எங்கெங்கு காணினும்

 

நாம் சூரியோதயத்தில் வேலை செய்வோம்

நாம் சூரியாஸ்தமனத்தில் ஓய்வெடுப்போம்

குடிக்கவென்று கிணறு வெட்டிடுவோம்

சாப்பிடவென்று நிலத்தை உழுதிடுவோம்

அரசர்களால் நமக்கு என்ன பயன்?

மூவாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீனக்கவிதை இது. வாசிக்கையில் அத்தனை பழைய கவிதையைப் போலவா தோன்றுகிறது? பழங்காலம், நவீனகாலம், பின்நவீன காலம் இப்படி காலங்களைப் பிரித்துக் கொண்டாலும் நாம் அதே மனிதர்கள் தாம். அதே உணர்வுகள் தாம். பழங்காலச் சீனாவில் எல்லா மக்களும் கவிதை எழுதக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருவரைப் பார்க்கச் சென்றால் அவரிடம் சொல்ல ஒரு கவிதை. அவர் இல்லாவிட்டால் ஒரு கவிதை எழுதி சுவரில் ஒட்டி வைத்துவிட்டு வருவார்களாம். ஏன், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தாலும், படையில் வீரர்களைச் சேர்ப்பதாக இருந்தாலும் அதற்கான ஒரு தகுதியாக கவிதை எழுதும் திறனை வைத்திருந்தார்கள்.

புதுக்கவிதை மரபுக்கவிதை என்பதெல்லாம் ஒரு வசதிக்குத்தான். மொழியும், நடையும் தான் மாறியிருக்கிறதே தவிர கவிச்சாரம் அப்படியே தான் உள்ளது.

இலக்கியத்தின் ஆகச்சிறந்த வடிவமாக கவிதையே உள்ளது. எல்லா மொழிகளிலும், எல்லா நாகரீகங்களிலும் நாடுகளிலும் கவிதை போற்றத்தக்கதாகவே கொண்டாடப்படுகிறது.கவிதையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வித்திட்டவர் பாரதியே. அவருக்கு விடுதலை என்பது தீராத் தேடலாக இருந்தது. தேச விடுதலை, பெண் விடுதலை, சாதிப் பாகுபாட்டிலிருந்து விடுதலை என்பதோடு கவிதைக்கும் விடுதலையும் சேர்ந்துகொண்டது. பண்டிதர்களின் சிறையிலிருந்து அவர் கவிதையை மீட்டார். மக்களுக்கான கவிதையை மக்கள் உணரும் முறையில் எழுத வேண்டும் என்பது அவரது தீர்க்கமான எண்ணமாக இருந்தது. பண்டிதர்களும் இலக்கண வித்வான்களும் கூட மொழித்திறனே கவிதை என எண்ணி கவிதை எழுதி அதை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருந்த காலத்தில் பாரதி, ‘கவிதை என்பது சாதாரணக் கருத்துக்களை வியப்பூட்டும் மொழியில் சொல்வதல்ல. வியப்பூட்டும் கருத்துக்களைச் சாதாரண சொற்களில் கூறுவது’ என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். பாரதியின் கவிதைகள் எளிய சொற்களில் உணர்ச்சித் தெறிப்புடன் இருப்பதற்குக் காரணம் அவை சாமானியர்களையும் எட்ட வேண்டும் என்பதுதான்.

பாரதி மூலம் துலக்கம் பெற்ற புதுக்கவிதை வடிவம், மணிக்கொடி இதழ் வெளிவந்த காலத்தில்கு.ப.ரா., புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி ஆகியோர் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. பின் எழுத்து இதழ் மூலம் சி.சு.செல்லப்பாவினால் புத்துயிர் பெற்று தனக்கென ஓர் வடிவத்தைக் கண்டடைந்தது.எழுத்து இதழ்க் கவிதைகள் செறிவாகவும், இறுக்கமாகவும் தொடர்ந்த நிலையில், கசடதபற, யாத்ரா, கொல்லிப்பாவை எனத் தொடர்ந்தவற்றிலும் அதன்பின் வந்த நடை இதழிலும்அத்தகு இறுக்கமும் செறிவும் தொடரவில்லை. வானம்பாடிகள் அமைப்பு உருவானபின் கவிதை சிறுபான்மை நிலையிலிருந்து அனைவருக்குமானது என்ற இடத்தை அடைந்தது. செறிவான, ஆழமான கவிதை என்பதற்கு மாறாக எளிமை, சமூகம் சார்ந்த கவிதைகள் வரத் தொடங்கின. என்னதான் வானம்பாடி கவிதைகள் மீது பல விமர்சனங்களை வைத்தாலும் கவிதைகளை மக்களிடம் கொண்டுசென்றதில் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்று. ஜப்பானிய ஹைகூ கவிதைகள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறையைக் கைக்கொண்டதென்றால் மேற்கத்திய பாணி இதற்கு எதிர்மாறாக நிற்கிறது. நம்மிடமும் ‘கடுகைத் துழைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’ இணையில்லா மதிப்புடையது என்றாலும் கவிதையை செறிந்த சொற்களுடன் சுருக்குவது நல்லதல்ல என்ற பாரதியின் கருத்துக்கு ஒப்ப, இறுக்கான கவிதைகள் சிறந்தவையா, எளிமையான கவிதைகள் சிறந்தவையா என்ற விவாதத்துக்குள் நாம் இப்போதுசெல்ல வேண்டியதில்லை.

சங்க காலம் தொட்டு இலக்கியத்தின் போக்கு இப்படித்தான் இருந்துள்ளது. எப்போதெல்லாம் இறுக்கமான மொழியில் இலக்கியம் சொல்லப்படுகிறதோ, அது ஒரு குறுகிய வட்டத்தினருக்கு மட்டுமானதாக ஆகிறது. அது அப்படியே தொடர வாய்ப்பே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்கப்பாடல்களுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவற்றுக்கும் இடையிலான நடை வித்தியாசத்தைப் பார்த்தாலே இதை உணரலாம். அதிலும் தமிழகத்தில் சித்தர் பாடல்கள் நேரடியாக மக்களிடம் உரையாடின.

இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் யாரிடமாவது கவிதை படிக்கச் சொன்னால் அவர் கேட்கக்கூடிய கேள்வி கவிதையால் என்ன பயன் என்பதாகத்தான் இருக்கும். உண்மையில் கவிதையால் ஒரு பயனுமில்லை.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, “அன்பின் சாரமாகக் கூருணர்வே உள்ளது. பெரும்பாலானோர் கூருணர்வுடன் இருக்கத் தயங்குகிறார்கள்; அப்படி இருந்தால் எளிதில் காயப்பட்டுவிடுவோம் என்று நினைக்கிறார்கள். அதனால் தங்களை மேலும் இறுக்கமாக்கிக் கொள்கிறார்கள்.” என்று சொல்கிறார்.

கவிமனம் என்பது கூருணர்வுக்கு மதிப்பளிப்பது. கவிதை என்பது தனக்குள் பூத்து நிற்பது. அந்த மலர்ச்சிக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அது வெறுமனே மலர்ந்திருக்கிறது. அதனால் தான் காதல் பூத்தவுடன் எல்லோரும் கவிஞர்களாகி விடுகிறார்கள்.

கவிதை ஆய்த எழுத்தைப் போன்றது. ஆய்த எழுத்தானது உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனியொரு எழுத்தாக இருக்கிறது. “ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்று ஆய்த எழுத்தின் பண்பினை தொல்காப்பியம் வரையறுக்கிறது. வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பாக வரும்போது அவ்வல்லின எழுத்தின் மீது இந்நான்கு பண்புகளையும் அதாவது அதை தளரச் செய்து, நுட்பமான கவனத்தைச் செலுத்தி, ஒலிப்பு சட்டென நின்றுவிடாமல் மணியிலிருந்து எழும் ரீங்காரத்தை இறுதிவரை உணரச் செய்வதுபோல உணர்த்தி, வல்லினத்தை மென்மையாக்குகிறது.அதனால் ஒரு பயனுமில்லை என்றுதான் ஆய்த எழுத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டோம் போலும்.

இந்த உலகத்துக்குள் இருந்தபடியே சற்று விலகி சுற்றியிருப்பவற்றையும் தனக்குள்ளும் கவிஞர் பார்த்தபடி இருக்கிறார். ஏதோவொரு அபத்தம், நெகிழ்ச்சி, துயரம், ஏக்கம், கோபம் இப்படி உணர்ச்சிகள் அவருள் அதிர்வை எழுப்பும்போது நிலவை நோக்கி எழும் ஓநாயின் கூவலாக கவிதை பிறக்கிறது. ஆம், அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.

எந்தக் கலையாக இருந்தாலும் அது கலைப்படைப்பு என்ற தகுதியைப் பெற ‘கவித்துவ’ உணர்வே அடிப்படையாகிறது.கவித்துவமே உருவாக்கப்பட்ட ஒன்றை படைப்பாக நிறுத்துகிறது.சொல் என்பதே கவித்துவமானது தான். மலரின் வாசம் போல. தமிழில் ஒவ்வொரு சொல்லும் அதற்கான ஒலிப்பும் அர்த்தப் பொருத்தமும், பரிமளிப்புச் சாத்தியங்களும் கொண்டதாய் உள்ளது. அதனால்தான் தமிழ் பெண் தன்மையுடையதாய் உள்ளது. அனுபவத்தை, அதன் உணர்வுகதியை வார்த்தைகளில் எடுத்து வந்தாலே கவிதை அர்த்தம் பெற்றுவிடும். சொல், அர்த்தம் என்பதைத் தாண்டி உரைகல்லாக நிற்கும் அனுபவ வெளி கவிதையில் முக்கியமானதாக இருக்கிறது.

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர் என்ற குறள் நீதிநெறியைச் சொல்லவில்லை. அது ஒரு கவிதை. தகப்பனுக்கு பிள்ளையின் மிழற்றல் ஒரு தெவிட்டாத கவிதை.

முன்னெப்போதையும் விட இப்போது கடிகாரம் மிக வேகமாக ஓடுகிறது. யாருக்கும் நேரமிருப்பதில்லை. நாட்கள் செலவு மிக்கதாகிவிட்டன. சதா நம்மைச் சுழற்றி ஓடச் செய்யும் இந்த உலகமயமாக்கப்பட்ட பின்நவீன காலத்தில்தான் முன்னெப்போதையும் விட நமக்குக் கவிதையின் தேவை எழுகிறது. இங்கு எல்லாமே தேவைக்கு அதிகமாகக் கொட்டப்பட்டு தேவையைத் தூண்டியபடி இருக்கின்றன. இங்கே கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் ‘அங்காடித் தெரு’ கவிதையைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

நெருக்கடி மிகுந்த ஒரு வணிக வீதியில்

நாம் ஏன் நுழைகிறோம்

கையில் ஒரு துளியளவுகூட பணம் இல்லாமல்

மேலும் தரமான ஆடையணிந்த கோதுமைநிறப் பெண்கள்

என்ன வாங்குகிறார்கள்

அவர்களின் சோளியை யார் இப்படித் தைப்பது

நமது கையில் மாட்டப்பட்ட ரிமோட் கவரை

மறுத்து புன்னகையுடன் திருப்பி அளிக்கின்றோம்

நம்மிடம் பணம் இல்லை என்பதை

ஒருவரும் அனுமானிக்கவில்லை

இல்லையென்றால் அந்த நறுமணத் திரவியக்க்காரன்

நம் கழுத்தில் ஒரு துளியைத் தடவுவானா

விளம்பரப் பலகைகள் நியானில் கண் சிமிட்டுகின்றன

முகவர்களோ தோளைத் தொட்டு

நம்மைத் திசை திருப்புகிறார்கள்

நெருக்கும் கூட்டத்திற்கிடையே

அக்குளில் திணிக்கப்படும் விலைப்பட்டியல்களை

இடுக்கிக் கொள்கிறோம்

நம்மை தடுமாறி விழவைக்க முயன்றது

ஒரே அச்சில் வார்க்கப்பட்டு

மலைபோல் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் போணிகள்தான்

இப்போது அந்தச் சிறிய சப்பாத்தி சுடும்

இயந்திரத்தை உற்றுப் பார்த்துவிட்டு

ஒரு இரயில் நிலைய முகப்பில்

வெளியேறும் பாதையில் நடந்துகொண்டிருக்கிறோம்

நம்மிடம் ஒரு சிறிய சீப்பும்

எளிதில் உடைந்துவிடக்கூடிய ஒரு பேனாவும்

சில இலவசக் கூப்பன்களோடு

மெல்லிய நறுமணமும் வீசுகிறது

கையில் பணமில்லாமல் ஏன் உள்ளே போகிறோம்? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நுகர்வுக் கலாச்சாரத்திற்குள்தான் வாழ வேண்டியிருக்கிறது. நம்மிடமும் திணித்துவிடுகிறது அவர்களின் விளம்பரங்களையும் மெல்லிய நறுமணங்களையும். உலகமயச் சூழல் உருவாக்கும் அபத்தமும் அந்நியமாதலும்இந்தக் கவிதையில் அற்புதமாக வெளிப்படுகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தில் வீடுகளில் பொருட்கள் குவிந்து மனிதர்களை நெருக்குகின்றன. பெருநிறுவனங்கள் பெருகி, சாமானிய பெருவாரி மக்கள் ஒருவகையில் இரண்டாம்தரக் குடிகளாக, சுரண்டப்படுபவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.

கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் சாக்ரடீஸ் காலத்து மக்களுக்கும் இன்றைய மக்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. அன்றைய அரசியல் தான் இன்றும் இருக்கிறது. ஜார்ஜ் ஆர்வெலின் விலங்குப் பண்ணையை எந்தக் காலத்துக்கும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். எதுவும் மாறவில்லை. என்ன மாறியிருக்கிறது என்று பார்த்தால் அறிவியல் வளர்ச்சியினால் நவீனமாகியிருக்கிறோம். அவ்வளவுதான். நவீன வாழ்க்கை நமக்கான வெளியைக் குறைத்து மேலும் பரபரப்பானவர்களாக, பல நல்ல விசயங்களைத் தவற விடக்கூடியவர்களாக ஆக்கியுள்ளது.

பரபரப்பாக இயங்கும் ஒரு கடைவீதியில் கூடக் கவிதையைக் கண்டெடுக்கலாம். தலைக்குமேல் வானம் எப்போதும் திறந்துதான் கிடக்கிறது. கவிதைக்கும் உங்களுக்கும் இடையில் ஒரேயொரு கதவுதான் இருக்கிறது. அதைத் திறந்து வையுங்கள். நன்றி, வணக்கம்.

(பொருநை இலக்கிய விழாவையொட்டி, கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *