இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் ஏ. நஸ்புள்ளாஹ் தவிர்க்க முடியாத ஒருவர். கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்தவர். நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் பணியாற்றி வரும் இவர், 80 களுக்கு பின் எழுதத் தொடங்கியவர்.
கவிதை, சிறுகதை, கட்டுரைகள், பாடல்கள் என இவருடைய பரிமாணம் மிகப் பரந்தது. இதுவரை துளியூண்டு புன்னகைத்து கவிதைத் தொகுதி தொடங்கி யானைக்கு நிழலை வரையவில்லை வரை 13 தொகுதிகளை வெளியீடு செய்துள்ளார். மாகாணம், மாவட்டம் என பல்வேறு பிரிவுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவரது பல சிறுகதைகள் உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட் சர்வதேச சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. இவர் தன்னுடைய ‘நான் உமர் கய்யாமின் வாசகன்’ கவிதை தொகுதிக்காக 2022 இலங்கை அரசின் சாஹித்ய விருதையும் பெற்றுக் கொண்டுள்ள ஏ.நஸ்புள்ளாஹ்வின் மொழிபெயர்ப்பில் விரைவில் உலக சிறுகதைத் தொகுப்பு வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வழங்கிய நேர்காணலை இங்கு தருகின்றோம்.
01.கேள்வி: உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும், இலக்கிய வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பு எப்படிப்பட்டது?
ஏ.நஸ்புள்ளாஹ் :
முதல் கேள்வியே ஒரு பிரதியாளனின் மன வலிமையை பரீட்ச்சித்து அதிகமான சிந்தனைகளை முன்வைக்கும் கேள்வியென உணர்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் இலக்கிய வாழ்க்கையிலிருந்து நான் வேறுபடுத்தி தனியே மதிப்பீட்டுப் பார்த்தது கிடையாது. ஏனெனில், எனது காற்சட்டை இலக்கியத்தில் எனது பெற்றோர் மற்றும் சகோதரிகள் எவ்வகையான ஆழமான உறவை பேணி இலக்கிய செயற்பாடுகளுக்கு உத்வேகம் தந்தார்களோ, அவ்வாறான ஒரு ஆழமான உறவை எனது மனைவி பிள்ளைகளும் இன்றைய எனது எழுத்துச் சூழலுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள். மிகச் சுருக்கமாக சொல்வதெனில் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இலக்கிய வாழ்க்கைக்குமான தொடர்பு என்பது ஒரு காதலனுக்கும் காதலிக்குமான புரிதலைப் போன்றது.
02.கேள்வி: உங்களுடைய ‘நான் உமர் கய்யாமின் வாசகன்’ கவிதை தொகுதி அரச சாகித்திய விருதை வென்றிருக்கின்றது. ஏனைய கவிதை வடிவங்களை விட படிமங்கள் நிறைந்த கவிதை முறைமை வித்தியாசமானதாகும். இந்த வகை கவிதை முறைமையை நீங்கள் தேர்த்தெடுத்தது பற்றி சொல்லுங்கள்?
ஏ.நஸ்புள்ளாஹ்:
பொதுவாக விருதுகளைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் தோற்றம் இருப்பதாக பிரதியாளர்களுக்குள் ஒரு குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. இந்தக் குற்றச் சாட்டு நமது இலக்கியச் சூழலையும் மையப்படுத்தாமலில்லை. எனினும், எனது ‘நான் உமர் கய்யாமின் வாசகன்’ தொகுப்பை பொறுத்தமட்டில் நீங்கள் அடையாளப்படுத்தியது போன்று கவிதைச் சூழலுக்கு ஒரு புதிய வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. தனிமனித வாழ்வியல் முறைமையிலும் சரி, இலக்கிய தளத்திலும் சரி புதியவைகளை அதிகம் வரவேற்கப்படுவதும் கொண்டாடப்படுவதும் நடைமுறையில் உள்ள விடயம்தானே. நான் எனது காற்சட்டை இலக்கியத்திலிருந்து மூன்று தசாப்தத்திற்கு மேற்பட்ட சமகால சூழல் வரைக்கும் புதிய படிம முறைகளை எனது பிரதிகளில் கொண்டு வந்து வாசகனை கிளர்ச்சிப்படுத்த தவறுவதில்லை என்பது எனது கவிதைப் பிரதிகளுடன் தொடர்ச்சியாக பயணிக்கின்ற வாசகன் புரிந்து கொள்வான். எனினும், எனது அண்மைய கவிதைப் போக்குகள் பின் நவீன வடிவமாக அல்லது நவீனம் கடந்த வடிவ அணுகல் முறையை ஒத்தாக அமைந்து விட்டதை எனது கவிதைப் பிரதிகளை வாசிக்கும் வாசகன் தானாகவே புரிந்து கொள்வான். இந்தப் படிம முறை ஏலவே இலக்கிய தளத்தில் கையாளபபட்ட போதும் ஈழத்து இலக்கிய சூழலக்கு கொண்டு வந்தவர் தோழர்கள் றியாஸ் குரானா, மிஹாத்,மஜீது ஆகியோர்தான். இதிலும் குறிப்பாக றியாஸ் குரானாவின் முன்னெடுப்புகள் மிக அதிகமானவை.
03. கேள்வி: ‘ஒரு படைப்பாளிக்கு வழங்கப்படும் விருது அவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக அமைந்து விடும்’ என்ற குற்றச்சாட்டு காலங்காலமாக முன்வைக்கப்படுகின்றது. நீங்களும் ஒரு தேசிய விருதை பெற்றவர் என்ற வகையில் இக்கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
ஏ.நஸ்புள்ளாஹ்:
இது ஒரு தவறான முன்வைப்பு. ஒரு படைப்பாளிக்கு வழங்கப்படும் விருது அவனது இன்னுமொரு வளர்ச்சிக்கு தடையாக இருக்கப் போவதில்லை. குறிப்பாக திரைத்துரையில் பல்வேறு வகையான விருதுகளை பலர் பெற்றுள்ளனர். குறிப்பாக, இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இப்போதும் மிகச் சிறந்த திரை இசைப் பாடல்களை தந்து கொண்டிருக்கின்றார். முதல் முறையாக இரு நோபல் பரிசு பெற்றவர் மேரி கியூரியே. இவர் இரண்டாவதாக 1911 இல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். விருது ஒருவரது வளர்ச்சிக்கு தடையெனில் எப்படி ஒருவர் இரு முறை அல்லது அதற்கு மேல் விருதுகளைப் பெற முடியுமென ஒரு உரையாடலுக்கான அழைப்பை நான் முன் வைக்கிறேன்.
04. கேள்வி: நீங்கள் அதிகமான கவிதை தொகுதியை வெளியிட்டுள்ளீர்கள். உங்களுடைய ஒட்டுமொத்த கவிதை தொகுதியையும் ஒருமித்து நோக்குகின்ற போது ஒவ்வொரு தொகுதியிலுள்ள கவிதை முறைமையும் வித்தியாசமானதாக உள்ளது. அப்படி பார்க்கின்ற போது நீங்கள் வாசகர் மீது காலத்துக்கு காலம் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ, திணிப்பதாகவோ அமைந்து விடாதா?
ஏ.நஸ்புள்ளாஹ்:
ஆம். இதுவரை துளியூண்டு புன்னகைத்து முதல் யானைக்கு நிழலை வரையவில்லை தொகுப்பு உட்பட 20 தொகுப்புகள் வெளி வந்துள்ளன. இதில் ‘காவி நரகம்’ மாத்திரம் சிறுகதைத் தொகுப்பு. மற்றையவை கவிதைகள். இலக்கியத்தைப் பொறுத்தவரை வாசிப்பு முக்கிய இடத்தைப் பெருகின்றது. ஒரு பிரதியை இன்று வாசிக்கின்ற நல்ல வாசகன் நாளை வாசிக்கின்ற போது இன்று வாசித்த படிம முறைப் பிரதியை ஒருபோதும் வாசிக்க விரும்ப மாட்டான். அவனது தேடல் அதுவாகவும் இருக்க முடியாது. இன்னுமொரு விடயம் தமிழ் எழுத்துச் சூழல் என்பது விரிந்த பெரும் பரப்பு. இப்படியான விரிந்த பரப்பிற்குள் இயங்கும் வாசகன் திருப்திகரமான வாசிப்பு அனுபவத்தை பெற வேண்டும். மாறாக அவனது வாசிப்பு கோட்பாடு சிதைந்துவிடக்கூடாது. ஆகவேதான் வாசகனது வெளி அற்புதங்களால் பல்வேறு பன்மையான நிலத் தோற்றங்களை காட்சிப்படுத்த வேண்டுமென நான் யோசிக்கின்றேன். அந்த யோசிப்பின் பிரதியாக தொகுப்புக்கு தொகுப்பு வித்தியாசங்களையும் காலத்திற்கு காலம் படிம முறைமைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தி கவிதைச் செயலை வெவ்வேறு உணர்வுகளுடன் வாசகனுக்கு தர முயற்சிக்கின்றேன். இன்னும் எனது பிரதிகளுடன் தொடர்ந்து பயணிக்கும் வாசகன் இந்த படிம முறைமையை ஒரு போதும் அழுத்தமாக பார்க்க மாட்டான்.
05. கேள்வி: உங்களுடைய ‘காவி நரகம்’ சிறுகதைத் தொகுதியின் உருவாக்கம் பற்றி சொல்லுங்கள்?
ஏ.நஸ்புள்ளாஹ்:
ஈழத்துப் போரின் இறுதி நிலைக்கு முன்னும் பின்னும் அதன் விளைவு, அழிவு, முகாம் வாழ்வு என சகோதர சமூகம் துண்டாடப்பட்ட சூழலை அதனதன் வலியோடும், காயத்தோடும் பல கதைகளை ‘காவி நரகம்’ சிறுகதைத் தொகுப்பு உள்ளடக்கியிருக்கும். மேலும், பெரும்பாலான கதைகள் சர்வதேச சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்ற கதைகள். ஓரிரு கதைகள் முஸ்லிம் தேசிய அரசியலை பேசுபவையாகும்.
06. கேள்வி: இச்சிறுகதைத் தொகுதியின் பின்னர் நீங்கள் எந்தவொரு சிறுகதை தொகுப்பையும் கொண்டு வரவில்லையே. அதற்கு ஏதாவது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய காரணங்கள் உண்டா?
ஏ.நஸ்புள்ளாஹ்:
கவிதைகள் குறித்து நிறையவே எழுதவும் உரையாட வேண்டிய சூழலும் இருப்பதாக உணர்ந்ததன் ஒரு பகுதியே காவி நரகம் சிறுகதைத் தொகுப்பிற்கு பிறகு கதைகள் எழுதாமைக்கு காரணம். வேறு காரணங்கள் என்று ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
07. கேள்வி: கவிதை, சிறுகதைகளுக்கப்பால் நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியுள்ளதை உங்களுடைய அண்மைக்கால பதிவுகள் சொல்லுகின்றன. அது பற்றி கூற முடியுமா?
ஏ.நஸ்புள்ளாஹ்:
இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் கருத்து நிலைகள் முக்கிய பங்கு வகின்றன. கவிதையூடாக வாசகனுக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கின்ற விடயத்தை அதன் அகம், புறம் தோற்றத்தை கதைகளினூடாக விரிவாக சொல்ல முடியும் இவ்வாறே கதையூடாக சொல்ல முயற்சிக்கின்ற ஒரு விடயத்தை நாவலூடாக இன்னும் கொஞ்சம் விரிவாக வாசகனிடம் கொண்டு சேர்க்க முடியும். ஒரு பிரதியாளனிடம் சொல்லபடாத கருத்து நிலைகள் நிறையவே குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு பிரதியாளனும் முற்றிலும் வேறுபட்ட சம்பவங்களையும் கருத்து நிலைகளையும் அவனது சூழலுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்கின்றான். இது பிரதியாளனுக்கு மாத்திரமான ஒரு கருத்து நிலையல்ல தனி மனித வாழ்வியலிலும் காணப்படுகின்ற ஒரு குணம்சமாகும். கவிதையில் சொல்லப்படாத அல்லது சொல்ல முடியாத பல விடயங்களை அதன் அரசியல் தோற்றத்தை நாவலூடாக சொல்ல முடியும். குறிப்பாக நான் நாவலூடாக சொல்ல முயற்சிக்கின்ற கருத்தியல் என்பது கிண்ணியாவின் வீரத்திற்கும் அதன் வரலாற்று தன்மைக்கும் அவதானிப்பு பெறுகின்ற, இதுவரை எமது சூழல் சார்ந்த பிரதியாளர்களால் சொல்லப்படாத கதையாடலாக இருக்கும்.
08. கேள்வி: இலங்கைச் சூழலில் முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்பை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஏ.நஸ்புள்ளாஹ் :
இந்த கேள்வியை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கின்றேன் குறிப்பாக அறிஞர் ம.மு. உவைஸ், மு.கா. சித்திலெப்பை, அண்ணல் சாலிஹ், பேராசிரியர் நுஃமான் தொடங்கி இன்றைய றியாஸ் குரானா வரை ஈழத்தின் தமிழ் இலக்கியச் சூழலுக்கு மிக முக்கிய வகிபாகத்தை செய்யத் தவறவில்லை. இன்னும் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் தமிழ் இலக்கிய சூழலுக்கு மாத்திரமல்ல, சிங்கள இலக்கியச் சூழலுக்கும், அவ்வாறே ஆங்கில இலக்கிய சூழலுக்கும் முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் போதுமானதாக இருந்து வருக்கின்றது. 80 க்குப் பின்னர் ஈழத்து இலக்கியச் சூழலில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்ட போதும் சரி, முப்பது ஆண்டு கால ஈழப் போராட்ட காலங்களிலும் சரி ஈழத்து இலக்கியச் செயற்பாடுகளில் முஸ்லிம் பிரதியாளர்கள் செய்த பங்களிப்புகள் மறுத்துப் பேச முடியாத உண்மை.
09. கேள்வி: முஸ்லிம் சமூகம் இலக்கியத்துக்கு செய்த பங்களிப்புகள் போதுமானதாக உள்ளன என்று சொல்கிறீர்கள். ஆனால், நேரடியாக சொல்வதாயின் ஒரு சிலரை தவிர ஆளுமை மிக்க பல முஸ்லிம் பெண் படைப்பாளிகள் பலர் இன்றும் நான்கு சுவற்றுக்குள் முடங்கிக் கிடங்கும் நிலைதானே காணப்படுகின்றது?
ஏ.நஸ்புள்ளாஹ்:
இலக்கியப் புலத்தில் பாலின வேறுபாடு அல்லது ஆண், பெண் என இலக்கியப் பிரதிகளை பிரித்துப் பார்ப்பதில் முதலில் எனக்கு உடன்பாடு இல்லை. எனினும், 80 களுக்குப் பினனர்; ஈழத்தில் பெண்ணிலை வாதம் பேசியவர்களில் மிக முக்கியமானவர்கள் அஷ்ரபா நூர்தீன், கலை மகள் ஹிதாயா, சுல்பிகா எனத் தொடர்கின்றது. சில நேரங்களில் பெண்கள் பல வகையில் அடக்கு முறைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளதை மறுக்க முடியாது. குறிப்பாக குடும்பம், சமூகம், தனி மனிதன், அரசு, சூழல் போன்ற பல வகை அரசியல் தோற்றத்தை எதிர் கொள்ள வேண்டிய சூழல் உண்மையானதுதான். எனினும், அனார், பஹீமா ஜஹான், கெகிராவ சஹானா, கெகிராவ சுலைஹா, ஜரீனா முஸ்தபா, மாத்தளை பர்வீன் போன்றவர்கள் இவ்வாறான அரசியலை பெரிதாக எதிர் கொள்ளவில்லை என நினைக்கிறேன். இருந்த போதும் பொதுவாகவே குடும்பம் என்கின்ற அடையாளத்தைப் பெற்று விட்டால் ஆண், பெண் இருவருக்குமாக சூழலின் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், சம காலத்தில் நீங்கள் குறிப்பிடுவது போன்றல்லாது இளைய தலைமுறை பெண் பிரதியாளர்கள் மிக சுதந்திரமாக இலக்கியப் புலத்தில் இயங்கி வருவதை காண முடிகிறது.
10. கேள்வி: உங்களுடைய எழுத்துக்களுக்கு முன்மாதிரியாக யாரை பார்க்கிறீர்கள்? முட்டுக்கட்டையாக யாரை பார்க்கிறீர்கள்?
ஏ.நஸ்புள்ளாஹ்:
எனது எழுத்துக்களுக்கு முன்மாதிரியாக நல்ல புத்தகங்களைப் பார்க்கிறேன். காற்சட்டை இலக்கிய காலத்தில் கிண்ணியா பொது நூலகம் செல்லும் பழக்கம் எனக்கு இருந்ததுண்டு. அங்கு சிறுவர் புத்தகங்கள் உட்பட பல கவிதை, கதை, நாவல்கள் மற்றும் ஹிட்லரின் ‘எனது போராட்டம்’ இன்னும் பத்தி எழுத்துக்கள், பிறமொழிகளான சிங்களம், ஜப்பான், உஸ்பெகிஸ்தான், சீனா, பிரஞ்சு மொழிகளிலும் வெளி வந்து மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்ளை வாசித்திருகிறேன். இதைப் போன்று உலக இலக்கிய மேதைகளான டால்ஸ்டாய், ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி, அல்லாமா இக்பால், அ.மாக்ஸ், ஷெய்க் அப்துல் ஹமீத் பிலாலி, செகால் கராக்கி, ஜோலா போன்றோரின் முக்கியமான புத்தகங்களையும் வாசித்த அனுபவம் நிறையவே உள்ளது. இதனையும் எனது எழுத்துகளுக்கு முன்மாதிரி எனச் சொல்ல முடியும். முட்டுக்கட்டை எனப் பார்க்கும் போது சில தருணங்களில் பொருளாதாரத்தை குறிப்பிட முடியும்.
11. கேள்வி: இலங்கைச் சூழலில் நீங்கள் கூட பலரைப் போன்று ‘சிறகுகள்’ கலை, இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டீர்கள். ஒரு சில இதழின் பின்னர் அதன் வருகை நின்று விட்டது. இலக்கியச் சஞ்சிகை மூலமாக ஒரு எழுத்து மாற்றத்தை ஏன் உங்களால் ஏற்படுத்த முடியாமல் போய் விட்டது?
ஏ.நஸ்புள்ளாஹ்:
அப்போதைய சூழலில் ‘சிறகுகள்’ சஞ்சிகையை வாசகனிடம் கொண்டு சேர்க்கின்ற பணி எனக்கு சற்று கடினமாக இருந்ததாக நினைக்கிறேன். அதுவே சிறகுகளின் தொடர்ச்சியான வருகை இல்லாமல் போனதற்கு காரணம். எதிர் காலத்தில் எதிர்ப் பிரதிகள் என்கின்ற எனது இலக்கிய செயற்பாட்டு நிறுவனத்தின் பெயரில் ஒரு மின் நூல் ஒன்றைக் கொண்டு வரும் யோசனை இருக்கிறது
12. கேள்வி: ஓரிரு இடங்களை றியாஸ் குரானாவை மேற்கோள் காட்டி கருத்தாடல்கள் செய்வதை அவதானிக்க முடிகிறது. உங்களுக்கும் றியாஸ் குரானாவின் எழுத்துக்குமிடையிலான நெருக்கம் பற்றி கூறுங்கள்?
ஏ.நஸ்புள்ளாஹ்:
ஈழத்து இலக்கியத்தில் றியாஸ் குரானாவை கடந்து இலக்கியம் பேசமுடியாது. நவீனம், பின்நவீனத்துவம், நவீனம் கடந்த பன்முகப் பார்வையை ஈழத்து இலக்கியத்துக்குள் முதன்மைப்படுத்தியவர், முதன்மைப்படுத்திக் கொண்டிருப்பவர் றியாஸ் குரானா. இவருடன் தொடர்பவர்கள் என எம்.ஐ.எம். றஊப், மஜீத், மிஹாத், எம்.எம்.நௌஸாத், எஸ்.நசூர்தீன், ஓட்டமாவடி அரபாத் போன்றவர்களை சொல்ல முடியும். நீண்ட காலமாக ஈழத்து இலக்கியத்திருந்த தொய்வு நிலையை றியாஸ் குரானா தனது பிரதிகளாலும், உரையாடல்களாலும், எழுத்துச் சூழலை வளர்த்துக் கொண்டிருப்பதோடு, சக பிரதியாளர்களுக்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறார். அண்மைய ஈழத்து இலக்கியத் தளத்தின் முக்கிய முன்னோடியாக இந்த விரிந்த பரப்பிற்குள் கிண்ணியா சபறுள்ளா,வீ.ம். ரைதீன், இமாம் அத்னான், நஸார் இஜாஸ், அகமது ஃபைசல், ஜம்ஸித் ஸமான்,ஜமீல்,டீன் கபூர், முஜாமலா,ஹிம்ஸானா, ஜே.பிரோஸ்கான்,முஜாரத் பலர் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
