நித்தம் தவறாமல் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இவன் முகம் உங்களுக்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கவேண்டும். உற்று நோக்குங்கள்…
தெரிகிறதா?
ஆம், அவனேதான்…
மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரை உலுக்கிய அந்தச் செய்தி இந்நேரம் உங்கள் நினைவில் விரிந்திருக்கும். நெருங்கிப் பழகிய நண்பனை மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்று சிரத்தைத் துண்டித்தவன். அப்படியோர் செயலைச் செய்தவன் மெத்தப் படித்த ஓர் பேரழகன் என்பதால் இவனை நீங்கள் எளிதில் மறந்திருக்க இயலாது. அந்தச் செய்தி நூற்றில் ஒன்றாக கரைந்திருக்க இயலாது. இவனது அழகான புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருந்த செய்தித் துணுக்கை கண்ணுற்றதும், “ஆள் பாக்க இந்தி நடிகன் மாதிரி இருக்கான்! ம்… எந்த புத்துக்குள்ள எந்த பாம்பு இருக்குன்னு எவன் கண்டான்!” என்று சொல்லியிராத இதழ்கள் சொற்பமே என்று எனக்கு தெரியும். ஒரு கைதியாக என்னுடன் அவன் சிறையில் அடைக்கப்பட்டபோது என்னுள் உதித்த முதல் எண்ணமும் அதனை ஒத்த ஒன்றுதான். பெரும்பாலான பத்திரிகைகள் தொழில் பொறாமை மற்றும் போதைவெறியையே கொலைக்கான காரணமென சுட்டியிருந்தன. அவனுக்கும் அவனது நண்பனுக்கும் பண விஷயத்தில் அப்போது மிகச் சிறிய பஞ்சாயத்து இருந்ததாலும், சம்பவம் நடந்த அன்று அவர்கள் இருவருமே கணிசமான அளவு மது அருந்தியிருந்ததாலும், விசாரித்த காவலர்களிடம் அவனும் அதையே குற்றத்திற்கான நோக்கமெனச் சொல்லிவிட்டான். அதை இறுதி வாக்குமூலமாக ஏற்றுக்கொண்டு நீதிமன்றமும் சிறைத்தண்டனை வழங்கியது.
ஆனால் ஒரு கொலைக்கு இப்படி நேரடியான, ஒற்றைப்படையான நோக்கத்தை வழங்குவதெல்லாம் சாமானியர்களின் சௌகரியம் கருதித்தான். பத்திரிக்கைகள் சொல்லும் காரணங்களான கள்ளக்காதலும், குடிவெறியும், சொத்துத் தகராறும், இன்னபிற வெற்று சச்சரவுகளும் கொலையெனும் குரூரச் சித்திரத்தை நிறைவுசெய்யும் இறுதிச் சுழி மட்டுமே. அதன் ஆதிச்சுழி எங்கோ தொலைதூரத்தில், எவரும் சந்தேகிக்காத ஒரு குணாம்சத்தினுள்தான் பெரும்பாலும் புதைப்பட்டிருக்கும். வாழ்வில் நீங்கள் ஒரு கொலையாவது செய்திருந்தால் அல்ல ஒரு கொலைகாரனை அணுகி நோக்கியிருந்தால் இந்த உண்மை உங்களுக்கு புலமாகியிருக்கும்.
நிகழ்வுகள் அதனதன் தாளகதியில் விரைவாக நடந்தேறி விடுகின்றன. ஆனால் அதன் நினைவுகளை ஒரு சுனைபோல் ஆக்கி, அதில் மூழ்கி எழும்போதுதான் அவை அனைத்திற்கும் இடையே உள்ள நுணுக்கமான ஒத்திசைவு தெளிவாகிறது என்று அவன் ஒருமுறை என்னிடம் சொன்னான்.
“என்ன தெளிவு பிறந்தது இப்போ?” என்று நான் சற்று ஏளனத்துடன் கேட்டேன்.
அதற்கு அவன், “நான் அவன கொன்ன அன்னிக்கு எனக்கும் அவனுக்கும் வாக்குவாதம் நடந்தது என்னவோ உண்மைதான்… அந்தப் பயலோட பதினஞ்சு இருவது வருசம் பழக்கம் இருந்தாலும், அவன சந்திச்சு, நெருங்க ஆரமிச்ச கொஞ்ச மாசத்துலயே என்னைக்கோ ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நடக்குமுன்னு எனக்கு தோனிட்டுன்னு சொன்னா நம்புவீளா?” என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு என் கண்களைப் பார்த்தான். பிறகு தன்னிடமே பேசிக்கொள்ளும் தொனியில் அவர்கள் இருவரின் அடிப்படை சுபாவத்தைப் பற்றியும், அதிலிருந்த நுணுக்கமான முரணைப் பற்றியும் விளக்கத் தொடங்கினான்.
அவனது நண்பன் பிரமநாயகம் இயல்பிலேயே தனித்து வாழும் தகுதியற்றவன். முன்கோபி. ஏமாளி. அவன் சுயமாக எடுத்த முடிவுகள் அனைத்தும் ஆகப்பெரும் வீழ்ச்சிகளை மட்டுமே ஈட்டிக்கொண்டிருந்ததால் எப்போதும், எல்லாவற்றிற்கும் பிறரின் கரத்தை, கருத்தை நாடுபவனாக மாறியிருந்தான். அதே வேளையில், இக்கட்டின்போது தனக்கு உதவிகரமாய் இருந்தவர்களை சமயம்பார்த்து உதிர்த்துவிடுவதிலும் சமர்த்தனாக திகழ்ந்தான். அகப்படும் தொலைவில் வெற்றி தென்பட்டதுமே ஏதோ ஒரு அற்ப நிகழ்வைச் சுட்டிக்காட்டி அவர்களுடன் தடல்புடலான வாக்குவாதம் ஒன்றை அரங்கேற்றி, உறவை முறித்துக்கொள்வான். தட்டுத்தடுமாறி அடையும் வெற்றிகளுக்கு முழு உரிமை கொண்டாடுவதில் கடும் வேட்கை கொண்டவனாக இருந்தான் அவன். ஒரு வெற்றியாளனாக அவன் சந்திக்கும் நபர்கள் அனைவரிடமும் தான் ஈட்டிய இந்த உச்சம் முழுக்க முழுக்க தன் சொந்த முனைப்பினால் உருவானது என்று பிரகடனம் செய்வது மட்டுமல்லாமல், தன்னை அனைவராலும் கைவிடப்பட்டவனாக நிலைநிறுத்துவதிலும் அதீத சிரத்தை எடுத்துக்கொண்டான். அவனது ஒரே நிரந்தர நண்பனாகிய இவன் அதிதீவிர தியாக மனோபாவம் கொண்டவன். தன்னை அழித்து பிறருக்களிப்பதில் இன்பம் காண்பவன். வாழ்ந்துகெட்ட குடும்பம் ஒன்றின் இளம் வாரிசு என்பதால், உன்னிடம் இரவல் கேட்கும் நிலையில் ஒருவன் நிரந்தரமாக இருப்பது ஒருவித நிறைவையும், கதகதப்பையும் தந்திருக்கவேண்டும் என்று அப்போது நான் வெளிப்படுத்தியிருந்த அனுமானத்தை முழுதாக மறுத்துவிடவில்லை அவன். உணர்ச்சியற்ற குரலில், “ஒருவேள உள்ளுக்கு பதுங்கியிருந்த இந்த அரக்கன ஒரேடியா புதைக்க நெனச்சேனோ என்னமோ” என்று மட்டும் சொல்லிவிட்டு அதைக் கடந்தான். ஈட்டும் அனைத்தையும், அளிப்பதன் பிரக்ஞையே இல்லாமல் அளிக்கும் இயல்பு கொண்டிருந்ததால் பிரமநாயகம் போன்ற ஒருவன் இவனை நெருக்கமாக வைத்துக்கொண்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் தனது வெற்றிகளில் முக்கால்வாசி பங்கு இவனுக்கும் இருக்கிறது என்கிற நிதர்சனத்தை புறந்தள்ளிவிட முடியாமல் போகும்போது தான் அஞ்சி வெறுக்க வேண்டிய கொடிய விரோதியும் இவனே என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் நுகரத் துவங்கினான். தக்க சமயத்தில் பிறரைத் துண்டிப்பதைப்போல் தங்கமுட்டையிடும் இந்த வாத்தை அவனால் ஒதுக்கிவிட முடியவில்லை.
ஒவ்வொரு வெற்றியின் பிறகும் அவன் வழக்கமாகச் சொல்லும், “எவன் நின்னான் என்கூட? முட்டி மோதி, ஒத்த ஆளா மேல வந்தேன்!” எனும் வார்த்தைகளை தனது விழிகளைப் பார்த்துச் சொல்ல முயலும்போதெல்லாம் கூச்சத்தில் அவன் தோள்கள் தளர்ந்து, தேகம் குறுகும் என்றும், “ஏதோ, நீ ஒருத்தன் மட்டும் அப்பப்ப கூடமாட ஒத்தாசையா நின்ன!” என்று விட்டேற்றியாய் முணுமுணுக்கும்போது அவன் கன்னத்தசைகள் எப்படியெல்லாமோ துடித்துச் சுளிக்கும் என்றும் வேடிக்கையாகச் சொல்லிவிட்டு, “அப்போ அவன் மூஞ்சி முழுக்க பரவி கடக்கற கசப்ப பாக்கறப்ப, ஒருநாள் இல்ல ஒருநாள் இவன் நம்மள ஒரேடியா ஒழிச்சுக்கட்ட விரும்புவான்னு உள்ளுக்கு தோணும்…” என்று சொன்னான் இவன்.
பிறகு நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்து, “கொலை நடக்கற ஒரு நிமிஷம் முன்னாடி வரைக்கும் அவன் கையால நான் சாவேன்னுதான் நானும் நினைசுட்டு இருந்தேன்… ஆனா விதி உருட்டற பகடையில எப்ப, எவன் தலை சரியுமுன்னு அந்த விதிக்கே தெரியாது!” என்றான்.
அதன் பிறகு நாங்கள் அந்தக் கொலையைப் பற்றியோ, பிரமநாயகத்தைப் பற்றியோ அதிகம் பேசிக்கொள்ளவில்லை. பித்தனைப்போல் வெறித்த விழிகளுடன் அங்கும் இங்கும் அலைந்து, விதிக்கப்பட்டப் பணிகளை ஆற்றிக் களைத்து, அளிக்கப்படும் உணவை உண்டு நிறையும் ஒருவனாகவும், வேலையின்றி விழித்திருக்கும் பொழுதுகளிலெல்லாம் ஒருவிதமான இறுக்கத்துடன் ஓரத்தில் அமர்ந்து எதையோ தீவிரமாக யோசிப்பவனாகவும், பேச்சுக் கொடுத்தால் எவ்வித சலிப்பையும் வெளிக்காட்டாமல் இரண்டொரு நிமிடங்களுக்கு இயல்பாக உரையாடிவிட்டு மீண்டும் தன்னுள் ஆழ்பவனாகவே பெரும்பாலும் இருந்தான் அவன். அந்தச் சிறிய அறையை சரிசமமாய் பகுத்து, ஒருவரது இருப்பு மற்றவரை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாதவாறு அவரவருக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டிருந்தோம். காலமும் அதன் எண்ணற்ற கால்களை தனிமையெனும் சேற்றில் பதித்து வெகு கவனமாக நகர்ந்துகொண்டிருந்தது.
நெடுநாட்களுக்கு பிறகு நேற்றுதான் நாங்கள் மீண்டும் அந்தக் கொலை நிகழ்ந்த தருணத்தைப் பற்றி பேசும் சூழல் உண்டானது. பெரும்பான்மையான இரவுகளில் எந்தவித சஞ்சலங்களையும் கிளப்பாமல் உறங்கிவிடும் வழக்கம் கொண்டிருந்தவன் நேற்று திடீரென, “அய்யோ!” என அலறிக்கொண்டே எழுந்துகொண்டான்.
“தம்பி, என்ன? என்ன ஆச்சு? எலியா?” என்று சற்று நடுக்கத்துடன் விசாரித்தேன் நான்.
“இல்ல… தெரியல… ஏதோ, ஏதோ ஒன்னு என் மூக்க உரசின மாதிரி இருந்துச்சு… முழிச்சு பாத்தப்ப சின்னதா ஏதோ ஒன்னு அறைய சுத்தி ஓடின மாதிரி இருந்துச்சு” என்று சொல்லிவிட்டு உடனடியாக என் முகத்தைப் பார்த்தான். பிறகு, “ஒண்ணுமில்ல… நீங்க படுங்க” என்றான்.
நான் ஒன்றும் சொல்லாமல் பின்னிருந்த சுவரில் சாய்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிறிது நேர மௌனத்திற்குப் பின், “சின்ன பிள்ளைங்க விளையாடற கரடி பொம்மைய அப்படி பண்ண யாருக்கு மனசு வரும்?” என்று முணுமுணுத்தான் அவன்.
“என்னய்யா?”
“டெடி பியர் பொம்ம… அன்னிக்கு பாத்தேன்… இப்ப சட்டுன்னு முழிச்சதும் மனசுல அதோட உருவம்தான் வந்துச்சு… எனக்கும் பிரமனுக்கும் சண்ட முத்தின அன்னிக்கு, காலைல வாக்கிங் போயிருந்தப்ப ஒரு கட்டடத்தொட வாசல்ல அந்த பொம்மைய பாத்தேன்… கழுவேத்தின மாதிரி வேலிக் கம்பியில அந்த பஞ்சு பொம்மைய யாரோ குத்தி, சொருகி வச்சிருந்தாங்க… எவனுக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமுன்னு அப்ப ஒரே குடைச்சலா இருந்துச்சு எனக்கு”
இருட்டில் முகம் தெரியவில்லை என்றாலும் அவன் உள்ளம் ஒருவித கொந்தளிப்பிற்குள்ளாவதை என்னால் எப்படியோ உணரமுடிந்தது.
“வீட்டுக்கு திரும்பினதும் என்னிக்கும் இல்லாத மாதிரி அன்னிக்கு காலைலயே தண்ணிபோட ஆரமிச்சுட்டேன்… கொஞ்ச நேரத்துல அவனும் முழிச்சு வந்து குடிக்க உக்காந்தான்… எப்படி எதனால துவங்கிச்சுன்னு தெரியல, திடீருன்னு ரெண்டு பேரும் கண்டமேனிக்கு கத்தி, சண்ட போட்டுட்டு கடந்தோம்… கண்ண சிமிட்டின நொடியிலே எப்படியோ அவன் கையில ஒரு அரிவாள் வந்திருந்தது… நாக்க மடிச்சுட்டு, கைய ஓங்கிட்டு நிமிந்தான்… என்ன நடந்துச்சுன்னே தெரியலண்ணே! ஏதோ செஞ்சேன்… முழிச்சு பாத்தப்ப அவன் கீழ கிடந்தான், அரிவாள் என் கைக்கு மாறியிருந்தது… அப்ப உள்ள ஒரு வேகம்… என் உடம்பு என் கட்டுப்பாட்டவிட்டு போயிட்ட மாதிரி… கணத்துக்கு கணம் என் கை ஓங்கி, இறங்கற உணர்ச்சி மட்டும் இருந்துச்சு… உள்ளுக்கு ரத்தமெல்லாம் கொதிச்சுட்டு இருந்துச்சு… அவன் அய்யோ அம்மான்னு அலறினது தூரத்துல எங்கனயோ கேக்கறாப்புல பட்டுச்சு… ரெண்டு நிமிசம் கழிஞ்சதும்தான் என் உடம்பு செஞ்சத, என் கண்ணு கண்டத புத்தி உள்ள எடுத்துகிச்சு… பிரமன் முண்டமா கடந்தான்… அவன் அலறினதும், வேண்டாம் வேண்டாமுன்னு கெஞ்சினதும் அப்பத்தான் என் காதையே எட்டிச்சு… கைய வச்சு அவன் தடுக்கத் தடுக்க அவன் கைமேலையே அரிவாள வீசினதெல்லாம் அப்பத்தான் சுளீருன்னு மண்டைக்குள்ள உறைச்சது…”
“…”
“என்ன செய்யன்னு தெரியாம அந்த முண்டத்த சுத்தி சுத்தி மணிக்கணக்கா நடந்துட்டு இருந்தேன்… எனக்குள்ள எந்த உணர்ச்சியுமில்ல… நான் செஞ்ச காரியம், அதுக்கு காரணமா இருந்த அந்த வாக்குவாதம், போதை, வெட்டினதுனால என் உள்ளங்கையில இருந்த வலி, வெதுவெதுப்பான ரத்தமுன்னு எல்லாத்தயும் விட்டு எனக்குள்ள இருந்த ஒன்னு தள்ளி தள்ளி போயிகிட்டே இருந்த மாதிரி இருந்துச்சு… ஒரு கட்டத்துல மொத்த தொடர்பும் அறுந்துபோயி ஒருமாதிரி நிம்மதிய உணர ஆரமிச்சேன்… அப்ப…”
திடீரென அவன் உடல் கிடுகிடுவென அதிரத் துவங்கியது. வெடுக்கென என் பக்கம் திரும்பி, “எனக்கு ஒரே ஒரு கேள்விதாண்ணே!” என்றான்.
“சொல்லுய்யா”
“அந்தப் பயலச் சுத்தி சுத்தி நடந்துட்டு இருந்தேன்னு சொன்னேன்லண்ணே, அப்ப என் காலுல ஏதோ மிதி பட்டுச்சு… ஏதோ மெல்லிசான பொருள மிதிச்சுட்டா உள்ளுக்கு ஒருமாறி பிசையும்லா? அப்படி ஆச்சு… மெதுவா குனிஞ்சேன்…”
“…”
“பிரமனுக்கு வலது கையில ஆறு விரல் உண்டுண்ணே… என் காலுக்கு அடில துண்டா கிடந்தது அந்த ஆறாவது விரல்தான்… காரியத்த சாதிக்கணுமுன்னா என்ன அன்பா அணைச்ச, கடைசியா என்ன சாவடிச்சிரலாமுன்னு அரிவாள ஓங்கின அந்தக் கையில, ஒரு ஓரத்துல, இந்த எழவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லன்னு சொல்ற கணக்கா அனாமத்தா, அசைவில்லாம ஒட்டிட்டுக் கிடந்த அந்த சின்ன விரல்தான்…”
என் பார்வை சற்று மங்கியதா அல்ல இரவே சற்று அடர்ந்ததா என்று தெரியவில்லை ஆனால் அக்கணம் அவன் உருவம் முற்றாக மறைந்து அங்கே ஒலித்த அவன் குரல் அங்குச் சூழ்ந்திருந்த இருளின் குரலெனவே ஒலித்தது.
“ஏண்ணே? தலைய வெட்டி துண்டாக்க தயங்காத நான், அந்த சின்ன விரல கண்டு எதுக்குண்ணே நொறுங்கினேன்?”
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மெல்ல நகர்ந்து, தனிமைவேண்டி நாங்கள் வகுத்துக்கொண்டிருந்த எல்லைகளை எல்லாம் மறந்து, அவனை அணுகிச் சென்று அவன் தோளைத் தட்டி, “விடுய்யா… விடு” என்றேன்.
அவன், “சரிண்ணே” என்று சொல்லி படுத்துகொண்டான்.
சிறிது நேரம் கழித்து எனது எல்லைக்கு நான் மீண்டபிறகும் அவன் கேட்டிருந்த வினா என்னுள் உழன்றபடியே இருந்தது. காலையில் கண்விழித்தபோது அறையின் மறுமூலையில் இருந்த ஜன்னலின் கம்பியில் சுருக்கிட்டு செத்துக் கிடந்தான் அவன். கிழக்கில் உதித்த புத்தொளியை மறித்துநின்ற சிறைக்கதவின் நிழல் அவனது வெள்ளை முகத்திலும், வெண்ணிற அங்கியிலும் கசையடிக் கோடுகளாய் விழுந்திருந்தது.
****
