இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 166.வதைக்களம்  (உதயசங்கரின் ‘ஆனைக்கிணறு தெரு’ சிறுகதையை முன்வைத்து…)

எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்துகள் எப்போதும் மனித மனங்களின் ஆழடுக்குகளைத் தொடுபவை; எளிய மக்களின் வாழ்க்கையை அதன் அசல் தன்மையோடு பதிவுசெய்பவை. அந்த வகையில், அவர் எழுதிய ‘ஆனைக்கிணறு தெரு’ என்னும் சிறுகதை, தமிழ் நடுத்தர மற்றும் விளிம்புநிலை மக்களின் குடும்பச் சூழல், வறுமை, பெண் ஒடுக்குமுறை மற்றும் தனிமனித உளவியல் ஆகியவற்றைப் பேசும் முக்கியமான படைப்பாகும்.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்த் தன் சொந்த ஊருக்குத் திரும்பும் சுந்தரின் நினைவலைகளூடே விரியும் இக்கதை, கால மாற்றத்தின் கோர முகத்தையும் தலைமுறைகளைக் கடந்து தொடரும் வாழ்வியல் துயரங்களையும் கண்முன்னே நிறுத்துகிறது.

கதையின் தொடக்கம் காலத்தின் மாற்றத்தை வாசகர்களுக்கு உரக்கச் சொல்கிறது. செங்கோட்டைக்கும் கொல்லத்திற்கும் இடைப்பட்ட ஆனைக்கிணறு தெருவுக்குச் செல்லும் சுந்தர், தான் சிறுவயதில் கண்ட கரீம்பாயின் தகரக்கொட்டாய் டீக்கடை இருந்த இடத்தில் நவீன ‘ஸ்ரேயா தேநீரகம்’ நிற்பதைக் காண்கிறான். 

இந்த நவீனமயமாக்கல் வெறும் கட்டடங்களின் மாற்றமன்று; அது கடந்த காலத்தின் உன்னதமான மனித உறவுகளையும் கரீம்பாயின் ஏலக்காய் டீயோடு கலந்திருந்த பால்யத்தின் வாசனையையும் அழித்துவிட்டு முளைத்திருக்கும் வணிகமயமாதலின் அடையாளம்.

சுந்தரின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தகாலம், அப்பாவின் மரணம், குடும்பத்தைக் கவன்ற கடன்கள் என்று அவனது இளமைக்காலம் வடுக்களால் நிரம்பியது. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் வீட்டை விட்டுத் தலைமறைவாக வேண்டிய கட்டாயம். இத்தகைய பொருளாதாரச் சிக்கல்கள் தனிமனிதனின் வாழ்வியலை எவ்வாறு சிதைக்கின்றன என்பதையும் அதன் வடுக்கள் எக்காலத்திலும் அகலாது மனத்தைச் சுற்றிக்கொண்டிருப்பதையும் எழுத்தாளர் உதயசங்கர் கச்சிதமாகப் பதிவுசெய்துள்ளார்.

இக்கதையின் மைய அச்சு ஆனைக்கிணறு ஆகும். பத்துக் தெருக்களுக்குக் குடிதநீர் வழங்கிய அந்த கம்பீரமான கிணறு, நாளடைவில் பெண்களின் மரணக்கிணறாக உருமாறுகிறது. ராணியக்கா, பேச்சியம்மாள், மேட்டுத்தெருப் பெண், அக்கா-தங்கை ஜோடி மற்றும் இறுதியாகச் சுந்தரின் வளர்ப்புத் தாயான அப்பாச்சி வரை அனைவரின் வாழ்வுமே அந்த ஆனைக்கிணற்றின் ஆழத்தில்தான் முடிவடைகிறது.

கிணற்றில் விழுந்து இறந்த பெண்களின் பின்னணியில் இருப்பது கணவனின் சந்தேகம், குடும்பச் சண்டை, பக்கத்து வீட்டுக்காரியின் ஏச்சு, வறுமை மற்றும் பாலியல் வன்முறை போன்ற சமூகக் காரணங்களே. பெண் தன் மீதான அவதூறுகளையும் குடும்பச் சுமையையும் தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும்போது, சமூகம் அதை எளிதாகக் கடந்து சென்றுவிடுகிறது.

பெண்கள் தற்கொலை செய்து கொள்வதை நியாயப்படுத்தும் விதமாக, அங்குத் ‘தெய்வானை’ வந்திருப்பதாகக்கூறிச் சாமி ஆடும் சடங்குகள் நடக்கிறது. அப்பாச்சிகூட, “பொம்பிளக தலைவிதி அவ்வளவுதான்… செத்தா எல்லாம் சரியாயிரும்” என்று கூறுவது, பெண்களின் அடிமைத்தனத்தை அந்தச் சமூகமே எப்படிக் கட்டமைப்பு செய்து வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

சுந்தரின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் அப்பாச்சி. அவரது மூக்குப்பொடி வாசமும் அவர் சொல்லும் செண்பகக்கோட்டை இளவரசி கதைகளும் சுந்தரின் பால்ய உலகத்தை அலங்கரித்தவை. ஆனால், அதே அப்பாச்சி ஒருநாள், தன் மகன் (சுந்தரின் அப்பா) மூக்குப்பொடி வாங்குவதற்காகக் கேட்ட பணத்தின் பொருட்டுச் சொன்ன சுடுசொற்களைத் தாங்க முடியாமல் ஆனைக்கிணற்றில் குதித்து மாய்த்துக் கொள்கிறார்.

“நீயெல்லாம் இருந்து ஏன் கழுத்தறுக்கே… இந்த வயசில மூக்குப்பொடி ஒரு கேடா? மனுசந்தன்னால கண்ணுமுழிப் பிதுங்கிக்கிட்டு வாரேன்… என்னமோ இனிமேத்தான் சாதிக்கப்போற மாதிரி…”

இந்த வரிகள் முதிய தாயின் தன்மாநிலத்தை, தற்பெருமையை எப்படிக் குலைக்கின்றன என்பதை உணர்த்துகிறது. குடும்பத்தில் பொருளாதாரச் சுமை தாங்காமல் கணவன் படும் கஷ்டம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் முதியவர்கள் மீதான குடும்பத்தினரின் அலட்சியமும் ஏளனமும் அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது. சுந்தர் தன் காதலி வனஜாவின் நினைவில் மூழ்கித் தன் பாட்டியின் தற்கொலைக்குக் காரணமாகிய தருணத்தை உணராமல் இருந்தது, நடுத்தர வர்க்கத்து இளையோரின் சுயநலத்தையும் உணர்ச்சியற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு ஊருக்குத் திரும்பிய சுந்தர், ஆனைக்கிணறு இருந்த இடத்தில் ஏழு மாடிக்கட்டடம் எழுந்துள்ளதைக் காண்கிறான். கிணறு காணாமல் போய்விட்டது; ஆனால், அதன் துயர வரலாறு காணாமல் போகவில்லை. கவுன்சிலர் சண்முகம் அந்த இடத்தை வளைத்துப் போட்டுக் கட்டடம் கட்டினாலும் அங்கும் பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

“இப்பயும் அந்த மாடிக்கட்டடத்திலே திடீர் திடீர்னு பொம்பிளக செத்துப்போறாளுக… போனமாசம் அஞ்சாவது மாடியில ஒரு பொம்பிள தீக்குளிச்சி செத்தா… நேத்திக்கிக்கூட மூணாவது மாடியிலேர்ந்து ஒரு பொண்ணு கீழே குதிச்சிட்டா…”

கிணறு இருந்த இடம் மாறலாம்; கட்டடங்கள் உயரலாம்; ஆனால் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் மன அழுத்தமும் தற்கொலைகளும் வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்த எதார்த்தத்தைக் கேட்டு வெறுப்படைந்த சுந்தர் கூறுவதுதான் கதையின் தத்துவார்த்தமான முடிவு:- “இது ஆண்களின் உலகம் சித்தி.”

இந்த ஒற்றை வாக்கியம் ஆண் மையச் சமூகத்தின் ஒட்டுமொத்த வன்முறையையும் பெண்களின் வாழ்வியல் பரிதவிப்பையும் காட்டுகிறது.

எழுத்தாளர் உதயசங்கரின் ‘ஆனைக்கிணறு தெரு’ சிறுகதை, வெறும் ஒரு தெருவின் கதையன்று; இது ஒடுக்கப்பட்ட பெண்களின் கண்ணீராலும் ஆணாதிக்கத்தின் கொடூரத்தாலுமான வாழ்வியலின் ஆவணப் பதிவு. மனிதர்களின் சுயநலம், வறுமையின் கோரமுகம், மூடநம்பிக்கைகள் மற்றும் அதற்குப் பலியாகும் தனிமனிதர்களின் உளவியல் சிக்கல்களைப் பற்றிப் பேசியுள்ள இந்தக் கதை தமிழ் நவயுக இலக்கியத்தில் தவிர்க்க முடியாத சமூகக் கண்ணாடி.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *