கோடைக் கனி

அசட்டுச் சிந்தனைகளை அசைபோட்டபடி அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு பொழுதுபோக்கு. மனித மனத்தினுள் கசப்பையும், கடுப்பையும் வித்திடும் கோடைக்காலம் தேனாய் இனிக்கும் மாம்பழத்தையும் வழங்குவதிலிருக்கும் முரணை எண்ணியவாறு மொட்டைமாடியில் பஷீரின் குறுநாவல் ஒன்றுடன் அமர்ந்திருந்தபொழுது ஊரிலிருந்து அழைப்பு வந்தது.

தாய்மாமா தவறிவிட்டாராம்.

அந்த ஊர், கூட்டம், இரைச்சல் என ஒன்றின்பின் ஒன்றாக கண்முன் வந்தபொழுது ஏதேனும் சாக்கு சொல்லி பயணத்தை தவிர்த்துவிடலாம் என்றே முதலில் எண்ணினேன். பிறகு என்ன வந்ததோ, “அய்யயோ! நான் கிளம்பி வரேன் சித்தி!” என்று சொல்லிவிட்டேன்.

மாமாவை பிடிக்காதென்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால் குடும்பத்தில் நான் ஓரளவேனும் ஒட்டி உறவாடியது அவருடன் தான். வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இருவருமே வெவ்வேறு வகையில் உதவாக்கரையாக இருந்தது அதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

மாமா பெரும் வித்தைக்காரர். மிக நேர்த்தியாக கோலம் போடுவார். சமையலில் அவரை மிஞ்சுவதற்கு ஊரில் ஆள் இருக்கவில்லை. தெருவில் உலவும் பெண் பிள்ளைகளை வாசல் திண்ணையில் வரிசையாக அமர்த்தி தலைபின்னி விடுவார். ஒட்டடை அடிப்பதில் துவங்கி, தோட்டத்துச் செடியை பராமரிப்பது வரை இல்லத்தின் நுணுக்கங்கள் அனைத்தையும் துளி சலிப்பின்றி மிகுந்த பிரேமையுடன் செய்வார். என்னை பொறுத்தவரை அவரிடம் இருந்த ஒரே பிசகு அவர் ஓர் ஆணாகப் பிறந்ததுதான்.

ஆம். ஒரு ஆணாக நிமிர வேண்டிய இடத்திலெல்லாம் அவர் மிகமோசமாக தோற்றார். சிறந்த இல்லத்தரசியை படைக்கும் உத்தேசத்துடன் அமர்ந்த பிரம்மன் கடைசிக் கணத்தில் குதர்க்கமாக மைய உறுப்பை மட்டும் மாற்றிவைத்துவிட்டான் என்று மாமாவை எவரோ என் காதுபட கேலிசெய்தது நன்றாக நினைவிருக்கிறது. சச்சரவுகளை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாததால் அவமானங்களை, தோல்விகளை சற்று மிகையாகவே அஞ்சினார். விழுந்தபின் எழுவதற்கு நீண்ட அவகாசம் தேவைப்பட்டது அவருக்கு. நிரந்தரமாக ஒரு உத்யோகத்தில் நிலைக்க சிரமப்பட்டார். வருமானம் இல்லாததால் உற்றாரின் முன் குறுகினார். புருஷ லட்சணம் கிட்டாததால் அவர் கைவசம் இயல்பாக அமைந்த வித்தைகள் அனைத்தும் வெகு விரைவில் கேலிப்பொருள் ஆகியது. விளைவாக அவர் மேலும் குறுகிப்போனார்.

சினிமாக்காரன் ஆகவேண்டும் என்கிற அசட்டு லட்சியத்துடன் அலைந்துதிரிந்து படுகேவலமாக தோற்றுப்போயிருந்த நான் அவருடன் நெருக்கம் பாராட்டியது அந்தக் காலகட்டத்தில் தான். குடும்ப விழாக்களில் அவருடன் அமர்ந்திருப்பதையே விரும்பினேன். எனது இழிவை, இயலாமையை காக்கும் அரணாக அவரை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கிறேன்.

மாமாவிடம் அத்தை காட்டும் வெறுப்பைக் காணவே அச்சமாக இருக்கும். அத்தை ஒன்றும் மோசமானவள் இல்லைதான். மாமாவைத் தவிர பிற அனைவரிடமும் அபரிமிதமான அன்பைப் பொழிவாள். ஆனால் தொட்டுத் தாலிகட்டிய கணவனை மட்டும் ஏனோ மிகமோசமாக நடத்தினாள். குடும்ப விழாக்களில் அனைவர் மத்தியிலும் அவரை கேவலமாக அதிகாரம் செய்வாள். அவர் ஏதேனும் சொதப்பினால் கடுஞ்சொற்களைக் கொட்டி அவரை கடித்துக் குதறுவாள். மாமா அத்தையை ஏறெடுத்து கூட நோக்கமாட்டார். உச்சக் ஸ்தாயியில் அவள் கத்தும்போதெல்லாம் இவர் பிடிபட்ட எலியைப்போல் நடுங்கிக்கொண்டிருப்பார். அத்தை அவளுக்கு தெரிந்த வழியில் மாமாவை பாதுகாக்கத்தான் முனைந்தாளோ என்றுகூட அவ்வப்போது எண்ணியிருக்கிறேன். இருக்கலாம். உணவுவேளை வரும்பொழுதெல்லாம் என்னை தனியாக அழைத்து, “மாமா சாப்பிட்டாராடா?” என்று அவள் விசாரிப்பது நினைவில் துல்லியமாக இருக்கிறது.

சினிமா ஆசையை சிலகாலம் கிடப்பில் போட்டுவிட்டு சிறிய கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்து நகரம் வந்தபிறகு ஊருடனான எனது பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தளரத் துவங்கியது. அம்மாவும், அனைவரையும் இணைக்கும் பாலமாய் திகழ்ந்த பாட்டியும் இறந்த பிறகு கிராமமும், குடும்பமும் அவசியமற்ற சங்கதிகளாகிப்போனது. எவற்றிலும் பெரிதாய் கலந்துகொள்ளாத தூரத்துப் பார்வையாளனாக இருந்தபோதிலும், மாமாவின் வாழ்க்கை மேலும் இழிந்த நிலைகளை எட்டியது, விபத்தில் அவரது ஒரே மகள் இறந்துபோனது, மனதளவில் பெரிதாய் பாதிப்புள்ளான அத்தை மாமாவைப் பிரிந்து பிறந்தகத்திற்கே சென்றது, திடீரென அவரது வாழ்க்கையில் நேர்ந்த மாற்றம், இமைப்பொழுதில் நடந்த முன்னேற்றங்கள் என்பன போன்ற செய்திகள் ஏதோ வழியில் என்னை வந்தடைந்துகொண்டுதான் இருந்தது.

மாமா இறந்துவிட்ட தகவலைக் கேட்டு அழைப்பைத் துண்டித்த நொடி எனக்கொரு நிகழ்வு நியாபகத்திற்கு வந்தது. மாமா சம்பந்தப்பட்டதுதான். அதிதீவிரமான அந்த சம்பவத்தை இத்தனை காலம் நான் நினைவுகூறாமல் இருந்ததே விந்தையிலும் விந்தையாக இருந்தது. ஒரு மனிதரின் சுபாவம் குறித்த திடமான பார்வை உருவானபிறகு அதற்கு முரணான, அதை கேள்விக்குட்படுத்துகிற நிகழ்வுகளை, நினைவுகளை மனமே தன்னிச்சையாக புதைத்து விடுகிறதா?

நான்கு வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். குடும்பச் சொத்து விஷயமாக ஊருக்கு அழைத்திருந்தார்கள். அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு சொல்லிவிட்டு ரயில் ஏறினேன். என்னை வரவேற்க ஸ்டேஷனுக்கு வந்திருந்த மாமாவைப் பார்க்க எப்படியோ இருந்தது. ஆள் பாதியாக வற்றிப்போயிருந்தார். மகளின் மரணமும், மனைவியின் பிரிவும் அவரை சிதைத்திருந்தது. வழக்கமாக என்னுடன் சரளமாக உரையாடும் அவர் அன்று ஒருவார்த்தை பேசவில்லை. துக்கத்தை பகிர்ந்துகொள்ளும் தொனியில் நானாக அவர் மகள் குறித்துப் பேச்செடுத்தபோது, “நேரம்ப்பா, வேறென்ன சொல்ல? உசுரு எப்படி போணுமுன்னு இருந்திருக்கு பாத்தியா?” என்று சொல்லிவிட்டு மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தார்.

நான் ஊரிலிருந்த அந்த இரண்டு நாட்களிலும் அவர் யாரிடமும் உரையாடவில்லை. வீட்டிற்குள் வழக்கமாக செய்யும் காரியங்களில்கூட பிடிப்பிழந்திருந்த அவர் வாசல் திண்ணையே கதியென்று கிடந்தார். பார்ப்பதற்கே பரிதமாக இருந்தது. நகரத்திற்கு திரும்பும் தினத்தன்று மனது பொறுக்காமல் அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். ஒரு வார்த்தை பேசாமல் வாங்கிய ஒரு இட்லியை கால்மணி நேரமாக உண்டார். பிறகு வந்த காபியையும் வடையையும் சுரத்தில்லாமல் வாங்கி ஓரமாக வைத்தார். திடீரென அவர் உடலில் ஒருவித அதிர்வு குடியேறியது. வடையை, அது வைக்கப்பட்டிருந்த தாளுடன் கையிலெடுத்த மாமா வடையை அப்படியே கீழே நழுவவிட்டு காகிதத்தையே வெறித்துப் பார்த்தார்.

பழைய செய்தித்தாள் துணுக்கு அது.

விழிகளை இடுக்கிக்கொண்டு அதிலிருந்த செய்தியைப் படிக்க முற்பட்டேன். சாலையோரம் நின்ற பட்டுப்போன மரம் ஒன்று சரிந்துவிழும் நிலையில் இருப்பதாகவும், அதை அகற்றச் சொல்லி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. அகற்றப்படாத அந்த மரம் சரிந்ததால்தான் மாமாவின் மகள் இறந்துபோனாள் என்று புரிவதற்கு எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை.

அன்று வீட்டிற்குச் செல்லும் வழி நெடுக மாமா சாலையில் எச்சிலை காரியுமிழ்ந்தபடியே இருந்தார். அவரது இதழ்கள் எதையோ தீவிரமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தன. யாசகம் கேட்டு அவர் வேஷ்டியைப் பிடித்து இழுத்து அனத்திகொண்டே வந்த சிறுவனை குரூரமாக முறைத்துவிட்டு தள்ளிவிட்டார். அவரை அத்தனை கடுமையாக நான் பார்த்ததேயில்லை. வண்டி ஒன்று வருவதை கவனிக்காமல் சாலையைக் கடக்கப்போன என்னை தோள்பிடித்து நிறுத்தி, உச்சுக்கொட்டி கொலைவெறியுடன் பார்த்தார். நளினமான அவர் விழிகளில் அத்தனை ரௌத்திரம் பொங்கும் என்றும், அழகிய கோலங்கள் வரையும் பஞ்சுபோன்ற அவர் கைகளில் அத்தனை முரட்டுத்தனம் இருக்கும் என்றும் உணர்ந்தபொழுது ஏனோ பதறிப்போனேன்.

வினோதமான இந்த நிகழ்ச்சியை இத்தனை காலம் நினைவுகூறாமல் இருந்தது ஆச்சரியம்தான். பின்வந்த நாட்களில் மாமாவின் வாழ்க்கை தலைகீழானது. ஆளே மாறிவிட்டார் என்றும், ஏதோ சிறுதொழில் துவங்கியிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன. இரண்டொரு ஆண்டுகளில் அவரது நிலை கணிசமாக உயர்ந்துவிட்டது. ஊரில் ஒதுக்குபுறமாக ஒரு வீட்டைக் கட்டி, சின்னதாக ஒரு மாந்தோப்பும் அமைத்திருந்தார். அத்தை திரும்பி வந்திருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையிலான தூரம் குறைந்தபாடில்லை என்று சொன்னார்கள்.

இன்று எண்ணும்பொழுது ஹோட்டலில் நேர்ந்த அந்த விசித்திர சம்பவத்திற்கும் மாமாவின் சுபாவ மாற்றத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது.

ஊருக்குச் சென்று மாமாவின் இறுதி காரியங்களில் கலந்துகொண்டேன். அவரின் விருப்பப்படி அவரது உடல் தோப்பின் மேற்கு மூலையில் இருந்த பெரிய மரம் ஒன்றின் கீழே புதைக்கப்பட்டது.

மூன்று நாட்கள் கழித்து அந்த மரத்தின் அருகே சில கணங்கள் மௌனமாக நின்று அவருடனான நினைவுகளில் அலைந்துகொண்டிருந்தபோது தடித்த மாங்கனி ஒன்று பொத்தென கீழே விழுந்தது. அருகிலிருந்த தொட்டி நீரில் அதைக் கழுவிவிட்டு ஒரு கடி கடித்துப் பார்த்தேன். இனிப்பா, புளிப்பா, துவர்ப்பா என்று பகுத்துச் சொல்லமுடியாத ஒரு சுவைகொண்டிருந்தது அக்கனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *