பற்றுமின்கள், பற்றுமின்கள் – 3

பிளவுபடாமல் முழு பிரக்ஞை நிலையோடு இருப்பதே சாதிக்க வேண்டிய ஒன்றாக மெய்யியலாளர்கள் கூறுகிறார்கள். எல்லா உயிர்களின் பரிணாம வளர்ச்சிகூட இதில்தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒரு அடைபட்ட வாசலை திரும்பத் திரும்ப முட்டிக் கொண்டே இருப்பது போல. உதாரணமாக, ஒரு கோழியைப் பாருங்கள். அது அந்தக் கணத்தின் முழுமையோடு இருக்கிறது. நம்மைப் பார்க்கையில் அதன் முழுத் தீவிரத்துடன் புரிந்துகொள்ள முயற்சிப்பதைப் போலத் தோன்றுகிறது. அதை உற்று நோக்கும் தோறும் ஒரு கோழி கோழியாக இருப்பதிலிருந்து விடுபட்டு விடும் என்றோ, அதற்கான தடையைக் கடந்துவிடுமென்றோ தோன்றுகிறது. அதனளவில் அதற்கு விதிக்கப்பட்ட வரம்பின் விளிம்பில் அது எப்போதும் இருப்பதாகப் படுகிறது. ஆனால் ஆட்டுக்குட்டிகளின் கதை வேறு. அவை முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுவதில்லை. அவற்றின் கண்கள் உணர்ச்சியற்று இருக்கின்றன. ஒரு ஆட்டுக்குட்டியின் தலைக்குள் மௌனமாய்ப் பலர் உரையாடுவது போலொரு உணர்வு தோன்றுகிறது. 

மனிதர்களுக்கு இத்தகைய முழுமை விதிக்கப்படவில்லை. விலங்குகளுக்கு அவற்றுக்குத் தேவையான அறிவு எல்லாமே அதன் மரபணுவில் உள்ளது. அது வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. அது செய்ய வேண்டியதெல்லாம் இந்த மரபணுவில் புதிய செய்திகளைப் பதித்து வைத்துக் கொண்டு தன் சந்ததிகளுக்குக் கடத்துவதற்கான முயற்சி மட்டுமே. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும் செயல்முறை. மனிதர்கள் தங்கள் அறிவைத் தேடிப் பெற வேண்டியிருக்கிறது. எப்படி வாழ்வது, எது சரி, எவை சட்டங்கள் என எல்லாமே புறவயமாக உள்ளன. 

உயிரியலைப் பொறுத்தவரை XY, XX என்ற பண்பணுக்கள் வேறுபாட்டைத் தவிர  ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தனது சீடையாகப் பெண்ணை ஏற்க புத்தர் தயங்கினார். மற்ற சீடர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதினாரா? இல்லை பெண்ணுக்கு ஞானமடையும் வாய்ப்பில் அவருக்குச் சந்தேகம் இருந்ததா? உலோகாயத உலகில் ஒருவகையில் பெண் ஆசையின் உறைவிடமாக இருக்கிறாள். சொல்லப்போனால் இந்த உலகில் எதையும் அனுபவிக்கத் தகுதியுள்ளவர்கள் பெண்கள் மட்டும்தான். ஒரு குடும்பத்தில் பெண்ணின் தூண்டுதல் இல்லாவிட்டால் ஆண் சோம்பேறியாகி விடுவான். அதை அவன் ‘பிக்கல் பிடுங்கல்’ என்பான். பெண் ஆசையின் ஊற்றாக இருக்கிறாள். பெண்ணுக்கு ஆண் ஒரு காட்டாற்றுக்குக் கரையைப் போல. மீள மீள தன்னை அழகு பார்த்துக் கொள்ளும் இப்பூமியைப் போல ஒரு பெண் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறாள். அவளுக்குள் பல்கிப் பரவும் ஆற்றல் வியாபித்துக் கிடக்கிறது. ஒருவகையில் ஆன்மீகத்துக்கும் பெண்ணுக்கும் உள்ள தூரம் அதிகம் என்பதினால்தான் புத்தருக்கு இந்தத் தயக்கமா?

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா

இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்குதோ

பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுந்துபாரு மும்முளே

சிவவாக்கியரும் ஆணிடம்தான் பேசுகிறார். ஆனால் மதங்களும், சடங்குகளும் ஆண்களால் தானே ஏற்படுத்தப்படுகின்றன? எந்த மனிதரும் ஒருவரைப் போல் இன்னொருவர் இல்லை தான். புத்தியில், உடல் வலுவில், தோல் நிறத்தில் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. இவை எதுவும் ஒருவரை மனிதன் என்ற நிலையிலிருந்து விலக்குவதில்லை. உயிர் என்ற அளவில் நாம் அனைவரும் ஒன்றே. மற்ற பாகுபாடுகள், பிரிவினைகள் அனைத்தும் சுரண்டலுக்கென்றே ஏற்படுத்தப்பட்டவை. 

வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்

வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ

வாயிலெச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள்

வாயிலெடச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே

உடல் குறித்த பிரக்ஞை இல்லாமல் இருப்பது ஆரோக்கியமாக இருப்பதன் ஓர் அறிகுறி. ஏதாவது ஒரு பகுதி புத்தியில் தட்டிக் கொண்டிருந்தால் அங்கு ஏதோ பிரச்சினை என்று அர்த்தம். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது; ஆரோக்கியமாக உணர்வது என்று இருநிலைகள் உள்ளன. ஆரோக்கியமாக உணர்வதுதான் முக்கியம். அதேபோல சுத்தமாக இருப்பது, உணர்வது என்றும் இருநிலைகள் உண்டு. இந்த சுத்தம் என்பதே ஒரு பாசாங்குதான். ஓர் அளவுக்கு மேல் போனால் அது நோய்க்கூறாக மாறக்கூடும். எனவே இங்கும் சுத்தமாக உணர்வதே சிறந்தது. கோயிலுக்குள் செல்லும்போதும் அதே மலக்குடலையும், மூத்திரப்பையையும், சளியையும் வைத்துக் கொண்டுதான் போகிறோம். கோவிலுக்குள் நிற்பதால் இந்த நாற்றங்கள் இல்லாமல் போய்விடுகிறதா என்ன? கடவுளை நெஞ்சுக்குள் வைத்துக் கொண்டால் இப்படிப் பிரச்சினை எதுவும் கிடையாது. அப்போது நெஞ்சம் எத்தனை விசாலமாகத் திறந்துகொள்கிறது.

மேலேயுள்ள பாடலில் தண்ணீர் வாயில் இருந்தால் அதை எச்சில் என்கிறாய்; எச்சிலைப் போக்கவும் அதே தண்ணீரைத்தான் உபயோகிக்கிறாய். இரண்டும் உன் வாயில்தானே இருக்கிறது என்று கேட்கிறார். உலகமே எச்சில் தான். ஒரு எச்சிலாய் விழுந்ததே சூரியக் குடும்பம். சூரியனின் எச்சில் இப்பூமி. பூமியின், ஏனைய நாற்பூதங்களின் எச்சில் தான் உயிர்கள். உடலே ஒரு எச்சிலில் பிறப்பதுதான். சப்தமும் எச்சில். சொல் என்பது அறிவின் எச்சில். சுத்தம் என்பது வெறும் ஏமாற்று. பௌதீகமான சுத்தம் என்று ஏதுமில்லை.

ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந்திரங்க ளெச்சில்

போதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்

மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொலியுமெச்சில்

ஏதிலெச்சி லில்லதில்லை யில்லையில்லை யில்லையே 

அன்று முதல் இன்றுவரை ஏன் புத்தர்கூட பிறப்பால் ஒருவர் பிராமணர் ஆவதில்லை. அதற்கான குணத்தினாலேயே அது வரையறுக்கப்படுகிறது என்கிறார். அவை என்னென்ன குணங்கள் என்று மிக நீண்டதொரு பட்டியலிடுகிறார். இந்தச் சாதியில் பிறந்ததற்காக இவர்கள் அதன் எல்லா பலன்களையும் வைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் என்றால் இத்தனைத் தடைகளைத் தாண்டி வரவேண்டும். சரி, வரலாற்றில் அப்படி எத்தனைபேர் பிராமணர் ஆகியிருக்கிறார்கள்? இது ஒரு மிகப்பெரிய ஏமாற்று. ஏனென்றால் ஒருவர் இப்படிப்பட்டவர் என்பதை இன்னொருவர், இந்த உலகம் புரிந்துகொள்வதென்பது இந்த வாழ்நாளில் நடக்கும் விசயமல்ல. வேண்டுமானால் வேடம் போடலாம். வர்ணம் என்பதே சுரண்டல் தான். எப்போது பிற உயிர்களுடன் ஒருவரால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் தான் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு துளி என்று உணரவும் முடிகிறதோ அவர் மட்டுமே தூயாத்மா. மற்ற யாருக்கும் எந்தவொரு அருகதையும் இல்லை.

சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரலோ

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே

என்னடா சாதி? நீரில் இந்தத் துளிக்கும் அந்தத் துளிக்கும் வேற்றுமையுண்டோ? ஐம்பூதங்களின் சேர்க்கை தானே நீங்கள் அத்தனை பேரும்? உங்கள் ஒருவருக்கொருவர் அவை வேறுபாடு ஏதும் காட்டினவா? ஐந்து பூதங்களும் அடங்குவது ஒன்றில் தானே? நகைகள் வெவ்வெறாக இருந்தாலும் எல்லம் தங்கம் தானே? என்னடா இது இப்படிப் போய் ஓதிக்கொண்டு திரிகிறீர்களே என்று கேட்கிறார்.

ஒரு மனிதன் வாழும் வாழ்வைப் போல அப்படியே இன்னொருவருக்கு நடப்பதில்லை. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். இதோ இந்தத் தருணம் என்னைத் தவிர யாரும் வாழமுடியாது. இது எனக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நான் இருக்கவென்றே இந்த பூமி என்னைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கென்றே இந்தக் காற்று வீசுகிறது. எனக்கென்றே ஒரு மரணம் உள்ளது. ஆற்றில் இருமுறை கால்வைக்க முடியாது என்பது போல எதுவும் திரும்ப நிகழப் போவதில்லை. ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு. 

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா

துடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா

விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா

இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே

இந்தப் பாடல் எதையும் வலியுறுத்தவில்லை. யதார்த்தத்தை மட்டுமே சொல்கிறது. ஆனால் அதில் எத்தனை அர்த்தங்கள் தொக்கி நிற்கின்றன. கணியன் பூங்குன்றனாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. 

யாதும் ஊரே

யாவரும் சொந்தங்கள்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோயும் சுகமும் அவ்வாறே

சாவும் புதியசெய்தி அல்ல

வாழ்தல் 

இனிதென மகிழந்தோமில்லை

இடும்பென வெறுத்தோமில்லை

மின்னலோடு வானம் குளிர்மழை பொழிந்து

அருவியாய் பாறைகளில் மோதி 

ஆர்ப்பரிக்கும் வெள்ளத்திலோடும் படகு

இவ்வாழ்வென துறவோர் அருள உணர்ந்தோம்

எனவே

பெரியோரை மதித்தோமில்லை

சிறியோரை இகழ்ந்தோமில்லை

இந்தப் பிரபஞ்சமே சக்தியின் களிநடனம். அது மாபெரும் துடிப்பாய் உச்சகட்டங்களைப் போல, சொல்லுக்கும் அப்பாற்பட்ட துடிப்பு எங்கெனும் நிறைந்திருக்கிறது. ஆனால் பௌதீகமான ஒன்று சக்திக்குத் தேவை. அந்த முயக்கத்தில் மட்டுமே சக்தியை சடமும், சக்தி தன்னையும் உணர்கிறது. இருத்தல் இங்குதான் உறுதிப்படுகிறது. இந்த இடையறாத முயக்கம் லிங்கரூபம். இதில் தீட்டு எங்கிருந்து வந்தது? இப்படியிருந்தால் சிவனை எப்படி நீ உணர்வாய்?

தறையினில் கிடந்தபோ தன்றுதூமை என்கிறீர்

துறையறிந்து நீர்குளித்த வன்றுதூமை என்கிறீர்

பறையறைந்து நீர்பிறந்த வன்றுதூமை என்கிறீர்

புரையிலாத ஈசரோடு பொருந்துமாற தெங்ஙனே

பட்டினத்தார் சிற்றின்பத்தை விலக்கி பேரின்பத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதற்காக உடலை, குறிப்பாகப் பெண்ணுடலைப் பழிப்பதைப் போல சிவ வாக்கியர் செய்யவில்லை. சிவ வாக்கியர் போலியான சடங்குகளையும் மதிப்பீடுகளையுமே தாக்குகிறார். பட்டினத்தார் பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்கள் சடங்குகளுக்கு எதிராக இருந்தாலும் அத்தனை தீவிரமான எதிர்ப்பு அதிலில்லை. ஆச்சாரம் என்ற பெயரில் பெண்ணை இழிவுபடுத்தும் போக்கினைக் கண்டிப்பதைப் பின்வரும் பாடலில் பார்க்கிறோம். இது ஆன்மீகத்துக்கு வெளியே சமூகநோக்கில் ஓங்கியொலிக்கும் ஒரு சித்தரின் சமத்துவக் குரலாக நாம் காணமுடியும்.

தூமைதூமை யென்றுளே துவண்டலையு மேழைகாள்

தூமையான பெண்ணிருக்க தூமைபோன தெவ்விடம்

ஆமைபோல் மூழ்கிவந் தநேகவேத மோதுறீர்

தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்க ளானதே

மாத விலக்கு என்று விலக்கி வைக்கிறாய்; விலக்கு முடிந்தபின் அவள் தூய்மையானவள் என்கிறாய்; தூய்மை என்றால் அப்புறம் தூமை எங்கிருந்து வந்தது: வேதத்தை ஓதும், இரத்தமும் சதையுமாய் இருக்கும் நீ தூமையின் திரட்சி தானே.

 நிலம், நீர், காற்று, நெருப்பு இந்நான்கோடு ஐந்தாம் பூதமாக விசும்பு ஏன் சேர்ந்தது? பௌத்தம் விசும்பினைச் சேர்க்காது நாற்பூதங்களே என்கிறது. தொல்காப்பியமோ, ’நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்கிறது. 

’மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல்…’

என்று புறநானூற்றுப் பாடலில் வருகிறது. நிலம் அந்தரத்தில் எப்படி நிலை கொண்டிருக்கிறதென்றால் அதை விசும்பு தாங்கிக் கொண்டிருப்பதனால். 

’நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்

அளப்பு அரியையே;

நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்

ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை…’

அதாவது நிலம், நீர், காற்று, வானம் ஆகியவற்றோடு, விண்மீன்கள், கிரகங்கள், சந்திரன், சூரியன், பெருநெருப்பு ஆகியவை ஐந்தாவதாகச் சேர்ந்து பேராற்றல்களாக உள்ளதை பதிற்றுப்பத்து பாடல் சொல்கிறது. 

விசும்புதான் எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறது என்றளவில் அது ஐந்தாம் பூதமாய் இருப்பது சரியே. அதேவேளையில் அந்தரத்தில் நிற்கும் ஏனைய பிற கோள்களும் பூமியின் மீது தாக்கத்தைச் செலுத்துகின்றன. எப்படி சுமத்ரா தீவில் ஏற்படும் சுனாமி இந்தியக் கடலோரத்தைப் பாதிக்கிறதோ அதுபோல. எப்படி அமாவசை பௌர்ணமிகளில் கடல் கொந்தளிப்பும் மனநிலையில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறதோ அதுபோல. இந்தக் கிரகங்கள் நம் மனநிலையைப் பாதிக்கின்றன. இதைத்தான் சோதிடம் விரிவாகப் பேசுகிறது. நவகிரகங்களும் அவரவர் இராசியைப் பொறுத்து அதை மையமாகக் கொண்டு ஒருவிதக் கலவையில் அமைந்திருக்கின்றன. அதுவே நம் செயல்களையும் குணங்களையும் தீர்மானிக்கின்றன. ஆனால் இந்தத் தடைகளைத் தாண்டிதான் பரம்பொருள் உள்ளது.

அறத்திறங்க ளுக்கும்நீ யகண்டமெண் டிசைக்கும்நீ

திறத்திறங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ

உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த சோதிநீ

மறக்கொணாத நின்கழல் மறப்பினுங் குடிகொளே

அறநெறிகளும் நீயே; எண் திசையும் நீயே; காரணங்களுக்கெல்லாம் காரணம் நீ; தேடக்கூடியவனின் சிந்தை நீ; மறதியும் நீ; உணர்வும் நீ; உள்ளே கலந்து நிற்கும் சோதி நீ; மறக்கக்கூடாதது நின்பாதம்; மறந்துபோனாலும் கைவிடாது என்னுள் இரு. வெறுமனே எல்லாம் நீ என்று சொன்னால் உணர்வில் தைப்பதில்லை. தேடக்கூடியவனுக்கு அந்தச் சிந்தையாக நீயே இருக்கிறாய். உறக்கநிலையிலும் உணர்வுநிலையிலும் இறை இருக்கிறது எனும்போது ஒருவிதத் தன்னுணர்வு அடைகிறோம். உலகின் அலைக்கழிப்புகளில், விசும்பின் தாக்கத்தால் மனோநிலை மாறிக் கொண்டே இருந்தாலும், அதில் அருட்பெருஞ்சோதியை மறந்துபோயினும், அச்சோதி அதன் அருளொளி எப்போதும் பிரகாசிக்கட்டும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *