பற்றுமின்கள், பற்றுமின்கள் – 1

 

சித்தம் என்ற சொல்லுக்கு அகராதி – உண்மை, உப்பு, உள்ளம், துறவு, முடிப்பு, முருங்கை, மனம், திண்ணம், மூலப் பகுதி, தகுதியானது – ஆகிய அர்த்தங்களைத் தருகிறது. சித்தம் என்பதுதான் எத்தனை அழகான சொல். சித்தமாக இரு என்கிறோம். தயாராக இரு என்பது மட்டுமல்ல, அதே எண்ணமாக இரு, மறந்துவிடாதே என்பதையும் இது குறிக்கிறதல்லவா. சித்தம் என்ற சொல்லுக்கு மனம் அத்தனை பொருத்தமானதாக இல்லை. மனம் என்பது சந்தைக்கடை போல. சித்தம் அப்படியல்ல. அது ஒரு விழிப்புநிலையை, தயார்நிலையைச் சுட்டி நிற்கிறது.

யோகி ராம்சுரத்குமார் பக்தர் ஒருவரைச் சந்தித்தேன். பல ஊர்களுக்கு நாடுகளுக்குச் சென்று யோகியைப் பற்றி சொற்பொழிவாற்றுவதாகச் சொன்னார். யோகி தான் தனது செய்தியென்றோ, அறிவுரை என்றோ எதுவும் சொல்லவில்லையே, பின்னே எதை வைத்து மணிக்கணக்கில் பேசுகிறீர்கள் என்று கேட்டேன். உண்மையில் அவர் யோகியை பல முறை சந்தித்திருந்தும் அவரிடம் சாதாரண உலகியல் விசயங்களைத் தவிர வேறு எதுவும் பேசியதுமில்லை. ஒருமுறை யோகியே என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டும் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

உண்மையில் இது இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உலகுக்கு எந்தச் செய்தியையும் சொல்லாமல் அவர் போயிருந்தாலும் பலரும் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஞானிகள் உலகத்தாருடன் உரையாடியோ உரையாடாமலோ வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். இருந்ததே தெரியாமல் நிறையபேர் மறைந்திருக்கலாம். சென்ற நூற்றாண்டில் நமக்கு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி கிடைத்ததுபோல இந்தப் பின்நவீன உலகுக்கு ஒருவர் நான் வாழும் காலத்துக்குள் வருகிறாரா என்று பார்க்க வேண்டும்.

சித்தர் பாடல்களில் சிவ வாக்கியரின் பாடல்களுக்கென்று தனி அழகுண்டு. கேட்பதற்கு அத்தனை இனிமையானவை. இவரது காலம் 9-10 ஆம் நூற்றாண்டு. திருமழிசை ஆழ்வாரும் இதே காலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சிவவாக்கியர் பாடல்களில் வைணவப் பாடல்கள் சில கலந்திருப்பதாலும், இருவரது பாடல் நடையும் ஒன்றுபோல் இருப்பதாலும் இருவரும் ஒருவரே என்றும், இல்லையில்லை இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சைவராக மாறியவர் என்றும், அதெல்லாமில்லை, முதலில் சைவராக இருந்து பிறகு வீர வைணவரானார் என்றும் கதைகள் உண்டு. எனக்கென்னவோ இவர் பாடல்களில் இருப்பவை இடைச்செருகல் என்றுதான் தோன்றுகின்றது. வைணவம் குறித்து வரும் பாடல்களில் மற்ற பாடல்களில் இருக்கும் இலயம் இல்லை. இன்னொன்று சிவ வாக்கியரின் மெய்யுணர்வும், வாசி யோகம், யோகச் சக்கரங்கள் குறித்த பாடல்கள், சடங்குகளுக்கு எதிரான அவரது கலகக்குரல் ஒலிக்கும் பாடல்களை வாசிக்கையில் நிச்சயம் அவர் சைவராக இருந்து வைணவராக மாறியிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. இருக்கிற வைணவப் பாடல்களும் இடைச்செருகலாகவே தோன்றுவதால் சிவ வாக்கிய சித்தர் திருமழிசை ஆழ்வாராக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.

யூடியூபில் வீரமணி கண்ணன் என்பவர் குரலில் (https://www.youtube.com/watch?v=UVyz2PDck2g&t=894s) சிவவாக்கியர் பாடல்கள் கேட்கக் கிடைக்கிறது. பல முறை இந்தப் பாடல்களைக் கேட்டதுண்டு. தமிழ் கூழாங்கல்லைப் போல உருண்டுருண்டு வந்து விழுகிறது இவரது வரிகளில்.

சிவவாக்கியர் பாடல்களில் நமக்குப் படிக்கக் கிடைப்பவை 526. பெரிய ஞானக்கோவையில் உள்ள இந்த 526 பாடல்கள் தவிர்த்து நாடி சாத்திரம், சித்த மருத்துவம் குறித்து மேலும் பல நூற்பாக்களை இயற்றியுள்ளார். சிவவாக்கியர் பாடல் வரிகள் எளிமையானவை என்றாலும் வாசி யோகம், அட்சரங்கள் குறித்து வரும்போது திருமூலர் பாடல்களைப் போலவே மலைப்பை ஏற்படுத்தக் கூடியவை. இந்தக் கட்டுரைத் தொடருக்கு யோகம் தொடர்பான சிக்கலான விசயங்களுக்குள் நுழையவில்லை. அவற்றை விடுத்து ஏனையவற்றில் எனக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து விவரிக்க இருக்கிறேன்.

சிவவாக்கியர் பாடல்கள் முதலில் 1927ல் பெரிய ஞானக்கோவையின் ஒரு பகுதியாக பொழிப்புரை இன்றி வெளியானது. 1953ல் மா. வடிவேலு முதலியார் பொழிப்புரையுடன், இரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் வெளியீட்டில் வந்தது. இந்தப் பொழிப்புரை வாசிப்பவருக்கு எந்தவிதத்திலும் பயன்படக்கூடியதாகத் தெரியவில்லை. சாருக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல் வகையறா. போக, வேண்டுமென்றே நிறைய பாடல்களில் வடமொழி எழுத்துக்களை இட்டு நிரப்பியிருப்பதுடன் பொழிப்புரையிலும் வடமொழிச் சொற்களை அள்ளித் தட்டியிருக்கிறார்.

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவத்தினால்

விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே

நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்லுடல்

சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே

 

இந்தப் பாடலில் சித்தர்களுக்கே உரிய உலக மாந்தர்கள் மாயைக்கு அடங்கி உலவுதல் கண்டு கைகொட்டிச் சிரிப்பதைப் பார்க்கிறோம். உனக்குரிய பெண்ணை இன்னொருவன் தொட்டால் வெட்டணும் என்று கிளம்புகிறாயே, செத்து நாறும்போது தோட்டியிடம் நீயாகத்தானே போய் கொடுக்கிறாய் என்று கேட்கிறார். இலை அசையும்போது இலையைப் பார்க்கிறோமா, காற்றின் அசைவையா? பெண்மேல் விருப்பம் கொள்ளுதல் என்பது வெறும் உடலியல் சார்ந்ததா? உயிரோடு இருக்கையில் அந்த உடலில் உருவாகிப் பளீரிடும் மினுக்கம் அல்லவா பாலுணர்வைத் தூண்டுகிறது? (மனநிலை பிறழ்ந்த விதி விலக்குகளை விட்டுவிடுவோம்). இப் புவியிலிருந்து எழுந்து பறக்க முடியாதபடி இகவுலகச் சிக்கல்களில் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மாயா சக்தி.

என்னிலே இருந்தவொன்றை யான் அறிந்ததில்லையே

என்னிலே இருந்தவொன்றை யான் அறிந்துகொண்டபின்

என்னிலே இருந்தவொன்றை யாவர் காணவல்லரோ

என்னிலே இருந்திருந்து யானுணர்ந்து கொண்டெனே

 

சமூகத்தில், சமூக ஊடகங்களில் ஒவ்வொருவரும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். அவர்கள் என்னதான் ஞான வேசம் போட்டாலும் அதன் அடியில் உறைந்திருப்பது தான் தான் என்றுதான் துடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு குயிலின் ஏக்கமான இசையைப் போல எத்தனை ஏகாந்தத்துடன் இந்தப் பாடல் ஒலிக்கிறது. எனக்குள் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அப்படி அறிந்துகொண்டபின் அது அத்தனை அற்புத அனுபவமாய் இருக்கிறது. எனக்குள் இருப்பதை உனக்கு எப்படிக் காட்டுவேன்? நீதான் பார்க்க மாட்டயா? அதை எப்படிக் கண்டறிந்தேன் என்றால், ’என்’னிலே இருந்து இருந்து உணர்ந்து கொண்டேன்.

இந்தப் பாடல்தான் எத்தனை அழகு பாருங்கள். திரும்பத் திரும்ப என்னிலே இருந்த என்று தொடரும் நான்கு வரிகள். வரிக்கு நான்கு சீர்கள். எட்டு சீர்களில் என்னிலே இருந்த என்ற சொற்களே இடம்பிடித்துக் கொண்டாலும் எத்தனை ஆழமான அர்த்தத்தைத் தருகிறது. வள்ளுவரின் இந்தக் குறள் சட்டென்று நினைவுக்கு வருகிறது,

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

மொத்தம் ஏழே சீர்கள். அதில் நான்கு இடும்பை என்று தொடங்கும் சொற்கள். கவிஞர் விக்ரமாதித்யன் கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது,

பக்கத்துப் படுக்கை

காலியாகக் கிடந்தது

என்ன செய்தோம்

பக்கத்துப் படுக்கை

காலியாகக் கிடக்கிறது

என்ன செய்வோம்

பக்கத்துப் படுக்கை

காலியாகவே கிடக்கும்

என்ன செய்ய

என்ன பாடு படுத்துகிறது

இந்தப் பக்கத்துப் படுக்கை

இந்தக் கவிதையில் கடைசி இரண்டு வரிகள்கூடத் தேவையில்லை. படுக்கை படுத்தும் பாட்டை வாசிப்பவர்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆனாலும் விக்கி இயங்கும் தளம் உலகியலோடு தொடர்புடையது. இதை இங்கு குறிப்பிடக் காரணம் தமிழ்க் கவிதை மரபின் நீட்சியைச் சுட்டிக் காட்டவே.

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை

நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ

அனைத்துமாய் அகண்டமாய் அநாதிமுன் அனாதியாய்

எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்குமாற தெங்கனே

மனம் ஒருகணத்தில் ஒரு புள்ளியில்தான் நிற்கிறது. நினைவுகள் வனம்போல நிறைந்து பெருக, மரத்துக்கு மரம் தாவியபடியே இருக்கிறது மனம். நினைவுகள் அத்தனையையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடிவதில்லை. பார்த்தாலும் அவற்றில் பல உருத்தெரியாமல் நைந்துபோனவை. எதைத் தொட எதை விட என்று தெரியாமல் தவிப்போடு சுற்றிச் சுற்றி வருகிறது மனம். இதில் வனாந்தரம் விரிந்துகொண்டே வேறு செல்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் சட்டென்று பிடி கிட்டுகிறது. அதற்குள் நழுவி அடுத்த மரக் கிளைக்குத் தாவ வேண்டியதாகி விடுகிறது. நினைப்பும் மறப்பும். நினப்பெல்லாம் நீயாகவே ஆகக் கூடாதா? ஆனால் இங்கே உலக வாழ்வில் சேர்த்த குப்பைகள் அநாதி. அகண்டுவிரிந்து அனைத்துமாய் ஒன்றாய் அநாதிக்கு முன்னிருந்த நிலைக்கு நீ என்னை இட்டுச் செல்ல மாட்டாயா? எனக்குள் நீ, உனக்குள் நான். அப்போது இங்கு நினைப்பதற்கு வேறு ஒன்றுமிருப்பதில்லை.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *