க.சுப்பிரமணியன் பக்கங்கள் -வாசக அனுபவமும் விமர்சனமும்

1.பேரீச்சை – அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதை தொகுப்பு
அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதைகளை ஏற்கெனவே சில மின்னிதழ்களில் படித்திருந்தாலும், தொகுப்பாகப் படிப்பது இதுவே முதல் முறை. எட்டு சிறுகதைகளுடன் வந்திருக்கும் பேரீச்சை தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது.
முதல் சிறுகதையான சாய்வு, தன் முன்னால் இருப்பவரிடம் அவர் தொடர்பான பழைய ஞாபகங்களைப் பேசுவதுபோன்ற முன்னிலைத் தொனியில் உருப்பெற்றுள்ளது. கதை நாயகனின் பெயர் கடைசி வரை இடம்பெறவில்லை.
நாயகனின் பெயர் இடம்பெறாதது அனோஜனின் பாணி போல. பல கதைகளில் கதையை விவரிப்பவர் தன்னை விடுத்து மற்றவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விவரித்துச் செல்கிறார்.
பிறழ் உறவு எனப்படும் சகோதரனுடனான பாலுறவுத் தொடர்பு கதையின் மையமாக இருக்கிறது. இங்கிலாந்தில் படிப்புக்காக வந்து தங்கியிருக்கும் நாயகனின் வீட்டிலே, வாடகைக்குத் தங்க வருகிறாள் கிஜூகி முன். அவளும் படிக்க வந்தவள்தான்.
அதிகம் யாருடனுடன் பழகாதவனும், தன் தனிமையின் சுமையைத் தாளாதவனுமான அவனுக்கு நாயகியின் வரவு ஆசுவாசமளிக்கிறது. தனது அறைக்குள் உரிமையுடன் நுழைந்து பேசும் நாயகிக்கு காகிதத்தில் சிகரெட் தூளை நிரப்பி சுருட்டக் கற்றுத்தருகிறான். முதல் சந்திப்பிலேயே அவனுக்கு கஞ்சா கிடைக்குமா எனக் கேட்கிறாள்.
கிஜூகி முன்னின் ஆசைக்காக கஞ்சா வாங்கி வந்து இருவரும் புகைக்கிறார்கள். நாயகியின் முன்கதை தெரியவருகிறது.
தன் பழைய உறவின் குற்ற உணர்வைக் கடக்கநினைக்கிறாள். அதற்கு கஞ்சாவையும் நாயகனையும் பயன்படுத்திக்கொள்கிறாள். அண்ணனின் மீதிருந்த மனச்சாய்வு நாயகன் மீது மாறுகிறது. அது வெறும் பாலுறவு மட்டும்தானா… காதல் உறவா என்பதெல்லாம் அழுத்திச் சொல்லப்படவில்லை.
கஞ்சா, பிறழ் உறவு போன்றவை சரியா… தவறா போன்ற அற விசாரணைகளுக்குள் எல்லாம் கதை செல்லவில்லை. எளிமையாகவும் தீவிரமாகவும் புதிய தலைமுறையின் மன உணர்வுகளைக் காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறது கதை.
மேயர் அல்பிரட் துரையப்பா என்பவரும் தமிழ் புதிய புலிகளின் தலைவரான செட்டி என்பவரும் சுட்டுக் கொல்லப்படுவதன் பின்னணியை போர்வை கதை விவரிக்கிறது. தம்பி, வேலுப்பிள்ளை என்ற இரு வார்த்தைகளின் மூலம் கதையில் இடம்பெறுபவர் பிரபாகரன் என்பதைக் காட்டிவிடுகிறார். ஒரு கதாபாத்திரம்போல கதையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர்வை வருகிறது. தம்பியிடம் ஒருமுறை போர்வையை அளித்த தேவதை, அதைத் திரும்பப் பெறவருகிறாள். ரத்தத்தில் ஊறியிருக்கும் போர்வையை உதறி நீயே வைத்துக்கொள் என்றபடி திரும்பிவிடுகிறாள்.
இந்தப் போர்வை எதைப் போர்த்தி மறைக்கிறது… அல்லது மறைக்கப்பட்டிருந்த எதன் மீதிருந்து விலகி உண்மையைக் காட்டுகிறதெனப் புலப்படவில்லை.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவனான சுயந்தன் யானையைப் பார்க்க ஆசைப்படுகிறான். அந்த ஆசைக்கு கிட்டத்தட்ட தன் குடும்பத்தையே விலையாகக் கொடுக்க நேர்வதை விவரிக்கிறது யானை கதை. சுயந்தனின் கதையைச் சித்தரிப்பதன்வழி இலங்கையின் சூழலையும், அந்தச் சூழல் ஒரு சிறிய மனதை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை காட்டுகிறார். யானை பார்க்க முதன்முதலாக வருகைதந்த நாக விகாரையில் புத்த பிட்சுவின் போதனையோடு கதை முடிவுக்கு வருகிறது. அங்கே ஒரு வண்டியில் பெரிய யானையும் அதன் குட்டியும் வந்துநிற்கிறது. யானையைவிட பிரம்மாண்டமானவற்றையெல்லாம் தரிசித்துவிட்டதால் அதைப் பொருட்படுத்தாது விலகி நடக்கிறான் சுயந்தன்.
பேரீச்சை கதை, ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் நாவலை நினைவுறுத்தியது. இரண்டுக்கும் சில ஒற்றுமைகளைச் சொல்லலாம். போரால் நெருக்கப்பட்டு ராணுவம், விடுதலை அமைப்புகளின் கெடுபிடிக்குள் நசுங்கும் மக்கள் திரள், என்ன விலை கொடுத்தாவது அடைக்கலம் தேடி நாடுகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பிவைக்கையில் பலரது கதைகள் ஒரேபோன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பது இயல்புதான்.
புலிகளின் அமைப்பில் சேர்ந்து பின் நாட்டை விட்டு தப்பியோடும் நதீசனுக்கு உதவியதைத் தவிர வேறெந்தக் குற்றமும்செய்யாத நாயகன், இலங்கை ராணுவத்தால் உயிர் வதைக்கு ஆளாகிறான். ராணுவத்தின் பேராசைக்கு விலைதந்து இங்கிலாந்து சென்று குடியகல்வு அதிகாரிகளின் விசாரணையில் அவன் மீண்டானா… இல்லையா… என்பதைச் சொல்லாமலே நிறைவடைகிறது கதை.
தன் குற்றவுணர்ச்சியிலிருந்து நாயகன் எப்படி விடுபடுகிறான் என்பது குறித்தது கதிர்ச்சிதைவு கதை. குற்றம் நிகழ்ந்த இடம் இலங்கையின் அரியாலை நெடுங்குளமாகவும், விடுதலை கிடைக்குமிடம் இங்கிலாந்தில் அறிமுகமான ஒரு தோழியின் வீடாகவும் இருக்கிறது. லோகா, ஜேம்ஸுக்கு நெருக்கமாவதன் பொறாமையில் அவனது நெற்றியை பீர்பாட்டிலாலே தாக்கும் நாயகன், தன்னை நிலைகுலையச் செய்யும் மன அழுத்தத்தின்போது அவளிடமே சென்று நிற்கநேர்கிறது. இலங்கையில் தங்களை அண்டியிருந்த குடும்பத்திலிருந்து வரும் சக்கரவர்த்தியை நண்பனாக ஏற்பதில் நாயகனுக்கு இருக்கும் தயக்கமும் சக்கரவர்த்தியிடம் இயல்பாகவே இருக்கும் நிமிர்வும் வேறு வழியில்லாத சூழலும் அவனை எங்கே கொண்டு நிறுத்துகிறது என்ற முடிச்சில், கதையின் முக்கிய திருப்பம் பொதியப்பட்டுள்ளது.
அகதியாக பிரான்சில் குடியேறும் நாயகனின் சிதைந்த மணவாழ்வும் அவனது குடும்பத்தின், குறிப்பாக போரால் சூன்யத்துக்குள்ளாகும் ப்ரியத்துக்குரிய அக்காவின் வாழ்வும் ஜடைபோல மாறி மாறிப் பின்னப்பட்டு சித்தரிக்கப்பட்ட கதை ஆடையுற்ற நிர்வாணம். ஏதோ ஒரு வேகத்தில் நாயகனை திருமணம் செய்துகொள்ளும் பெல்லா, குழந்தை பிறந்ததும் மெல்ல மெல்ல மாறுகிறாள். கலாச்சார மாறுதல்கள் அவர்களைப் பிரிக்கிறது. ஐந்து வயதுப் பெண்ணை நிர்வாணமாகக் குளிப்பாட்டுவது, டுத்பேஸ்ட்டை அழுத்திப் பிசுக்குவது, பிரான்சில் இருந்துகொண்டு இலங்கையைப் போல நீரை நிறைய செலவிட்டுக் குளிப்பது, வீட்டுக்குள்ளே புகைபிடிப்பது அத்தனையும் பெல்லாவின் ஆட்சேபத்துக்குரியதாகிறது. ஜடையின் கடைசி முனையாக வரும் பகுதி, சிறகடிப்புடன் பறவைகள் அவன் தலைக்குமேலாக கூட்டம் கூட்டமாகப் பறந்துகொண்டிருக்கின்றன. அவன் தனியாக அமர்ந்து கடந்துசெல்லும் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதாக முடிகிறது.
மனநல மருத்துவரிடம் வந்து தயக்கமாக தன் பிரச்சனைகளை பேசத் தயங்கும் மருத்துவ மாணவன் ஒருவனையும் அவனைப் பேசத் தூண்டி அவன் சிக்கலுக்கு தீர்வளிக்க நினைக்கும் மருத்துவரையும் பற்றிய கதை உதிரம். எப்போதும் தாயை அடிக்கும் தன் தந்தையின் மீது கோபம் கொள்ளும் மகனின் கதையாகத் தோன்றி, வேறு அடுக்குகளுக்கு விரியும் கதை.
போர் நெருக்கத்தில் பதின்பருவத்தினரை ஆண்- பெண் வித்தியாசமின்றி இயக்கத்தில் சேர்க்கத் துடிக்கும் புலிகளுக்குப் பயந்து தன் மகள் அமலாவை வயதில் மூத்த உறவினருக்கு தந்தை கட்டிவைக்க, அவள் என்னவாகிறாள் என்ற கதையே கர்ப்பப்பை. கதையின் தொடக்கத்தையும் முடிவையும் வெட்டியெறிந்துவிட்டு பார்த்தால் மிச்சமிருப்பதே நல்ல கதையாகத் தெரிகிறது.
எப்படிப் பார்த்தாலும் இந்தத் தொகுப்பு முழுமையும் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தவிடத்து ஈழத்தமிழர்களையும் அவர்கள் பிரச்சனைகளையும் குறித்த கதைதான். பாலை வெயிலின் பெருவதையை இனிப்பாக உருமாற்றும் ஈச்சையைப் போல, தான் அறிந்து, கேட்டு, வாசித்த ஈழத்தமிழர்களின் வலியை கதைகளாக மாற்றிப் பதிவுசெய்திருக்கிறார் அனோஜன்.
தொகுப்பில் என்னை பெரிதும் ஈர்த்த கதைகள் சாய்வு, யானை.
2.
சென்ற புத்தகக் கண்காட்சியில், அதற்கு முந்தைய புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே வரிசையில் நிற்கின்றன. இருந்தாலும் தற்போதைய கண்காட்சியில் வாங்கிய ஷோபாசக்தியின் கருங்குயில் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு சின்ன சலுகை தந்து, கையிலெடுத்து வாசித்து முடித்துவிட்டேன்.
வழக்கமாக ஷோபசக்தியின் சிறுகதைகள் இலங்கை, பிரான்ஸ் களத்துக்குள் போராட்ட இயக்கங்கள், சிங்கள அரசு, சிங்கள ஆதரவு போராட்ட இயக்கங்கள், சிங்களப் பிக்குகள், அகதியாகத் தஞ்சமடைந்த இடத்தில் வாழ்க்கைப் போராட்டம், அகதியாகப் பதிவதற்கான போராட்டம், வந்த இடத்திலும் ஜாதிய பேதம் பார்க்கப்படுவது எனப் பலதரப்பட்டதாக இருக்கும்.
அதே அலைவரிசையில்தான் கருங்குயில் தொகுப்பிலுள்ள கதைகளும் அமைந்திருக்கின்றன. அந்த வரிசையிலிருந்து மீறிய கதையென்றால் கருங்குயிலைச் சொல்லலாம். ஆறே கதைகள்.
முதல் கதையான ‘மெய்யெழுத்து’ நீரும் சோறும் மறுத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த திலீபனின் நண்பர் ஒருவரை பின்னணியாகக் கொண்டது. திலீபனின் மறைவுக்குப் பின் அவரது நினைவிடத்தையும் உடலையும் பாதுகாக்க முயலும் புலிகளோடு, அவரது உயிரைத்தான் பாதுகாக்க முடியவில்லை… உடலையாவது பாதுகாப்போம் என்ற ஏக்கத்தோடு திலீபனின் பள்ளிக்கால நண்பனான ராகுலன் என்ற மருத்துவர் முன்வருகிறார். ராகுலனால் அது முடிந்ததா என்பதை கதை விவரிக்கிறது. தன் முடிவுக்கு ராகுலன் எதையெல்லாம் விலையாகத் தரவேண்டியிருந்தது என்பதை ஷோபா அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.
சிறுகதைத் தொகுப்புக்கு இடப்பட்டிருக்கும் தலைப்புக் கதையான கருங்குயில், கவிஞர் பாப்லோ நெரூதா இலங்கை வந்திருந்தபோது, அவர் தங்கியிருந்த வீட்டின் எடுப்புக் கழிவறையைச் சுத்தம்செய்ய வருகிறாள் ஒரு பெண். அவளை வலுவந்தமாக புணர்ந்த கதையை நெரூடா தனது சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். அதில் மிச்சமிருந்த இடைவெளிகளை தனது படைப்புச் சுதந்திரத்தால் நிறைவுசெய்தாரா… இல்லை தரவுகளைத் தேடி இந்தச் சிறுகதையைப் படைத்தாரா… தெரியவில்லை. இரண்டையும் ஒருசேர பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்ட சிங்கள இயக்கங்களில் ஒன்று ஜனதா விமுக்தி பெரமுனா இயக்கம். அதனை நிறுவியவரான ரோஹன விஜேவீர- பின்னாளில் இலங்கை அரசாங்கத்தால் ராணுவத்தின் மூலம் வேட்டையாடப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவரை வேட்டையாடிய ராணுவ வீரர்களில் ஒருவன் கடந்தகாலத்தை நினைவில் மீட்டும் உத்தியில் ஆறாங்குழி கதை விரிகிறது.
உண்மையில் ரோஹன-வை சித்ரவதை செய்பவன், ரோஹனவின் வெளிக்காட்டிக்கொள்ளாத ஆதரவாளர்களில் ஒருவன். தவிரவும் தான் சித்ரவதை செய்வது ரோஹனவை என்பதை அப்போது அறிந்திருக்கமாட்டான். அரசியல்வாதிகளுக்கு தனது அதிகாரத்தைக் கேள்வியெழுப்புபவர்கள் தன் இனத்தவனாக இருந்தாலும் ஒன்றுதான்… பிற இனத்தவனாக இருந்தாலும் ஒன்றுதான். நயவஞ்சகம் செய்து, அவர்களை நரவேட்டையாடி, காலிசெய்யவே அவர்கள் தீவிரம் காட்டுவர் என்பதை கதை பதிவுசெய்கிறது. அதைத் தாண்டிய வேறுபல நுணுக்கமான விஷயங்களும் கதையில் பதிவாகியுள்ளன.
நாடுவிட்டு நாடு தாண்டிச் செல்பவர்களுக்கு தங்களது மொழி, கலாச்சாரம் மீதான பிடிப்பு அதிகமாகிவிடும். அப்படி பிரெஞ்சில் சென்று புகலிடம் பெற்ற மிதுனா என்ற பெண்ணின் தந்தை, தன் மகள் தமிழை ஆர்வமாகப் படிக்கவேண்டும் என ஆசைப்பட, அவரது கனவை வர்ணகலா எனும் ஆசிரியை சாத்தியமாக்குகிறாள். வர்ணகலா- ஆசிரியை என்பதிலிருந்து குடும்பத் தோழி என்ற அளவுக்கு மாறுகிறாள். மிதுனா பூப்பெய்தியதைக் கொண்டாடும் சடங்கில் விழாவின் முக்கிய விருந்தினராக வர்ணகலா மாறும் அளவுக்கு நெருக்கம் வளர்கிறது.
அந்த ஆசிரியைக்கு என்ன நேர்கிறது என்பதுதான் கதை. இலங்கையில் இறந்த வர்ணகலா என்பவரின் மரணம் குறித்தும், அந்த வர்ணகலாதான் தனக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசிரியையா என்ற மிதுனாவின் சந்தேகத்திலிருந்தே தொடங்குகிறது கதை. உள்ளடக்கம், உத்தி என்ற இரண்டையுமே சிறப்பாகக் கையாளும் ஷோபாசக்தி, இந்தக் கதையிலும் அசத்தியிருக்கிறார்.
பிரான்சுக்குச் சென்ற நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் எத்தனை இன்னல்களுக்கு இடையில் வயதான தன் தாயை பிரான்சுக்கு வரவழைக்கிறார்கள் என ஒன் வே கதை பேசுகிறது. வழக்கமான அத்தனை உத்திகளும் பொய்த்துப் போன நிலையில் வேறொரு வழி அமைகிறது. அது அந்தக் குடும்பத்தை என்னென்ன நெருக்கடிக்கு இட்டுச்செல்கிறது… என்பதை உள்ளூர நகைப்புடன் வாசிக்கமுடிந்தது.
கடைசிக் கதையான பல்லிராஜா- தமிழர்கள் வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவ முயலும் சீவலி பால தேரரின் கதையைப் பேசுகிறது. அங்குள்ள ஏழை ஜனங்கள் அவர் புத்தரை நிறுவும் பீடம் தங்களது காவல் தெய்வமான கொத்தியினுடையது என்று கூறி அனுமதிக்க மறுக்கிறார்கள்.
இளம் வயதில் பள்ளிக்கால நண்பன் தன் பேச்சுத் திறமையால் வஞ்சகமாக தேரரை ராஜதுரோக நடவடிக்கையில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்புகிறான். கெட்ட பின்பு வரும் ஞானம்போல, சிறைக்குள் அடைக்கப்பட்ட பிறகு தனக்கு இழைக்கப்படும் சித்ரவதைகளையெல்லாம் முகம்சுளிக்காமல் ஏற்றுக்கொள்கிறார் தேரர். கடைசியாக அவரை வதைக்கும் அமரக்கூன் என்ற ராணுவ அதிகாரி, இருபது வயது தமிழ்ப் பெண் கைதி மூலம் புத்த பிட்சு தன் வாழ்வில் உயர்வாகக் கருதும் அவரது பிரம்மச்சர்ய விரதத்தை அழிக்கமுயல்கிறார்.
தேரரையும் அவளையும் நிர்வாணமாக்கி, அந்தப் பெண்ணை அவர்மேல் வலுவில் படுத்து கட்டியணைக்கவும், கால்களால் தேரரை பின்னிக்கொள்ளச் சொல்லியும் உத்தரவிட, வேறு வழியின்றி அந்தப் பெண் அப்படியே செய்கிறாள். இந்த நிலையில், அதிகாரியின் பெல்ட் தேரரை இடுப்பில் விளாச, வலியில் புட்டத்திலிருந்து ரத்தமும், மற்ற இடத்திலிருந்து விந்தும் வெளியாகிறது.
தேரரை ராணுவம் சித்ரவதையும் பலவந்தமும் செய்ததெனில், தனது முதிய வயதில் புத்தர் சிலையை நிறுவ வரும் தேரரும், பக்தியின் பெயரில் ஏழைக் குடிகளை அதேதான் செய்கிறார்.
தென்மேற்கு திசைநோக்கி நிற்கும் பல்லி சத்தம் செய்தால் வந்த காரியம் நிறைவேறும் என்பது தேரரின் நம்பிக்கை. பல்லி சத்தம் செய்தால், அதற்கு இலங்கைத் தீவுக்கான அரசுரிமையைத் தருகிறேன் என்கிறார். பல்லி சத்தம் செய்ததா… இல்லையா என எதுவும் தெரிவிக்காமலே கதை முடிகிறது.
3.
 வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியை வாசித்துமுடித்தேன். இந்த நாவலின் முதல் பதிப்பு முழுக்க ஈழத் தமிழ் நடையிலிருந்தது எனவும் இந்தப் பதிப்பு சற்று வாசகர்களை மனதில் கொண்டு எளிதாக்கப்பட்டதாகவும் வாசு முருகவேலே குறிப்பிட்டிருக்கிறார்.
நான் புதிய பதிப்பையே படித்திருந்தேன். இதிலேயே பூச்சிப்போளை, பொல் என பல வார்த்தைகள் புரியவில்லை. மற்றபடி ஆசிரியரின் ஈழத்தமிழ் பெரிய சிக்கல் எதையும் தரவில்லை.
ஒரு புதிய வட்டாரத்தின் வழங்குமொழியை ஆசிரியர் நாவலில் பயன்படுத்தும்போது, அதுவும் நாவலுக்கு அவசியம் என அவர் உணரும்போது நாம் அதனைப் புரிந்துகொள்ள முயலவேண்டியதுதான்.
யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள இந்நாவலின் நடை உற்சாக வாசிப்பை அளிப்பதாக இல்லை. மிக மெதுவாக, வாசித்தேயாக வேண்டும் என மெனக்கெட்டால் மட்டுமே வாசிக்கமுடிவதாக உள்ளது.
ஷர்மி, அவளது அம்மா மூலம் தொடங்கப்படும் நாவல் அவளது உறவுகளை, அண்டை அயலார்களை, அவரது தந்தை மூலம் வந்த இரண்டாவது மனைவி ஜெசீமா, அவளது மகன் என அறிமுகப்படுத்தியபடியே ஜெப்னா பேக்கரியை வந்தடைகிறது.
இதற்கிடையில் சோனகர் எனப்படும் முஸ்லிம்கள் திடீரென யாழ்ப்பாணத்தில் அதிகளவு குடிவரத் தொடங்க, சிங்களப் படையினருடன் இணைந்து தமிழர்களை தொந்தரவுக்கு உள்ளாக்குவதுடன், தோட்டக் காவலரும் அமைதியானவருமான கொசுனாமணியின் மரணத்தில் சென்று முடிகிறது.
குடும்பத்தையே பறிகொடுத்த தாஸ் என்பவர் மீது பரிதாபப்பட்டு திருலிங்கத்தார் ஆதரவு கொடுக்க அவர் தொடங்குவதுதான் ஜெப்னா பேக்கரி.
இந்த ஜெப்னா பேக்கரி எப்படி ஆயுத பதுக்குமிடமாக மாறி, கடைசியில் புலிகளின் கவனத்துக்கு வந்து முஸ்லிம் இளைஞர்களை கொத்துக் கொத்தாகக் விசாரணை முகாம்களுக்கு கொண்டுசென்று, இறுதியில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் யாழ்ப்பாணத்தை விட்டே துரத்துவதில் முடிந்தது என்பதை விவரிக்கிறது .
முஸ்லிம்கள் உண்மையிலே ஆயுதம் கடத்தினரா… அதனால்தான் அவர்களை புலிகள் துரத்தினரா என்பதை நாம் இத்தனை வருடம் கழித்து தமிழகத்தில் இருந்துகொண்டு உறுதிசெய்யவோ, யூகம் செய்யவோ முடியாது.
ஆனால் அதற்காக அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் புலிகளின் அதிகாரத்தின் கீழிருந்த பகுதிகளிலிருந்து துரத்தியடிப்பது சர்வாதிகார முடிவு.
ஒட்டுமொத்தமாக நாவல் எந்தவித திருப்தியையும் அளிக்கவில்லை. நாவலாசிரியரின் விவரணை அவர் கூறும் தர்க்கத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை.
நாவலை வாசித்து முடித்தபோது… அப்பாடா முடிந்தது. அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற நிம்மதி மட்டுமே ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *