நண்பர் கீரனுார்

புதிய பார்வையில் ஒரு ஆறு மாத காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். வருடம் சரியாக நினைவில்லை. 2005 அதையொட்டிய வருடங்களாக இருக்கும். தமிழகத் தடங்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும், தற்போது தாய் வலைத்தளம் நடத்திவருபவருமான திரு மணா, அப்போது புதிய பார்வையின் பொறுப்பாசிரியராக இருந்தார்.

நண்பர் சுந்தரபுத்தன் பரிந்துரையில் எனக்கு பணி கிடைத்திருந்தது. புதிய பார்வையில் இடம்பெற வேண்டிவரும் கதை, கவிதைகள் ஆகியவற்றைப் படித்து அவற்றில் பிரசுரத்துக்குத் தகுதியானவைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு என்னுடையது. அதேபோல இந்தக் கவிதைகளுக்கு பொருத்தமானதாகப் படும் படங்களை கூகுள் செய்து சேகரித்து வைப்பதையும் என் பணியாக வரித்துக்கொண்டேன்.

கணினிப் பயன்பாடு பரவலாகியிருந்தாலும், கணினியில் அமர்ந்து அவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கு புதிய பார்வையில்தான் முதன்முதலாக வாய்த்த நினைவு. விதவிதமான செய்திகளைத் தேடியெடுத்துக் கொட்டும் கூகுளின்மீது ஒரு பிரமிப்பும் மயக்கமும் இருந்தது. அதன் பிம்பங்களுக்கான தேடுபொறியில் இந்திய ஓவியர்கள், தைலவண்ண ஓவியங்கள், சார்கோல் ஓவியங்கள், பிகாஸோ ஓவியங்கள் என எனக்குத் தெரிந்த வார்த்தைகளை இட்டு வந்துகுவியும் ஓவியங்களில் இருந்து படங்களைத் தேர்வுசெய்து ஒரு போல்டரில் சேகரித்து வைப்பேன்.

அதேபோல வந்துகுவிந்த கவிதைகளிலிருந்து எனக்கேயான ரசனைகளில் கவிதைகளைத் தேர்வுசெய்து அடுத்த இதழுக்கான கவிதைகளாக, தட்டச்சு செய்பவரிடம் கொடுத்து வாங்கிவைப்பேன். அப்படி அன்றைக்கு வந்துவிழுந்த கவிதைகளில் கவிஞர் ஜீவன்பென்னி கவிதைகளை நிறைய பார்த்த நினைவு. சிறுகதைகளை வாசிக்கும்போது என் கையில் சிக்கியதுதான் அந்தக் கதை.

கீரனூர் ஜாகிர்ராஜா என்று பெயருடன் இருந்த அந்தக் கதை என்னை வெகுவாகவே ஈர்த்துவிட்டது. வெகுஜன இதழ்களில் வாசித்திராத இஸ்லாமியப் பின்னணியுடனான அந்தக் கதை, தன் வயது வந்த மகளின் திருமணத்துக்கு என்று கூறி இரந்துண்ணும் ஒரு தகப்பனைப் பற்றிக் கூறும் கதை. சுவடுகள் கதை முதல் வாசிப்பிலேயே பிடித்திருந்தது. அடுத்த இதழுக்கு என பிரசுரத்துக்குத் தேர்வுசெய்திருந்தேன்.

ஆனால், என்னைப் பணியில் சேர்த்திருந்த சுந்தரபுத்தன்தான் அங்கே எனக்கு முன்பு துணை ஆசிரியராக இருந்து பொறுப்புகளைக் கவனித்துவந்திருந்தார். அவர் வேறு பணிக்குச் சென்றிருந்தபோதும், வரும் இதழுக்கு மட்டும் ஒரு சிறுகதையைத் தேர்வுசெய்துவிட்டதாகவும், அடுத்த இதழுக்கு நீங்கள் தேர்வுசெய்த கதையைப் போட்டுக்கொள்ளலாம் எனச் சொல்லி ஒரு கதையைச் சிபாரிசு செய்ய மறுக்கமுடியவில்லை. இருந்தபோதும் கீரனூர் ஜாகிர்ராஜாவின் அந்தக் கதையைத் தட்டச்சு செய்து அடுத்த இதழுக்கு ஆயத்தம் செய்துவிட்டேன்.

அடுத்த இதழுக்கு பொறுப்பாசிரியர் மணா ஒரு கதையைப் போடலாம் என பரிந்துரை செய்ய, கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அந்த இதழுக்கும் ஜாகிரின் கதையைத் தள்ளிவைத்தேன்.

கடைசியாக கீரனூர் ஜாகிர்ராஜாவின் கதையை இந்த இதழில் போட்டுவிடுவது என தீர்மானகரமாக முடிவுசெய்திருக்கையில், புதிய பார்வை இதழுக்கு அன்பிதழாக வரும் ஒரு சிற்றிதழில் அந்தக் கதையைப் பார்த்தேன். நான் தேர்வுசெய்து, டைப் செய்து ஆயத்தம் செய்துவைத்திருந்த அதே கதை. பக்க அளவுக்காக அந்த இதழ் கதையை சற்று எடிட் செய்திருந்ததாகவும் நினைவு. புதிய பார்வைக்கு பரிசீலனைக்கு அனுப்பிய கீரனூர் ஜாகிர்ராஜா வரவில்லை என்றவுடன் வேறு இதழுக்கும் சிறுகதையை அனுப்பிவிட்டாரோ என்னவோ…

இப்படி கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கு முன்பாக, அவரது எழுத்துதான் எனக்கு அறிமுகமாகியிருந்தது.

புதிய பார்வையை விட்டு நின்றபின், நான் செந்தில்நாதனின் ஆழி பதிப்பகத்தில் சில மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். பெரிய மொழிபெயர்ப்புத் திறமைகளைக் கொண்டிராதபோதும் என் மீது நம்பிக்கை வைத்து பணியளித்திருந்தார் செந்தில்நாதன். லேங்ஸ்கேப் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு பணிகளைச் செய்துவந்திருந்த அவர், அந்தக் காலகட்டத்தில்தான் ஆழி பதிப்பகத்தைத் தொடங்கி நிறைய புத்தகங்களை பதிப்பித்து புதிய வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில்தான் புதிய பார்வையில் பணியாற்றும்போது அறிமுகமான நண்பர் கூத்தலிங்கம், என்னைத் தொடர்புகொண்டு கல்வித் துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்பான எய்டு இந்தியா நிறுவனம், தங்களது கல்விப் பணிகளை பதிவுசெய்வதற்காகவும், குழந்தைகளின் படைப்புகளை வெளிக்கொண்டுவருவதற்காகவும் ஒரு பத்திரிகையொன்றைக் கொண்டுவருவதாகவும் அதைப் பார்த்துக்கொள்ள பத்திரிகைப் பணியில் பரிட்சயமுள்ள துணை ஆசிரியர் தேவையெனவும், அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்றும் சொல்லி அந்த வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னார்.

சில காரணங்களால் ஆழி பதிப்பகத்திலிருந்து வேறு வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நான், உடனே அந்த வேலைக்கு விண்ணப்பித்தேன். இரண்டொரு நாளில் அந்த வேலைக்குத் தேர்வானேன். அங்கே பணிக்குச் சென்ற முதல் நாளிலேயே சந்தித்தவர்தான் கீரனூர் ஜாகிர்ராஜா.

நான் அவரைச் சந்தித்த அன்றே அங்கிருந்த சில நண்பர்களுக்கும் ஜாகிருக்கும் ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது. கீரனூர் ஜாகிர்ராஜாவின் கையெழுத்து முத்து முத்தாக அழகாக இருக்கும். நேராக குட்டிக் குட்டி சதுரங்களை அடுக்கிக்கொண்டே போனதுபோல் படிப்பவருக்கு எந்த இக்கட்டையும் தராத அழகிய கையெழுத்து. எழுத்தாளர் கையெழுத்தென்றால் அத்தனை தெளிவாக இல்லாமல் முண்டும் முடிச்சுமாக, எளிதில் விளங்காதவண்ணம் இருக்கவேண்டும் என அபிப்ராயம் அந்த அலுவலகத்தில் சிலருக்கு. அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்ல, அப்படியெல்லாம் எந்த விதியும் இல்லை என்று என் தரப்பு அபிப்ராயத்தைச் சொன்னேன்.

அப்போது அவருடைய கருத்த லெப்பை, மீன்காரத் தெரு நாவல்கள் வெளியாகியிருந்ததாக ஞாபகம். அங்கு அவருடனான பரிச்சயம் வளர்ந்தது. அவரிடமே அவரது கருத்த லெப்பை நாவலை இரவல் வாங்கிப் படித்து, அந்நாவல் குறித்த என் அபிப்ராயத்தை அரைப் பக்க அளவில் எழுதிக் கொடுத்தேன். நாவலைப் பற்றி பேசாமல், உரையாக எழுதிக்கொடுத்ததற்கு காரணம் இருக்கிறது. நான் வசீகரமான பேச்சுக்காரனல்ல. மிகவும் நெருங்கிய நண்பர்களிடம் மட்டும்தான், தயக்கமின்றி உரையாடமுடியும். பரீட்சயமாகி சிறிது நாட்களே ஆகியிருந்த நிலையில், உரையாடுவதைவிட எழுத்தில் அந்நாவலைப் பற்றிய எண்ணங்களை சரியாகச் சொல்லமுடியும் என நினைத்தே எழுதிக்கொடுத்தேன்.

எய்ட் இந்தியாவில், யுரேகா கல்வி முரசு என்ற மாதாந்திரப் பத்திரிகையைப் பார்த்துக்கொள்வதுதான் என் பொறுப்பு. அதுதொடர்பான பக்க வடிவமைப்பை அகல் பதிப்பகத்தின் பஷீர் செய்துகொடுத்தார். அதனால் பக்க வடிவமைப்பு நடக்கும்போதெல்லாம் அவரது அலுவலகத்தில்தான் இருப்பேன். அங்கேயும் ஜாகீர் அடிக்கடி தலைகாட்டுவார் என்பதால், எங்கள் நட்பு வேகமாக வளர்ந்தது.

நான் எய்ட் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் ஜாகீர் துருக்கித் தொப்பி நாவலை எழுதிக்கொண்டிருந்தார். ஒரு நாவலை எழுதுகிறார் என்பதும், அதை பஷீர் வெளியிடப் போகிறார் என்பதும் மெல்ல மெல்ல வெளிப்பட்டது. துருக்கித் தொப்பி என்ற தலைப்பே என்ன காரணத்தினாலோ எனக்கு வசீகரமாகப் பட்டது. அந்தப் புத்தகத்தின் தலைப்புக்காக, பஷீர் முயற்சியிலோ… ஜாகீரின் முயற்சியிலோ அசல் துருக்கித் தொப்பி ஒன்று கொண்டுவரப்பட்டு அதைப் புகைப்படமெடுத்து அட்டைப் பட உருவாக்கம் நடந்ததை எல்லாம் அருகிலிருந்து ரசித்துக்கொண்டிருந்தேன். அதேபோல அந்த நாவல் உருவானதும் பஷீரின் கைகளிலிருந்து அன்பிதழ் ஒன்றைப் பெற்று சுடச்சுட வாசித்துவிட்டு என் அபிப்ராயங்களை இருவரிடமும் பகிர்ந்துகொண்டேன்.

வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வங்களைப் பார்த்துவிட்டு எழுதும்படி பல சமயங்களில் என்னைத் தூண்டியவர் ஜாகிர்ராஜா. ஆனால் மிகச்சரியாக நான் அவரது ஆலோசனைகளைப் பின்பற்றாமல் புறக்கணித்தே வந்தேன்.

புத்தாண்டுக்கு முந்தைய தினம். 2009-ஐ வரவேற்க அவரை எனது அறைக்கு அழைத்திருந்தேன். அப்போது எனது அறை கோடம்பாக்கம் புலியூர் ஹவுசிங் போர்டில் அமைந்திருந்தது. இருவரும் அங்கிருந்து கிளம்பி இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு டாஸ்மாக்கில் ஆளுக்கொரு பீர் போத்தலும், இருவருக்கும் பொதுவாய் மொச்சைபோட்ட நெத்திலிக் கருவாட்டையும் வாங்கிக்கொண்டு புத்தாண்டை வரவேற்க அமர்ந்தோம். அங்கே சில மணித்துளிகள் உற்சாகமாக கழிந்தபின் அங்கிருந்து மெல்ல கால்போன போக்கில் பேசிய படி நடந்துகொண்டிருந்தோம்.

பீரின் உற்சாகம் வடிந்ததுபோல் தோன்றியதால், மற்றொரு ஒயின்ஸில் இரண்டு போத்தல் பீர் பாட்டிலைப் பிடித்துக்கொண்டு வரவிருக்கும் புத்தாண்டின் பொன்னெழில் மங்கிவிடாதபடி பார்த்துக்கொண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலைப் பக்கம் வந்திருந்தோம். பின் அங்கிருந்த மலபார் பிரியாணிக் கடையில் பிரியாணிப் பொட்டலம் வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினோம். பிரியாணியை முடித்துவிட்டு நாங்கள் சிகரெட்டைப் பற்றவைத்தபோது, புலியூர் ஹவுசிங் போர்டின் மீது மட்டுமல்லாமல் மொத்த சென்னையின்மீது புத்தாண்டு அடியெடுத்து வைத்திருந்தது.

எங்கெங்கும் பட்டாசுகள் வெடித்தன. விஷ் எ ஹேப்பி நியூ இயர் குரல்கள் எதிரொலித்தன. பால்கனியில் நின்றுகொண்டிருந்த எங்களை விளித்து, கீழே போய்க்கொண்டிருந்த முன்பின் தெரியாத குரல்கள் எல்லாம் வாழ்த்தின. அதன்பின்பும் ஏறக்குறைய அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டிருந்துவிட்டு புத்தாண்டின் மேலே சரிந்துபடுத்து தூங்கிப்போனோம்.

ஒரு படைப்பாளியாக மட்டுமின்றி இன்னொரு விதத்திலும் ஜாகிர்ராஜா எனக்கு முக்கியமானவர். எய்டு இந்தியா அலுவலகத்தில் பணியாற்றும்போது அங்கே பணியாற்றிய எத்தனையோ சக பெண்களின் மீது கண்கள் சென்றிருக்கிறது. அதில் குறிப்பிட்டு ஒரு பெண்ணின் மீது என் கண்கள் நின்றும் நிதானித்தும் தயங்கியும் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

ஒரு பணிநாளில் என் கண்களின் இந்தத் தயக்கத்தையும் ப்ரியத்தையும் கவனித்துவிட்டு, “என்ன சுப்பு, மங்கை மேல உங்களுக்கு ஒரு ப்ரியம் இருக்கும்போல தெரியுதே… நான் வேணா பேசட்டுமா?” என்றார். முதலில் மறுத்தாலும், விஷயத்தை நான் பேசுவதைவிட, ஜாகீர் தெளிவாகப் பேசுவார் என்ற நம்பிக்கை உண்டானதால், சற்று நேரத்திலே சரியென்றேன்.

சொன்னபடியே, மங்கை தனியாக இருக்கும்போது அவள் மீதான என் விருப்பத்தை அவளுக்கு கோடி காட்டிப் பேசியிருக்கிறார். பின், என்னைத் தொடர்புகொண்டு விஷயத்தை அவளுக்குத் தெரிவித்துவிட்டேன். இனி உன் கையில் தான். போய் பார்த்துப் பேசு என்றார்.

அதன்படியே மங்கையைத் தொடர்புகொண்டு பேசினேன். அவள் உடனடியாக சம்மதம் எனத் தெரிவிக்காவிட்டாலும், குடும்ப நிலையையும் தனது அண்ணனிடம் (பெரியப்பா பையன்) தெரிவித்து ஆலோசித்துத்தான் முடிவெடுக்கவேண்டும் என்பதையும் தெரிவித்தாள். அதற்கு ஒரு ஆறேழு மாதங்கள் பிடித்தது. முடிவில் இரு தரப்பிலும் பேசிமுடிக்கப்பட்டு எங்கள் திருமணம் நடந்தது.

இன்று என் வாழ்க்கைத் துணையாக மங்கையர்க்கரசி இருக்கிறாளென்றால், ஜாகிர்ராஜாவின் அந்தப் பரிவான முயற்சியின்றி அது சாத்தியமாகியிருக்காது.

திருமணத்துக்குக் கொஞ்ச நாட்களுக்குப் பின் ஜாகீர், மெல்ல மெல்ல சென்னையிலிருந்து தஞ்சையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். அடிக்கடி சென்னை வந்துபோனாலும், அவரது இருப்பு தஞ்சையில்தான் என்று ஆகிவிட்டது.

ஒருமுறை சாகித்ய அகாதமி ஏற்பாடு செய்த உரை நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்னை வந்தவர், ஞாபகமாக எனக்கு அழைப்புவிடுக்க நான் அவர் உரைநிகழ்வுக்குப்பின் அவரைச் சந்திக்க தி.நகர் சென்றேன். தி.நகரின் ஜி.ஆர்.டி. குழும ஓட்டல்களில் அவருக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள். நாங்கள் பாண்டி பஜாரில் சந்தித்து அதன் குறுக்குத் தெரு ஒன்றில் மணலில் வறுத்த வேர்க்கடலைப் பொட்டலம் இரண்டை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு பேசியபடி நடந்தோம்.

பின் இருவரும் அவரது அறைக்குத் திரும்பி அந்த சொகுசு ஹோட்டலின் படுக்கையில் கிடந்தபடி பழைய நினைவுகளைப் பேசியபடி கிடந்தோம். ஹோட்டல் உபயம்: சாகித்ய அகாடமி. இத்தகைய அழைப்புகளில் ஒரு கெளரவத் தொகையும் விருந்துபச்சாரமும் மட்டுமே எழுத்தாளர்களுக்கு மிச்சம். இரவு உணவை சாகித்ய அகாடமியே வழங்கியது. நாங்கள் சாப்பிடும்போதுதான் இதுபோல் வேறு சில உரை நிகழ்வுகளுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களை சாகித்ய அகாடமி அழைத்திருந்ததும் அவர்களும் அங்கே சாப்பிட வந்திருந்ததையும் அறிந்தேன். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரும், டெல்லியோ அல்லது அருகிலுள்ள மாநிலத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரும் அங்கே இருந்தார்கள்.

எங்களுக்கு இந்தியோ முழுக்கத் தெரியாது. ஆங்கிலமோ அரைகுறை. இருந்தாலும் அவர்களுடன் பேசமுயற்சித்தோம். உண்மையைச் சொன்னால், எல்லாம் அவர்தான். நான் ஒரு மெளன சாட்சி மட்டும்தான். மொழிபெயர்ப்பு செய்வதால் ஓரளவு ஆங்கிலம் எனக்கு பரிட்சயம். ஆனால் உரையாட முயன்றபோது, அரைகுறையாகத் தெரிந்த ஆங்கிலமும் காலை வாரியது. மாறாக, என்னை விட சிறப்பான உரையாடலை ஜாகிர் நிகழ்த்தினார். ஓரளவு அவர்களுடன் பரிட்சயத்தையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் மங்கை இரண்டாவது குழந்தையைக் கருத்தரித்திருந்த நிறைமாத நேரம். நான் வீடு திரும்புவது குறித்த முடிவிலே இருந்ததால் அன்று இரவு அங்கேயே தங்கிப் பேசிக்கொண்டிருக்கலாம் என்ற அவரது விருப்பத்துக்கு மாறாக, அவரிடம் விடைபெறுவதிலே குறியாக இருந்தேன்.

மறுநாள் அவரிடம் பேசியபோது, வெளிமாநில எழுத்தாளர்களுடன் உரையாடல் நல்லபடியாகத் தொடர்ந்ததாகவும், அதிலும் பெண் எழுத்தாளர் சிறிய நடனம் ஆடும்வரை சந்திப்பு உற்சாகமாக நீண்டதாகவும் விவரித்தார். அன்றைய இரவு சுவாரசியமாக பொழுது கழிந்ததாகக் கூறினார். ஆஹா… நாம்தான் தவறவிட்டோமோ என வருத்தப்படும்படி ஆனது.

அதன்பின் அவருடனான சந்திப்புகள் அவரது சிறுகதைகள், நாவல்களின் வழிதான் என்றாகிவிட்டது. கடைசியாக அவரை அவரது மகள் கல்யாணத்தின்போதுதான் நேரில் பார்த்தது. அதுவும் கல்யாணப் பொறுப்புகள் தோளில் அழுத்த, வந்தவர்களை எல்லாம் வரவேற்று உபசரிக்கும் நெருக்கடிக்கு இடையில் மே மாத வெயிலில் வேர்த்து விறுவிறுத்து நின்றவரிடம் நின்று உரையாடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அவரது படைப்புகளில் நாவல்களையும் சிறுகதைகளையும் தான் பெருமளவில் படித்திருக்கிறேன். மற்றவற்றில் சிலவற்றைத் தவிர பலவும் வாசிக்கவில்லை. வாசித்ததில் என் மனதுக்கு நெருக்கமான படைப்புகள் என்று கருத்த லெப்பை, மீன்காரத் தெரு, துருக்கித் தொப்பி, வடக்கேமுறி அலிமா நாவல்களைச் சொல்வேன். சிறுகதைத் தொகுப்புகளில் என்னை ஈர்த்தவை பெருநகரக் குறிப்புகள், செம்பருத்தி பூத்த வீடு, கொமறு காரியம், ஹலால். மற்ற சிறுகதைத் தொகுப்புகளை நான் வாசிக்கவில்லை என்பது தனிக் கதை.

கல்யாணம் ஆனது முதலே மனைவியை அழைத்துக்கொண்டு தஞ்சை வருமாறு பலமுறை அழைத்திருக்கிறார். அதற்கான சந்தர்ப்பம் அமையாமலே தட்டிப்போய்க்கொண்டேயுள்ளது. நல்ல வாசகராக இல்லை… ஒரு நல்ல நண்பராகவாவது ஒருமுறை தஞ்சாவூர் போய் அவரைச் சந்தித்து வரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *