அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதைகளை ஏற்கெனவே சில மின்னிதழ்களில் படித்திருந்தாலும், தொகுப்பாகப் படிப்பது இதுவே முதல் முறை. எட்டு சிறுகதைகளுடன் வந்திருக்கும் பேரீச்சை தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.
முதல் சிறுகதையான சாய்வு, தன் முன்னால் இருப்பவரிடம் அவர் தொடர்பான பழைய ஞாபகங்களைப் பேசுவதுபோன்ற முன்னிலைத் தொனியில் உருப்பெற்றுள்ளது. கதை நாயகனின் பெயர் கடைசி வரை இடம்பெறவில்லை.
நாயகனின் பெயர் இடம்பெறாதது அனோஜனின் பாணி போல. பல கதைகளில் கதையை விவரிப்பவர் தன்னை விடுத்து மற்றவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விவரித்துச் செல்கிறார்.
பிறழ் உறவு எனப்படும் சகோதரனுடனான பாலுறவுத் தொடர்பு கதையின் மையமாக இருக்கிறது. இங்கிலாந்தில் படிப்புக்காக வந்து தங்கியிருக்கும் நாயகனின் வீட்டிலே, வாடகைக்குத் தங்க வருகிறாள் கிஜூகி முன். அவளும் படிக்க வந்தவள்தான்.
அதிகம் யாருடனுடன் பழகாதவனும், தன் தனிமையின் சுமையைத் தாளாதவனுமான அவனுக்கு நாயகியின் வரவு ஆசுவாசமளிக்கிறது. தனது அறைக்குள் உரிமையுடன் நுழைந்து பேசும் நாயகிக்கு காகிதத்தில் சிகரெட் தூளை நிரப்பி சுருட்டக் கற்றுத்தருகிறான். முதல் சந்திப்பிலேயே அவனுக்கு கஞ்சா கிடைக்குமா எனக் கேட்கிறாள்.
கிஜூகி முன்னின் ஆசைக்காக கஞ்சா வாங்கி வந்து இருவரும் புகைக்கிறார்கள். நாயகியின் முன்கதை தெரியவருகிறது.
தன் பழைய உறவின் குற்ற உணர்வைக் கடக்கநினைக்கிறாள். அதற்கு கஞ்சாவையும் நாயகனையும் பயன்படுத்திக்கொள்கிறாள். அண்ணனின் மீதிருந்த மனச்சாய்வு நாயகன் மீது மாறுகிறது. அது வெறும் பாலுறவு மட்டும்தானா… காதல் உறவா என்பதெல்லாம் அழுத்திச் சொல்லப்படவில்லை.
கஞ்சா, பிறழ் உறவு போன்றவை சரியா… தவறா போன்ற அற விசாரணைகளுக்குள் எல்லாம் கதை செல்லவில்லை. எளிமையாகவும் தீவிரமாகவும் புதிய தலைமுறையின் மன உணர்வுகளைக் காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறது கதை.
மேயர் அல்பிரட் துரையப்பா என்பவரும் தமிழ் புதிய புலிகளின் தலைவரான செட்டி என்பவரும் சுட்டுக் கொல்லப்படுவதன் பின்னணியை போர்வை கதை விவரிக்கிறது. தம்பி, வேலுப்பிள்ளை என்ற இரு வார்த்தைகளின் மூலம் கதையில் இடம்பெறுபவர் பிரபாகரன் என்பதைக் காட்டிவிடுகிறார். ஒரு கதாபாத்திரம்போல கதையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர்வை வருகிறது. தம்பியிடம் ஒருமுறை போர்வையை அளித்த தேவதை, அதைத் திரும்பப் பெறவருகிறாள். ரத்தத்தில் ஊறியிருக்கும் போர்வையை உதறி நீயே வைத்துக்கொள் என்றபடி திரும்பிவிடுகிறாள்.
இந்தப் போர்வை எதைப் போர்த்தி மறைக்கிறது… அல்லது மறைக்கப்பட்டிருந்த எதன் மீதிருந்து விலகி உண்மையைக் காட்டுகிறதெனப் புலப்படவில்லை.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவனான சுயந்தன் யானையைப் பார்க்க ஆசைப்படுகிறான். அந்த ஆசைக்கு கிட்டத்தட்ட தன் குடும்பத்தையே விலையாகக் கொடுக்க நேர்வதை விவரிக்கிறது யானை கதை. சுயந்தனின் கதையைச் சித்தரிப்பதன்வழி இலங்கையின் சூழலையும், அந்தச் சூழல் ஒரு சிறிய மனதை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை காட்டுகிறார். யானை பார்க்க முதன்முதலாக வருகைதந்த நாக விகாரையில் புத்த பிட்சுவின் போதனையோடு கதை முடிவுக்கு வருகிறது. அங்கே ஒரு வண்டியில் பெரிய யானையும் அதன் குட்டியும் வந்துநிற்கிறது. யானையைவிட பிரம்மாண்டமானவற்றையெல்லாம் தரிசித்துவிட்டதால் அதைப் பொருட்படுத்தாது விலகி நடக்கிறான் சுயந்தன்.
பேரீச்சை கதை, ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் நாவலை நினைவுறுத்தியது. இரண்டுக்கும் சில ஒற்றுமைகளைச் சொல்லலாம். போரால் நெருக்கப்பட்டு ராணுவம், விடுதலை அமைப்புகளின் கெடுபிடிக்குள் நசுங்கும் மக்கள் திரள், என்ன விலை கொடுத்தாவது அடைக்கலம் தேடி நாடுகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பிவைக்கையில் பலரது கதைகள் ஒரேபோன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பது இயல்புதான்.
புலிகளின் அமைப்பில் சேர்ந்து பின் நாட்டை விட்டு தப்பியோடும் நதீசனுக்கு உதவியதைத் தவிர வேறெந்தக் குற்றமும்செய்யாத நாயகன், இலங்கை ராணுவத்தால் உயிர் வதைக்கு ஆளாகிறான். ராணுவத்தின் பேராசைக்கு விலைதந்து இங்கிலாந்து சென்று குடியகல்வு அதிகாரிகளின் விசாரணையில் அவன் மீண்டானா… இல்லையா… என்பதைச் சொல்லாமலே நிறைவடைகிறது கதை.
தன் குற்றவுணர்ச்சியிலிருந்து நாயகன் எப்படி விடுபடுகிறான் என்பது குறித்தது கதிர்ச்சிதைவு கதை. குற்றம் நிகழ்ந்த இடம் இலங்கையின் அரியாலை நெடுங்குளமாகவும், விடுதலை கிடைக்குமிடம் இங்கிலாந்தில் அறிமுகமான ஒரு தோழியின் வீடாகவும் இருக்கிறது. லோகா, ஜேம்ஸுக்கு நெருக்கமாவதன் பொறாமையில் அவனது நெற்றியை பீர்பாட்டிலாலே தாக்கும் நாயகன், தன்னை நிலைகுலையச் செய்யும் மன அழுத்தத்தின்போது அவளிடமே சென்று நிற்கநேர்கிறது. இலங்கையில் தங்களை அண்டியிருந்த குடும்பத்திலிருந்து வரும் சக்கரவர்த்தியை நண்பனாக ஏற்பதில் நாயகனுக்கு இருக்கும் தயக்கமும் சக்கரவர்த்தியிடம் இயல்பாகவே இருக்கும் நிமிர்வும் வேறு வழியில்லாத சூழலும் அவனை எங்கே கொண்டு நிறுத்துகிறது என்ற முடிச்சில், கதையின் முக்கிய திருப்பம் பொதியப்பட்டுள்ளது.
அகதியாக பிரான்சில் குடியேறும் நாயகனின் சிதைந்த மணவாழ்வும் அவனது குடும்பத்தின், குறிப்பாக போரால் சூன்யத்துக்குள்ளாகும் ப்ரியத்துக்குரிய அக்காவின் வாழ்வும் ஜடைபோல மாறி மாறிப் பின்னப்பட்டு சித்தரிக்கப்பட்ட கதை ஆடையுற்ற நிர்வாணம். ஏதோ ஒரு வேகத்தில் நாயகனை திருமணம் செய்துகொள்ளும் பெல்லா, குழந்தை பிறந்ததும் மெல்ல மெல்ல மாறுகிறாள். கலாச்சார மாறுதல்கள் அவர்களைப் பிரிக்கிறது. ஐந்து வயதுப் பெண்ணை நிர்வாணமாகக் குளிப்பாட்டுவது, டுத்பேஸ்ட்டை அழுத்திப் பிசுக்குவது, பிரான்சில் இருந்துகொண்டு இலங்கையைப் போல நீரை நிறைய செலவிட்டுக் குளிப்பது, வீட்டுக்குள்ளே புகைபிடிப்பது அத்தனையும் பெல்லாவின் ஆட்சேபத்துக்குரியதாகிறது. ஜடையின் கடைசி முனையாக வரும் பகுதி, சிறகடிப்புடன் பறவைகள் அவன் தலைக்குமேலாக கூட்டம் கூட்டமாகப் பறந்துகொண்டிருக்கின்றன. அவன் தனியாக அமர்ந்து கடந்துசெல்லும் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதாக முடிகிறது.
மனநல மருத்துவரிடம் வந்து தயக்கமாக தன் பிரச்சனைகளை பேசத் தயங்கும் மருத்துவ மாணவன் ஒருவனையும் அவனைப் பேசத் தூண்டி அவன் சிக்கலுக்கு தீர்வளிக்க நினைக்கும் மருத்துவரையும் பற்றிய கதை உதிரம். எப்போதும் தாயை அடிக்கும் தன் தந்தையின் மீது கோபம் கொள்ளும் மகனின் கதையாகத் தோன்றி, வேறு அடுக்குகளுக்கு விரியும் கதை.
போர் நெருக்கத்தில் பதின்பருவத்தினரை ஆண்- பெண் வித்தியாசமின்றி இயக்கத்தில் சேர்க்கத் துடிக்கும் புலிகளுக்குப் பயந்து தன் மகள் அமலாவை வயதில் மூத்த உறவினருக்கு தந்தை கட்டிவைக்க, அவள் என்னவாகிறாள் என்ற கதையே கர்ப்பப்பை. கதையின் தொடக்கத்தையும் முடிவையும் வெட்டியெறிந்துவிட்டு பார்த்தால் மிச்சமிருப்பதே நல்ல கதையாகத் தெரிகிறது.
எப்படிப் பார்த்தாலும் இந்தத் தொகுப்பு முழுமையும் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தவிடத்து ஈழத்தமிழர்களையும் அவர்கள் பிரச்சனைகளையும் குறித்த கதைதான். பாலை வெயிலின் பெருவதையை இனிப்பாக உருமாற்றும் ஈச்சையைப் போல, தான் அறிந்து, கேட்டு, வாசித்த ஈழத்தமிழர்களின் வலியை கதைகளாக மாற்றிப் பதிவுசெய்திருக்கிறார் அனோஜன்.
தொகுப்பில் என்னை பெரிதும் ஈர்த்த கதைகள் சாய்வு, யானை.