மலைக்காட்டுசாரம் நாறும் பூ

நெல்லை புத்தகத்திருவிழா 2022 – சிறப்பு கட்டுரை 1

[1]

ஜெயமோகனின் மாநாவல்கள் கதை நிகழும் களத்தின் மொத்த வாழ்க்கையையும் அள்ள முயல்பவை. அதன் காரணமாகவே தமிழ் இலக்கியப் பரப்பு பொதுவாகத் தவிர்க்கும் சில கூறுகள் இயல்பாக அவரின் நாவல்களில் இடம் பெற்று விடுகின்றன ― அவற்றுள் ஒன்று தற்பாலீர்ப்பு. 

விஷ்ணுபுரத்தில் இருந்து வெண்முரசு வரை தற்பாலீர்ப்பைத் தீண்டாத பெரிய நாவல்கள் எதுவும் ஜெயமோகனின் படைப்புலகில் இல்லை. விஷ்ணுபுரத்தில் அது பெண்ணை அறிய முடியாத அளவுக்கு ஆணவம் கொண்டவர்களின் செயல், நகரே திருவிழாவில் திளைக்கையில் இடிபாடுகளுக்குள் ஒடுங்கி இருப்போரின் கொண்டாட்டம். பின் தொடரும் நிழலின் குரலில் அது சிறையிலும் கம்யூனிலும் தனிமையில் இயல்பாகத் தோன்றுவது, கோட்பாடுகளால் விளக்கத்தக்கது. ஏழாம் உலகத்தில் உடல் சிதைந்தவர்களாலும் அவர்களை வைத்துப் பிழைப்பவராலும் இயல்பாக எடுத்துக்கொள்ளப்படும் ஒரு காம இச்சை. கொற்றவையில் ஆண்கள் அறியாமல் பெண்கள் நிகழ்த்தும் ஒரு கொண்டாட்டம். ஆகவே ஆண்களின் அச்சமும். பக்கங்களால், பேசப்படும் வாழ்க்கைத் தருணங்களால் மிகப்பெரிதான வெண்முரசின் ஒரு நூலில் அது அரசனை ஆட்கொண்டு உயிர்கொள்ளும் எமன். பிறகு இன்னொரு நூலில் மாபாவத்திற்கும் தூண்டும் சொல்லப்படாத காதல். ஜெயமோகனின் படைப்புலகில் பால் நாட்டம், பால் அடையாளம் சார்ந்த உச்ச ஞானம் திரளும் நாவலான வெண்முரசில் கூட, அந்த ஞானமான ஆண், பெண் என்னும் தன்மைகள் இயல்பு காரணமான வெறும் அடையாளங்களே என்பதையும் தக்க தருணங்களில் ஆணென்றும் பெண்ணென்றும் உணராத உயிர் ஒன்று இல்லை என்பதையும் (மொத்த வெண்முரசிலும் முழு ஆண்தன்மை உடையவன் கர்ணன் ஒருவனே! சரி, தீர்க்கதமஸை வேண்டுமானால் இரண்டாவதாகச் சேர்க்கலாம்) உணராமல் சமூகமும் சூழ்நிலைகளும் வருத்திய மாந்தர்களாகவே தற்பாலீர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். இந்த நாவல்கள் எல்லாமே பெரிய கேள்விகளை எழுப்பிக்கொள்பவை. அந்தக் கேள்விகளை முகக்கும் நாழிகளுள் ஒன்றே காதலும் காமமும் ஆன ஒன்று. கன்னிநிலம், இரவு, அனல்காற்று, அந்த முகில் இந்த முகில் போன்ற ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல்களே காதலையும் காமத்தையும் மட்டும் வைத்து வாழ்க்கையை அள்ள முயல்பவை. ஆனால் அவற்றின் சிறிய சட்டகம் காரணமாக இவை அனைத்தும் தற்பாலீர்ப்பை வெளியே நிறுத்தும் நாவல்கள். 

ஒரு வாசகர் கடிதத்திற்கு பதிலாக ஜெயமோகன் தனக்கு காலம்தோறும் தற்பாலீர்ப்பு மீதான மதிப்பீடு மாறியதைச் சொல்கிறார். ஜெயமோகனின் நாவல்களிலும் அவற்றை எழுதிய காலங்களில் ஜெயமோகன் கொண்டிருந்த மதிப்பீடுகளின் நிழலாட்டத்தைப் பார்க்கலாம். காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களின் மாந்தர்களே எவ்வித தயக்கமும் இன்றி தற்பாலீர்ப்பை இயல்பான மனித வெளிப்பாடுகளில் ஒன்றாக அணுகுபவர்கள். ஜெயமோகன் எழுதிய தற்பாலீர்ப்பு சித்திரங்களுள் உச்சமானது காடு நாவலில் உள்ளது.

காடு நாவலின் ஆபேல் – ராபியின் சித்திரத்திற்கும் ஜெயமோகனுடைய பிற நாவல்களின் தற்பாலீர்ப்புச் சித்திரங்களிற்கும் என்ன வேறுபாடு? பிற நாவல்கள் அனைத்திலும் குணவிசேடத் துலக்கத்துடன் தற்பாலீர்ப்பாளர்கள் எழுவது ஓரிரு பத்திகளுக்குள் மட்டுமே. பெரும்பாலும் அவர்கள் அங்கங்கு மட்டும் தோன்றி மையப்பாத்திரங்களால் பார்க்கப்படுபவர்கள். ஏழாம் உலகம், வெண்முரசு போன்ற நாவல்களில் தற்பாலீர்ப்பாளர்கள் அடிக்கடி நாம் சந்திக்கக்கூடிய பாத்திரங்களாக இருந்தாலும், அவர்களின் செயலின் நியாயமான காரணங்களுள் ஒன்றாகவே தற்பாலீர்ப்பு இருக்கிறது ― அவர்களின் தற்பாலீர்ப்பு குணவிசேடம் துலங்குவதும் ஓரிரு பத்திகளுக்குள்தான். ஆபேல் ராபியின் விவரிப்பும்கூட பக்கம் பக்கமாக இல்லை. காரணம், நாவலின் முதன்மை பாத்திரங்கள் மொத்தம் மூன்றே ― கிரிதரன், நீலி, காடு. ஆனால் காடு நாவலில் ஆபேலும் ராபியும் நமக்கு அறிமுகம் ஆகும்போதே இணையர்களாகவே வருகிறார்கள் என்பதே ஜெயமோகனின் புனைவுலக தற்பாலீர்ப்பாளர்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் கூறுதான். அதற்கு மேலும் குறியீட்டளவில் குறிஞ்சித்திணையின் ஆன்மாவாக அவர்கள் எழுவது நாவலின் போக்கில் இயல்பாக நடந்துள்ளது. வெண்முரசில் நிகரான குணசித்திர வலுவுடையர்கள் சிலர் இருந்தாலும் இருபத்தாறு நூல்களும் ‘கிருஷ்ணன்’ ‘கிருஷ்ணன்’ என்று துடிப்பதாலேயே இளைய யாதவன் நாயகன் ஆவது போல, ஆபேல் ராபியின் காதலும் ஒட்டுமொத்த காட்டாலும் ஒளியூட்டப்படுகிறது. தூய காதலின் குறியீடாக இவர்கள் திகழ்வதால், ஒருவகையில் தமிழ் இலக்கியத்தின் மிகமுக்கியமான தற்பாலீர்ப்புக் காதலர்களாக இவர்களைச் சொல்லலாம்.

[2] 

கனவும் வாழ்வும் எப்போதும் கொள்ளும் ஓயாத போரே காடு நாவல். குட்டப்பன் சொல்லும் ஒரு கதை இருக்கிறது நாவலில். காஞ்சிர மரத்து  காட்டுநீலியின் கதை. மரத்தை வெட்டும் எல்லாரையும் கொல்லும் அவள் இளவரசரோடு மட்டும் காதலோடு இருக்கிறாள். அந்தக் கதையை வாசிக்கும்போது காட்டுக்கும் இரண்டு முகம் என்று தோன்றியது. தன் இருப்பால் நம்முள் கனவையும் கனிவையும் நிறைக்கும் காடு. அந்த இருப்புக்குள் உறைந்திருக்கும் குரூரம். இரண்டில் ஒரு முகத்தை கிரி பார்க்கவேயில்லை. அதனால்தான் அவனால் ஊரின் வருத்தும் குரூரத்தை காட்டின் கனவைக் கொண்டு சமன் செய்யமுடிகிறது. 

சினேகம்மை ரெசாலத்தின் தேவாங்கைப் பற்றி சொல்லும்போது “காட்டிலே சினேகம் இல்ல பாத்துகிடுங்க ஏமான். அம்மையானாலும் அடுத்த பேறுக்குள் வெரட்டிவிடும்” என்கிறாள். காட்டுக்குள் இருக்கும் சினேகம் எல்லாம் ஒருவகையில் காதலின் சினேகம் மட்டும்தான். அன்னைச்சினேகம் என ஒன்றும் இல்லை. காட்டில் தாய்க்கு மகன் என்பது மறுமுறை சூல் கொள்வதுவரை பேண வேண்டிய உயிர் மட்டும்தான். ஊரிலோ பெண் கணவனை அணுகுவதே தன் குழந்தையின் தந்தை என. இறந்த மகனை மடியில் இட்டு கணவனுக்குச் சாபமிடும் மனைவியின் குரலாகவே கம்பன் ஓலமிடுகிறான் கிரிக்கு. அந்த பாலைக்கு நடுவில் இருந்து கபிலனின் வரிகளில் எழும் மலையின் குளிர்ச்சியைக் கனவு காண்கிறான். வெஞ்சுரத்தைக் கடக்க கைப்பிடி கனவு அவனுக்கு போதுமானதாக இருக்கிறது. ஆனால் காட்டில் திரிந்த காலத்தில்கூட மானுட துக்கத்தைப் பாடியதால் பாலை பாடிய பெருங்கடுக்கோ தான் அவனுக்குப் பிடித்த கவிஞர். வாழ்வு துக்கமாக இருக்கும்போது மட்டுமே கனவுகளில் அவ்வளவு இனிமை நிறையுமா என்ன?

நீலியின் விளி முதன்முதலில் கேட்கும்போது கிரி காட்டில் வழிதவறுகிறான். தற்செயலாக மிளாவைப் பின்தொடர்ந்து வழி கண்டு வந்தபின் ரெசாலத்திடமும் குட்டப்பனிடமும் கேட்கிறான் தேடி வந்தீர்களா என்று. அதற்கு ரெசாலாம் நேராகப் போனால் நெடுமாங்காட்டுச் சொரம், கிழக்கே காட்டுமுக்குப் பாலம், மேற்கே அஞ்சுதெங்கு. எப்படிப் போனாலும் வரும் வழிதான் என்கிறார். அதற்கு குட்டப்பன், “இப்பளு காடு எங்க இருக்குவு? நாலு மரம் சேந்து நின்னா காடு இங்கியாவ. ஒக்கெ வெட்டி வெளுப்பிச்சு போட்டானுவல்லா?” என்கிறான். கிரி தொலைந்ததும் தூக்கிச் சுமந்ததும் ஒருவகை மினியேச்சர் காடு என்று தோன்றுகிறது. ஊரில் இருப்பருக்கு அதுவே காடு. காட்டை அறிந்தவருக்கு வெறும் புதர்வெளி. காலுக்கு கீழே முழுக்க சீனிக்கிழங்கு இருந்தாலும் காட்டை அறிவதை விட மனக்காட்டிற்குள் சிக்கிக் கொண்டதனால் தான் கிரிக்கு வழித்தவறியது பசித்து அலைந்து அச்சுறுத்தும் அனுபவமாக இருந்தது போலும்.

நீலியை பார்ப்பதற்காக கிரி இரவில் செல்லும் பகுதி ஒன்று இருக்கிறது. செந்தாமரை மாலைக்கு நடுவில் ஒளிந்து தெரியும் நீலியின் மார்பை நினைத்து நீலி மீது காமம் கொண்டு (ஆம்!) ‘கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே’ என உழன்று ‘முட்டுவேனோ தாக்குவேனோ’ என சினந்து இரவோடு இரவாக நீலியின் சந்தனக்காட்டிற்குச் செல்கிறான். இரவில் யானைக் கூட்டத்திடம் இருந்து தப்பித்து, காலையில் தீம்பலாச் சுளைகள் தின்று செல்லும் வழியில் புன்னையும் கொன்றையும் வேங்கையும் பூத்த வெளியைக் கண்டு பரவசமாகி நீலியின் நினைவே தொலைந்து சிறுக்கும் அளவிற்கு இயற்கையில் திளைக்கிறான். நீலி வெறும் பெண், அவளிடமும் குறையும் ஏதோ ஒன்று உண்டு என்று உணர்ந்து, இருந்தாலும் ஒருமுறை போய்ப் பார்ப்போம் என சென்று சந்தனக்காட்டின் ஓடைக்கரையில் நீலியின் ஒற்றைப்பாத தடத்தைப் பார்க்கிறான். அந்தப் பாதத்தடம் அவனுக்குத் தாங்கமுடியாத மனா எழுச்சியை அளிக்கிறது. மறுநாள் நீலியைக் கண்டு அவளிடம் பேசும்போது அவள் வேங்கைப்பாறைக்கு வரச்சொல்கிறாள். ஒருவாரம் தினமும் பித்துப்பிடித்து வேங்கைப்பாறைக்கும் நீலியின் குடிலுக்கும் அலைந்தாலும் நீலியைப் பார்க்கமுடியவில்லை. ஒரு இரவில் வேங்கைப்பாறைமீது அமர்ந்திருந்த நீலியைப் பார்த்தும் அது ஓர் யட்சியா என மயங்கி ஓடி வந்து விடுகிறான். பின்பு மாமி யட்சியாக வந்து பயமுறுத்தும் கனவுகள். ஆட்கொண்டிருந்த வனதேவதைகள் எல்லாம் கைவிட்டு போனதாக உணரும் கிரிக்கு பெரும் சலிப்பு. ஊருக்குத் திரும்ப முடிவெடுக்கிறான். 

ஊருக்குக் கிளம்புவதற்கு முன் அய்யரிடம் சொல்லிக்கொள்ள வரும்போதுதான் நீலியும் மலையனும் அய்யர் பங்களாவிற்கு பூஜைக்கு வருகிறார்கள். பூஜைக்குப்பின் நீலி அவனுக்காக காத்திருக்கிறாள். ஏற்கனவே குத்துப்பட்ட துடலி முள்ளில் சிக்கிக்கொள்கிறான் கிரி. ஆனால், ஏன் முதலில் காட்டைவிட்டுக் கிரி கிளம்ப முடிவெடுத்தான்? காடு சலித்து. காடே சலித்த அவனுக்கு காட்டுநீலி சலிக்க மாட்டாளா? மலையில் விஷக்காய்ச்சல் பரவிய நாட்களில் கிரியின் நினைவில் நீலி வரவே இல்லை. மருந்து வாங்க ஊருக்கு அலைந்தும் குடிலில் தனித்தும் இருக்கும்போது ரெசாலத்தையும் தேவாங்கையும் என பழைய நாட்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். முதன்முறையாக தன்னை முக்கியமானவனாக கிரி உணர்ந்த நாட்கள் அவை. அந்நாட்களில் ஊருக்குள் சென்று மருந்து வாங்கி வரும் வழியில் காட்டாற்றில் சிக்கிய கீறக்காதனைக்கண்டு நீலியை இவ்வாறு நினைவு கூர்கிறான் கிரி ― “அவளை அந்நாட்களில் எல்லாம் முற்றாக மறந்திருந்தேன் என அப்போது உணர்ந்தேன். அவளை நினைக்கும் கணம் உடலில் ஏறும் படபடப்பு உருவாகவில்லை. யோசித்தபோது குறிஞ்சியைப் பார்த்த அந்த கணத்தில்தான், காய்ச்சல் முற்றி உச்சத்தில் குளிர்ந்து இறங்க ஆரம்பிப்பதுபோல, அந்த உன்மத்தம் அடங்க ஆரம்பித்தது என்றுபட்டது.”

நீலியைப் பார்த்த பின்பு இரண்டு முறை முறை நீலி வெறும் பெண் மட்டுமே என கிரி உணர்கிறான். நீலியைப் பார்க்க அவள்குடிலுக்கு முதன்முறையாக செல்லும் வழியில் பூத்த மரங்களை பார்க்கும் போதும் இரவெல்லாம் பயணித்து ஊருக்குப் போய் தங்க மூக்குத்தியை எடுத்து வந்தபின்பு அது அவளுக்குப் பிடிக்காமல் மலர்மாலையை அவளுக்குச் சூட்டி வேங்கைப் பூக்குலைக்கு அடியில் நிறுத்தும் போதும். அப்பொழுதெல்லாம் அவன் உள்ளம் இயற்கையில் திளைக்கிறது. ஆனால் நீலி காத்திருக்கச் சொன்ன இடத்தில் இரவில் அவள் கூந்தல் நிலம் தொட அமர்ந்திருந்தபோது அவனுக்கு பயம்தான் வருகிறது. தொடர்ந்து காடே சலித்தும் விட்டது. இதெல்லாம் ஒரு ஊசல் போல கிரியின் மனம் நீலியை நோக்கியும் அவளைவிட்டு விலகியும் ஆடுவதால். விலகுவதெல்லாம் மீண்டும் விசையுடன் அவள்மீது மோதுவதற்காகவே என்பதுபோல. ஆனால் ஏன் கிரி குறிஞ்சி பூத்த வெளியைக் கண்டவுடன் நீலி மீது அதுவரை கொண்டிருந்த உணர்வுகள் முழுவதுமாக விலகி, நீலி என்பவள் வெறும் அழகிய பெண்  மட்டுமே என்று தோன்றுகிறது? 

அய்யர் வீட்டில் பூஜைக்கு வந்த நீலியின் அழகை அய்யர் புகழும்போது கிரிக்கு கோபம் தலைக்கேறுகிறது. சைக்கிளில் அய்யர் பங்களாவை விட்டு கிளம்பியபின் அதைப்பற்றி சிந்திக்கிறான் கிரி. நீலியை தனது பெண் என உரிமை கொள்ள விழைவதுதான் அதற்குக் காரணம் என நினைக்கிறான். உடனே காட்டுமரத்தையும் மிளாவையும் உரிமை கொள்ள நினைக்கும் அற்பனாக ஆகிவிடக்கூடாது என்றும் உடனடியாகத் திரும்பி ஊருக்குச் செல்லவேண்டும் என்றும் நினைக்கிறான். ஆனால் சாலை போட்டு காட்டைச் சொந்தமாக்க வந்த மக்களின் பிரதிநிதிதான் தான் என்று கிரிக்குத் தோன்றுகிறது. சாலையின் முன்னால் மதமிழந்து, தும்பிக்கை மெலிந்து, கொம்புகுத்தி மண்டியிடுகிறது காடு என்றும். தொடர்ந்து அய்யர் சற்றுமுன் சொன்ன கபிலனின் வரியான ‘கொடி என மின் என அணங்கு என’. சைக்கிளை எடுத்து நீலியின் குடில்நோக்கிச் செல்கையில் வழியிலேயே ஒரு வாகை மரத்தடியில் நீலியும் காத்திருப்பதை கிரி பார்க்கிறான். நீலியுடனான சந்திப்பு முடிந்தபின்பு மன உத்வேகத்தில் பேச்சிமலையை நோக்கிச் செல்கிறான் கிரி. பேச்சிமலையும் பிற மலைகளும் காடும் நீலநிறம் சூடி நீலி என்னும் பெயர்கொண்டு இருக்கின்றன. 

நாவலின் உச்சங்களுள் ஒன்று, கிரியும் நீலியும் மழையின் ஊடாக குறிஞ்சி பூத்த மலை முகட்டிற்குச் செல்வது. அந்த நிகழ்வே கபிலன் எழுதிய குறுந்தொகையின் 355ம் பாடலைப் போல இருக்கிறது. கிரியும் மழையைப் பார்த்து இப்பாடலின்  முதலிரு அடிகளை நினைத்துக் கொள்கிறான். இரவில் தன்னைத் தேடி வந்த தலைவனைப் பார்த்துத் தலைவி சொல்லும் பாடல் அது. பெயல்கண் மறைத்ததால் விசும்பு காணாது, நீர் பரந்து ஒழுகுவதால் நிலம் காணாது, சூரியன் எல்லையை அடைந்ததால் இருள் எழுந்து, எல்லாரும் தூங்கும் நள்ளிரவில் நீலி கிரியின் சிறுகுடிக்கு வருகிறாள். அந்தப்பாடலில் வேங்கை மணக்கும் சிறுகுடி என்கிறான் கபிலன். கிரியும் நீலியின் பெயரால் உள்ளமே வேங்கையென பூத்துத்தான் இருக்கிறான். அங்கிருந்தே இருவரும் குறிஞ்சியைப் பார்க்க கிளம்புகிறார்கள். வானமும் மண்ணும் துலங்காது காடும் மழையும் மட்டும் இருக்கும் அந்த இரவில் கிரி, புதுமலையனாகப் பிறப்பெடுத்துத்தான் குறிஞ்சி பூத்த உச்சிக்குச் செல்கிறான். பாலைவனத்தின் சிறு திட்டு்போல,  குற்றிச் செடியான குறிஞ்சி மண்டிய உச்சியிலிருந்து பார்க்கையில் நீலம் பூசிய காடும் மழையையும் மின்னலையும் தரும் மேகங்களும் கீழே எங்கேயோ இருக்கின்றன. மணச்சிறப்பும் நிறச்சிறப்பும் வடிவச்சிறப்பும் இல்லாத குறிஞ்சி அரிதினும் அரிது என்பதாலேயே குறிஞ்சியின் பூவாக இருக்கிறது என்பதை உணர்ந்த உடனேயே கிரிக்கு உடல் வேர்க்கிறது. நெஞ்சு படப்படக்கிறது. நீலியின் மீதான உன்மத்தம் குறையத் துவங்குகிறது. 

நீலி இறந்ததைக் கேட்டவுடன் ஆவேசத்தில் ஓடிவந்து சந்தனக்காட்டையும் வேங்கைப்பாறையையும் பார்க்கிறான் கிரி. அப்பொழுது மலர்கள் இல்லாமல் வெறும் இலையை மட்டும் கொண்டிருக்கும் காடு அவனுக்கு புதிய இடம் போல தோன்றுகிறது. இது புதுக்காடு. நான் அறிந்த காடு இதுவல்ல என அவன் மனம் அலறுகிறது. கிரி காட்டை அறியவே இல்லை என்று தோன்றுகிறது. அவனது காடு என்பது மலர்வெளியும் மலர்வெளியின் ஒளியில் துலங்கிய நீலியும் மட்டுமே. அவன் வாழ்நாள் முழுவதும் தூக்கி அலைந்தது காட்டை அல்ல, காட்டில் கட்டப்பட்ட ஒரு கல்வெர்ட்டைத் தான் என்றும் சொல்லலாம். ஆனால் அது அவன் பெயரும் காட்டின் விதையென அவன் கருதிய ஒரு மிளாவின் குளம்பும் இணையாகப் பதிந்த ஒரு கல்வெர்ட்.

அவன் நீலியின் நினைவை சுமப்பதுகூட அவளைத் தவற விட்டதால் தானா? கிரியை வாழ்க்கை முழுக்கத் தொடரும் கனவுகளுள் ஒன்றான, மாமி ரத்தம் குடிக்கும் அழகிய யட்சியாக வரும் கனவுகூட இரண்டுமுறைதான் அவனுக்கு மிக உக்கிரமாக வருகிறது ― வேணியை மணம் செய்த புதிதிலும், கிரியைவிட இரண்டு வயது சிறியவனான பிரசன்னகுமாருடன் மாமி ஊரைவிட்டுச் சென்றபோதும்.

கிரியின் காதல் ஒரு பிளேட்டானிக் காதல் என்கிறார் அய்யர். ஒரு பிளேடானிக் காதலின் முடிவு எப்போது? தான் என்பது மனம் மட்டுமல்ல உடலும் உடலில் கொப்பளிக்கும் அடக்க முடியாத காமமும் சுயநலமும் நுகர்வுவெறியும்  சேர்ந்ததுதான் என்று ஒரு மனிதன் உணரும்போது அல்லவா? மேனனின் மனைவியை அறைக்கு வெளியே கதறும் நீலியை பொருட்படுத்தாமல் கிரி துய்த்தது, அதற்கு முன் உண்ட மிளாவின் கறி ருசித்ததாலும் மேனத்திக்கு மாமியின் சாயல் என்பதாலும் அல்லவா? கிரிக்கு நிறைவளிக்கும் காமம் அமைவதே இல்லை. அய்யர் சொன்னது போல காட்டிற்குள் உண்ணப் புகுந்தால் யானையால் கூட கொஞ்சத்திற்குமேல் சாப்பிட முடியாது. இறுதிவரை எல்லாம் பகற்கனவுகளில் தான். அந்த வகையில் கிரி ஆசிர்வதிக்கப்பட்டவன். சிநேகம்மை கிரியிடம் ஒருமுறை சொல்வது போல “ஏமானுக்கு பிடிச்சது சாமி நினச்சு மடியில விழுந்தா உண்டு. ஆனா அதில ஒன்னும் வலிய காரியமில்லை. கிட்டினாலும் கிட்டாலேன்னாலும் கணக்கு செரிதேன். ஏமானுக்கு நல்ல சொப்பணமுண்டுல்லா. வேற என்ன வேணும்.”

கீறக்காதன் காண்ட்ராக்டர் அண்ணாச்சியின் வீட்டிலிருப்பதன் முக்கியத்துவம் சாதாரணமானதல்ல. காட்டை வெல்ல முயல்பவர்கள் எப்போதுமே முடிவடையாத போரில் இருக்கிறார்கள். அவர்கள் வெல்வதற்கு இலக்குகள் இருந்துகொண்டே இருக்கின்றன. கீறக்காதனை மேனன் வெல்கிறார். மேனனை அண்ணாச்சி. அண்ணாச்சியைக் காலமும் நோயும். காட்டை ரெசாலாம் மேஸ்திரி உரிமை கொண்டவிதமும் கவனிப்புக்கு உரியது. குட்டப்பன் காட்டைப் பற்றிச் சொல்வதுபோல, ஏதோ ஒரு நொடியில் காடு ஏறி தலையில் அடிப்பதுதான் அது. பின்பு இறப்புவரை காடு மட்டுமே. “கணையுள்ள பிள்ளியள தேவாங்குன்னு சொல்லுதானுவளே” என குரிசு சொல்வதிலிருந்து அது ஆரம்பிக்கிறது. வெறும் ஒற்றை வரி. அது நெஞ்சத்துப் புண்ணைத் தொட தேவாங்கை மேஸ்திரி பிள்ளை என வளர்க்க ஆரம்பிக்கிறார். ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒற்றை நிகழ்வாக விளங்கும் காட்டின் ஒரு உருப்படியை மட்டும் நாம் கைக்குள் அடக்க முடியுமா என்ன? காட்டைக் கண்டு, காட்டின் ஒருபகுதியாக இருந்த அய்யரோ ‘பட்டர்சாமி’ ஆக குறையாத மகிழ்ச்சியோடு இருக்கிறார். அவரை நீண்ட நாட்களுக்குப்பின் சந்திக்கும்போது அதைத்தான் கேட்கிறான். காமமும் சுயநலமும் இன்றி ஏதாவது இருக்கிறதா மனித வாழ்வுக்கு என்று. அத்தனை வருடங்கள் கிரி தூக்கிச் சுமந்த காட்டுநீலி இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே மறைக்க விரும்பியும் தான்.

நாவலில் முழுமையை உணர்ந்தவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். காட்டை உண்டும் பயன்கொண்டும் காட்டின் ஒரு உறுப்பாகவே மாறிய விவேகியான குட்டப்பன், காட்டைக் கண்டு கண்டு நிறைந்த அய்யர், ஒரு நூலில் கிடந்து திளைக்கும் தேவசகாயம் நாடார், ஒரு நூலை மனதில் நிறைத்துக் கனிந்த குரிசு, தான்பிறிது அவன்பிறிது என்று உணராத காதலின் முழுமையில் அமைந்த ஆபேல் ராபி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அந்த முழுமையை அடைந்தவர்கள். 

கவிஞனாகவும் காட்டை அனுபவிக்கவும் விரும்பிய கிரிக்கு குட்டப்பன் மட்டுமே தன்னைவிட உயர்வானவனாகத் தோன்றுகின்றான். தேவசகாய நாடார் புறவாழ்வில் தோற்றவர், குரிசு எழுத்துக்குப் பதிலாக கொசுவைப் படிப்பவன், ஆபேலும் ராபியும் பொருந்தாதவர்கள். அய்யர் மீது பெரிய மதிப்பு கிரிக்கு இருந்தாலும் அவரின் வழிமுறைகளின் மீது கிண்டலும் சந்தேகமும் இருக்கிறது. பட்டர் சாமியிடம் “சும்மா இருந்தால் சித்தம் அடங்குமா?” என்று அவனைக் கேட்க வைப்பது அந்த சந்தேகமே. எல்லாம் கிரி முதன்முறையாக காட்டில் வழிதவறி அலைந்த கதைதான். அன்று அவன் அலைந்த காட்டின் தரைக்கு அடியில் எங்கும் சீனிக்கிழங்குகள். அதை அறியாமல் அன்னாசிப்பழப் புதரில் இருந்து பழம் பறிக்க முயன்றான். பாம்புகள் அதிகம் இருந்ததால் பழத்தைப் பறிக்க முடியாமல், இலையின் அடிக்குருத்தைச் சாப்பிட்டு பசியைக் கொஞ்சம் தீர்த்துக்கொள்ள முயன்றான்.

[3]

கிரி வாழ்நாள் முழுக்க காதலின் நினைவைத் தூக்கிக்கொண்டு திரிவதால், மேலே கூறப்பட்டவர்களில் ஆபேலும் ராபியும் முக்கியம் ஆகிறார்கள். அவர்கள் காதலின் மூலம் முழுமையில் இருந்தவர்கள் என்பதால்.

ஆபேலும் ராபியும் நாவலுக்குள் அறிமுகமாவதே ஓர் குறியீடு போல அமைந்துள்ளது. பைபிளைத் தூக்கிக்கொண்டு குரிசு காட்டைவிட்டு விலகியவுடன்தான் ஆபேலுக்கும் ராபிக்கும் இடம் உருவாகிறது. குரிசு வைத்திருந்தது பாதிரியார் தந்த பைபிள். பாவப்பட்டவர்கள் அழைத்தால் விளி கேட்கும் கடவுளின் வேதம்தான். ஆனால் குரிசு குடித்துவிட்டு பாதிரியாரை சரியாகக் கூலி கொடுக்காதவன் என்று திட்டுகிறான். ஆக கருணை ஒரு முகம். சுரண்டல் ஒரு முகம். அப்படியே இது காலனியாதிக்கதின் குறியீடு அல்லவா?  தற்கால இந்திய சமூகத்தில் தற்பாலீர்ப்பின்மீது கிறிஸ்தவ விக்ட்டோரிய மதிப்பீடுகளும் கலந்து உள்ளதல்லவா? மனுவுக்கும் ஆபஸ்தம்பனுக்கும் தற்பாலீர்ப்பு ஒரு தவறான செயல். கிறிஸ்தவனுக்கோ அது பெரிய பாவம். ஒருவேளை  குரிசு ஆபேலையும் ராபியையும் கண்டிருந்தாலும் அவர்களை இயல்பாக ஏற்றுக்கொண்டிருக்கவும் கூடும். “சாத்தானுக்குப் பின்னால் செல்லுங்கள்! சாத்தானின் பாசையான சினேகமே இயேசுவை அடையும் வழி” எனப் பிரசங்கிப்பவன் தானே குரிசு? ஆனால் அது வேறு அல்லவா.

காட்டில் அன்னைச்சினேகம் இல்லை என சினேகம்மை சொல்கிறாள். எல்லா அன்னையும் குட்டியைத் துரத்திவிடும் காலம் உண்டுதான். ஏழாம் பண்டில் பால் கறக்கப்படும் எருமை ஒரு விதி விலக்கு மட்டுமே. ரிக் வேத ரிஷி ஒருவன் சொன்னதுபோல விதிவிலக்குகளும் விதியின் ஒரு பகுதியே. இயற்கையில் சில மரபணுக்களின் வேறுபாட்டாலும் தற்பாலீர்ப்பு உயிரினங்கள் பிறக்கின்றன. தற்பாலீர்ப்பை வெளிப்படுத்தும் உயிரினங்கள் சூல் கொள்ளும் வாய்ப்பு குறைவு. எனில், தற்பாலீர்ப்புக்கான மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் ஆகி, படிப்படியாக மரபணுவினால் ஏற்படும் தற்பாலீர்ப்பு இல்லாமல் ஆக வேண்டுமல்லவா? மாறாக ஏன் இயற்கை தற்பாலீர்ப்பை ஊக்குவிக்கிறது? உண்மையில் தற்பாலீர்ப்பு ஒரு குழுவில் உபரியை உருவாக்குகிறது. அதுவும் சமூகங்களாக வாழும் சிம்பன்ஸி போன்ற விலங்குகளிடம். சிம்பன்ஸி ஆய்வாளர்களால் விரிவாகப் பதிவு செய்யப்பட்டும் சில பழங்குடிகளின் சமூக அமைப்பு மீது போட்டுப் பார்த்தும் உருவாக்கப்பட்ட கோட்பாடு இது. முதலாவதாக, தற்பாலீர்ப்பு ஒரு சிம்பன்ஸிக் குட்டியைப் பேணும் வளர்ந்த சிம்பன்ஸிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பத்து பேர் ஐந்து குட்டியை வளர்ப்பதற்கும் பதினொருவர் ஐந்து குட்டியை வளர்ப்பதற்குமான வேறுபாடு இது. உணவு சேகரிக்கவும் குழுவின் பாதுகாப்புக்கும் இது மிக வசதியானது. இரண்டாவதாக, வளர்ந்த சிம்பன்ஸிகளுக்கு இடையே நேசத்தை உருவாக்கி குழு என்னும் சமூகத்தை பலப்படுத்துகிறது. மோதல்கள், பூசல்கள் ஆகியவற்றை சரிசெய்து குழுவை நீடிக்கச் செய்கிறது. காட்டு விலங்குகளை மைந்தர்களிடம் இருந்து அடுத்த சூலின் போது விலக்கும் இயற்கையே நித்ய அன்னையரையும் படைத்துள்ளது.

ஆபேலும் ராபியும் எப்பொழுதும் பிறர் கண்ணிலிருந்து ஒதுங்கி மறைய நினைக்கிறார்கள். வேலைக்கு வந்தவுடனேயே இருக்கும் குடில்களில் தாங்காமல் தங்களுக்கென தனிக்குடிலைக் கட்டிக்கொண்டு அதில்தான் வசிக்கிறார்கள். அவர்களது பேச்சும் சிரிப்பும் தனிமையில்தான். அதுவே இயல்பெனவும் நமக்குத் தோன்றுகிறது. ஏன்? தமிழ்ச்சூழலில் தற்பாலீர்ப்பாளர்களின் பொதுவான மனநிலை என்ன? உண்மையில் அவர்களால் சமூக விதிமுறைகளின் எடையைத் தாங்க முடிவதில்லை. பலர் இயல்பாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்யவும் தயங்குவதில்லை. நெருங்கிய நண்பர்கள்கூட அறிய முடியாத அளவிற்கு அவர்களின் உள்ளத்தின் ஒருபகுதி பூட்டப்பட்டுள்ளது. இதை ஒரு அழகியல்கூறாக மாற்றினால் வருவது ‘மலை முழுங்கி மாதேவத்தனம்’. இன்பத்தையும் துன்பத்தையும் தன்னுள் பூட்டி வைத்தல். சமூக அழுத்தத்தினால் தன்னியல்பின் ஒரு வெளிப்பாட்டை எப்போதும் மறைக்க வேண்டிய நிர்பந்தத்தால் இந்தத் தனிமை உருவாகுகிறதா? அல்லது காமத்தை நமது எதிர்த்தன்மையின் மூலம் மட்டும் அறியும் நமக்கு அவர்களின் நேசம் முற்றிலும் அயலாக இருக்கிறதா?

ரெசாலத்தின் தேவாங்கை சிறுத்தை பிடிக்கும் நிகழ்வின்போது காட்டில் ஐவர் மட்டுமே இருக்கிறார்கள். ஆபேலும் ராபியும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். கிரி முதலில் சிறுத்தையைப் பார்க்கிறான். தேவங்குக்காகத்தான் சிறுத்தை வந்துள்ளது என உணர்ந்த குட்டப்பன் ஒரு விறகை எடுத்துக்கொண்டு அதைத் தாக்க தயாரான இருக்கிறான். தேவாங்கு குடிசையின் பக்கவாட்டு மூங்கிலில் அமர்ந்திருக்கிறது. ரெசாலாம் பதைப்புடன் அலைவுறுகிறார். சிறுத்தை தேவாங்கைப் பிடித்துச்சென்றவுடன் ரெசாலாம் வலிப்பு கொண்டதுபோல உடலை முறுக்குகிறார். குட்டப்பன் அவரைத் தாங்கிப் பிடித்து உதவிக்கு ஆபேலையும் ராபியையும் அழைக்கிறான். அவர்களோ உடல் நடுங்க அமர்ந்திருக்கிறார்கள். காட்டு விலங்குகளைப் போல. ஆபேலும் ராபியும் மட்டுமே காட்டின் ஒரு பகுதி போலும். பிற அனைவரும் காட்டுக்கு ஒருவகையில் அந்நியர். முயன்று மட்டுமே காட்டை அறிய விதிக்கப்பவர்கள்.

நாவலில் மலையில் கிறிஸ்தவம் பரவுவதன் சுருக்கமான சித்தரிப்பு உள்ளது. குரிசு சொல்வதைப்போல மலையை விழுகாமலும், கடல் கரையைக் கடக்காமலும் நிறுத்துவது அனந்தபத்மநாப சாமியே. ஆனால் அவர் ஏமான்களின் சாமி. பாவப்பட்ட, பசித்த மக்களுக்கு இன்னொரு பாவப்பட்ட ஏசுதானே சாமியாக இருக்க முடியும். கிறிஸ்தவப் பெயர் கொண்டவர்களாக இருந்தாலும், ஆபேலும் ராபியும் நாவலுக்குள் எங்கேயும் கடவுளைப்பற்றி எதுவும் நினைப்பதில்லை. நாவலில் ஒரு இடத்தில், கிரி நெஞ்சில் கைவைத்து காதலிக்காதவர்கள் தெய்வத்தையும் அறிவதில்லை என்று சொல்கிறான். காதலின் முழுமையில் இருப்பவர்களுக்கு தெய்வமும் தேவையில்லை போலும்.

இருவரும் சேர்ந்து இருப்பது தவிர எதுவும் செய்வதும் இல்லை. அவர்கள் சேர்ந்து செய்யும் கடின வேலைகள்கூட சேர்ந்திருப்பதற்கான வழிகளுள் ஒன்றே. ஆபேல் ராபியின் அவர்களின் சண்டைகூட சமாதானத்திற்குத்தான். ஒருவகையில் கொம்புரசி மூக்குரசி எருமைகள் விளையாடும் ஆடல். ஆபேலும் ராபியும் தெய்வம் நோக்கிக் களிப்பதற்காக படைக்கப்பட்டவர்கள் என விவேகியான குட்டப்பன் சொல்கிறான். ஒரே இலையில் தீற்றவும் செய்யும் அவர்களின் குணவிசேடத்தைக் குறித்து அவ்வாறு குட்டப்பன் சொன்னாலும், தூயகாதலைவிட தெய்வங்களுக்கு இனியது ஏதேனும் மண்ணில் உண்டா? 

கிரி கையடிக்கும்போது நீலியை நினைத்துக்கொள்வதில்லை என்பதை கிரியிடமே கேட்டு அறிந்தபின், அய்யர் கிரிக்கும் நீலிக்குமான உறவை ஒரு பிளேட்டானிக் காதல் என்று சிலாகிக்கிறார். பிளேட்டோவை அய்யர் அறிந்தது விக்டோரிய பாடங்கள் வழியாகவே என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  மொழியாக்கத்தின் தவிர்ப்பு, திரிபுகளூடாகவும் உரைகளின் கழையாட்டத்தின் வழியாகவும் கட்டமைக்கப்பட்ட பாடமே அது. பிளேட்டோவின் சமகால ஒழுக்கவியல்படி தற்பாலீர்ப்பு ஒன்றும் தவறானதே அல்ல. அறிவாண்மை மிக்க நடுவயதினர் இளைஞர்களிடம் அறிவைக் கற்பித்து தானும் கற்கும் அறிவுச்செயல்பாடு உடலையும் உள்ளத்தையும் இருவரும் பகிர்வதன்மூலம் ஆரம்பிக்கிறது என்பது அக்காலத்தின் நம்பிக்கை. ‘ஆணும் பெண்ணும் சேரும் உறவில் வெறும் உடல்களே பிள்ளைகள் ஆகின்றன. ஆனால் இரு ஆண்களுக்கு இடையேயான உறவின் பிள்ளைகளோ அறிவாகும்’ என்ற பிளேட்டோவின் மேற்கோளில் அறிவு என்பது தகவலும் சிந்தனையும் மட்டுமல்ல. காமம் வெறும் உடல் இச்சை என்பதிலிருது விடுபட்டு ஒருவரை ஒருவர் அன்பினூடாக அறிந்து முழுமையை உணரும் வழியாக மாறுவதைத்தான். இங்கிருந்து பார்க்கையில் காடு நாவலின் உண்மையான பிளேட்டானிக் காதலர்கள் ஆபேலும் ராபியும் என்றே தோன்றுகிறது.

ஆஸ்பத்திரியில் ராபி நோயில் கிடக்கும்போது ஆபேல் அவனை விட்டு நீங்குவதில்லை. ஒருவாய் வெள்ளம் குடிக்கவில்லை, ஒரு நிமிஷம் கண்ணை அடைக்கவில்லை என்று குட்டப்பன் சொல்கிறான். இப்படி இரண்டுபேர் இருந்ததைத் தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை என்று மேலும் சொல்கிறான் காட்டை அடி அடியாக அறிந்த குட்டப்பன். கிரி அவர்கள் இருவருக்கும் என்ன உறவு என்று வியக்கிறான். பின்பு நினைக்கிறான் அவர்கள் இருவரும் அப்படி ஒரு கேள்வியை நினைப்பதே இல்லை என்று. அவர்கள் இருவரும் ஒரே உடல். ஒரே மனம். ஒரே ஆத்மா என்று தெளிகிறான்.

நீலி தன்னுடைய புறஉலகாக நிறைந்திருப்பதை பலமுறை கிரி உணர்கிறான். நீலியும் அவனும் தவிர வேறு எதுவுமே இல்லாத அரிய நிலை அது. ஆனால் ஆபேலுக்கும் ராபிக்கும் அந்த பிறர்கூட இல்லை. இருவரும் ஒன்றே என உணரும்அபூர்வம் அவர்களின் அன்பு. தான் நீலிமேல் கொண்ட காதலைவிட ஆபேலுக்கும் ராபிக்கும் இடையேயான காதல் இன்னும் மேன்மையானது என்பதை கிரி ஏதோ ஒருவகையில் உணர்ந்திருந்தான் போலும். கிரி காட்டில் சந்தித்த பெரும்பாலான மனிதர்களை மீண்டும் சந்திக்கிறான். சந்திக்காதவர்களின் வாழ்க்கையைப் பற்றி முழுதும் அறிந்து அவர்களின் மகன்களிடம் பேசுகிறான். ஆனால் காட்டை விட்டு வெளியேறியபின்பு அவன் ஆபேலையும் ராபியையும் பற்றி எதுவும் அறியவில்லை. அறிந்திருந்தாலும் அது அவனது நினைவோட்டத்தில் வருவதேயில்லை. ஏன்? தான் அடையாததை அவர்கள் அடைந்தார்கள் என்பதனால் நிகழ்ந்த ஆழுள்ள தவிர்ப்பா? அல்லது பூத்த காட்டுக்கு வெளியே அவர்களைவைத்து கிரியால் நினைக்கவே முடியவில்லையா?

கிரி அலைந்தது பூத்த காட்டிற்குள்தான். அது வேங்கையும் சந்தனமும்  கொன்றையும் புன்னையும் என ஆண்டுதோறும் பூக்கும் காடு. மணம் என நிறம் என முழு மனதையும் நிறைப்பது. சாவு வரை உடன்வந்து அலைக்கழிப்பது. ஆனால், ஆபேலும் ராபியும் திகழ்ந்தது அந்த காட்டுக்கு மேலே இருக்கும் மலைமுகட்டில். தூயகாதலின் சாரமான அபூர்வம் தேனென ஊறும் குறிஞ்சியின் வெளியில்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *