பல நாள் குளிக்காதவன் போல இருந்தான்.  உடைகள் அழுக்கடைந்து இருந்தன. ரஞ்சித் இவனை ஒருநாள் கூடத் தங்கவைத்து கொள்ளச் சொன்ன போது இவனை பார்க்காததால் தெரியாமல் வரச் சொல்லி விட்டேன். வந்து விட்டவனை திரும்ப அனுப்பத் தயங்கி அறைக்குள், வாசலுக்கு அருகில் தரையில் படுத்துக் கொள்ள வைத்தேன்.  என்னிடம் இருந்த ஒரு பழைய போர்வையையும் அளித்தேன். அவன் மேல் இருந்த குடி துர்நாற்றத்தை தவிர்க்க மின்விசிறியை ஐந்தில் வைத்தேன். அவனை தூங்கச் சொல்லி மின்விளக்கை அனைத்து, நானும் படுத்துக் கொண்டேன். சற்று நேரத்திலேயே வேலைக் களைப்பினால் தூங்கியும் விட்டேன். சிறிது நேரத்திலேயே அவனது வீரிட்டு அழும் குரல் கேட்டு பதப்பதைத்து எழுந்தும் விட்டேன் !

தூக்கம் கலைந்த கோபம் வந்தாலும் அவனைப் பார்த்தவுடன் கோபம் மறைந்து, அவன் மேல் பரிதாபம்தான் ஏற்பட்டது . மாதக் கணக்கில் வளர்ந்த தாடிமீசை, அதற்குள் ஒழிந்து இருக்கும் வாய், கண்களில் நீர் திரண்டு கன்னத்தில் வழிந்து தாடியில் இறங்கி இருந்த விதம், பெருச்சாளி ஒழிந்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடி வளர்ந்து சுருண்டு சிக்காகி இருக்கும் தலைமுடி என பார்க்க மனநலம் பாதிக்கப்பட்டவன் போல இருந்தான் . நான் எழுந்ததை உணர்ந்து என்னை திரும்பி பார்த்தான் .

” அண்ணா, படுத்துக்கங்கணா, இனி சத்தம் போட மாட்டேன்ணா , படுத்துக்குங்க ” என மன்னிப்பும் கெஞ்சலும் கலந்த முகத்துடன் பேசினான்.

நான் “பரவாலைங்க, நீங்களும் படுத்துக்குங்க” என்றேன். பிறகு நானும் படுத்துக் கொண்டேன். படுத்தபடியே திரும்பி அவனைப் பார்த்தேன்.  அவன் படுக்காமல் அமர்ந்து இருந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன், அவன் அமைதியாக அமர்ந்து இருந்தான். ஆனால் கண்களில் நீர் வந்து கொண்டிருந்தது. இனி என்னால் தூங்க முடியாது என்று எண்ணி எழுந்து அமர்ந்து கொண்டேன். நான் அமர்ந்து கொண்டதை பார்த்தவன் சட்டென எழுந்து விட்டான் .

 “தொந்தரவு கொடுத்துட்டேனா அண்ணா” என்றான் .

“இல்லைங்க எப்பவும் இந்நேரம் இப்படி தூக்கம் கலைஞ்சு எந்திருச்சுடுவேன், பிறகு தூக்கம் வர ரொம்ப நேரம் ஆகிடும்” என்று பொய் சொன்னேன். அவன் சற்று சாந்தமாகி அமர்ந்து கொண்டான் .

” என்னாச்சு ஏன் அழறீங்க? ” என்றேன் .

” ஒன்னும் இல்லணா ” என்றான்.

” இல்ல, சொல்லுங்க என்னால ஏதாவது உதவ முடியுமானு பாக்கிறேன்” என்றேன். அவன் அந்த அழுகை நிலையிலும் சற்றுப் புன்னகைத்தான். அழகன் என்று தோன்றியது. பிறகுதான் அவனது உடல், முகம் என்று நன்றாகக் கவனித்தேன். நல்ல உடையில் முடிவெட்டி சவரம் செய்து இருந்தான் என்றால் மிக அழகாக இருப்பான் என்று தோன்றியது .

பிறகு ” சொல்ல விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம் ” என்றேன் .

“அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னா, பையனை பார்க்கலாம்னு போனேன் ” என்றான். பிறகு சற்று இடைவெளி விட்டு “மூணு நாளா போயிட்டு இருக்கேன்ணா” என்றான் , இதைச் சொல்லும் போது உடைந்து அழுது விட்டான் .

நான் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன் . மெல்ல அவன் பேசத் தொடங்கினான் .

“நாலு வருஷம் முன்னாடி பொண்டாட்டி, குடும்பத்தை விட்டு  ஓடிட்டான்ணா, பிறகு அவங்க என்ன ஆனாங்க நான் பார்க்கவே இல்லை. இப்ப திரும்பி நாலு நாள் முன்ன வந்தேன்,  அவ அம்மா வீட்டுக்குப் போனேன் , தொரத்தி விட்டுட்டாங்க , அவ அங்க இருக்காளா, இல்ல எங்க இருக்கானே தெரியல ” என்றான். அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன் .

“ஒரே பையன்னா , அவன் இரண்டாவது படிக்கும் போது விட்டுட்டு போனேன் . இங்க நல்லாயன் ஸ்கூல்லதான் படிச்சான், எப்படியும் இந்த ஸ்கூல்லதான் படிப்பான்னு  அவனைப் பார்க்க ஸ்கூல் வாசல்லயே மூணு நாளா நிக்கிறேன்ணா ” என்றான் .

” பாத்தீங்களா? ” என்றேன் .

அவன் கண்ணீருடன் ” இல்லைணா , எனக்கு அடையாளம் தெரியல ,  அவன் வயசு போல இருக்கற ஸ்கூல்ல இருந்து வெளிய வர பசங்க எல்லாரையும் பாக்கிறேன்ணா , என்னால கண்டுபிடிக்க முடியலணா ” என்றான் .

எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் வெறுமனே அவனைப் பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தேன் .  பிறகு அவனாக ” காலைல சென்னை கிளம்பறேன்ணா ” என்றான் .

 “பையனைப் பாக்கலையா?” என்றேன். அவன் கண்களை துடைத்துக் கொண்டு மெல்ல சோகம் ததும்பிய முகத்துடன்  புன்னகைத்தான் .