நிரந்தரமாக ஒத்தி வைக்கப்படும் இறுதி தீர்ப்பு

நீங்கள் ஒரு மலையில் அமைந்த கோட்டையின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அந்த கோட்டையை மலையில் இருந்து பிரித்து அறிய முடியாது. ஏனெனில் அக்கோட்டை மலையை குடைந்து உருவாக்கப்பட்டது. கண்களால் வித்தியாசத்தை உணரவே முடியாத படிக்கு மலையும் கோட்டையும் ஒன்றுடன் ஒன்று கலந்து காட்சியளிக்கும் படி உருவானது. அம்மலையானது ஒரே நேரம் பளிங்கின் உறுதியும் கண்ணாடியின் ஊடுருவும் துல்லியமும் கொண்ட கற்களால் ஆனது. எனவே நீங்கள் நின்று கொண்டிருக்கும் உச்சியில் இருந்து கோட்டையின் அடித்தளங்களை பார்க்கலாம். ஆனால் அந்த கண்ணாடிகளின் எதிரொலிப்பு தன்மையால் அதன் ஆழம் என்ன என்பதையோ, உண்மை தன்மையையோ ஊகிக்க மட்டுமே முடியும். ஆனால் கீழே இறங்குவதற்கு வழிகளே கிடையாது.

இப்போது உங்களிடம் இருவழிகள் இருக்கின்றன. முதலாவதாக வலக்கை பக்கம் திரும்பி செல்வது. அங்கே தெரியும் படியில் கால் வைத்தால் இக்கோட்டை தன்னிச்சையாக வான் நோக்கி வளரும். மேலே செல்லச் செல்ல உங்கள் உடலின் எடை குறைந்த படியே வரும். இறுதியில் நீங்கள் ஒரு சிட்டுக்குருவியாக மாறி விடுவீர்கள். எல்லையற்ற நீல வானத்தில் சுதந்திரமாக பறந்து திரியலாம். ஆனால் அங்கே ஒரு சவால் உள்ளது. அவ்வானம் முடிவற்ற சுழற்காற்றுகளால் ஆளப்படுவது. அவை உங்களை இப்புவி மேல் எங்கெல்லாம் அழைத்து செல்லும் என்று எவரும் அறியார். மேலும் ஒருமுறை பறந்து விட்டீர்கள் என்றால் மீண்டும் மண்ணில் கால் பதிக்க இயலாது. வெறுமே பூக்களின் தேனை அருந்திய படி வானில் உலாவலாம். மண்ணுடன் உங்களுக்குள்ள தொடர்பு உணவாக கொள்ளப்படும் தேன் மட்டுமே.

இரண்டாவது இடப்பக்கமாக திரும்பி சென்றால் ஒரு கடப்பாரையை உங்கள் கையில் எடுத்து கொள்ளலாம். அதை இக்கோட்டையின் சரியான பொருத்துகளில் அறைந்தீர்கள் என்றால் மலை பிளந்து சீர்குலைந்து உங்களுக்கான வழி கிடைக்கும். வெற்றிகரமாக கீழே சென்றுவிட்டால் சுற்றியிருக்கும் காட்டில் சுதந்திரமாக வாழலாம். ஆனால் இந்த முறையில் ஒரு அபாயம் உள்ளது. எந்த பொருத்தில் அறைய வேண்டும் என்பது உங்கள் விருப்பம். நீங்கள் அறைந்த பின் அந்த இடிக்கப்பட்ட பளிங்கு பாளங்களுடன் சேர்ந்து கீழே விழுகையில் அவை உங்கள் தலை மேலேயும் கூட பாய்ந்து உயிரை வாங்கி விடலாம். ஒரு சூதாட்டத்தை போல எந்த பொருத்தியில் எந்நேரம் எவ்வண்ணம் அறைய வேண்டும் என்பது அறுதியிட்டு கூற முடியாதது.

இந்த இரண்டு வகை சுதந்திரங்களும் ஒன்று தான். மண்ணில் திரிவதும் வானில் பறப்பதும் அவரவர் விருப்பம். இப்போது நீங்கள் கிளம்ப வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஏனெனில் கோட்டையின் இந்த உச்சி தளத்தில் எல்லா போகங்களும் கிடைக்கும், முன்னோர் வகுத்த நெறிப்படி. அவற்றை பின்பற்றி நிம்மதியாக வாழலாம். மேலதிக சுதந்திரம் தேவைப்பட்டால் இந்த வழிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இப்பாதைகளில் நீங்கள் முழுமையாக செல்ல வேண்டும் என்றில்லை. சிட்டு குருவியாக மாறுவற்கு முந்தைய கணம் கூட்டில் அடைக்கலம் புகுந்து விடலாம். அல்லது இங்கிருந்து இரண்டு மூன்று தளங்களை உடைத்து விட்டு அங்கேயே நின்றுவிடலாம். அதில் சிறு அபாயம் உள்ளது. தலைக்கு மேல் எப்போதும் கற்கள் விழுந்த படி இருக்கும். பத்திரமாக பதுங்கி வாழ்தல் வேண்டும். உடனே சிட்டு குருவிக்கு ஆசைப்பட வேண்டாம். ஒருமுறை வான் காற்றிற்கு பயந்து கூட்டில் அடைந்தால் அவ்வளவு தான். உங்கள் வளர்ப்புநர்கள் தரும் தானியங்களை உண்டபடி வாழ்நாளை கழிக்க வேண்டியதே. சிறகிருந்தும் சிறையில் இருப்பீர்கள். இந்த பிக்குகள் எல்லாம் இப்படிப்பட்ட விபரீதமான பாதைகளில் செல்பவர்களுக்கே. நீங்கள் பாட்டுக்கு இங்கேயே ஆடப்படும் விதிகளை பின்பற்றினீர்களென்றால் ராஜா போல இருக்கலாம். என்ன சொல்கிறீர்கள் ?

மேற்கண்ட குரலை உலகியலின் வடிவமாக நாம் அறிந்த படி இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் இக்குரலை ஏதோ ஒருவகையில் உணர்ந்த படியே இருக்கிறான். அப்படி கேட்பவர்களில் சிலர் சவால்களை சந்திக்க கிளம்பி சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களை நாம் கலைஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், ஞானிகள் என்று அறிகிறோம். இவர்களில் ஞானி இப்பாதைகளின் சவால்களை கடந்து வெற்றிகரமாக முடிவின்மையை சந்திக்க சென்று விட்டவர். மற்றவர்கள் ஏதோ ஒருவகையில் அதை நோக்கி நகர்பவர்கள் அல்லது தேங்கி நின்று விட்டவர்கள்.

மேலே சொன்ன இருவழிகளில் சிட்டு குருவியை வேதாந்தம் என்றும் கடப்பாரையை சார்வாகம் என்றும் கூறலாம். இவற்றிற்கு அப்படியே நேர் பொருள் கொள்ள வேண்டாம். வேதாந்தம் எனும் போது பலவகை தேடல் முறைகளின் ஊடாக ஒவ்வொன்றாக அறிந்து சென்று இறுதியாக அறிந்தவற்றை உதிர்த்து விடுதல். சார்வாகம் எனும் போது நேரடியாக இகவாழ்வு முதற்கொண்டு எல்லாவற்றையும் உடைத்து நிராகரித்து சென்று வெற்றுடலுடன் வான் முன் நிற்றல். சித்தனை போல.

இந்த பின்னணியில் நாம் சாருவின் அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நூலை நோக்குவதற்கு சில புரிதல்களை வழங்கும். இந்நூல் சார்வாக வழியின் முதற்படியில் நிற்கிறது. அதற்கு மேல் நாம் தத்துவத்திற்கு செல்ல அவசியமில்லை. ஏனெனில் பெருமாளுக்கு அது பிடிக்காது என்பது வெளிப்படை. ஆனால் இந்த இரண்டாவது பாதையின் முதற்படியில் இருந்து விரும்புபவர்கள் முதற் பாதைக்கும் செல்லலாம்.

அடுத்து அன்புக்கு செல்வதற்கு முன்னால் இரண்டு வார்த்தைகளை உற்று நோக்க வேண்டும். ஒன்று பின்நவீனத்துவம் மற்றொன்று மறுசீராய்வு மனு.

பின்நவீனத்துவம் அடிப்படையில் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக துவங்கி அனைத்து வகையான அதிகாரத்திற்கு எதிராகவும் விரிந்தது. எனவே அதன் அடிப்படைகளில் ஒன்று, எவ்வகையான இறுதி தீர்ப்பும் அதிகாரத்திற்கான காய் நகர்த்தலே. உச்சகட்டமாக தீர்ப்பு என்பதே அதிகாரத்திற்கான பகடையே என்ற மிகை முடிவும் உண்டு. இக்கருத்து புனைவில் பிரதிபலிக்கையில் அழகியலின் உள்ளார்ந்த பல்வேறு மாற்று பார்வைகளை உருவாக்கும் போக்குக்கு எதிராக நிறுவப்பட்ட கருத்தாக்கங்களை தாக்கி உடைத்தழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட எதிர் அழகியல் என்ற தட்டையான, நேரடி கூற்றுகள் உருவாகி வந்தன. தமிழில் சாருவே இதன் முதன்மை குரலாக திகழ்கிறார். இந்நாவலில் சாரு மிகை முடிவை எடுக்கும் தீவிர பின்நவீனத்துவவாதியாக தோற்றமளிக்கிறார். அதே நேரம் அப்படி முற்றாக கூறி விட முடியாது. அதற்கு மறுசீராய்வு மனு என்ற சொல்லை பொருட்படுத்தி புரிந்து கொள்ள வேண்டும்.

முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பின் குறைபாட்டை சுட்டி நீதிமன்றத்தில் மீள் விசாரணைக்கு உட்படுத்த கோருவதே மறுசீராய்வு மனு. இங்கு மறுசீராய்வுக்கு எடுத்து கொள்ளப்படும் விஷயம் அன்பு. அதை பின்நவீனத்துவத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்த போகிறேன் என்பதே நாவலின் தலைப்பு உணர்த்துவது. விசாரணையின் முடிவில் – அதாவது நாவலின் முடிவில் – தீர்ப்பு எதுவும் சொல்லப்படுவதில்லை. அது வாசக சமூகத்திடம் விட்டு விடப்படுகிறது – தீர்ப்பு அளிக்க முடியாத படிக்கு.

அன்பு என்னும் ஆதி விசையே உயிரினங்களில் பல்வேறு விதங்களில் செயல்படுகிறது என்பது நாமறிந்ததே. நாவலில் சமூக உறவுகளில் கடைப்பிடிக்கப்படும் அன்பின் வன்முறை அம்சம் மட்டுமே பேசுபொருள். பெருமாளுக்கு தன் மனைவி வைதேகியுடன் உள்ள கசப்பும் இனிப்புமான உறவு, கொக்கரக்கோ, புவனேஸ்வரி, உலகளந்தான், ரமேஷ், வினீத், ஶ்ரீராம், முத்து, பாண்டியன் என நீளும் நண்பர் வட்டத்துடன் உள்ள உறவு. இவர்களில் தலையாயது கொக்கரக்கோ உடனான நட்பு. பெருமாள் வாழ்வதே கொக்கரக்கோவால் என்று சொன்னால் பெருமாள் கோபித்து கொள்ள போவதில்லை. இது ஒரு தற்புனைவு என்பதால் எவரெவர் யார் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம் – சாருவை சில நாள் தொடர்ச்சியாக படித்தால். ஆனால் இப்படி கண்டுபிடித்து கண்ணாம்பூச்சு ஆடி வாசகன் எதையுமே அடைய இயலாது என்பதே தற்புனைவை  உருவாக்கும் ஆசிரியரினின் புனைவு முறை.

உதாரணமாக இந்நாவலில் வைதேகி பைபாஸ் சிகிச்சையின் போது தன்னை சரியாக கவனிக்காது கொடுமை படுத்தினாள் என்று பெருமாள் புலம்புகிறான். ஆனால் ராச லீலாவில் இதே பெருமாள் மீரா தன்னை எப்படி மாய்ந்து மாய்ந்து உயிரை கொடுத்து பாதுகாத்தாள் என்று துதிக்கிறான். மற்றொரு உதாரணம், எக்ஸிடென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் நாவலில் சூர்யாவின் சுய வரலாறில் அவனது தாத்தா உயிருடன் இருந்து ஒவ்வொரு பிள்ளையாக துரத்தியடிக்கும் படலம் விவரிக்கப்படுகிறது. மாறாக இங்கே பெருமாளின் தாத்தா பர்மாவில் இருந்து வந்து இறங்கியவுடனே பரலோக பிரவேசம் செய்துவிடுகிறார். அம்மாச்சியின் கடின உழைப்பால் வளர்ந்தோம் என்கிறான் – பெயர்கள் எல்லாம் மாறியிருக்கிறேதே என உங்கள் மூளையில் ஒரு பல்ப் எரிந்தால் அணைத்து விடவும். பெயர் மாறுகிறதே தவிர ஓரே குண சித்திரம் கொண்டவர்களே பெருமாள் – சூர்யா, மீரா – வைதேகி எல்லாம் இவ்வாறான தன்னை தானே எழுதி அழித்து புனைந்து கொள்ளும் தற்புனைவில் ஆசிரியனை தேடுவது வீண் வேலை.

சமூக உறவுகளில் அன்பின் வன்முறை ஏன் மேலோங்கி இருக்கிறது என்பதே அன்பு நாவலின் வினா. அது மேலோங்கி இருக்கும் உறவு தருணங்களை தொடர்ச்சியாக கூறி கொண்டே போகிறது. இத்தருணங்களை வெறுமனே சித்தரித்து செல்வதால் எந்த வகையான மாற்று நோக்கும் வாசகனுக்கு சிக்காத படி செய்துவிடுகிறது. ஒரு தீர்ப்பும் இல்லாமல் இருக்கிறது. எஞ்சியிருப்பது அன்பு ஒரு வன்முறையாக மாறி விட்டிருக்கிறது என்ற நாவலின் தொடர் குரல் மட்டுமே. இந்த குரலை உயர்த்தி பிடிக்கும் பொருட்டு நாவல் காட்டும் நிகழ்ச்சிகள் நாம் அனைவர் வாழ்விலும் அன்றாடம் நடப்பதே.

இந்த கொடுமைகளை சகித்து கொள்வதற்காக பெருமாள் உபயோகப்படுத்தும் மந்திரத்தை குடும்ப கனவான்கள் பயன்படுத்தி கொள்வது அவர்களின் விருப்பம். ஆனால் அந்த மந்திரத்தை சொல்வதற்கு நான்கு வரி விளக்கம் போதும். அதிகபட்சம் ஒரு பக்க விளக்கம்! ஆனால் இருநூறு பக்க விளக்கத்தின் வாயிலாக நம்முள் உறவுகளில் வெளிப்படும் அன்பில் வன்முறை மேலோங்குவது ஏன் என்ற கேள்வியே. அதன் பொருட்டு நாம் அன்பு என்று எதை கருதுகிறோமோ அதன் மேல் தொடர் தாக்குதலை ஏற்படுத்தி கேள்வியை விட்டு செல்கிறது.

அன்பு நாவலில் இருந்து சம்பவங்களை உதாரணமாக எதையும் சுட்டி காட்டாமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. இது காட்டும் சம்பவங்களுக்கு நிகராக நாமும் அவரவர் வாழ்வில் இருந்து நூற்றுக்கணக்கில் எடுத்து வைக்கலாம். அப்படி எடுத்து வைப்பது ஒரு கேள்வியின் பொருட்டு இருக்க வேண்டும். நமக்கு அப்படி எந்த கேள்வியும் இதுவரை இல்லாததால் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாவலின் சம்பவங்கள் அனைத்தும் ஒரு மைய கேள்வியை மட்டுமே வாசகனுக்குள் ஆழ செலுத்த பாடுபடுவதால் அதற்கான தேவையான இல்லாமல் இருக்கிறது.

இப்படியாக அன்பின் வன்முறை குறித்த கேள்வியை எழுப்பி நிரந்தரமாக தீர்ப்பை ஒத்தி வைக்கிறது சாருவின் அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *