எங்கள் பள்ளி அரசு நிதி உதவி பெறும் கிருஸ்துவ நிறுவனம் நடத்தும் பள்ளி. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி. அதற்கு ஏற்றார்போல் கட்டிடங்களும் பழைமையானது. கருங்கல் கட்டிடங்கள், பெரிய பழையபாணி ஜன்னல்கள், பெரிய பெரிய அறைகள். ஆனால் படிக்கும் நாங்கள் எல்லாம் பெரும்பாலும் மக்குகள் . பள்ளியின் எதிரில் ஒரு நீலப் பட திரையரங்கு உண்டு. அதுவே பள்ளியின் மதிப்பை சற்று குறைத்து விட்டது என்று சொல்லலாம். எங்கள் பகுதியில் எந்த பள்ளியிலும் இடம் கிடைக்காதவர்கள், நல்ல பள்ளி சார்ந்த பெரிய அக்கறை இல்லாதவர்களின் பிள்ளைகள்தான் பெரும்பாலும் சேர்வார்கள். பக்கத்தில் துப்புரவாளர்கள் இருக்கும் பகுதி ஒன்று உண்டு. இஸ்லாமிய பகுதி ஒன்று உண்டு, அங்கு இருந்து வரும் பிள்ளைகள்தான் பெரும்பாலும். வசதி குறைவானவர்கள். சற்று வசதி இருப்பவர்கள் கூட அருகில் இருக்கும் மைக்கேல் பள்ளியில் சேர்ந்து விடுவார்கள் .
பெரிய பள்ளிகளுக்கு இல்லாத சுதந்திரம் எங்களுக்கு இருந்தது, விரும்பி பாடம் எடுக்கும் வாத்தியார்கள் தவிர மற்றவர்கள் வெறும் ஒப்புக்கு பாடம் எடுத்து முடித்து விடுவார்கள். ஒப்புக்கு பாடம் எடுக்கும் வாத்தியார்களும் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். பெரும்பாலும் வீட்டுப்பாடம் என்ற தொல்லைகள் இருக்காது, வாத்தியார்கள் வர வில்லை என்றால் கத்திக் கொண்டிருப்போம். கூச்சல் என்பது எங்கள் பள்ளியின் உயிர்நாடி போல, எப்போதுமே கேட்டுகொண்டே இருக்கும் ,காட்டில் இரவில் கேட்குமே அதுபோல விடாது கேட்கும். ஆனால் இது வெளியிலிருந்து கேட்க நன்றாக இருக்காது .
காலை நேரங்களில் மைதானங்களில் வரிசையாக கூடுவோம் . தேசிய கீதம் பாடுவோம், பிறகு ஒரு பையன், அநேகமாக மனோஜ், சில சமயம் நானும் கூட, பைபிளின் சில வரிகளை வாசிப்போம். ஜோசப் சார் அந்த பேச வேண்டிய வரியை முன்பே காட்டி விடுவார் . இவ்வளவு நாள் இந்த வாசங்களை கேட்கிறேன் ,எனக்கு எந்த வரியும் ஞாபகத்தில் இல்லை. இங்கும் கூச்சல் சற்று சன்னமாக ஒலிக்கும் . ஆண்டுவிழா சமயத்தில் நாள் முழுதும் மைதானத்தில் அமர்வோம். அப்போது கூச்சல் ,அலை அலையாக கேட்கும், எங்கள் பள்ளியில் செப்டம்பர் மரங்கள் பெரிய பெரிய மரங்களாக நிற்கும். பாதி மைதானத்திற்கு அவை நிழல் தந்து விடும்,அதில்தான் வரிசையாக நாங்கள் அமர்ந்து இருப்போம் .
ஆண்டு விழாவில் பேச்சு போட்டி , பாட்டு போட்டி எல்லாம் நடக்கும் , பேச்சு போட்டியில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் வென்றதில்லை. மாறு வேட போட்டியும் நடக்கும் . எல்லோரும் ஆர்வமாக கேட்பது பாட்டு போட்டிகள் தான் , ஜார்ஜ் வாத்தியார் ஏதாவது பழைய பாடலைப் பாடி துவங்கி வைப்பார். அவர் பார்க்க வாட்ட சாட்டமாக இருப்பார். புதிதாக பார்க்கும் பொது நமக்கு பயம் வரும், ஆனால் இவர் பாடுவதை பார்த்த பிறகு இவர் ஒரு அப்ராணி என்பதை நாம் உணர்ந்து விடுவோம் !
மாணவர்கள் ஒவ்வொருவராக பாடுவதும் செல்வதுமாக இருந்தனர். யாரும் நன்றாக பாடினர் என்று தோன்ற வில்லை . நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டிருந்தோம், அப்போது மைக்கில் ஒரு கணீர் குரல் கேட்டு மேடையை திரும்பி பார்த்தேன், உண்மையில் எல்லோரும் பேசுவதை விட்டு அந்த குரல் நோக்கி திரும்பினோம். அவன் பாட ஆரம்பித்தான் , செந்தமிழ் தென்மொழியாள் எனும் பாடல் , பழைய பாடல் , ஆனால் அந்த பாடலை ஜார்ஜ் வாத்தியார் பலமுறை பாடி இருந்ததால் அந்த பாடல் எங்களுக்கு நன்றாகத் தெரியும் , அவன் அந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆலாபனையை பாடத் துவங்கும் போதே அதுதான் பாடல் என்பதை உணர்ந்து விட்டோம் , கணீர் குரல் எங்களை மயக்கியது என்றுதான் சொல்ல வேண்டும் . ஏசுதாஸ் போல அல்லாத திடமான குரல் , SP பால சுப்ரமணியம் போன்ற வழியும் குரலும் அல்ல , இது முற்றிலும் புதிதாக இருந்தது. அந்த குரலில் நாங்கள் மயங்கினோம், மொத்த பள்ளியே அந்த குரலில் மயங்கிக் கிடந்ததது என்றுதான் சொல்ல வேண்டும். அவன் பாடி முடித்ததும் கைதட்டல்கள் அடங்க நேரமெடுத்தது . ஜார்ஜ் வாத்தியார் மேடையில் வந்து அவனை கட்டிப் பிடித்து வாழ்த்தினார் .
அவன் ஒன்பதாம் வகுப்பில்தான் எங்கள் பள்ளியில் வந்து சேர்ந்தான். தொன்போஸ்கோ தங்குமிடத்தில் இருந்து வந்தான், பெற்றோர் இல்லை. அல்லது பெற்றோர் விட்டு வந்து விட்டான். அப்படியான பிள்ளைகள்தான் தொன்போஸ்கோ காப்பகத்தில் இருந்து வருவார்கள் . அந்த பாடல் நிகழ்விற்குப் பிறகு அவனை பள்ளியில் பார்க்கும் போதெல்லாம் புன்னகைப்பேன், அவனும் பதிலுக்கு புன்னகைப்பான், புன்னகைக்கும் போது மிக அழகாக இருப்பான் . அந்த பாடல் நிகழ்வு பிறகு எங்கள் பள்ளியில் ஒரு ஹீரோ போல ஆகி விட்டான், அவன் அதிகம் பேச மாட்டான் ,மிக அமைதியானவன் என்றார்கள் .
சில மாதங்கள் கழிந்த பிறகு மைதானத்தில் ஒரு கூடுகையில் அவனை ஜார்ஜ் வாத்தியார் பாட்டுப்பாட அழைத்தார். அவன் எழுந்து மேடை நோக்கி வரும் பொழுதே நாங்கள் கைதட்டி வரவேற்க ஆரம்பித்து விட்டோம் . அவன் ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலை பாடினான். பழைய பாடல் , முந்திய நிகழ்வு போலவே எங்களை அவன் பாட்டில் கட்டிப் போட்டிருந்தான் . பாடல் முடிந்ததும் கைகள் தட்டி ஆரவாரம் செய்தோம் .
சில மாதங்கள் கடந்து இருக்கும், முழு பரிட்சை நெருங்கும் நேரம் , அவன் பள்ளிக்கு வராமலானான் , சில நாள் அவன் பள்ளிக்கு வருவதில்லை என்பதே பேச்சாக இருந்தது , ஜார்ஜ் வாத்தியார் காப்பகம் சென்றே விசாரித்து வந்தார் என்றார்கள். அவன் அங்கிருந்து ஓடிச்சென்று விட்டான் என்றார்கள் . பிறகு அவனை ஒருகட்டத்தில் எல்லோரும் மறந்து விட்டோம் .
2.
அப்பா வேலைக்கு எப்போதும் கையாள் தேவை. அதற்கு ஆள் வைத்தால் சம்பளம் கொடுக்க வேண்டியது வரும். வருமான இழப்பு ஏற்படும் என்பதால் அப்பா கையாள் வைத்து கொள்ளாமலேயே இருந்தார். பள்ளி இல்லாத சமயங்களில் என்னைக் கூட்டிச் சென்று விடுவார் . அப்பா வேலையிடம் லாரி பேட்டை, லாரிகள் குவிந்து இருக்கும் , லோடுக்காக காத்திருக்கும் ,அந்த காத்திருக்கும் நேரங்களில் ஏதாவது ரிப்பேர் வேலைகள் செய்வார்கள் , அப்பா கேஸ் வெல்டிங் வைத்திருந்தார் , ஏதாவது ஒட்ட வைக்கும் , ஒடுக்கு எடுக்கும் வேலைகள் கிடைக்கும். பெரும்பாலும் சிறுசிறு வேலைகள்தான் அப்பா எடுப்பார். அப்பாவுக்கு சொந்தமாக ஒர்க்ஷாப் இல்லை , மெக்கானிக் ஒர்ஷாப்பில் அவர்களுக்கு உள் வாடகை கொடுத்து இருந்தார் . அந்த மெக்கானிக் ஒர்க்ஷாப் ஓனர் பெயர் பாலன் , சட்சட்டென அவருக்கு கோபம் வரும் ,வந்தால் அவரது வேலையாட்களை திட்டுவார். அவரது பையன் சங்கர் என்னுடைய நண்பன் ,ஒன்றாக விளையாடுபவர்கள் , அவனுக்கு படிப்பு ஏறாமலாகி ஒர்ஷாப் வந்து விட்டான். அவன் அப்பா இல்லை என்றால் நாங்கள் ஜாலியாக பேசி கொண்டிருப்போம் .
அன்று பாலன் அண்ணா என்ஜின் வேலை பார்த்து கொண்டிருந்தார். பக்கத்தில் அவன் பையனும், இரண்டு வேலையாட்களும் இருந்தார்கள். இன்ஜினை இறக்கி வைத்து வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். இன்ஜினை சுற்றி அவர்கள் இருந்ததால் யார் முகமும் தெரிய வில்லை. அப்போது பாலன் அண்ணா கோபமாகி அருகில் இருந்தவனை நோக்கி ” மக்குபுண்ட் போய் 18 ரிங்ஸ் எடுத்துட்டு வா” என்றார், தனக்குள் முணங்குவது போல . ” வரவன் பூரா லூசுக்கூதிகளா இருக்கானுக ” என்றார் . எனக்கு ஏதோ தோன்றி ரிங்ஸ் ஸ்பானர் எடுத்து வருபவரை பார்த்தேன். அவர் எங்கள் பள்ளியில் பாடி எல்லோரையும் மயக்கியவன். நான் அதிர்ந்து விட்டேன் . நான் அவனை பார்த்ததும் அவனும் என்னை அப்போது பார்த்தான், சமீபத்தில் இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறான் போல. எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவனைப் பார்த்து புன்னகைத்தேன். அவனும் பதிலாக புன்னகைத்தான். ஆனால் அதில் துயரம் இருந்ததைக் காண முடிந்தது .
அப்பா இப்படி பாலா அண்ணா சத்தம் போட்டதை பார்த்து இருந்தார். பாலா அண்ணா வெளியே சென்றதும் அவனை அப்பா அழைத்து ‘இதெல்லாம் கண்டுக்காத தம்பி, தொழில் கத்துக்க ,அப்பறம் நீதான் ராஜா ” என்றார் .
அடுத்த நாள் நான் அப்பாவிடம் போக வில்லை . இரவு நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார் . ” ஒரு பையன் பாலன் கிட்ட வேலைக்குச் சேர்ந்திருக்கான் நல்ல பையன் , பார்த்தாலே நமக்கு பிடிச்சு போயிடும் , பாலன் அவனை போய் சும்மா திட்டிட்டே இருக்கான் , அவன் பையன் மக்கு ,ஆனா அவனை திட்டாம வேலைக்கு சேர்ந்த இந்த பையனை பிடிச்சு திட்டறான், பாவம் பையன் , இன்னைக்கு வேலைக்கே வரல , இனி வர மாட்டானு நினைக்கிறேன் ” என்றார். !