பரந்தாமனுக்கு திருச்செந்தூருடன் தனிப்பட்ட முறையில் ஒரு பிணைப்பு இருந்தது. கல்லூரி படித்த காலங்களில் சகமாணவர்களுடன் ஒன்றிப்போக இயலாமல், நிர்வாகம் முன்வைக்கும் நியமங்களுக்கு பணிந்துபோக முடியாமல் படிப்பின் மீதே பற்றிழந்து, வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஊர்சுற்றித் திரிந்த காலங்களிலெல்லாம் அவன் அடிக்கடி சென்று வந்த இடம் அதுவாகவே இருந்தது.
திருநெல்வேலியில் இருந்து மூன்று மணி நேரத்திற்கு ஒன்று என்கிற கணக்கில் புறப்பட்டுச் சென்ற ரயிலில், திருச்செந்தூர் வரை செல்வதற்கான கட்டணம் அப்போது வெறும் பத்து ரூபாய் தான். அதையும் அவன் செலவுசெய்யமாட்டான். அக்காலங்களில் அவன் கையிருப்பில் முப்பது ரூபாயே இருக்கும் என்பதால் அதை திருச்செந்தூர் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் செல்வம் புரோட்டா கடையில் சாப்பிடுவதற்கென பதுக்கி வைத்துக்கொள்வான்.
ஒருபோதும் திருச்செந்தூர் ஸ்டேஷனில் டிக்கட் செக் செய்ததேயில்லை. திருநெல்வேலியில் மட்டும் ஒரே ஒருமுறை ட்ராக்கை கடந்து நடைமேடை ஏறுவதை கண்டுவிட்ட அதிகாரிகள் முன்னூறு ரூபாய் அபராதம் பெற்றுக்கொண்டு அவனை விடுவித்தனர். நல்வினையாக அன்று பள்ளியில் படிக்கும் பணக்கார வீட்டு பிள்ளையான முகிலனும் உடன் வந்திருந்ததால் தப்பிக்க முடிந்தது. அதன் பிறகே ரன்னிங்கில் இறங்கும் பழக்கத்தை அவன் முன்னெடுக்க ஆரம்பித்தான். வண்டி ஸ்டேஷனை நெருங்கும்போதே வெளியே குதித்து, இரட்டை பாலத்தின் அடியிலாக ஜங்க்ஷனுக்குள் வந்துவிடுவான்.
வித்தவுட்டில் பயணிப்பது, ரன்னிங்கில் இறங்குவது போன்ற சாகசங்கள் மட்டுமின்றி, அவன் மனதின் போக்கைத் தீர்மானித்த பல அனுபவங்களுக்கும் திருச்செந்தூரே ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. கடலோரம் அமர்ந்து விஸ்கி அருந்தியதும், இரட்டை சிகரெட்டை வைத்துக்கொண்டு ஸ்டைலாக புகைவிட்டு முகிலனை வீடியோ எடுக்கச் சொன்னதும், சாலை விபத்தில் விழுந்துகிடந்த முதிய பெண்ணின் விலகிய சேலை வழியாக தெரிந்த யோனியை வெறித்தபடி கூட்டத்தோடு கூட்டமாய் நின்றதும், எதிர்ப்படும் பெண்களில் ஒருத்தியை தெரிவுசெய்து ரயில் கழிவறையில் அவளை எண்ணி கரமைதுனம் செய்வதும், பிடிக்காத ஆசிரியர்களின் அல்லது நன்றாக படிக்கும் மாணவிகளின் தொலைபேசி எண்களை “பாளையம்கோட்டை ஐட்டம்” என ரயில் பெட்டியில் ஆங்காங்கே எழுதி வைப்பதும் என அவனுள் பொதிந்திருந்த கீழ்மைகள் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டது அங்கேதான்.
சிறுவயதில் ஒருமுறை குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்திருந்தபோது பிரகாரத்தின் படிகளில், தூண்களில், பக்கவாட்டுச் சுவர்களில் பலமுறை மோதியும் தடுக்கியும் இடித்தும்கொண்டான் பரந்தாமன். அதை கவனித்த அப்பா அவனுக்கு கவனம் போதவில்லை எனவும், கண்களை பிடரியில் வைத்துக்கொண்டு நடமாடினால் இங்கே மட்டும் அல்ல வாழ்வினில் கூட அவன் தடுக்கியே விழுவான் என்றும் கண்டித்தார். தான் கவனமாக இருந்தாலும் ஏனோ இப்படி நடந்துவிடுகிறது என்று முறையிட்டான் அவன். அப்போது அப்பாவின் கையைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்த தங்கை, “அப்போ கடவுள் உன்ன பனிஷ் பண்றாருன்னு அர்த்தம்” என்று சொன்னாள்.
அந்த வார்த்தைகளைக் கேட்டு அன்று விசும்பி விசும்பி அழுதிருந்தான் பரந்தாமன். அப்படி என்ன செய்துவிட்டோம் என்று அவனது குழந்தைமனம் பரிதவித்தது. காலப்போக்கில் அந்தச் சொற்களை அவன் மறந்துவிட்டிருந்தாலும் பல ஆண்டுகள் கழித்து, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் இருந்த ஏதோ ஒரு சந்நிதியின் வாசலில் கிடந்த காணிக்கைகளை, சிக்கன் சுக்கா சாப்பிடும் பொருட்டு அவன் திருடியபோது மட்டும் அந்த நினைவு லேசாய் எட்டிப்பார்த்தது. ஆனால் அப்போதிருந்த மனநிலையில் அச்சொற்கள் அவனுக்குள் சிரிப்பையே மூட்டின.
பாவம், வல்வினை போன்ற கருத்தாக்கங்கள் மீது பரந்தாமனுக்கு பெரிதாய் நம்பிக்கை இருந்ததில்லை. ஏன் அவ்வாறு என்று கேள்வியெழுப்பினால் அடுக்குமொழியில் பல தர்க்கங்களையும், சொற்பமாக படித்திருந்த நூல்களில் இருந்து பல மேற்கோள்களையும் கோர்த்து அழகான வாதம் ஒன்றை முன்வைப்பான் அவன். ஆனால் ஆழ்மனதில், அவனது நம்பிக்கை அல்லது அவநம்பிக்கைக்கு முகாந்திரமாய் திகழ்ந்தது அவனது வாழ்வேதான்.
அழுகிப்போன எண்ணங்களைச் சுமந்தலைந்தபோதிலும் குடும்பம் மற்றும் சுற்றங்களில் அதிர்ஷ்டத்திற்கு பெயர் போனவனாக திகழ்ந்தான் அவன். அவன் கைபட்டால் சகலமும் விருத்தியாகிவிடும் என்கிற காத்திரமான நம்பிக்கை அனைவருள்ளும் இருந்தது. அவனை முன்வைத்து துவங்கப்பட்ட எந்த முன்னெடுப்பும் பொய்த்ததேயில்லை. குடும்பத்தில் பிக்சட் டெப்பாசிட் துவங்குவதில் ஆரம்பித்து, மனை வாங்குதல், மணம் பேசுதல், தொழில் துவங்குதல் வரை அனைத்திலும் அவனது பங்கு முதன்மையானதாக இருந்தது.
தீய பழக்கங்கள் ஏதுமின்றி, சிறு வயதிலேயே பெரும் பக்திமானாக திரண்டு வந்த அவனது சித்தப்பா மகன் சாலை விபத்தொன்றில் தலையில் அடிபட்டு நினைவிழக்கும் தருவாயில் கிடந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஒருவன் அவனைக் காப்பாற்றாமல், அவனது உடைமைகளை மட்டும் பறித்துக்கொண்டு அவனை சாக விட்டுவிட்டு தப்பித்தோடியிருந்தான். ஆனால் அதற்கு சில மாதங்கள் கழித்து வேலை நிமித்தமாய் கோவில்பட்டி சென்றுகொண்டிருந்த பரந்தாமன், பெரிதாய் நடமாட்டம் இல்லாத கிராமத்துச் சாலை ஒன்றில் பைக்கிலிருந்து தவறி விழுந்தபோது, பக்கவாட்டில் இருந்த நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பஸ் ஒன்று அவனுக்காக நின்றது மட்டுமல்லாமல், அதன் பயணிகள் மொத்தமாக இறங்கிவந்து இவனை உபசரித்து, ஆங்காங்கே சிதறிக்கிடந்த சில்லறைகளை ஒரு ரூபாய் விடாமல் பொறுக்கி தந்து உதவியிருந்தனர்.
அந்தச் செய்தியை கேள்வியுற்ற அம்மாபாட்டி, “ஆயிரம் பேர் கைகூப்பினாலும் தெய்வம் எவனோ ஒருத்தனத்தான் குனிஞ்சு பாக்கும்” என்று சித்தப்பாவை வைத்துக்கொண்டே சொல்லியிருந்தாள். இரண்டு தலைமுறைகளாக கோவில் பூசாரியாக இருந்து, தற்போது சித்த சுவாதீனமற்ற ஒரு மகனை வாரிசாகக் கொண்டிருக்கும் பெரியப்பா அதை ஒப்புக்கொள்வதைப்போல தலையசைத்திருந்தார்.
பாட்டியின் மடியில் கண்மூடிப் படுத்திருந்த பரந்தாமனுக்கு அப்போது உடம்பெல்லாம் புல்லரித்தது. தான் அதிர்ஷ்டக்காரன் என்றும், வரம் வாங்கிவந்தவன் என்றும் அவன் நம்பத் துவங்கிய தருணம் அது.
இரண்டு வாரங்கள் கழித்து காயங்கள் ஆறி இயல்பு வாழ்வுக்கு திரும்பியவனின் நடையில் புதுவித நிமிர்வு வந்துவிட்டதைப்போல் இருந்தது. மனதின் மந்தன அறைக்குள் கமுக்கமாய் திரண்டு, தன்னை ஆக்கிரமித்து, புறவுலகில் ஒளிவுமறைவாய் வடிகால் நாடச்செய்யும் நிழல் உணர்ச்சிகளால் தன்னிடம் உருவான நுணுக்கமான கோணல் ஒன்று சீராகிவிட்டதைப்போல் முகத்தில் புத்தொளி படர்ந்தது. அவனுக்கு வாய்த்த பிசிறற்ற யோகமும், அவனது வழிகாட்டுதலின்படி முடிவுகள் எடுத்து, செயல்புரிந்து வெற்றிகளை பெருக்கும் நபர்களிடம் துளிர்க்கும் மதிப்பும் அந்த மந்தன அறையை காக்கும் அரணாக உருமாறியது.
குறிப்பாக, திருச்செந்தூரில் இருக்கும் சித்த மருத்துவர் ஒருவரிடம் பெரியப்பா மகனை சிகிச்சைக்கு இவன் அழைத்துச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவனிடம் கணிசமான முன்னேற்றங்கள் தென்படத் துவங்கியது அனைவரையும் விந்தையில் ஆழ்த்தியிருந்ததது.
எக்காரணத்தைக்கொண்டும் இதை இழந்துவிடலாகாது என்று உறுதிகொண்டான் பரந்தாமன். இதன் பொருட்டு எதை இழந்தாலும் பரவாயில்லை என்றொரு வீம்பு வேர்விட்டிருந்தது அவனுக்குள்.
அதற்கு சரியாக ஆறுமாதம் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பெரியப்பா மகனை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்கு புறப்பட்டான் பரந்தாமன். வீட்டிலேயே அடைபட்டிருப்பதால் சலிப்புற்றிருந்த மனைவியையும் உடன் அழைத்துக்கொண்டு, வழக்கம்போல் காரில் செல்லாமல், நெடுநாட்கள் கழித்து பயணத்திற்கு ரயிலை தெரிவுசெய்திருந்தான். நீர்ப்பரப்பில் துள்ளி அமிழும் மீன்களைப்போல் நினைவுகள் ஒன்றின்பின் ஒன்றாக எழுந்துவந்து குறுகுறுப்பூட்ட, காரணமின்றி முறுவலித்தபடியும், இதழோரங்களில் எச்சில் நுரையுடன் ஜன்னலில் முகம்பதித்து அமர்ந்திருந்த பெரியப்பா மகனை ஆறுதலாக வருடிக்கொடுத்தபடியும் இருந்தான் அவன்.
கோவில் செல்லும் பாதையில் அவர்கள் பதிவாக தங்கும் விடுதியில் உடைமைகளை வைத்துவிட்டு சொந்த விஷயமாக வெளியே புறப்பட்டுச் சென்ற பரந்தாமன், இயல்பைவிட சீக்கிரமாக அறைக்கு திரும்பியபோது அங்கே மஞ்சத்தில் தனது மனைவியுடன் ஒரு காட்டு மிருகத்தைப்போல் இயங்கிக்கொண்டிருந்தான் அவனது பெரியப்பா மகன்.
கருவிழிகள் இரண்டும் இமைகளுக்குப்பின் சென்றிருக்க, உச்சகட்ட மிதப்பில் அதை அனுபவித்துக்கொண்டிருந்தாள் அவனது காதல் மனைவி. அவனுக்கு மிகவும் பிடித்தமான அவளது நீண்ட மிருதுவான விரல்கள், பெரியப்பா மகனின் வியர்வைப் பூத்திருந்த முதுகுப் பரப்பை ஆசையுடன் வருடிக்கொண்டிருந்தது.
பரந்தாமன் ஒருகணம் நிலைகுலைந்தான். பின்னர் அந்த விஷயத்தை அப்படியே மூடிமறைத்துவிட முடிவுசெய்தபடி அங்கிருந்து விலகிச் சென்றான்.
*****
