மௌன சாட்சி

ஏட்டு அகிலாண்டம் சொல்லியிருந்த டீக்கடை இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு பெருமாள்புரம் தபால் அலுவலகத்திற்கு எதிர்த்தாற்போல் எதேச்சையாக அவரை எதிர்கொண்டபோது வெகு உற்சாகத்துடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு குசலம் விசாரித்தார். கொஞ்சம் இசைந்து கொடுத்ததுமே வயதில் இளையவனாகிய என்னிடம் பேசக்கூடாதவற்றை எள்ளளவும் நெருடலின்றி கொட்டத் தொடங்கினார். நினைவுக்கிடங்கில் ஊற்றெடுத்து, சூழலுணர்வு மற்றும் இங்கிதத்தின் திரிபுகளின்றி கசிந்த பேச்சுப் பிரவாகம் நான் விழைந்த சிறு தகவல் ஒன்றையும் போகிற போக்கில் உதிர்த்துவிடும் என்று அறிந்திருந்ததால் வழக்கம்போல் நழுவிக்கொண்டு ஓடாமல் அன்று அவருடன் நெடுநேரம் செலவழித்திருந்தேன்.

கடை வாசலில் தொங்கிக்கொண்டிருந்த மஞ்சள் விளக்கை ஈசல்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. மிளிரும் கடுகுபோன்ற விழிகளால் அவற்றை வெறித்துநோக்கியபடி ஒரு சாம்பல் நிறப் பல்லி தவத்திலென உறைந்து நின்றது. கடையினுள் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த கிரிக்கெட் மேட்ச் சுவாரசியம் பெற்றதால் அங்கு கூட்டம் பெருகத் துவங்கியது. நான்காவது கோப்பை தேநீரும், பில்டர் சிகரெட் ஒன்றும் வாங்கிக்கொண்டு வெளியே வந்து நின்றுகொண்டேன்.

தெரண்டு வர்ற மேகத்தயெல்லாம் காத்து கொண்டு போயிருது, என்ன தம்பி?” என்று எவரோ புலம்பியதை கேட்டபோது ஏனோ சிரிப்பு வந்தது. மறுகணம் குளிரெடுத்தது. உள்ளங்கையினுள் தேநீர் கோப்பையை உருட்டியபடி, சிகரெட் புகையை ஆழமாக உள்ளிழுத்துக்கொண்டேன். தேன் வழிவதைப்போல் மெல்ல நகர்ந்தது நேரம்.

எதிர்புறம் இருந்த புது பஸ்டாண்ட் வாசலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. நுழைவின் இடப்புற கிளை நெடுக ஆட்டோக்கள் நிரைவகுத்திருக்க, வலப்புறம் இருந்த வெற்றிடத்தில் ஒருவன் வறுத்தக்கடலை விற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு இரண்டடி தொலைவில் தூசிபடிந்த நான்கு பைக்குகள். அதற்கு பின்னால் மிகவும் அடர்த்தியான ஒரு ஆலமரம். அதன் விஸ்தீரணத்தையும், அதன் அடிப்பாகத்தில் செறிந்திருந்த இருளையும் இருநொடிகள் நோக்கியபோது அந்த இடம் சரியாக இருக்கும் என்று மனம் குறித்துக்கொண்டது.

மணி சரியாக ஏழரை அடித்தபோது வலது கோடியில் அவள் தென்பட்டாள். புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை வீசிவிட்டு ரோஜா பாக்கைப் பிரித்து வாயில் தட்டியபடி சாலையைக் கடந்து அந்த ஆலமரத்தடியில் சென்று நின்றுகொண்டேன். பக்கவாட்டில் பாய் ஒன்றை விரித்து பச்சைக் குத்திக்கொண்டிருந்த ஒரு வடஇந்தியன் என்னை சந்தேகமாகப் பார்த்தான். நான் அவனை சட்டை செய்யவில்லை. எதையும் சட்டைசெய்யும் நிலையை நான் என்றோ கடந்திருந்தேன். எவருக்கும் நான் ஒரு பொருட்டல்ல என்று புரிந்துபோன சில காலத்திலேயே அந்தப் பற்றற்ற நிலை ஆழமாய் வேரூன்றிப் போனது.

ஆனாலும் அக்கணத்தில் அடிநெஞ்சில் மையம்கொண்டிருந்த துணிச்சல் எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

மெலிந்த அந்தப் பெண் உருவம் என் அருகே வந்தபோது, “தென்றல்!” என்று அழைத்தேன். பலவீனமான எனது குரலைக் கேட்டு சட்டென்று திரும்பினாள். அவள் விழிகளில் திரைபோல் படிந்த ஐயம் என்னை சற்று நடுக்கினாலும் மெல்ல அவளை அணுகி, அன்றைய தினம் புலர்ந்ததிலிருந்து மனத்தினுள் ஒத்திகைப் பார்த்துவந்த வார்த்தைகளை ஒப்பித்தேன்.

கைப்பையினுள் இருந்த அலைபேசியில் மணி பார்த்தாள்.

நான் பரிதாபமாக தலைகுனிந்து நின்றேன்.

இரண்டொரு நீள்மூச்சுகளுக்குப் பிறகு, “சரி வாங்க… வீடு பக்கத்துலதான?” என்று கேட்டபடி காதோர மயிரிழையை ஒதுக்கிக்கொண்டாள்.

ஆமாங்க… இங்கனதான்… குலவணிகர்புரம்” என்றபடி நான் முன்னே நடக்க அவள் என்னுடன் சேர்ந்துகொண்டாள்.

வேய்ந்தான் குளம் தாண்டுவது வரை நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. பிறகு ஒருமுறை என்னை மேலும் கீழும் நோட்டம் விட்டவள், சாதுவான எனது தோற்றதால் கொஞ்சம் ஆறுதலடைந்தவளாக, “தம்பி படிக்கறீங்களா இல்ல வேலை பாக்கறீங்களா?” என்று கேட்டாள்.

நான் ஒருகணம் பேச்சற்றுப்போனேன். ஆனால் அடுத்த நொடியே விசேஷமானதோர் கிளர்ச்சி என்னைத் தொற்றிக்கொண்டது.

படிப்பு முடிஞ்சுட்டுக்கா. வேலை பாத்துட்டு இருந்தேன். இப்ப சும்மாதான் இருக்கேன்”

, அம்மாக்கு சொகம் இல்லன்னு அப்படியே இருந்துட்டீங்கன்ன?”

“…”

அம்மா எத்தன வருசமா இப்படி இருக்காங்க?”

அது ஆச்சுக்கா ரெண்டு வருசம்”

பேச்சு, அசைவு ஒன்னும் கிடையாதுன்ன?”

ஆமா… கண்ணுகூட முழுசா தொறக்காது. அப்பப்ப ஏதாச்சு, ரொம்ப சின்னதா முனங்கும். அவ்வளவுதான்”

ஜீசஸ்” என்று முணுமுணுத்தபடி ஒருநொடி கண்மூடினாள். பிறகு, “ஒத்தையில பாத்துக்கிடுதீங்க என்ன தம்பி?” என்று அக்கறையுடன் கேட்டாள்.

ஆமா, வாரத்துக்கு மூணு நாள் மட்டும் ஒரு வயசான நர்ஸ் வருவாங்க”

“…”

ரெட்டியார்பட்டில சின்னதா ஒரு வீடு இருக்கு. அதுல வர்ற வாடகை ஒண்ணுதான் வருமானம்”

புரியுது… நிரந்தரமா ஆள் வச்சுக்கிட்டா கட்டுப்படி ஆவாதுதான்!”

ம்”

மேரேஜ் பண்ணிக்கிடலன்ன?”

ரெண்டு வருசம் முன்ன ஆச்சு… ஆனா நிலைக்கல… எல்லாம் ஒரே நேரத்துல ஓஞ்சுட்டு!”

“…”

படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கம்பெனில வேல பாத்துட்டு இருந்தேன். சம்பளம் கொறவுதான். ஆனா கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா முன்னேறிருக்கலாம்”

“…”

அய்யாவுக்கு நான் கவர்ன்மென்ட் வேலை உள்ள போயிரணுமுன்னு ஆசை. எனக்கு வேலையும் பாத்துட்டு படிக்கவும் முடியல. பாத்தாரு, பொசுக்குன்னு அவரோட சேமிப்பு மொத்தத்தையும் கொண்டு எவன்ட்டயோ குடுத்து, வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. சென்னையிலேயே வேலை. ஆறு மாசம் போனேன். வேலை உறுதியானதுக்கு எந்த அத்தாட்சியும் தரல அந்த ஆள். என்ன போஸ்ட்டுன்னும் தெளிவா சொல்லல. மொதல்ல ரேஷன் கடைன்னான். பெறவு, “கோர்ட்ல வேலன்னா ஒகேதான தம்பி?” ன்னான். உங்க பேர் பதிஞ்சாச்சுன்னு சொல்லி மூணு மட்டம் சம்பளமுன்னு ஏதோ கொஞ்சம் அமௌன்ட்ட கையில கொடுத்தான். பெறவு ஆளு காணாம போயிட்டான். மொத்த பணமும் போச்சு. மூணு மாசம் கழிச்சு அந்த ஆள் ஏதோ கடன் தொல்லைல தூக்குல தொங்கிட்டான்”

அய்யோ!”

வேல கன்ஃபார்ம் ஆயிருமுன்னு அவசரம் அவசரமா கல்யாணம் கெட்டி வச்சுட்டாரு அப்பா. அவரு இப்படித்தான். அவசர புத்தி. மூர்க்கத்தனம். பிடிவாதம். என்ன ஏதுன்னு யோசிக்கறதில்ல, தோணினத செஞ்சரனும். ஒரு வருசத்துக்குள்ள கல்யாணம் பண்ணலன்னா, அடுத்த அஞ்சு வருசத்துக்கு கல்யாண யோகமில்லன்னு ஜோசியக்காரன் சொல்லிட்டான்னு தூரத்து சொந்தம் ஒரு பிள்ளைய கெட்டி வச்சாரு. வேலை போன கொஞ்ச மாசத்துல அய்யா தவறிட்டாரு. அதுல இருந்தே அம்மாக்கு தல சுத்து ஆரமிச்சுட்டு. கோயில் போயிட்டு வாரப்போ ஒரு வண்டிக்காரன் தட்டிட்டான். அதுல இருந்து இப்படித்தான் கடக்கு. வைத்தியம் ஒன்னும் ஒப்பேறல…”

“…”

நான் வேற வேலை தேட ஆரமிச்சேன். பொண்டாட்டி அம்மாவ பாத்துக்கிட்டா. ஆனா ரெண்டு மாசத்துக்கு மேல அவளால முடியல. ஒருநாள் ராத்திரி வீட்டுக்கு வந்து பாக்கேன், அம்மா அது பெஞ்ச பீமேலையே படுத்திருந்துச்சு. என்னடி இதுன்னு சத்தம் போட்டேன். சிடுசிடுன்னு வந்தா, கோவத்துல அம்மாவ ஒரு உலுக்கு உலுக்கி, ஏசிட்டே சுத்தம் பண்ண ஆரமிச்சா. எனக்கு சுளீருன்னு ஏறிட்டு. கை ஓங்கிட்டேன். கோச்சிட்டு போயிட்டா. சமரசம் பேசி பாத்துட்டேன். எதுவும் நடக்கல. இப்ப விவாகரத்து வேணுமுன்னு சொல்லுதா”

இவளிடம் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு உறைக்கவேயில்லை. தொடர்ந்து சில நிமிடங்களுக்கு சொந்தபந்தங்கள் எங்களை கைவிட்டதையும், மனச்சோர்வினால் உறக்கத்தை தொலைத்து வாழ்வின்மீதே வெறுப்பு உண்டாகிவிட்ட நிலையைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னேன். அதில் கொஞ்சம் மிகைப்படுத்தலும் இருக்கவே செய்தது. அவளது முகமும் பேச்சும் வெளிப்படுத்திய அனுதாபம் என்னை ஏதோ விதத்தில் ஆசுவாசப் படுத்தியது. அது மிகவும் அவசியம் எனவும் தோன்றியது.

பெந்தெகொஸ்தே சபை ஊடாகச் செல்லும் குறுக்கு வழி இருட்டாக இருந்ததால் சுற்றுப் பாதையை தெரிவுசெய்து நடந்தோம். மத்திய சிறைச்சாலையை ஒட்டி இடப்புறம் வளையும் சாலை முனையில் இருந்த உணவகத்தின் வாசலில் புல்லட் வண்டி ஒன்று நின்றுகொண்டிருந்தது. கணநேரத்தில் அதை அடையாளம் கண்டுவிட்ட மனம் கிடுகிடுவென அதிரத் துவங்கியது. தலையை தொங்கபோட்டுக்கொண்டு நடையின் வேகத்தைக் கொஞ்சம் துரிதப்படுத்தினேன். உணவகத்தினுள்ளிருந்து ஏட்டு அகிலாண்டத்தின் உச்சக்குரல் சிரிப்பு கேட்டது. அருகில் வந்த தென்றலின் உடம்பிலும் மெல்லிய விதிர்ப்பு எழுந்ததைப்போல் எனக்கு பட்டது. சேலை நுனியை விரலால் சுருட்டியபடி எனது வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்தாள். அகிலாண்டத்தின் பேச்சிலும் சிரிப்பிலும் இடைவெளி எழாததை வைத்து அவர் எங்களை கவனிக்கவில்லை என்று அனுமானித்துக் கொண்டாலும், எவராலோ கூர்ந்து நோக்கப் படுவதைப்போல புறங்கழுத்தில் ஒரு குறுகுறுப்பும், முதுகுத்தண்டில் மெல்லியதோர் சிலிர்ப்பும் எழுந்தது.

குலவணிகர்புரம் சி.எஸ்.ஐ சர்ச்சை நெருங்குவது வரை எங்களிடையே அடர்ந்த மௌனம் நிலவியது. எதையோ ஆழமாய் சிந்தித்தபடி வந்த தென்றல் திடீரென நிமிர்ந்து என்னை நேருக்கு நேராக நோக்கி, “என்ன எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

நான் கொஞ்சம் பதற்றமடைந்தேன். பிறகு சற்று நிதானமான குரலில் அவளை அவள் வேலை செய்யும் தையக்கடையில், இரவில் பஸ்டாண்ட் எதிரே இருக்கும் டீக்கடையில் சில முறை பார்த்திருப்பதாகவும், ஆறுதல் தரும் அவளது ஆத்மார்த்தமான பிரார்த்தனையைப் பற்றி நண்பன் ஒருவனின் சகோதரியிடம் இருந்து தெரிந்துகொண்டதாகவும் கூறினேன்.

அவள் கொஞ்சம் நிம்மதியடைந்தாள். பிறகு, “இல்ல, இந்த டீக்கடையில கொஞ்சம் நாளாத்தான் வேலை பாக்கேன்… பெருசா யாருக்கும் தெரியாது” என்றாள்.

நான் அதற்கு மறுமொழி சொல்லவில்லை.

என் புருசனுக்கு புத்தி சுவாதீனம் கிடையாது தம்பி. நான்தான் மொத்தமா பாத்துக்கிடனும். டீக்கடை உள்ள சின்னதா மெஸ் உண்டு. பாத்திரம் கழுவ வருவேன் ராத்திரி. இருநூறு ரூபா குடுப்பான்” என்றாள்.

நான் அமைதியாக நடந்துகொண்டிருந்தேன். தெருக்கோடியில் என் வீடு தெரிந்தது.

தென்றல்இன்னும் ரொம்ப தூரமா தம்பி?” என்று கேட்டாள்.

இல்ல… இந்தா வந்தாச்சு” என்று சொல்லி வீட்டைச் சுட்டிக்காட்டினேன்.

ம்”

“…”

பாத்தா நல்ல இந்து குடும்பமா தெரியுது… என்ன ஏன் பிரேயர் பண்ண கூப்பிடணுமுன்னு தோணுச்சு?”

விரல்கள் அனைத்தையும் மடக்கி, தாடையை இறுக்கி உடலின் உதறலை அடக்கிக்கொண்டேன்.

ம்?”

தெரியலக்கா… ஏதோ விரக்தில நின்னுட்டு இருந்தேன்… சட்டுனு எதிர்ப்பட்டீங்க… அப்படியே கேட்டுட்டேன்!”

சரி தம்பி, இதான வீடு?”

கேட்டைத் திறந்துகொண்டு இருவரும் மாடி ஏறினோம். வீட்டின் கதவைத் திறப்பதற்குள் இருமுறை சாவியை நழுவவிட்டேன். உள்ளே சென்று விளக்குகளை எரியச்செய்த நொடியே இது மாபெரும் பிழை என எனக்கு புரிந்துவிட்டது. மிகவும் இழிந்தவனாக, குரூரமானவனாக உணர்ந்தேன். ஆனால் இத்தனை தூரம் வந்த பிறகு பின்வாங்குவதை என்னுள் இருந்த ஏதோ ஒன்று ஏற்றுக்கொள்ள மறுத்தது.

சேலையை தோளைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு, “அம்மா எங்க தம்பி?” என்றாள் தென்றல்.

அவளை அழைத்துக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றேன். படுத்தப் படுக்கையாய் கிடக்கும் அம்மாவை கருணையோடு நோக்கியவள் மார்பில் கைவைத்தபடி சில நொடிகள் விழிமூடி நின்றாள். பிறகு அம்மாவின் நெற்றியில் சிலுவைக்குறி இட்டுவிட்டு நிமிர்ந்து, “இங்கேயே ஜெபம் பண்ணட்டா தம்பி?” என்றாள்.

நான் இல்லையென்று சொல்லி அவளை எனது அறைக்கு அழைத்துச் சென்றேன். வியர்வையில் என் உடை முழுதாக நனைந்துவிட்டிருந்தது.

அறையினுள் வந்த தென்றல் அங்கே பாயும் படுக்கையும் போடப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டவளாய் என் பக்கம் திரும்பினாள்.

எதற்கென்றே தெரியாமல் ஒருநொடி சிரித்தேன். பிறகு அதற்காக வெட்கப்பட்டு தலைகுனிந்துகொண்டேன்.

என்ன தம்பி?” என்றாள், சற்று பலவீனமாக.

பாளையங்கோட்டை ஏட்டு அகிலாண்டம்…”

தம்பி… என்ன தம்பி இதெல்லாம்… பாவப்பட்டு நம்பி வந்தா…”

என்னுள் இருந்த மிருகம் அவள் மேல் பாயச் சொல்லியது. ஆனால் எட்டுவைக்க முடியவில்லை. கன்னத்தசைகள் இழுபட அப்படியே உறைந்து நின்றேன். பிறகு மங்கிய குரலில், “ஸாரிக்கா” என்றேன்.

அவ்வளவு கேக்குதுன்னா பைசாவ குடுத்து போங்களேன்டா!” என்றாள் ஆத்திரமாக.

ஸாரிக்கா!”

ஏண்டா இப்படி அபாண்டமா பொய்யச் சொல்லி…”

ஸாரிக்கா… என்ன மன்னிச்சு…”

திடீரென உதித்து, பெருகியபடியே வந்த மிகவும் பரிச்சயமான சத்தம் ஒன்று என்னை பீதியுறச் செய்தது. தென்றலை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்துப் பார்த்தபோது கையில் சிகரெட்டுடன் மாடியேறி வந்துகொண்டிருந்தார் அகிலாண்டம். என்னைப் பார்த்ததும் கள்ளத்தனமாக சிரித்துவிட்டு, “ஏலேய், கமுக்கமா சோலி பாக்க போலையே…” என்றார்.

அண்ணே… அப்படி இல்ல… அண்ணே… வேண்டாம்”

பேச்சு வாக்குல ஏதோ சொன்னத வச்சுட்டு, முடிவோட இறங்கி, பேசி, வீட்டுக்கே ஏத்திட்டையே… வளந்துட்ட போ…” என்றபடி உள்ளே நுழைந்தவர், “என்னம்மா தென்றல்… ஜெபம் பண்ணியாச்சா!” என்றார்.

தென்றல் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டாள். விழிகளில் அச்சமும், வலியும் கவிந்து கண்ணீராய் வழிந்தது.

புருசன் ஒடம்பு எப்படி இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே அவள் தோளைச் சுற்றி பிடித்தபடி அறைக்குள் இட்டுச்சென்றார்.

அகிலாண்டம் வெளியே வந்தபோது நான் மூலையில் சுருண்டு அமர்ந்திருந்தேன்.

ஏல, பாக்கன்னா பாத்துட்டு சட்டுனு அனுப்பிவிடு, அவளுக்கு வேல கடக்கு… என்ன? நான் வாரேன்” என்றார்.

நான் நிமிர்ந்து பார்த்தேன்.

தைரியம் தாண்டே உமக்கு…” என்று சொல்லி, அம்மா கிடந்த அறையை ஒருபார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்.

அறைக்குள் அலங்கோல நிலையில் அமர்ந்திருந்த தென்றல் நான் உள்ளே வந்ததை பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. ஒன்றும் சொல்லாமல் மூலையில் தலைகுனிந்து நின்றேன். இரண்டொரு நிமிடங்களுக்கு பிறகு ஒருவித விதிர்ப்புடன் மீண்டவள் நான் அவளை அணுகாமல் இருப்பதை அதிர்ச்சியுடன் நோக்கினாள். பிறகு வேகம் வேகமாக உடையை சீராக்கிக்கொண்டாள்.

நான், “ஸாரிக்கா” என்றேன். அதைத் தவிர்த்த ஒரு வார்த்தை என்னுளிருந்து எழ மறுத்தது.

அவள் பற்களைக் கடித்துக்கொள்வது துல்லியமாக கேட்டது. காகிதங்கள் காற்றில் படபடக்க, கட்டிலின் கீழ் பிளந்தநிலையில் கிடந்த பைபிளை எடுக்கவேண்டி குனிந்தபோது அவளை ஒருவித வெறி ஆட்கொண்டது. பட் பட்டென்று தொடர்ச்சியாக தலையில் அடித்துக்கொண்டாள். பிறகு எதுவும் சொல்லாமல் வாசல் வரை போனவள் விறுவிறுவென்று திரும்பி வந்து என் எதிரே நின்றாள்.

நான் அவள் விழிகளை நோக்க முடியாமல் குறுகி, கைகூப்பி நின்றேன்.

சேலையால் முகத்தைத் துடைத்துக்கொண்ட தென்றல், குரலை சரிசெய்துகொண்டு, “தம்பி கொஞ்சம் தண்ணி குடுப்பியா?” என்று கேட்டாள்.

பட்டென என் விழிகள் கண்ணீர் உகுத்தன. புறங்கையால் அதைத் துடைத்தபடி ஓடிச் சென்று தண்ணீர் எடுத்துவந்தேன்.

இரண்டு மடக்கு குடித்தபிறகு பாட்டிலை கீழே வைத்துவிட்டு, “வாரேன் தம்பி… அம்மாவ பாத்திக்கிடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பிச்சென்றாள்.

தெருவினூடே நடந்துசென்ற அவள் உருவம் தேவாலயத்தை ஒட்டி மறைவதை ஜன்னலோரம் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு முகம் கழுவிக்கொண்டு மெத்தைமேல் மல்லாந்தேன். சூழ்ந்திருந்த தனிமையை மட்டுமே சித்தம் உணர்ந்துகொண்டிருந்தது. இதுவே சாசுவதம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். மனம் அதிலிருந்து சிறிதளவு ஆறுதலை அகழ்ந்தெடுக்கத் துவங்கிய கணம் வீடெங்கும் ஒருவித கெடுமணம் பரவியது.

குளியலறை சென்று வாளியில் நீரும், பினாயிலும் எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றேன். அவள் உடலிலிருந்து தொடர்ச்சியாக மலம் வெளியேறிக் கொண்டிருந்தது. உச்சந்தலை வியர்வையைத் துடைத்தபடி அறையின் விளக்கை எரியச்செய்தேன். எப்போதும் பாதி மூடியிருக்கும் அம்மாவின் விழிகள் அப்போது முழுவெறிப்பு நிலை பெற்றிருந்தன. அவை எனது இருப்பை உணர்ந்துகொண்டிருந்தன. அந்தப் பார்வையில் உக்கிரமேறி செம்மைப் படர, பற்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் ஒலி மெல்லிதாய் கிளம்பியது.

நீர் நிரம்பிய வாளி என் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து நொறுங்கியது. செய்வதறியாமல் ஈரைந்து விரல்களால் என் தலைமுடியைப் பற்றியிழுத்தபடி தெறித்து ஓடினேன்.

One comment

  1. Extraordinary story which made me feel like I am next to them and witnessing the whole event , Great work by the Writer Mr.Goutham and Thank you for the publisher for publishing good work

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *