பற்றுமின்கள், பற்றுமின்கள் – 5

ஒன்றை உணர்ந்தறிந்து கொள்வதில் மூன்று நிலைகள் உள்ளன. தெரிதல், உணர்தல், அறிதல். தெரிதல் என்பதற்கு அகராதி அறிதல், ஆராய்தல், ஆலோசித்தல், காணுதல், தெரிந்து கொள்ளுதல் ஆகிய அர்த்தங்களைத் தருகிறது. இதில் அறிதல் என்பது அத்தனைப் பொருத்தமானதில்லை. தெரிவதெல்லாம் அறிதலில்லை. தெரிதல் என்பது ஒன்று இருப்பது கண்ணுக்கு அல்லது உணர்வுக்குத் தட்டுப்பட்டு அது குறித்துச் சிந்திப்பதும், கருத்தில் கொள்ளுவதும் ஆகும். தெரிதல் என்பதில் பார்ப்பவன் – பார்க்கப்படுவது என இருவேறு நிலைகள் உள்ளன. தெரிதலில் தெரிவது என்றொரு நிலை இருக்கிறது. இதற்கு அடுத்த நிலை உணர்தல். பார்ப்பவன் பார்க்கப்படுவதை அனுபவிக்கும் நிலை. இந்த உணர்தல் நிலை அறிதல் நிலைக்கான கதவு. அறிவன் என்பவன் உணர்ந்து அந்நிலையை அடைந்தவன். அறிதல் என்பது அறிவு, அறிதல் ஆகிய அர்த்தங்களைத் தருகிறது. உணர்வுநிலையைக் கைக்கொண்டிருக்கும் நிலை அறிதல் நிலை.

விண்ணிலுள்ள தேவர்க ளறியொணாத மெய்ப்பொருள்

கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தென்பிரான்

மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்

அண்ணலாரு மெம்முளே யமர்ந்துவாழ்வ துண்மையே

தேவர்களும் அறிய முடியாத மெய்ப்பொருள் அவன். கண்ணில் பார்வையைப் போலக் கலந்திருக்கிறான் அவன். எல்லாம் துறந்தபின் என்னுள் அமர்ந்து அவன் வாழ்கிறான் என்கிறார் சிவவாக்கியர். உண்மையான ஆன்மீகத்துக்கு, முதலில் ஒருவர் அறிந்தோ அறியாமலோ முன்பு உணர்ந்த நிலைகளைக் கொண்டு தெரிதல் நிலையை அடைந்திருக்க வேண்டும். அவர்களுக்கே அடுத்தடுத்த நிலைகளை அடைய வாய்ப்பு உண்டு.

‘The mind is like a chatterbox’ என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. மனம் ஒரு குரங்கு என்கிறோம். ஒருவர் வெளியே எதுவும் செய்யாமல் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருக்கலாம். எண்ணங்கள் சம்பந்தமே இல்லாமல் விழிப்பிலும் உறக்கத்திலும் தாறுமாறாய் ஓடிக் கொண்டிருக்கின்றன. எண்ணங்கள் என்பது கடந்த காலத்தோடு தொடர்புடையது. எனவே நினைவுகளுடன் சம்பந்தமுடையது. நினைவுகள் உணர்வுகளுடன் தொடர்புடையவை. இதனால்தான் நம்மால் ஒரே மனநிலையில் தொடர்ந்து இருக்கவோ தக்கவைத்துக் கொள்ளவோ முடிவதில்லை. வெவ்வேறு உணர்வுகள் அடுத்தடுத்து மேலெழுவதால் மனிதன் மழுங்கிய விழிகளுடன் இருக்கிறான். இப்படி ஒருநாள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது தோன்றியது. உள்ளே ஓடும் இந்தக் குப்பை எதற்கும் அர்த்தமே இல்லை என்றொரு இடத்தை அடைந்தேன். அது என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்த உடலுக்குள் கண்ணுக்குத் தெரியாது சூட்சுமமாய் நான் மட்டும் அனுபவிக்கும், சிந்திக்கும் இது எத்தனை பிரம்மாண்டமாய்த் தோன்றினாலும் ஒன்றுமே இல்லை. எத்தனை பெரிய விடுதலை. ஆனால் எல்லாம் சில கணங்களே.

மின்னெழுந்து மின்பரந்து மின்னொடுங்கும் வாறுபோல்

என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுளேஅடங்குமே

கண்ணுள்நின்ற கண்ணில்நேர்மை கண்ணறிவி லாமையால்

என்னுள்நின்ற என்னையன்றி யானறிந்த தில்லையே

மின்னல் வெட்டியபின் அது என்ன ஆகிறது? மின்னல் என்று ஒன்று உண்டா என்ன? வெட்டிய மின்னல் திரும்பவும் ஒடுங்கிவிடுகிறது. அதேபோல ஈசன் என்னுள் அடங்கியிருக்கிறான். கண் பார்க்க காட்சி தெரிகிறது. காட்சிகள் மனப் பதிவுகளாக, எண்ணங்களாக, உணர்வுகளாக உருப்பெருகின்றன. கண் குறித்த அறிவு இல்லாததால் என்னுள் நிற்கும் ‘என்னை’ அறியமுடியாமல் போய்விட்டது.

காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்

காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்

காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்

மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.

சனாதனத்தைச் சாடக்கூடிய இன்னொரு பாடல் இது. காலை மாலை நீரிலே மூழ்கியெழுந்து ஆச்சாரம் ஒழுகும் மூடர்களே, நீரிலேயே கிடக்கும் தேரை என்னத்தை அடைந்தது? காலமே எழுந்து தியானம் செய். அப்போது உனக்கு அக விழிப்பு கண்டு முத்தி, சித்தி அடைவாய் என்கிறார். புறவயமான சடங்குகள் ஒரு மண்ணுக்கும் உதவாது என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார். புறவயமான செயல்கள் அனைத்தும் அதிகாரம், பொருள், ஆசை நிவர்த்தி போன்ற புறவய நலன்களுக்கானவை. இதில் ஆன்மீகத்துக்கோ, ஞானத்துக்கோ, துறவுக்கோ இடமே இல்லை.

சிவவாக்கியர் பாடல்கள் இருவேறு பிரிவுகளாக நிற்கின்றன. ஒன்று தியானம், வாசியோகம், குண்டலினி என்று ஞான மார்க்கத்தைச் சொல்கிறது. இன்னொன்று எளியோருக்கும் புரியும் வண்ணம் அஞ்ஞானத்தைப் போக்கி, மூட நம்பிக்கைகளை வேரறுக்க அவர்களுக்காகப் பாடுகிறது.

எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ

இங்குமங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ

அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ

வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே

என்னுடைய இறைவன், உன்னுடைய இறைவன் என்று இரண்டு இரண்டு இறைவன் உண்டோ? இங்கே ஒருவர் அங்கே ஒருவர் என்று இரண்டுபேர் இருப்பார்களா? எங்கெங்குமாகி நின்ற இறை ஒன்றே அல்லவா? இப்படி பாகுபாடு பார்க்கும் பேர்வழிகள் வாய் புழுத்துப் போய்விடும் என்கிறார். ஆக, மதம் என்று வரும்போதே எனது உனது என்ற பாகுபாடு வந்துவிடுகிறது. உள்ளார்ந்த புரிதல் இருந்தால் எந்த இடைத்தரகர்களும் நம்மை ஏமாற்ற முடியாது.

மாதமாதந் தூமைதான் மறந்துபோன தூமைதான்

மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது

நாதமேது வேதமேது நற்குலங்க ளேதடா

வேதமோதும் வேதியா விளைந்தவாறு பேசடா

தூமை மாதாமாதம் வருகிறது. அப்படி வரவில்லை என்றால் கரு உண்டாகியிருக்கிறது என்று அர்த்தம். அத்தூமையே உருவமெடுத்து உலகிற்கு வருகிறது. நாதமும் விந்தும் கலந்தே உயிர்கள் உருவாகின்றன. இதில் நற்குலம் என்று எங்கடா தனித்திருக்கிறது? வேதம் ஓதுபவனே, நீ இப்படியன்றி வேறுவகையில் பிறந்தாயா? உள்ளபடி பேசடா என்று பாடுகிறார். மனித இனத்தில் உயிரியல் பாகுபாடு ஏதுமில்லை. எல்லா சாதிகளிலும் கூமுட்டைகளும், அறிவுசீவிகளும் கலந்தே பிறக்கின்றனர். ஞானி எந்த யோனியிலும் பிறக்கக்கூடும். பாகுபாடு என்பது அவரவர் தெரிதல், உணர்தல் நிலைகளிலே உண்டே தவிர்த்து பிறப்பினால் ஒருவருக்கு முத்திரை குத்துவது அயோக்கியத்தனம்.

ஊறிநின்ற தூமையை யுறைந்துநின்ற சீவனை

வேறுபேசி மூடரே விளைந்தவாற தேதடா

நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்க ளாவன?

சீறுகின்ற மூடரேயத் தூமைநின்ற கோலமே

இதுவும் மேலேயுள்ள பாடலைப் போன்றதே. தூமையில் உறைந்து உருவாகி வரும் சீவனை வேறு குலம் என்று பேசும் முட்டாளே, உனக்கு என்னடா தெரியும்? அந்தத் தூமையிலிருந்தல்லவா நற்குலம் என்று நீ கூறுவது உருவாகிறது? சீறுகின்ற மூடனே, நீயே அத் தூமை. இந்த வரிசையில் நான் சில பாடல்களை விட்டுவிட்டேன். தீட்டு என்று விலக்கி வைப்பதைச் சாடி சிவவாக்கியர் பல பாடல்களை இயற்றியுள்ளார். இத்தனை பாடல்களுமே ஆச்சாரத்தைச் சாடி பாடப்பட்டிருந்தாலும், பெண்ணடிமைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம்.

புத்தர் தனது போதனைகளில் ஞானம், மோட்சம் இவற்றுக்கான ஆசையையும் துறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார். ஓஷோவும் கூட தேடுவதை நிறுத்துங்கள் என்று கூறுகிறார். ஆனால் நவீன காலத்தில் இது எதிர்மறையாகவே புரிந்துகொள்ளப்பட வழிவகுக்கும் என்று தோன்றுகிறது. காதலிக்கான ஏக்கம்போல உள்ளே ஏகாந்த உணர்வுக்கும், மெய்யுணர்வுக்குமான ஓர் ஏக்கம் இருக்க வேண்டும். இதுவொரு நீண்ட நெடிய தனித்த பயணம். இந்தத் தேடலே பாதையாகவும் ஒளியாகவும் இருக்கும்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக ஞானிகள், சித்தர்கள் எது மக்களுக்குப் பின்பற்ற எளிதானது அல்லது எது சிறந்தது என்று அவர்கள் கருதுகிறார்களோ அதையே வலியுறுத்தினர். அதன் பொருட்டு பிற வழிகளை அவர்கள் நிராகரிக்கவும் தயங்கவில்லை. ஒரு பேட்டியில் குண்டலினி குறித்து ஜி.கி.யிடம் கேட்கப்பட்டபோது அதைக் கேலி செய்து நிராகரித்திருக்கிறார். யோகா என்பது உடற்பயிற்சி; உடலுக்கு சக்தி அளிப்பது; அதற்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பில்லை என்பது ஜி.கி.யின் பார்வை. ஆனால் ஏறத்தாழ நமது சித்தர்கள் அனைவரும் வாசியோகத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். நமது உணர்ச்சிக்கும் மூச்சுக்கும் நேரடியாகக் காண சம்பந்தம் இல்லாததுபோல் தெரியும். ஆனால் மூச்சு நிதானப்பட்டால் மனம் சாந்தமடையும். மூச்சுப்பயிற்சி சூட்சுமத்தை ஒழுங்குபடுத்தும் ஓர் எளிய வழி. இதை வெறும் உடல் சார்ந்த பயிற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. பல பாடல்களில் சிவ வாக்கியர் மூச்சை எப்படி உள்ளிழுக்க வேண்டும் எப்படி வெளியே விட வேண்டும் அதன் பலன்கள் என்ன என்று விவரிக்கிறார். மூச்சை உள்ளிழுக்கையும் `ஹூம்` என்ற ஒலியுடனும், வெளிவிடுகையில் புருவமத்தியில் முட்டி வெளியேறுவதாக உணர்ந்து வெளியிட வேண்டுமென்றும் சொல்கிறார்.

இன்றைய காலத்தில் நம் முன்னால் பல வழிகள் குறிப்பாக மிக இலகுவான பல ஆன்மீகப் பாதைகள் உள்ளன. முன்புபோல கடினமாக உடலை வருத்திக் கொண்டோ, துறவை மேற்கொண்டு நாடுவிட்டு காடுபோய் தவமிருப்பதையோ எந்த ஞானிகளும் வலியுறுத்துவதில்லை. இன்றைய காலத்தில் அது கிட்டத்தட்ட சாத்தியமில்லாததாகி விட்டது. உள்ளுக்குள்ளேயே உறைந்திருக்கும் இறையை எங்கும் தேட வேண்டியதில்லை என்பதை சிவவாக்கியரும் வலியுறுத்துகிறார். தேடலற்று தேடிய பொருளைக் கண்டெடுப்பது எங்ஙனம்? தேடலை நிறுத்திவிட்டு விழிப்புணர்வைக் கைக்கொள்வதன் மூலமே அது சாத்தியம்.

வேணுவேணு மென்றுநீர் வீணுழன்று தேடுவீர்

வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே

வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்

வேணுமென்ற வப்பொருள் விரைந்துகாண லாகுமே.

கீழே வரும் பாடல் புலால் உண்ணாமையை மறுப்பதுபோல் தோன்றினாலும் அது உண்மையில் உடல் மீது சுமத்தப்படும் ஆச்சாரங்களைத்தான் சாடுகிறது.

புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர்

புலாலைவிட்டு மெம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே

புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்

புலாலிலே முளைத்தெழுந்த பித்தர்காணு மத்தனே.

புலாலைப் பிரியாதிருக்கிறது சிவம். புலாலுமாய், புதற்றுமாய் பேருலாவும் தானுமாய் என்பதன் அர்த்தம் இரத்தமும் சதையுமாய் உருவாகி, குழந்தையாகவும் (பிதற்று=மழலை), வளர்ந்தோராகவும் இருக்கக்கூடிய உடலில்தான் சிவம் முளைத்தெழுகிறது என்கிறார். உடலே கோவில். இதயமே கருவறை. இடது நெஞ்சில் குளிர்ந்து அது வீற்றிருக்கிறது. தலை கனத்துக் கிடக்கும் மனம் பணிய, பனி போல் மனம் கரைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *