
நவீனத் தமிழ் நாடக, சிறுகதை வரலாற்றின் தவிர்க்க முடியாத ஆளுமைகளுள் ஒருவரான ந. முத்துசாமியின் ‘நீர்மை’ என்ற சிறுகதை, தமிழ் இலக்கியச் சூழலில் தனித்துவமான வாசிப்பு அனுபவத்தைத் தரும் படைப்பாகும்.
சாதாரண நிகழ்வுகளையும் ஊருக்குள் எவ்வித சலனமுமின்றி வாழ்ந்து மறையும் விளிம்புநிலை மனிதரின் வாழ்க்கையையும் ஒரு சிறுவனின் அகவயப் பார்வையிலிருந்து இக்கதை விவரிக்கிறது.
இச்சிறுகதை வெறும் கிராமியச் சித்திரம் மட்டுமன்று; தனிமனிதனின் தனிமை, நினைவுகளின் அடுக்குகள், சமூகத்தின் வன்முறை மற்றும் மனித இருத்தலின் (Existentialism) மீதான தீவிரமான தத்துவார்த்த விசாரணையாகும்.
கதையின் தொடக்கமே தத்துவார்த்தக் கேள்வியுடன் தொடங்குகிறது. “மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப் போகிறான்” என்ற வரிகள், மனிதனின் தொடக்ககால நினைவுகளின் ஆழத்தை உணர்த்துகின்றன.
அந்தத் தொன்மையான கிழவிக்குரிய அறிமுகம் சாலைக்குளத்திலிருந்து தொடங்குகிறது. ஊரின் பொதுவெளியில், யாருக்கும் தொந்தரவு தராமல், எவ்வித பிரம்மாண்டமும் இன்றி குளத்தில் மிதக்கும் பனங்காயைப் போல அவள் அடையாளமற்றுத் தென்படுகிறாள்.
அவள் தன் பத்தாவது வயதில் உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவள் (வீணானவள்). தொண்ணூறு வயதுக்கு மேல் இறக்கும் வரை அவள் சமூகத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியே இருந்தாள். அவளை அறியாத ஒரு தலைமுறை பிறந்துவிட்டாலும் கதையின் நாயகனுக்கு அவள் ஒவ்வொரு நாளும் கண்ணில்படும் ஒருவழக்கமான காட்சியாக மாறுகிறாள். இது தனிமனிதனின் அகவெளியில் காலமும் வெளியும் எவ்வாறு இணைந்து பயணிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
சிறுவயது விளையாட்டுகளும் அப்பாவிகளான சிறுவர்களின் உலகமும் இந்தக் கதையில் இயல்பாக விவரிக்கப்பட்டுள்ளன. மத்து கயிற்றை வைத்து தம்பியை மாடாக ஓட்டி விளையாடும் விளையாட்டும் அந்தக் கிழவி இவனைப் பார்த்துக் ‘கண்டாமணி’ என்று அழைப்பதும் கதையின் முக்கியமான உளவியல் புள்ளிகளாகும்.
சிறுவன் கால்சட்டை போடாமல் ஓடும்போது அவனுக்கு இயற்கையாகவே பெரிதாகத் தொங்கிய பாலுறுப்பு, பிற்காலத்தில் அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் சுருங்கியது என்று குறிப்பிடுவது, உடலின் வழியே தன் சுயத்தை உணரும் பாலின விழிப்புணர்வின் வெளிபாடாகும்.
அந்தக்கிழவி இவனைக் ‘கண்டாமணி’ என்று அழைப்பதில் எந்த இகழ்ச்சியும் இல்லை; அது அவளது இயல்பான வெளிப்பாடு. ஆனால், சிறுவன் வளர வளர, கால்சட்டை போட ஆரம்பித்த பிறகு அவள் அந்தச் சொல்லைச் சொல்வதை நிறுத்திவிடுகிறாள். அந்த மௌனம் சிறுவனின் அகத்தில் ஒருவித இடைவெளியை உருவாக்குகிறது.
எங்கள் கிழப்பாட்டி சொல்லும் கதைகளும், மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கையை விவரிக்கும் பாணியும் கிராமியச் சமூகத்தின் வாய்மொழி வரலாற்றைப் பேசுகின்றன.
பாட்டி சொல்லும் கதைகள் பகல் போல வெளிச்சமானவை அல்ல; மாறாக, நிலா வெளிச்சம் போன்ற மங்கலான, கற்பனைகள் கலந்த கதைகள். அந்தக்கிழவியின் கடந்தகால வாழ்க்கையும், அவளது தந்தையின் இறப்புக்குப் பிறகு மிரண்டு ஓடிச் சாலைக்குளத்தில் விழுந்த நிகழ்வும் கிராமியச் சமூகத்தின் உளவியல் அதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
முப்பது வருதங்கள் வீட்டுக்குள் தனிமைப்பட்டுக்கிடந்து, தன் நாற்பது வயதில் வெளியில் வரும்போது, ஊரே அவளுக்கு முற்றிலும் மாறிப்போயிருக்கும். ஊர் அவளை நிஜமாகக் கண்டது; ஆனால் அவளால் யாரையும் அடையாளங்காண முடியவில்லை. இது சமூகத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட தனிமனிதனின் அநாதையான இருத்தலைக் குறிக்கிறது.
கதையின் மற்றொரு மையம் வீட்டின் அடுப்பங்கரையும், தயிர் கடையும் சத்தமும் ஆகும். அம்மா தயிர் கடைந்து கொண்டிருக்கும் போது பால் வாங்க வரும் அந்தக் கிழவி, தாழ்வாரத்துச் சின்னத்திண்ணை ஓரத்தில் வந்து நிற்பாள்.
அம்மாவின் நேரத்தைக் காட்டும் ஒரே குறியீடு அந்தக் கிழவியின் குரல்தான். “பட்டு” என்ற அந்த ஒரு சொல்தான் அவளது இருப்பை உலகிற்கு அறிவிக்கிறது.
பால் பாத்திரங்களை மாற்றும்போது சில்லறை மாறுவது, கணக்குச் சொல்வது எல்லாமே எந்தவிதத் தகராறுமின்றி இயல்பாக நடக்கிறது. வார்த்தைகள் அற்ற, முற்றிலும் மௌனமான வணிக உறவு அது. அவள் நின்ற இடம் காலப்போக்கில் குழம்பிப் போய், எண்ணெய்ப் பிசுக்கும் நீர்க்காவியும் ஏறிய நார்மடிப்புடவையோடு தெருமண்ணை அப்பிக் கொண்டு நிற்கும் அவளது உருவம், காலத்தின் சுவடுகளைச் சுமக்கும் மரத்துப்போன உடலின் குறியீடாகும்.
கிராமங்களில் விளிம்புநிலை மனிதர்களை அல்லது விசித்திரமான மனிதர்களைச் சமூகம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் ‘பிசாசு’ என்ற கற்பனைக் குறியீட்டின் வழியே ந.முத்துசாமி அம்பலப்படுத்துகிறார்.
ஊத்துக்காட்டில் வீட்டு விலக்கான பெண்கள் குளிக்கப் போகும்போது, பிசாசுக் கதைகளைக் கூறிக்கொண்டும் பயந்து கொண்டும் செல்வது கிராமிய மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடு. அதேபோல, அந்தக் கிழவியையும் மக்கள் ‘தண்ணீர்ப் பிசாசு’ என்று அழைக்கிறார்கள். ஆனால் அவளைப் பார்த்து யாரும் பயந்ததில்லை; மாறாக, அவளது மௌனத்தை அவர்கள் புறக்கணித்தார்கள்.
சுதந்திர தினத்தன்று வாத்தியார்களும் ஊர்மக்களும் சேர்ந்து சேரிக்காரர்களை ஊர்வலமாக அழைத்து வரும்போது, அந்தக் கிழவி குளத்திலிருந்து குடத்துடன் வருவதைக் கண்டு அனைவரும் கேலி செய்வதும் சிரிப்பதும் சமூகத்தின் வன்முகத்தைக் காட்டுகிறது. அக்ரகாரத்து மனிதர்கள் அவளைத் தனிமைப்படுத்திய விதமும், காந்தி கட்சியில் சேர்ந்துவிட்டதாகக் கேலி செய்த விதமும் அதிகார வர்க்கத்தின் பரிகாசமாகும். அந்த அவமானமும் மனச்சுமையும்தான் அவளது இறுதி வாழ்வை மேலும் சுருக்கியது.
கதையின் இறுதிப் பகுதி மனிதனின் மரணத்தையும் அதைச் சமூகம் அணுகும் முறையையும் பதிவு செய்கிறது.
ஒருநாள் காலை அவள் வீட்டுக் பூட்டுத் தொங்கிக்கொண்டிருப்பதைக் காணும் மக்கள், அவள் செத்துவிட்டதை உணர்கிறார்கள். கீழப்பாளையத்தைத் தாண்டி வரப்பில் நடந்துபோய், ஒருகளத்தின் ஆலங்கிளை நிழலில் களைத்து உட்கார்ந்து உயிர்விடும் அவளது இறுதிநேரம், தமிழ் விளிம்புநிலை மக்களின் எதார்த்தமான மரணச் சித்திரமாகும்.
அவள் செத்த பிறகும், ஊ மக்கள் அவளைக் குளத்தில் பார்த்ததாகச் சொல்வதும், “எல்லோரும் அவளைப் குளத்தில் பார்க்காத நாள் என்று ஆரம்பமாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அதில் நானும் ஒருவன்” என்று கதை முடிவதும் மனித நினைவுகளின் அழியாத தன்மையைக் குறிக்கிறது. அவள் இறந்தாலும், அந்த ஊரின் அகவெளியில் அவள் ஒருபோதும் மரிப்பதில்லை; நீருக்குள் மிதக்கும் பனங்காயைப் போல நினைவுகளில் எப்போதும் மிதந்து கொண்டேயிருக்கிறாள்.
எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான ந. முத்துசாமியின் ‘நீர்மை’ என்ற சிறுகதை, தமிழ் இலக்கியத்தில் மனிதனின் அக உலகையும் புற உலகையும் இணைக்கும் பாலமாகும். மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், யாருக்கும் தெரியாமல் மறைந்தும் போகிறார்கள்; ஆனால் அவர்கள் விட்டுச்செல்லும் மௌனமும் நினைவுகளும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கும் என்பதை இப்படைப்பு ஆழமாக உணர்த்துகிறது.
– – –
