பல நாள் குளிக்காதவன் போல இருந்தான் , உடைகள் அழுக்கடைந்து இருந்தன. ரஞ்சித் இவனை ஒருநாள் கூட தங்கவைத்து கொள்ள சொன்ன போது இவ்னை பார்க்காததால் தெரியாமல் வர சொல்லி விட்டேன். வந்து விட்டவனை திரும்ப அனுப்ப தயங்கி அறைக்குள் வாசலுக்கு அருகில் தரையில் படுத்து கொள்ள வைத்தேன் , என்னிடம் இருந்த ஒரு பழைய போர்வையையும் அளித்தேன் . அவன் மேல் இருந்த குடி துர்நாற்றத்தை தவிர்க்க மின்விசிறியை ஐந்தில் வைத்தேன் . அவனை தூங்க சொல்லி மின்விளக்கை அனைத்து நானும் படுத்து கொண்டேன் ,சற்று நேரத்திலேயே வேலை களைப்பினால் தூங்கியும் விட்டேன் . சற்று நேரத்திலேயே அவனது வீரிட்டு அழும் குரல் கேட்டு பதப்பதைத்து எழுந்தும் விட்டேன் !
தூக்கம் கலைந்த கோபம் வந்தாலும் அவனை பார்த்தவுடன் கோபம் மறைந்து அவன் மேல் பரிதாபம்தான் ஏற்பட்டது . மாத கணக்கில் வளர்ந்த தாடிமீசை ,அதற்குள் ஒழிந்து இருக்கும் வாய், கண்களில் நீர் திரண்டு கன்னத்தில் வளைந்து தாடியில் இறங்கி இருந்த விதம் , பெருச்சாளி ஒழிந்தாலும் கண்டுபிடிக்க முடியாத வளர்ந்து சுருண்டு சிக்காகி இருக்கும் தலைமுடி என பார்க்க மனநலம் பாதிக்க பட்டவன் போல இருந்தான் . நான் எழுந்ததை உணர்ந்து என்னை திரும்பி பார்த்தான் .
” அண்ணா , படுத்துக்கங்கனா, இனி சத்தம் போட மாட்டேன்னா , படுத்துக்குங்க ” என மன்னிப்பும் கெஞ்சலும் கலந்த முகத்துடன் பேசினான்.
நான் ” பரவாலைங்க , நீங்களும் படுத்துக்குங்க ” என்றேன் , பிறகு நானும் படுத்து கொண்டேன் , படுத்தபடியே திரும்பி அவனை பார்த்தேன் , அவன் படுக்காமல் அமர்ந்து இருந்தான் . அவனையே பார்த்து கொண்டிருந்தேன் , அவன் அமைதியாக அமர்ந்து இருந்தான் ,ஆனால் கண்களில் நீர் வந்து கொண்டிருந்தது . இனி என்னால் தூங்க முடியாது என்று எண்ணி எழுந்து அமர்ந்து கொண்டேன் . நான் அமர்ந்து கொண்டதை பார்த்தவன் சட்டென எழுந்து விட்டான் .
“தொந்தரவு கொடுத்துட்டேனா அண்ணா” என்றான் .
” இல்லைங்க எப்பவும் இந்நேரம் இப்படி தூக்கம் கலைஞ்சு எந்திருச்சுடுவேன், பிறகு தூக்கம் வர ரொம்ப நேரம் ஆகிடும் ” என்று பொய் சொன்னேன் . அவன் சற்று சாந்தமாகி அமர்ந்து கொண்டான் .
” என்னாச்சு ஏன் அழறீங்க ” என்றேன் .
” ஒன்னும் இல்லனா ” என்றான்.
” இல்ல ,சொல்லுங்க என்னால ஏதாவது உதவ முடியுமானு பாக்கிறேன் ” என்றேன். அவன் அந்த அழுகை நிலையிலும் சற்று புன்னகைத்தான் . அழகன் என்று தோன்றியது . பிறகுதான் அவனது உடல் , முகம் என்று நன்றாக கவனித்தேன் , நல்ல உடையில் முடிவெட்டி சவரம் செய்து இருந்தான் என்றால் மிக அழகாக இருப்பான் என்று தோன்றியது .
பிறகு ” சொல்ல விருப்பம் இல்லைனா சொல்ல வேண்டாம் ” என்றேன் .
” அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னா, பையனை பார்க்கலாம்னு போனேன் ” என்றான் பிறகு சற்று இடைவெளி விட்டு “மூணு நாளா போயிட்டு இருக்கேன்னா” என்றான் , இதை சொல்லும் போது உடைந்து அழுது விட்டான் .
நான் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தேன் . மெல்ல அவன் பேச தொடங்கினான் .
” நாலு வருஷம் முன்னாடி பொண்டாட்டி ,குடும்பத்தை விட்டு ஓடிட்டேன்னா, பிறகு அவங்க என்ன ஆனாங்க நான் பார்க்கவே இல்லை . இப்ப திரும்பி நாலு நாள் முன்ன வந்தேன் , அவ அம்மா வீட்டுக்கு போனேன் , தொரத்தி விட்டுட்டாங்க , அவ அங்க இருக்காளா, இல்ல எங்க இருக்கானே தெரியல ” என்றான், அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன் .
” ஒரே பையன்னா , அவன் இரண்டாவது படிக்கும் போது விட்டுட்டு போனேன் . இங்க நல்லாயன் ஸ்கூல்லதான் படிச்சான் , எப்படியும் இந்த ஸ்கூல்லதான் படிப்பான்னு அவனை பார்க்க ஸ்கூல் வாசல்லயே மூணு நாளா நிக்கிறேன்னா ” என்றான் .
” பாத்தீங்களா ” என்றேன் .
அவன் கண்ணீருடன் ” இல்லைனா , எனக்கு அடையாளம் தெரியல , அவன் வயசு போல இருக்கற ஸ்கூல்ல இருந்து வெளிய வர பசங்க எல்லாரையும் பாக்கிறேன்னா , என்னால கண்டுபிடிக்க முடியலனா ” என்றான் .
எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் வெறுமனே அவனை பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தேன் . பிறகு அவனாக ” காலைல சென்னை கிளம்பறேன்னா ” என்றான் .
“பையனை பாக்கலையா” என்றேன் . அவன் கண்களை துடைத்துக் கொண்டு மெல்ல சோகம் ததும்பிய முகத்துடன் புன்னகைத்தான் .
