ஒரு வாசகர் பாதையோரம் சக பாதசாரிக்காக அல்லது தன்னை அழைத்துச் செல்லும் தொலைதூரம் செல்லும் யாத்ரீகருக்காக, தொலைதூரம் சென்று வந்த யாத்ரீகருக்காகக் காத்திருக்கும் ஒருவர். யார் வந்தாலும் உடன் நடக்க அவர் தயாராய் இருக்கிறார். சிலர் அவரோடு உரையாடாமல் தனக்குள் உரையாடியபடி சென்றுவிடுகின்றனர். சிலர் கொஞ்சதூரத்திலேயே விட்டுவிட்டு மறைந்துவிடுகின்றனர். நீண்ட பயணத்தையே ஒரு வாசகர் எதிர்நோக்குகிறார். அப்படி கூட்டிச் செல்லும் எழுத்தாளரை அவர் கொண்டாடுகிறார்.
பா. திருச்செந்தாழை அப்படி கூட்டிச் செல்லும் யாத்ரீகர். சொற்கலை செம்புப் பானையை துலக்கியெடுத்துக் கழுவி வெயிலில் காயவைப்பதுபோல இட்டு வைக்கிறார். கவிஞர்களால் எத்தனை முயன்றும் இதைத் தவிர்க்க முடிவதில்லை. உருவகங்களும் படிமங்களும் அவர்களது ஆதார பலங்கள். ஆசிரியரின் நடை ஒருவகையில் ஜெயமோகனையும் வண்ணதாசனையும் கலந்துவைத்ததுபோல இருக்கிறது. கதை நிகழும் களமும் காலமும் விரிந்ததாய் இருந்தாலும் சின்னஞ்சிறு விசயங்களில் காணும் அக வெளிச்சத்திலேயே மையம் கொள்கிறார்.
இந்தத் தொகுப்பை வாசிக்கும் முன்பாக மின்னிதழில் வந்த இவரது மூன்று கதைகளை வாசித்திருக்கிறேன். டீ-ஷர்ட்,, துடி, துலாத்தான்.. டீ-ஷர்ட் கதை கவித்துவமாக முடிந்திருந்தாலும் எதற்கு இந்த அக்கப்போர் என்றொரு கேள்வியை எழுப்பியது. கணவனை விட்டுப் பிரிந்து இன்னொருவனுடன் வாழும் மனைவி. ஏனென்று காரணம் புரியாமல் கணவன் குழம்புகிறான். அதற்கு விடைதேடி, அவர்களை அல்லது அந்தக் காதலனைக் கொல்வதற்காக வீட்டிற்குச் செல்கிறார்கள். ஆனால், ஏன் அப்படி ஓடிப்போனாள் என்பதற்கான பதில் கணவனின் பார்வையிலிருந்து விவரிக்கப்படும் கதையிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. அதற்கப்புறமும் அந்தக் கணவன் உடன் அமர்ந்திருக்கும் காவல்துறை அதிகாரியிடம் ஏன் என்று குறுஞ்செய்தியில் கேட்பது கதாசிரியர் அதைச் சாக்கிட்டு ஒரு பத்தி எழுதி வைப்பதற்காக என்பதுபோலத் தோன்றியது.
துடி நல்ல கதை. சமீபத்தில் வெளிவந்த கூழாங்கல் குறும்படத்தின் நிலப்பரப்பையும் அதில் நாயககனாக நடித்த கறுத்தடையானையும் கற்பனை செய்துகொண்டேன். இன்னாசி நம் கண்களுக்கும் வெக்கையேற்றி புழுதிக்காட்டில் வெயிலுக்குள் திரியும் அனுபவத்தையும், ஊர்க்கோடியில் முறைத்தபடி நிற்கும் காவல் தெய்வத்தையும் உயிரூட்டி விடுகிறான்.
துலாத்தானில் அய்யாவுவின் ஒரு தட்டில் நிரந்தரமாய் நிற்கும் எடைக்கல்லாய் மனநலம் குன்றிய பரமு. இன்னொரு புறம் அந்தப் பள்ளத்தை ஈடுகட்ட ஓடியாடித் திரிந்து பார்க்கும் தரகு. தராசுத் தட்டுகள் இரண்டும் இணையாக இருக்கும் புள்ளியில் யதார்த்தம் முகத்தில் அடித்து வீழ்த்துகிறது. சிசிபஸ் பாறையை மலையுச்சிக்குக் கொண்டுசெல்லும் நாளில்தான் அழுதிருப்பான். அது உருண்டுண்டு அடிவாரத்தைத் தொடும்போதல்ல. இந்தக் கதையில் ஒரே குறை அல்லது எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பு அந்தத் தரகு வெற்றியா தோல்வியா என்பதுவரை நீட்டித்திருக்கலாம். வெற்றியானாலும் தோல்வியானாலும் ஒன்றுமில்லை. ஆனால் அதுவரை நீட்டித்திருக்கலாம்.
த்வந்தம் கதையாகட்டும், விலாஸமாகட்டும் இரண்டிலும் கள விபரங்களைக் காட்டிலும் அதை ஆடுபவர்களின் மனோபாவங்கள், மனவோட்டங்களே முன்னிலைப்படுத்தப்படுவதால் அந்தத் தொழிலின் சாரம் நமக்கு எட்டாமல் போய்விடுகிறது.
மஞ்சள் பலூன்கள், த்வந்தம், திராட்சை மணம் கொண்ட பூனை இவை எல்லாமே ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போர்கள். இத்தகைய போரை நிஜமாகவே பெண்ணும் நடத்துகிறாளா என்று ஆச்சரியமாக இருக்கிறது. இவை ஒருவகையில் அயற்சியூட்டுகின்றன.
காப்பு சிறுகதையில், “ஏதேனும் ஒரு கணத்தை, நிறத்தை, சொல்லை இல்லையென்றால் யாருடைய அமைதியையாவது பராக்கு பார்ப்பவனாக, அப்படிப் பார்க்கின்ற நேரத்தில் அதன் கரைமீது உலவிவிட்டு வரத் தெரியாமல் அதன் சுழிகளுக்கு நீந்திச் செல்பவனாக அங்கே மீண்டும் பிறப்பவனாக நான் காலத்தில் தேங்கிவிட்டவனாக நின்றிருந்தேன்” என்று ஒரு பத்தியில் கதைசொல்லி தன்னைப் பற்றி சொல்கிறான். எதையாவது சிந்திப்பதாய் இருந்தால் இப்படித்தான் குழிக்குள் விழுந்த யானையாய் மனம் அதற்குள்ளேயே சுற்றிக்கொண்டு கிடக்கும். யதார்த்தத்தில் லௌகீக நாட்டத்தில் இருப்பவர்கள் அல்லது நல்ல சம்பாத்தியத்தோடு, அதைப் பெருக்குவதில் கவனத்தோடு இருக்கும் யானைகள் மட்டும் குழிக்குள் விழுவதே இல்லையா அவை பறக்கும் யானைகளா என்றும் கேள்வி வருகிறது. இந்தக் கதை கதைசொல்லியை ஒரு தேய்ந்துபோன சித்திரமாய், இடம் நகராத மரமாய்க் காட்டுகிறது. அவன் வாழ்வில் தோல்வியடைந்தவன். தோல்வியடைந்ததற்கு இப்படி குழிக்குள் விழுந்த யானையாய் ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு அவன் மனம் கிடப்பது காரணமாகச் சொல்லப்படுகிறது. நாமெல்லாம் இப்படி குழிக்குள் விழாமல் இருக்க நமக்கென பதுங்குகுழிகள் கட்டிக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவ்வப்போது அதன் நிழலடியில் அமர்ந்து படுத்துறங்கி பின் திடுக்கிட்டு விழித்து ஓடி இரை தேடச் செல்லும் யானை.
நட்சத்திரங்களை ருசிப்பவர்கள் ஒரு சிறுகதைக்கு எழுதி வைத்த குறிப்பைப்போல, கச்சாப்பொருளாக மட்டும் இருக்கிறது. ‘அவற்றின் கண்கள்` கதையும் நம்மிடம் சொல்லிக்கொள்ளாமலேயே முடிந்துவிடுகிறது.
நிழல் இழந்த முற்றம் சிறுகதையின் முதல்வரி இப்படித் தொடங்குகிறது, ‘அம்மா மரணித்து விட்டாள். மதிய மழைக்குப் பிந்தைய ருசியும் நிறமுமில்லாத அமைதி வீடெங்கும் விரிந்திருந்தது’. இந்த வரியிலேயே மனம் வெகுநேரம் சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு மரணத்துக்குப் பிந்தைய வெற்றிடத்தையும் மறைக்கப்படும் அல்லது மறதிக்குச் சென்றுகொண்டிருக்கும் துக்கத்தையும் இத்தனை அழகாக ஒரு கவிஞரால் மட்டுமே எழுதமுடியும்.
ஓர் எழுத்தாளர் ஒரு புனைவை முன்வைப்பதற்குக் காரணம் அது ஒரு வியப்பாக, கேள்வியாக, ஒரு தொந்தரவாக இப்படி ஏதோ ஒன்றாக இருக்கிறது. பிரமிள் கவிதை எழுதப்படுவதற்கு அடிமன அவத்தை மூலமாக உள்ளது என்று குறிப்பிடுகிறார். புனைவுகளுக்கு அல்லது பொதுவாக படைப்புகளுக்கு என்று சொல்லலாமா? இதுவே மூலம். சொல்வதற்கான அவசியமே இன்றி எதற்கு ஒருவர் எழுதப்போகிறார்? அப்படியான எழுத்து வணிக எழுத்தாகத்தானே இருக்க முடியும்? அதாவது சுய உந்துதல் இன்றி, வாசகர்களுக்கென எழுதும்போது அது அவர்களைத் திருப்திப்படுத்தும் எழுத்தாகிறது.
கண்முன்னே 180 பாகையில் விரிந்திருக்கும் காட்சியில் குறிப்பிட்ட இடங்களில்தான் அழகு அல்லது கவனப்படுத்த ஒன்று ஒளிந்திருக்கிறது, அதைக் கண்டுகொள்பவரே நல்ல புகைப்படக் கலைஞர். அதில் கவித்துவம் இருக்கும். இப்படி அக உந்துதலில் இருந்து எழும் படைப்பு நமக்குத் தருவது கவிதானுபவம். புனைவெழுத்தாளர்கள் எழுதும் புனைவெழுத்து கவிஞர்கள் எழுதும் புனைவெழுத்தைவிட கொடுக்கப்படும் சிறுகதை, புதினம் என்ற வடிவத்துக்கு உகந்தது என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. அபத்த நகைச்சுவையான கன்னி நாவலை பிரான்சிஸ் கிருபா அல்லாது வேறு புனைவெழுத்தாளர் கையாண்டிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்றுகூட ஒருசாரார் சொல்கிறார்கள். கன்னி நாவல் தமிழின் தலைசிறந்த நாவல்களுள் ஒன்று. கன்னி நாவல் தரும் வாசிப்பனுபவத்தை வேறு எந்தப் புனைவெழுத்தாளராலும் தந்திருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லமுடியும். கவிஞர் புனைவெழுத்தாளரைக் காட்டிலும் மொழிக்கு மேலும் நெருக்கமானவர். மிகச் சரியான சொல்லை எடுத்து வரும் அவசம் அவருக்கு அதிகம். அதற்கு இணையாக வாசகர்தான் படைப்பை நோக்கி நெருங்கிவர வேண்டும். அதற்கு மனதளவில் தயாராய் இல்லாதவர் இந்தப் பழம் புளிக்கும் என்றுதான் சொல்வார்.
முடிவற்ற நட்சத்திரங்களின் வசீகர வெளிச்சங்கள் கதையில் வரும் ஜோசபின் ஒரே நேரத்தில் ஏவாளாக, ஆப்பிளாக, பாம்பாக அவனுக்குத் தோன்றுகிறாள். பதின்பருவ மனதின் அலைக்கழிப்புகளை அழகான கவிதையாக வரைந்திருக்கிறார். இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்றாக தேவைகள் கதையைச் சொல்லலாம். பொதுவாக பா. திருச்செந்தாழையின் கதைகளில் கடைசி வரிகள் முத்தாய்ப்பாக கவிதையின் கடைசிவரிகளைப்போல அமைந்துவிடுகின்றன. வடிவம் எப்படி இருக்கிறது பழையதா புதியதா என்பதெல்லாம் யாருக்கு வேண்டும்? அந்தக் கவிதானுபவத்தை, முழு ஆடை அவிழ்ப்பாக, ஒரு தரிசனமாக அவை நிகழ்த்துகின்றன.
அதேபோல இன்னொரு சிறந்த சிறுகதை `படையல்`. அவல நகைச்சுவையாக கதை முடிந்தாலும் இவரது கதைகள் அனைத்திலும் கதை மாந்தர் எல்லார் மீதும் புலப்படாத அருள் பொழிந்தபடி இருப்பதை வாசிக்கையில் உணரமுடிகிறது. அது அவர் துலங்கிவைக்கும் சொற்களில் நாம் உணரமுடிகிறது. இந்த அன்பு அவருக்கு ஒரு தளையும்கூட.