரப்புல நடந்து பளக்கமில்லே. பட்டண வாசத்துப் புள்ளே!” என்று செங்கான் கூறுவது வெறும் கேலியன்று; அது கிராமத்தின் மண்ணோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல், வெறும் பொருளாதார லாபமாகவும் உரிமைப் பத்திரமாகவும் மட்டுமே நிலத்தைப் பார்க்கும் நவீன மனிதனுக்கும் அந்த மண்ணோடு வியர்வையால் பிணைக்கப்பட்ட உழைப்பாளிக்கும் உள்ள இடைவெளியைக் காட்டுகிறது. கதைசொல்லிக்கு இளநீர் குடிக்கக் கூடத் தெரியாமல் தன் மேலெல்லாம் கொட்டிக்கொள்வது, அவன் கிராமத்தின் எதார்த்த வாழ்க்கையிலிருந்து எவ்வளவு தூரம் விலகிவிட்டான் என்பதைக் குறிக்கிறது.

செங்கான் வெறும் குத்தகைதாரன் மட்டுமல்லன்; அவன் அந்த நிலத்தின் ஆன்மா. பாட்டனார் காலம் முதல் அந்த நிலத்தைச் சாகுபடி செய்பவன். எண்பது வயதானாலும் கம்பளிப் போர்வை போர்த்திய தோற்றமும், கையில் மூங்கில் தடியும் கொண்டு காட்சியளிக்கும் செங்கான், அந்த மண்ணின் பூர்வீகக் குறியீடு.

அவன் நிலத்தில் உழைக்கும் விதம், பயிரை நேசிக்கும் முறை, வரப்பைக் கிண்டிக் கொண்டே இருப்பது எல்லாம் அவனுக்கும் அந்த நிலத்திற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத பந்தத்தைக் காட்டுகிறது. அவனுக்கு நிலம் என்பது வெறும் வியாபாரப் பொருள் அல்ல; அது அவனது உயிர் மூச்சு.

“இந்த வயக்காட்டுலே ஒளச்சேதான் நான் சாவனும் சாமி! இதெ வுட்டா நான் செத்துப் போவேன்!” என்று அவன் கதறும் வார்த்தைகள், உழைப்பாளி தன் வாழ்வாதாரத்தை இழக்கும்போது அடையும் ஆன்ம மரணத்தை வெளிப்படுத்துகின்றன.

கதைசொல்லி தாக்ஷிண்யப் பிரகிருதி (பிறர் மனம் கோணாமல் நடப்பவன்). அவன் கிராமத்திற்கு வரும்போது ஊரார் அவனைச் சூழ்ந்துகொண்டு, செங்கான் ஏமாற்றுவதாகவும் குத்தகை குறைவுபடுவதாகவும்கூறி அவனின் காதில் விஷத்தை ஊற்றுகிறார்கள். ஊரில் குத்தகை ஏறிவிட்டதாகவும் தாமே வேறு ஆளை வைத்து இரட்டிப்பு குத்தகைக்குப் பேசிவிடுவதாகவும் வக்கீல் மாதிரி பேசுகிறார்கள்.

இங்குக் கிராமியச் சமூகம் காட்டும் ஆர்வம் நியாயமானதன்று; அது சுயநலமும் பொறாமையும் கலந்தது. பல தலைமுறைகளாக அந்த நிலத்தை நம்பிப் பிழைக்கும் கிழவனை விரட்டிவிட்டு, கூடுதல் பணம் சம்பாதிக்கத் துடிக்கும் கூட்டத்தின் பிரதிநிதிகளாக அந்த ஊரார் மாறுகிறார்கள். கதைசொல்லியின் பலவீனமான மனநிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த மனிதர், அவனது அனுமதியின்றி வேறு ஒரு பெயருக்குக் குத்தகைச் சீட்டு எழுதி வாங்கி வந்து அவன் கையில் கொடுத்துவிடுகிறார். இது நவீனச் சொத்துடைமைச் சமூகத்தின் வஞ்சக முகத்தை வெளிப்படுத்துகிறது.

தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து செங்கானை எப்படி அப்புறப்படுத்துவது என்ற தவிப்பு கதைசொல்லியை வாட்டுகிறது. அவனிடம் உண்மையைச் சொல்ல அவன் பலமுறை முயன்றாலும் செங்கானின் பேச்சும் அவனது அர்ப்பணிப்பும் நிலத்தின் மீது அவன் கொண்ட காதலும் அந்த வார்த்தைகளை நெஞ்சிலேயே தடுத்து நிறுத்துகின்றன.

செங்கானோ எவ்வித ஐயமுமின்றி, அடுத்த வருடம் கிணறு கட்டுவது பற்றியும், மாடு வாங்கித் தருவது பற்றியும் பேசுகிறான். அவனது பேச்சில் இருக்கும் நேர்மையும் உழைப்பின் மீதான நம்பிக்கையும் கதைசொல்லியின் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது. செங்கான் பேசும்போது, நிலத்தில் அவனது வியர்வே எவ்வாறு கலந்துள்ளது என்பதை உருக்கமாக விவரிக்கிறான்:- “நெத்தி வேர்வ நெலத்துல விள எம்பாங்க. அது எனக்கல்ல தகும்! ராப்பவலா எவன் என்னைப் போல காட்டுலே கெடப்பான்? ரவைக்கு ரவெ தாவத்துக்குத் தண்ணி கொடுக்குறாப் போல எவன் தண்ணி கட்டுவான்?”

இந்த வரிகள் உழைக்கும் வர்க்கத்தின் தார்மீக உரிமையை நிலை நாட்டுகின்றன. சட்டப்பூர்வமான ஆவணங்கள் எங்கு வேண்டுமானாலும் மாறலாம்; ஆனால் அந்த மண்ணில் சிந்தப்பட்ட வியர்வைக்கு எந்த ஆவணத்தாலும் விலைகொடுக்க முடியாது.

இறுதியில், செங்கானை நேரில் பார்த்து அந்த மோசமான செய்தியைச் சொல்ல அவனால் முடியவில்லை. ஊராரின் வற்புறுத்தலையும் மீறி, செங்கானின் உழைப்பையும் கண்ணீரையும் எண்ணிப் பார்த்த அவன், அந்த நிலத்தை அவனிடமே விட்டுவிடுவதாகத் தீர்மானிக்கிறான்.

“இல்லை சொல்லப் போவதில்லை. செங்கான் கொடுக்கும் நெல் போதும் எனக்கு!”என்று தன் நண்பனிடம் கூறிவிட்டுத் தலை நிமிரும் கதைசொல்லி, சட்டத்தின் காகிதங்களைவிட மனித உறவுகளும் உழைப்பின் மதிப்பும் மேலானவை என்பதை உணர்கிறான். காலை வேளையில் செங்கான் “மூங்கிலிலை மேலே…” என்று ஏற்றப் பாட்டுப் பாடிக்கொண்டே தண்ணீர்ப் பாய்ச்சுவது, கதைசொல்லியின் மனச்சுமை நீங்கிவிட்டதை உணர்த்தும் கவித்துவமான காட்சியாக அமைகிறது.

எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனின் ‘பண்ணைச் செங்கான்’ சிறுகதை, வெறும் நிலம் மற்றும் குத்தகை பற்றிய கதை மட்டுமன்று; அது மனித மனங்களின் ஊசலாட்டத்தையும் உழைக்கும் வர்க்கத்தின் மாண்பையும் பேசும் சமூக உளவியல் ஆவணமாகும். 

நவீன நாகரிகத்தின் சட்டத்திட்டங்களும் பொருளாதார லாபங்களும் மனித உறவுகளை நசுக்க முற்படும்போது, தார்மீக உணர்வும் மனிதமும் எவ்வாறு அவற்றைத் தாண்டி நிற்க வேண்டும் என்பதை இக்கதை பதிவு செய்கிறது. காலம் கடந்தும் மனிதநேயத்தின் அவசியத்தை நினைவூட்டும் சிறந்த படைப்பாக இக்கதை திகழ்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *