முதற்கனல் – வாசகப் பார்வை

நாகர்குலத்தைச் சேர்ந்த தாயான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு தன் குலக்கதையையும் தனது வாழ்க்கைக் கதையையும் சொல்லி அவனை அஸ்தினபுரிக்கு ஆற்றுப்படுத்துவதில் தொடங்குகிறது, ஜெயமோகனின் மகாபாரத வரிசையின் முதல் நாவலான முதற்கனல்.

மகாபாரதத்துக்குத் தொடர்பில்லாத கதாபாத்திரத்தில் ஏன் நாவல் தொடங்குகிறது என யோசிக்கும்போது, அஸ்தினபுரிக்கு வந்துசேருகிறான் ஆஸ்திகன். அங்கே, ஜனமேஜய மன்னன் நாகங்களையெல்லாம் கொல்ல மேற்கொள்ளும் சர்ப்பசாந்தி யாகம் நடந்துகொண்டிருக்கிறது.

காவியமாக அல்லாமல், நாவல் வடிவில் எழுதப்பட்டிருப்பதால் முதற்கனல் முதல் அனைத்து நூல்களையுமே மகாபாரதத்துக்கு வெளியில் தொடங்கி இரண்டாவது மூன்றாவது அத்தியாயத்தில் கதைக்கு வருவதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன்.

ஜனமேஜயன் சர்ப்பசாந்தி யாகத்தை ஆஸ்திகன் தனது புத்திக்கூர்மையால் தடுத்துநிறுத்த, ஆஸ்திகன் மேல் கோபத்திலிருக்கும் ஜனமேஜயன் முன் அவன் குலமூதாதையான வியாசர் அழைத்துவரப்படுகிறார். நூற்றாண்டுதாண்டியும் சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும் வியாசர் தீமைகளற்ற நன்மை மட்டுமேயான ஒரு உலகம் சாத்தியமா என்ற ஜனமேஜயன் வினாவுக்கான விடையாக மகாபாரதக் கதையை விவரிப்பதாக கதை தொடங்கி, குருஷேத்திரப் போருக்கான முதற்கனல் எப்படி ஒருங்கியது என விவரித்துச் சொல்லத் தொடங்குகிறார்.

அஸ்தினபுரியின் நோயுற்ற இளவரசன் விசித்திரவீரியனுக்கு காசி நேரடியாக மகற்கொடை மறுக்கமுடியாமல், இளவரசிகளின் மணத்தன்னேற்புக்கு ஏற்பாடு செய்ய, பிதாமகரான பீஷ்மர் காசிக்கே சென்று மணமகள்களைத் தூக்கிவருகிறார். அவர்களில் மூத்த இளவரசியான அம்பை மட்டும் செளப நாட்டு அரசன் சால்வனை விரும்புவதாக வாதிட்டு வெல்ல, அவளை கங்கைக் கரையில் இறக்கிவிட்டுச் செல்கிறார் பீஷ்மர்.

பீஷ்மரிடம் தோல்வியடைந்த சால்வன் அம்பையைக் கைவிட, திரும்பிவரும் மகள் அம்பையை காசி மன்னனும் ஏற்கமறுக்க, வேறுவழியின்றி பீஷ்மரையே மணமுடிக்கும்படி் அம்பை கோருகிறாள். அவரும் அவளை உதாசீனப்படுத்தி அனுப்ப சிதையேறி மடிகிறாள். நெருப்பில் மடிந்த அம்பை மக்கள் நினைவில் தெய்வமாகிறாள். அஸ்தினபுரிக்கும் பீஷ்மருக்கும் எதிராக விதி ஆயுதங்களை எப்படி மெல்ல மெல்லக் கூர்தீட்டத் தொடங்குகிறது என்பதை முதற்கனல் விவரிக்கிறது.

இந்த பிரதான கதைக்குள் மடிப்பு மடிப்பாக சத்யவதியின் கதை, பீஷ்மரைப் பிறப்பித்த கங்கையின் கதை, சந்தனுவின் கதை, சந்தனுவின் மைந்தர்களான சித்ராங்கதன், விசித்திரவீரியனின் கதை, வியாசர் மூலம் நீளும் குருகுல தொடர்ச்சியின் கதை, அம்பையின் கட்டற்ற அலைச்சல், அவள் மேல் பக்திகொள்ளும் குகனின் கதை, சிகண்டியின் கதை, உத்தர, தட்சிண பாஞ்சாலத்தின் கதை, அக்னிவேசரின் கதை, என அடுக்கடுக்காய் இதழ்களுக்குப் பின் இதழென அமைத்து ஒரு அரிய மலரை, அதன் வாசத்தை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

சிறு வயதில் சிறுவர் இதழ்களில் துண்டுதுண்டாக அறிமுகமான கதை மகாபாரதம். அதன்பின் கர்ணன் திரைப்படமாக அறிமுகமானது. பின் பள்ளி நண்பன் வீட்டில்தான் மகாபாரத்தை சிறு புத்தகமாய் முழுமையாகப் படித்தேன். பைரப்பாவின் கன்னட நாவலான பர்வம் நாவல், மலையாள நாவலும் பீமனின் கதையுமான இரண்டாம் இடம் என வேறுபட்ட மகாபாரதக் கதைகளை வாசித்திருந்தாலும், அவையனைத்திலும் அடர்த்திமிக்கதென ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசையைத்தான் சொல்லவேண்டும்.

முதற்கனலில் அழுத்தமாக வந்து விழுந்திருக்கும் சித்திரங்களென பீஷ்மரையும், அம்பையையும், சிகண்டியையும் சொல்லலாம். உயிர்த் தியாகம் செய்யும் காட்சிகளை உயிர்ப்புள்ள சித்திரமாய்த் தீட்டுவதில் ஜெயமோகனின் எழுத்துகளுக்கு வலுவதிகம். அதற்கேற்ப அம்பை பித்தியாக உயிருடன் எரியும் காட்சிகளையும், இறுதியில் சிதையேற முடிவெடுத்து நெருப்புக்குள் புகும் காட்சிகளையும் செம்மையாய் செதுக்கியிருக்கிறார்.

பிரதான சித்திரத்தின் பின்னணி விவரங்களென விசித்திரவீர்யன், காசி மன்னன் பீமதேவன், அவனது அரசி பிரதிமா, அஸ்தினபுரத்தின் அமைச்சர்கள், பேரரசி சத்யவதி, சால்வ நாட்டுக்கும், காசிக்கும், அஸ்தினபுரிக்கும் அம்பையை கொண்டுசேர்க்கும் குகன் நிருதன், அமைச்சரும் விசித்திரவீர்யனின் நலன் நாடுபவருமான ஸ்தானகர், அவனைக் குணப்படுத்த தென்னகத்திலிருந்து வரும் அகத்தியர் மரபுவழித் தோன்றல் மருத்துவர் என அலையலையாய் எழுந்துவருகின்றன கதாபாத்திரங்கள்.

இதுபோதாதென நிமித்தம் நோக்கும்போதும், குலவழி விவரிக்கும்போதும், மணவறை ஒருக்கும்போதும், வியாசரை சந்திக்க பீஷ்மர் கிளம்பும்போதும், ஏன் இந்த ஊழென ஒருவரின் கதையை விவரிக்கும்போதும் பல கதைகள் இடையிடையே சொல்லப்படுகின்றன.

ஊழின் நெருப்பில் அம்பையின் வாழ்வு எரிந்தடங்குவது பிரதானமாகச் சொல்லப்பட்டாலும், தந்தையின் பெண்ணாசைக்காக துறவறமேற்கும் பீஷ்மர், அம்பாலிகை, அம்பிகை, சிவை, விசித்திரவீர்யன், தேவாபி, பால்ஹிகன், தன் பெண் பித்தியாய் அலைவதைப் பொறுக்கமுடியாமல் துறவுபூண்டு அலையும் காசி அரசி பிரதிமா என ஒவ்வொருவர் வாழ்விலும் ஊழின் கனல் நாவலெங்கும் தகித்துக்கொண்டிருக்கிறது.

குருகுலத்தின் தொடர்ச்சிக்காக காசி இளவரசிகளைக் கடத்திவந்த பீஷ்மர், மக்களின் பழிச்சொல் விழும் நாட்டை விட்டு விலகியிரு எனும் சத்யவதியின் நுண்ணிய அவமதிப்பை எண்ணி நாட்டை விட்டு வெளியேறி நாடெங்கும் அலையத் தொடங்குகிறார். பீஷ்மரை அழித்தொழிக்க அம்பைக்குச் செய்த சத்தியத்துக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து போர்க்கலைகளைப் பயிலும் சிகண்டி, பீஷ்மனின் கடைசித் துளி ஆழம்வரை அறியாமல் அவனை வெல்வது இயல்வதல்ல எனும் அக்னிவேசரின் அறிவுரை கேட்டு பாரதமெங்கும் அலைந்துதிரிந்து, பீஷ்மருடன் சரிக்குச் சரி மோதிய பால்ஹிகனை சிபி நாட்டில் சென்று சந்திக்கிறான்.

திரும்பி வரும் வழியில் பாலைவன இருளில் பீஷ்மரும் சிகண்டியும் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாதபோதும், மற்றவர் யாரென அறிந்திரு்க்கிறார்கள். பீஷ்மரை வெல்லும் இலக்கு நிறைவேற, பீஷ்மரே சிகண்டியை ஆசிர்வதிக்கும் இடத்தில் முதல் நாவல் முற்றுப்பெறுகிறது.

வாசிப்புக்குப் பின் மனதில் எஞ்சிய காட்சிகள் எதுவென தொகுத்துப் பார்த்தால், எல்லோரும் கைவிட பீஷ்மனைத் தேடிவந்து அம்பை மேற்கொள்ளும் சந்திப்பு, மணமஞ்சத்துக்குச் சென்றால் இறந்துவிடுவான் எனத் தெரிந்தும் அவனை அனுப்பும்போது சத்யவதியும் மேற்கொள்ளும் உரையாடல், சந்ததி தழைக்க வியாசரை அழைத்துவருவதற்காக, பீஷ்மனை சாதுர்யமாக ஆற்றுப்படுத்தும் சத்தியவதியின் புத்திக்கூர்மை, அம்பிகைக்கும் விசித்திரவீர்யனுக்குமான முதல் சந்திப்பு இவையெல்லாம் நினைவில் எழுகின்றன. அசல் மகாபாரதத்தில் இந்தக் காட்சிகளெதுவும் இருக்காதென்றே நம்புகிறேன். இருந்திருந்தாலும் அவை கோட்டுச் சித்திர வடிவிலே இருந்திருக்கவேண்டும்.

வால்மீகி ராமாயணத்தில் அமையாத சில சிறப்புகள் கம்ப ராமாயணத்தில் அமைந்திருப்பதுபோல, மகாபாரதக் கதைகளிலே அமையாத பல நுட்பமான தருணங்களுடன் மகாபாரதத்தை தன் வெண்முரசு காவியத்தில் அமைத்து முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். அதற்கான அழகிய செதுக்குகளுடன் கூடிய வாசலாக அமைந்திரு்க்கிறது முதற்கனல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *