பற்றுமின்கள், பற்றுமின்கள் – 4

சுநீல் கங்கோபாத்யாயின் ‘தன் வெளிப்பாடு’ நாவலில் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பெருஞ்சாலை முச்சந்தியில் நின்று ஒருவர் மாற்றி ஒருவராகப் பிச்சையெடுப்பார்கள். யார் அதிகம் பிச்சையெடுக்கிறார்கள் என்று ஒரு போட்டியே அவர்களுக்குள் வந்துவிடும். அதுபோல் இல்லையெனிலும் நானும் நண்பர் ஒருவரும் திருச்செந்தூரில் போய் ஒருநாள் பிச்சையெடுக்க உட்காருவது குறித்துப் பேசிக் கொண்டோம். அதிகாலையிலிருந்து இரவு வரை இருக்க வேண்டும். கிடைப்பதை வைத்து மட்டும் சாப்பிடுவது; இல்லாவிட்டால் பட்டினி கிடப்பது; தட்டில் எப்போது காசு விழும் என்று எதிர்பார்க்காமல் ஒன்றுமற்றவனாகிப் போக முயற்சித்துப் பார்ப்பது; இப்படி வாய்க்குமா தெரியவில்லை. வேற்று நிலத்துக்கு சுற்றுலா பயணப்பட்டால் மனம் விசாலமடையும். இப்படிக் கோவில் வாசலில் உட்கார்ந்தாலும் விசாலமடையும் என்றுதான் சொல்வேன்.

மக்கள் கடவுள்களுக்கு என்னென்னவோ செய்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து முடிவுவரை எந்த மாற்றமோ, முன்னேற்றமோ இல்லாமல் அதே போலத்தான் இருக்கிறார்கள். கடவுள் என்பது அடைய வேண்டிய ஒரு நிலையே தவிர நமக்குத் தேவையானதைக் கொடுப்பதற்கான பூதமல்ல. கடவுளிடம் வேண்டிக்கொள்வதால் எந்த அர்த்தமும் இல்லை. உண்மையைச் சந்திக்க முடியாமல்தான் இப்படியொரு பெரிய திரையைப் போட்டுக் கொள்கிறோம். எதிர்காலம் குறித்த பயத்துடன் போராட ஒரு ரூபம் தேவைப்படுகிறது. அந்த ரூபத்துக்கே மக்கள் இலஞ்சம் கொடுக்கிறார்கள். அதற்கான இடைத்தரகர்களே பூசகர்கள்.

பொ.ஆ. 700 வரையிலும் இங்கே குடவரைக் கோயில்கள் மட்டுமே இருந்தன. ஊருக்குள் இருந்தவை எளிமையான விதத்தில் செங்கலில் கட்டப்பட்டிருந்திருக்கலாம். டன் கணக்கில் எடையுள்ள கற்களை இடம்பெயர்க்கும் முயற்சியில் ஏனோ யாரும் அதுவரை ஈடுபட்டிருக்கவில்லை. அதன்பிறகே நகரங்களுக்குள் கோவில் கட்டும் பழக்கம் தொடங்குகிறது. பொ.ஆ. 700-1200 காலகட்டத்தில் அதிகளவில் கற்கோவில்கள் கட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதுதான் பக்தி மறுமலர்ச்சிக் காலகட்டமாகவும் இருந்தது.

தீர்த்தமாட வேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்

தீர்த்தமாட லெவ்விடந் தெளிந்துநீ ரியம்பிலீர்

தீர்த்தமாக வும்முளே தெளிந்துநீ ரிருந்தபின்

தீர்த்தமாக வுள்ளதுஞ் சிவாயவஞ் செழுத்துமே

வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக கோவில் குளங்கள் ஏறியிறங்குபவர்களைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை. அவர்கள் கோவிலுக்குப் போவதும் ஒன்றுதான்; போகாமல் இருப்பதும் ஒன்றுதான். அவர்கள் ஒருவகையில் காசைத்தான் வணங்குகிறார்கள். தன்னையறிதல், வாழ்வின் பொருள் குறித்த கேள்வி, மனதை மலரச் செய்தல், ஏகாந்த உணர்வோடு இருத்தல், பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்துப் பார்த்தல், பார்ப்பது குறித்த பார்வை, உள்ளார்ந்த மாற்றம், நிலையற்ற வாழ்க்கையை உண்மையாக அனுபவிப்பது போன்றவை தேடல்களாக இருந்தால் ஒருவர் கோவிலுக்குச் செல்ல மாட்டார். தனக்குள்தான் செல்வார். அதுதான் உண்மையான தேடல்; அதுதான் ஆன்மீகம். சமீப காலத்தில் மிகத் தவறாகப் பொருள்கொள்ளப்பட்டு வரும் ஒரு சொல் ஆன்மீகம். ஆன்மீகம் என்றால் சனாதனம் என்றொரு பார்வை இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எல்லாச் சித்தர்களும் மனித மீட்சியின் மாபெரும் தடையாகத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுவது காமத்தைத்தான். விளக்கொளியின் வெறும் இருத்தலே போதும் விட்டில்கள் மொய்க்க. ஆணின் மனம் அப்படித்தான் இயங்குகிறது.

உழலும்வாச லுக்கிரங்கி யூசலாடு மூமைகாள்

உழலும்வாச லைத்துறந்து வுண்மைசேர வெண்ணிலீர்

உழலும்வாச லைத்துறந்து வுண்மைநீ ருணர்ந்தபின்

உழலும்வாச லுள்ளிருந்த வுண்மைதானு மாவிரே

உழலும் வாசலுள்ளிருந்த உண்மை – உள்ளிருக்கும் உண்மை என்று சொல்லவில்லை. நாம் கர்ப்பத்துக்குள் இருந்த அல்லது இப்பிறவியெடுத்த காரணத்தை காமத்தைத் துறந்தால்தான் உணரமுடியும் என்கிறார். காமம் இன விருத்தியோடு தொடர்புடையது. பிறப்பவை எல்லாம் இறக்கின்றன. ஒரு சுழற்சியிலிருந்து விடுவித்துக் கொள்ள உயிர்களின் மிக ஆதாரமான வலுவான காம இச்சையைத் துறக்க வேண்டும் என்கிறார்

ஓஷோ ஞானமடைந்தவரின் உணர்வுநிலை எப்படியிருக்கும் என்பதற்கு புணர்ச்சியில் உச்சகட்ட நிலை தொடர்ந்து இருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் என்று சொல்கிறார். இந்த பதிலைப் பார்க்கையில் ஏதோ கிண்டல் செய்வது போலவும் அப்படியாவது வந்து தொலையேன் என்று அழைப்பதாகவும் இன்னொரு பக்கம் உண்மை போலவும் தோன்றுகிறது. தன்னுணர்வின் அல்லது தானழிந்த நிலை தொடர்ந்து நீடிப்பது ஒரு ஊசி நுனியைப் போல தொடர்ந்து இருக்க வாய்ப்புள்ளதாகவே புரிந்துகொள்கிறேன். இப்படியான உணர்வுநிலை ‘தான்’ விடுபட்ட உணர்வுநிலையோடு ‘இருத்தல்’ நிகழ்வது கடவுள் நிலை. அறிந்ததினின்றும் விடுதலை. இப்படியொரு நிலையில் சித்திக்கும் இறைநிலை எங்கிருக்கிறது?

உருவுமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல

மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல வற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல

அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே

இதனால்தான் இடதுசாரிகள் ஆன்மீகம் பேசுவோரை ஏமாற்றுக்காரர்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர். எண்ணங்கள் அடங்கிய ஓர்மையில் இலயிக்கும்போது ஒரு குழந்தையின் கண்கள் நமக்குக் கிடைக்கிறது. எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்க்கிறோம். அந்த அப்பழுக்கற்ற தன்மை பிரபஞ்சத்தோடு நம்மை இணைக்கிறது. இது ஒருவர் அனுபவித்து உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்று. அப்படி வர இயலாதவர்களுக்கு இது ஏமாற்றாகவே தெரியும்.

இறைநிலையை அடைய பல மார்க்கங்கள் உள்ளன. அதில் யோக மார்க்கம் ஒன்று. ஆசனங்கள் வெறும் உடற்பயிற்சி அல்ல. அவை உள்முகப் பயணத்துக்கு உடலைத் தயார் செய்பவை. நாம் உண்ணும் விதமும், உண்ணும் உணவும் வயிற்றில் தாக்கம் செலுத்துகின்றன. அது உடல் வெப்பத்திலும், மூச்சிலும் மனோநிலையிலும் தாக்கத்தைச் செலுத்துகிறது. குறைவாக உண்பது, சரியான நேரத்துக்குத் தூங்குவது இப்படி சில நியதிகளை உருவாக்கிக் கொண்டு நியமப்படி யோகாசனங்களைச் செய்யச் செய்ய உடலுக்குள் ஓர் ஆனந்த உணர்வையும், ஆழ்ந்த அமைதியையும் நாம் உணர முடியும். ஆனால் இது ‘அதுவல்ல’. இது உடலை தியானத்துக்குத் தயார்படுத்தும் செயல் மட்டுமே.

ஆசனங்கள் ஒவ்வொன்றிலும் மூச்சுநிலை எப்படி இருக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. மூச்சில் கவனம் குவியும்போது உணர்ச்சிகள் கட்டுக்குள் வருகின்றன. உணர்ச்சிகள் கட்டுக்குள் வரும்போது மனம் வசப்படுகிறது. எனவே யோகத்தில் வாசியோகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததை

பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென

மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல்

என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே

மேற்கண்ட பாடலுக்கு மூன்று பொழிப்புரைகளைப் பார்த்துவிட்டேன். எல்லாமே தப்பும் தவறுமாய் மொண்ணையாக இருக்கின்றன. ஓர் அழகான பெண்ணை கை, காலை வெட்டி முடமாக்கி கச்சிதமாக செவ்வக வடிவில் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியானது இந்த உரையாசிரியர்களின் வேலை. இந்தப் பாடலின் பொருள்: இலக்கணம் இல்லாத ஒன்றை எப்படி விவரிப்பேன்; சொல்லைக் கடந்த அர்த்தம் போல, மின்னல் அகத்தில் ஒடுங்கி பின் திரும்பவும் வெட்டுவது போல என் அகத்துள் ஈசனையும் என்னையும் தவிர யாருமில்லை. சொல்லைக்கடந்த அர்த்தம் என்பதை மின்னலுக்கு உவமையாக்குகிறார். அதேபோல் அந்த மின்னலைப் போல, சொல்லின் அர்த்தம்போல என்னுள் கலந்திருக்கிறான் ஈசன் என்கிறார்.

ஒரு சொல் என்பதில் ஒன்றுமில்லை. அதன் மீது நாம் ஏற்றி வைக்கும் அர்த்தமே ஒரு மின் தரிப்பை உருவாக்குகிறது. இலக்கியத்தில் புதுமைப் பித்தனும் பிரமிளும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். அறிவியலும் நரம்புகளுக்கிடையே ஓடும் மின் தரிப்பையே படைப்பூக்கத்துக்கான காரணிகளாகச் சொல்கிறது. பிராய்ட் இதை நரம்பு நோயாகப் பார்த்தார். யூங் படைப்பூக்கத்தை கூட்டு நனவிலிக்குச் சென்றுவரும் ஒரு தற்காலிகப் பிறழ்நிலையாகக் கருதுகிறார். இன்னும் சொல்லப்போனால் இருத்தலை உணர்ந்து நிற்கும் நிலையையே சிவவாக்கியர் ஈசனும் நானும் மட்டும் உள்ள நிலை என்று சொல்கிறார்.

உடல் அவத்தைப்படும்போது புத்தி செயலிழந்து போய்விடுகிறது. உயிர்த்திருப்பதற்கான போராட்டம் மட்டுமே இருக்கும். ஒருவகையில் புவியீர்ப்பு விசையைத் தாண்டிச்செல்லும் முயற்சிபோல இந்த உயிர் பிரிதல் இருக்கிறது. எப்படியும் மண்ணில் விளைந்த உடல் மண்ணுக்கே போய்விடுகிறது. உயிர் விளைந்ததும் மண்ணிலா? உயிர் மண்ணுக்கு வழங்கப்பட்டது. விசும்பின் கொடை அது. இந்தக் காற்றில்தான் என் மூதாதையர் நிறைந்திருக்கின்றனர். என்னுடைய உணர்நிலையை என் சுவாசத்தின்வழி அவர்களுக்குக் கடத்துகிறேன். என் மூதாதையரின் தோள்களில் நிற்கிறேன். படித்தவை மறந்துபோகும்; அழிந்தும் போகும்; குலம் அழியும்; சொத்துபத்துக்கள் அழியும்; தேடல் தேயும்; இதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? உயிரில்லையேல் அதுவரை சுகித்து வந்த ஐம்புலன்களும் அடங்கும்.

நாவி நூலழிந்ததும் நலங்குல மழிந்ததும்

மேவுதே ரழிந்ததும் விசாரமுங் குறைந்ததும்

பாவிகா ளிதென்னமாயம் வாமநாடு பூசலாய்

ஆவியா ரடங்கினா லைவரு மடங்குவார்

இதற்கு அடுத்ததாக வரும் பாடலில் நாத்திகத்தைச் சாடுகிறார். கடவுள் இல்லையென்று சொல்கிறாயே, அது இல்லையென்ற நிலையில் அல்லவா இருக்கிறது? அதை இல்லை என்று சொல்லலாமா? இல்லை என்று அல்லாததை, ஒன்றுமில்லாததை, இரண்டும் ஒன்றி நின்றதை (ஏதுமற்றதாகவும் இருப்பதாகவும்) அதன் எல்லையைக் கண்டுகொண்டவர் ஞானநிலை அடைந்தவர் என்கிறார்.

இல்லைஇல்லையென் றியம்புகின்ற வேழைகாள்

இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ

இல்லையல்ல வொன்றுமல்ல விரண்டுமொன்றி நின்றதை

எல்லைகண்டு கொண்டபே ரினிப்பிறப்ப தில்லையே.

பிரமிள் சனாதனவாதிகளையும், இலோகாதாயவாதிகளையும் ஒரே தட்டில் வைப்பார். உண்மையான ஆன்மீகம் இந்த இரண்டுக்கும் வெளியில் உள்ளது. சனாதனம் கடவுள் என்பதை விடச் சடங்குகளையும் மந்திரங்களையும் யாகங்களையும் பிரதானமாக்குகிறது. இவற்றின் மூலம் இலோகாயத பலன் அடையலாம் என்று தூண்டுகிறது. பணம் வேண்டும்; அதற்காகத்தானே பணக்காரக் கடவுளைத் தரிசிக்க நாள் கணக்கில் தவம் கிடக்கிறார்கள். எனவே ஞானத் தேடல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. சிவவாக்கியர் எல்லாப் பாடல்களிலும் கடவுளை பூசை செய்யக்கூடிய அர்ச்சகர்களையே குறிப்பிட்டுக் கேள்வியெழுப்புகிறார். சாதிபேதம் குறித்தும் அவர்களிடம்தான் கேள்வியெழுப்புகிறார். மனிதர்கள் நிச்சயம் சமமானவர்களல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அறிவிற் சிறந்தவராக ஒருவர்; அதிகப் பணம் ஈட்டக்கூடியவராக ஒருவர்; சமூகத்துடன் நன்கு பழகத் தெரிந்து அதைப் பயன்படுத்தத் தெரிந்தவர் ஒருவர்; பழகத் தெரியாதவர் ஒருவர்; தனக்குள் சுருங்கிப் போய் ஒருவர்; மனநிலை பிறழ்ந்த ஒருவர்; இப்படி எத்தனையோ விதம். இந்த வேறுபாடுகள் எல்லா சாதிகளிலும் உண்டு. எனவே பிறப்பின் அடிப்படையில் ஒருவருக்கு எந்தவகையிலும் ஓர் உரிமையைக் கொடுப்பதோ, உயர்த்துவதோ தாழ்த்துவதோ மிகத் தரங்கெட்ட செயல்.

சாவதான தத்துவச் சடங்குசெய்யு மூமைகாள்

தேவர்கல்லு மாவரோ சிரிப்பதன்றி யென்செய்வேன்

மூவராலு மறியொணாத முக்கணன்முதற் கொழுந்து

காவலாக வும்முளே கலந்திருப்பன் காணுமே.

ஒன்றுக்கும் உதவாத சடங்குகளைச் செய்யும் ஊமையே, ஒரு கல்லுக்குப் போய் சடங்குகளைச் செய்கிறாயே, கடவுள் கல்லாக ஆவாரோ? சிரிக்காமல் என்னதான் செய்வது. முக்கண்ணனின் முதற்கொழுந்து விநாயகன் உனக்குள் காவலாகக் கலந்து இருக்கிறான். உன்னுள் பார் என்கிறார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *