மிகவும் சாதாரணமானவன் நான். எனது நாட்டின் பெயரைச் சொன்னதும் உங்கள் மனத்தினுள் பட்பட்டென தெறிக்கும் பொது அம்சங்களைக் கொண்டே எனது முழு சித்திரத்தை நீங்கள் உருவாக்கிவிடலாம். பொட்டுப் பிசிறில்லாமல்.

பிரத்யேக குணம் என்ற ஒன்று எனக்கு இல்லவேயில்லை என்பதை அக்னி சாட்சியாகச் சொல்வேன். புறத்தோற்றம் துவங்கி உள்மனதில் உருவாகும் எண்ணங்கள் வரை அனைத்திலும் சாதாரணச் சாயமே பூசப்பட்டிருக்கும். அதன்மேல் சாதாரண நெடியே வீசும். இப்படி வாழ்வதில் இருக்கும் சுகம், நிம்மதி மற்றும் பாதுகாப்பைப் பற்றி என்னால் வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது.

பொதுமையை மிஞ்சிய ஒரு முகமூடி உண்டா?

ஒரு மரத்தில் மரத்தின் பொதுவான அம்சங்கள் அனைத்தும் பொருந்தியிருந்தால் அந்த மரம் உங்கள் பார்வையில் படாது அல்லவா? தாவரங்கள் அல்லது சூழலியல் மீது உங்களுக்கு விசேஷ ஆர்வம் இல்லாதவரை அந்த மரம், அது எந்த வகையாக இருந்தாலும், வெறும் மரம்தான். அது பட்டுபோனாலோ, கொழுந்துவிட்டு எரிந்தாலோ அல்ல சரிந்து விழுந்தாலோ மட்டுமே நீங்கள் பொருட்படுத்தும் தகுதிபெறும். காணாமல்போகும் கலை கைகூடுவதற்கு பழங்காலங்களில் பலர் ஏதேதோ முயற்சிகளை, தவங்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். அது இத்தனை சுலபமென்று அவர்கள் அறிந்திருக்காதது விந்தையை உண்டாக்குகிறது. 

எந்தவித ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் மெல்லிய லயத்துடன் வெகு அழகாக நகர்ந்துகொண்டிருந்தது வாழ்க்கை. தனித்து வாழ்ந்தபோதிலும் மனதளவில் பெருந்திரள் ஒன்றின் அங்கமென என்னை உணர்ந்துவந்ததால் தனிமை என்ற ஒன்றை நான் அறிந்திருக்கவேயில்லை. சாதாரணமாக இருப்பதற்கு நான் எவ்வித உழைப்பையும் செலுத்தாததால் எனக்கு சோர்வும் சலிப்பும் ஏற்படவில்லை. இருத்தல் இளந்தென்றலைப்போல் எடையற்றிருந்தது.

அந்த நாளும் மிகச் சாதாரணமான முறையிலேயே துவங்கியது.

காலை எழுந்ததுமே பிளாக் காஃபி அருந்திவிட்டு, உடற்பயிற்சிக்குத் தோதான உடையணிந்துகொண்டு ஜாகிங் செல்ல பூங்காவிற்குச் சென்றேன். அசாதாரணங்கள் அற்ற அந்த இடத்திற்கு அவ்வேளையில் சாமானியர்கள் தங்கள் குடும்பத்துடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள வருவார்கள். வெண்பனி பொழியும் காலைப்பொழுதில் தேவதாரு மரங்களும், மக்கள் கூட்டமும் செறிந்திருக்கும் அந்தப் பூங்காவைக் காண ரம்மியமாக இருக்கும். மண்டையாட்டும் மரங்கள், மலர்ந்த செடிகள், சிறார்கள் விளையாடும் ஊஞ்சல்கள் மற்றும் சீசாக்கள். அதனைச் சுற்றி வண்ணக்கற்கள் பாவிய நடைபாதை. அதில் அழுந்தி உரசும் நூற்றுக்கணக்கான ஷூ சத்தங்களில் எனதும் கலந்து மறைவதை உணரும்போது வழக்கம்போல பெரும் அமைதியை உணர்ந்தேன்.

திடீரென என்னை உரசிக்கொண்டு ஒருவன் வேகமாக முன்னேறினான். அவனை தொடர்ந்து அவனது நாய்குட்டியும் ஓடியது.

இயல்பாகவே நான் பொது இடங்களில் எவரையும் உற்று கவனிப்பதில்லை. ஆனால் அவன் என்னை ஈர்த்ததற்கு கரணம் அவன் அச்சு அசல் என்னைப்போலவே உடை அணிந்திருந்தான். அதே ப்ராண்ட் மஞ்சள்நிற டிஷர்ட், கருநீல ட்ராக் பேண்ட், வெண்ணிற ஷூ. மட்டுமல்லாமல் நான் பயன்படுத்தும் அதே வாசனை திரவியத்தின் மணமே அவன் மீதும் கமழ்ந்தது.

ஏனோ எனக்குள் அப்போது சின்ன துணுக்குறள் ஏற்பட்டது. அதை உடனே அகற்றிவிட்டு கவனத்தை முழுதாக என் ஓட்டத்தில் குவிக்க முற்பட்டேன். ஆனால் விழிகள் கணத்திற்கு ஒருதரம் என அவனை தேடிக்கொண்டே இருந்தது.

எதனால் அவன் மேல் அப்படி ஒரு ஆர்வம்?

மத்தியிலிருந்த ஊஞ்சல் அருகே அவன் தென்பட்டபோது என்னுள் வித்தியாசமான ஒரு பரபரப்பை உணர்ந்தேன். பக்கவாட்டில் இருந்த மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த மண்வெட்டியை எடுத்து அங்கொரு குழியைத் தோண்ட ஆரம்பித்தான் அவன்.

என்ன நடக்கிறது? இவன் என்ன செய்கிறான்?

அவன் என் பக்கம் திரும்பியபோதுதான் கவனித்தேன். அவன் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடிக்கூட அப்படியே என்னுடையதைப்போலவே இருந்தது. அவன் சருமம் என் நிறம். ஆனால் நான் குறுந்தாடி வைத்திருந்தேன், அவன் மீசை மட்டுமே வைத்திருந்தான். முக அமைப்பிலும் ஒருசில மாற்றங்கள் இருக்கவே செய்தன. அது எனக்கு கொஞ்சம் ஆறுதலை வழங்கியது.

சுற்றி நடந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்காவரும் அவனது வினோதமான செயலை ஒருநொடி மட்டும் பார்த்துவிட்டு அவரவர் காரியத்தில் முனைந்தனர். ஆனால் என்னால் அப்படி இயல்பாக இருந்துவிட இயலவில்லை. என்னையும் மீறி அவனது செயல்களை நோட்டம்விட்டபடியே இருந்தேன்.

வேண்டிய ஆழத்திற்கு குழிவெட்டிய பிறகு கையில் இருந்த மண்வெட்டியை ஓங்கி அவன் அருகே நின்று வாலாட்டிக் கொண்டிருந்த நாயை அடித்தான் அவன். அதன் ஓலம் அங்கிருந்த அனைவரையும் ஒருகணம் உறையச்செய்தது. தலைச் சிதறி அந்த நாய் இறந்தபிறகும் அதை தொடர்ச்சியாக அடித்துக்கொண்டிருந்தான் என்போலவே உடை உடுத்தியிருந்த அந்த ஆசாமி. பிறகு அதன் உடலை குழிக்குள் தள்ளி மண்போட்டு மூடினான்.

ஓரிரு நொடிகளில் அங்கிருந்தவர்கள் அங்கு நடந்தேறியதைக் கண்டும் காணாததைப்போல் நகர்ந்துசெல்ல ஆரம்பித்தனர். மண்வெட்டியை பழைய இடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்த அவனும் மெதுவாக நடந்து கூட்டத்தோடு கூட்டமாக கலந்து காணாமல் போனான்.

என்னால் ஏனோ அசையவே முடியவில்லை. வாழ்விலே முதல் முறையாக ஒருவித தனிமையை உணர்ந்தேன். எதிர்பட்டவர்கள் அனைவரும் எனது மஞ்சள்நிற டிஷர்ட்டையும், கருநீல ட்ராக் பேண்ட்டையும், வெண்ணிற ஷூவையும், என் மூக்குக் கண்ணாடியையும் பார்த்துவிட்டு வினோதமான முகபாவத்துடன் கடந்து செல்வதைப்போல் இருந்தது. நான் அவன் இல்லை, நான் உங்களில் ஒருவன், சாதாரணமானவன் என்று அவர்கள் ஒவ்வோரிடமும் உரத்தக்குரலில் அறிவிக்க தோன்றியது. ஆனால் சாதாரணமாக நிமிர்வதற்கும், சாதாரணமாக ஏறெடுப்பதற்கும், சாதாரணமாக எட்டுவைத்து நடப்பதற்கும் நான் அதீத உழைப்பை செலுத்தவேண்டியிருந்தது. அந்த உழைப்பே என்னை திரளிடமிருந்து தள்ளிவைப்பதைப்போல் தோன்றியது.

மனம்பிறழ்ந்தவனைப்போல் ஓடி, வீடு வந்து சேர்ந்தபோது என் கைகள் இரண்டும் நடுங்கிக்கொண்டிருந்தன. முகம் பேய் அறைந்ததைப்போல் வெளிறிப்போயிருந்தது.

குடித்தேன்.

என் வீடே எனக்கு அந்நியமாகிவிட்டதைப்போல் இருந்தது.

மேலும் குடித்தேன்.

யார் அவன்? கண்ணிமைக்கும் வேளையில் எனது உலகத்தையே சிதைத்துவிட்டான். அசாதாரணமான அந்தச் செயலை செய்துவிட்டு சர்வசாதாரணமாக கூட்டத்துடன் கூட்டமாக கலந்து, கரைந்து அவன் காணாமல்போனதை நினைக்க நினைக்க அதிதீவிர மனஉளைச்சலுக்கு ஆளானேன். என்னைக் கடந்துசென்ற சாமானியர்களின் முகத்தில் படர்ந்த விசித்திர பாவத்தை எண்ணும்போதெல்லாம் வேதனையில் சுருங்கிப்போனேன்.

அந்த அசாதாரணமானவன் தனது அசாதாரணமான செயலுக்கான பொறுப்பைத் தத்ரூபமாக இந்த சாதாரணமானவனின் சிரத்தில் ஏற்றிவிட்டான். தற்செயலாக அந்த உடை அணிந்தது குற்றமா? அது தற்செயல்தானா?

மீண்டும் குடித்தேன். குடித்துக்கொண்டே இருந்தேன்.

மிதமிஞ்சிய போதையில் நாட்களும், வாரங்களும், மாதங்களும் நொடிபோல் கடந்தன. வீட்டின் இருண்ட அறையிலும், சாமானியர்களின் கண்களுக்குப் புலமாகாத பாதாள உலகத்திலும் பெருவாரியான எனது நேரங்களைக் கழித்தேன். இருத்தலற்றவர்களுடன் இருத்தலற்றவனாய் திரிந்தேன்.

ஒருநாள், நடுச்சாமத்தில் என் வீட்டின் இருண்ட படுக்கையறையில் நலிந்துபோன வேசி ஒருத்தியை மிருகத்தனமாக புணர்ந்துகொண்டிருந்தபோது என்னுள் திடீரென ஒரு கொந்தளிப்புக் கிளம்பியது. இனி மறைந்து வாழப்போவதில்லை என்கிற ஆணவம் பெருக்கெடுத்தது.

மஞ்சள்நிற டிஷர்ட்டை அணிந்துகொண்டேன். கீழே அதே கருநீல டிராக் பேண்ட். வெண்ணிற ஷூவைத் தேடியபடி வாசலுக்கு வந்தபோது ஒரு மூலையில் பூச்சியரித்த நிலையில் கிடந்தன அவை.

எடுத்தேன்.

உள்ளங்கையால் அதை மேலாகத் துடைத்தபோது உள்ளுக்குள் ஏதோ அசைவு தெரிந்தது. உற்றுப் பார்த்தபோது இடது ஷூவினுள் சிறிய புறாக்குஞ்சு ஒன்று பதுங்கி அமர்ந்திருந்தது. பதற்றத்தில் ஷூவைக் கீழே போட்டேன். பிறகு இனம்புரியாத எரிச்சலில் அந்த ஷூவை ஓங்கி மிதித்தேன். வெண்ணிற ஷூவின் பரப்பிலெங்கும் செந்நிறத் திட்டுக்கள் படர்ந்தன. நசுங்கியப் பறவையை அப்புறப்படுத்திவிட்டு ஷூவை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன்.

பூங்காவை நெருங்கும்போதே அங்கு பெருங்கூட்டம் திரண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. நள்ளிரவில் என்ன நடைப்பயிற்சி என்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்த நான் ஒருகணம் அதிர்ந்துபோனேன்.

பூங்காவில் தேவதாரு மரங்கள் ஒன்றுகூட இருக்கவில்லை. குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடிக் களித்த ஊஞ்சல்களும், சீசாக்களும் கூட அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அவை இருந்த இடத்தில் இப்போது சிறிய மேடை இருந்தது. அதில் ஒருவன் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்தான். கீழே குழுமியிருந்த திரள் அதை ஆரவாரத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது. அனைவர் கண்களிலும் அதீத வெறி. ஒருகாலத்தில் ஊஞ்சலாடி மகிழ்ந்த குழந்தைகள் இப்போது அந்தப் பேச்சாளனின் கருத்துக்களைக் கேட்டு கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பேச்சாளன் அவனேதான். அதே டீஷர்ட். பேண்ட். ஷூ. மூக்குக்கண்ணாடி.

ஆனால் என்னை அதிரச்செய்தது அதுமட்டுமல்ல. அங்கு கூடியிருந்த அனைவரும் மஞ்சள்நிற டீஷர்ட்டும், கருநீல பேண்ட்டும், வெண்ணிற ஷூவும் அணிந்திருந்தார்கள்.

ஆம். காலம் மாறிவிட்டது.

மெல்ல நடந்து அந்தக் கூட்டத்தின் மையமாக நின்றுகொண்டேன்.

மென்கழுத்தில் நரம்புகள் புடைக்கப் பேசிக்கொண்டிருந்த அந்த அசாதாரண மனிதன் வேறொரு இனத்தின் பெயரைச் சொல்லி, “அவர்களை அடியோடு அழிப்போமா?” என்றான்.

கூட்டம் கடும் வேட்கையுடன் ஒரு இனப்படுகொலையை ஆமோதித்தது.

அவன் “இக்கணமே துவங்குவோமா?” என்று கேட்டபோது எங்கள் இருவரின் விழிகளும் சந்தித்துக்கொண்டன.

ஒருகணம் மூச்சடைத்துப்போனேன். பிறகு சாமானியத்தனமாக முஷ்டியை உயர்த்தி, சர்வசாதாரணமாக தலையசைத்தேன்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *