குட்டிச்சுவர் கலைஞன் எனும் சைத்தானின் தோழர்

எழுத்தாளரின் படைப்பூக்கத்தை வெளிப்படுத்தும் காரணி எது என படைப்புகளின் வழி கண்டடைவது எனக்கு முக்கியம். அதன் வழிதான் அவர் எந்த கேள்வியை பின் தொடர்கிறார், எதனுடன் முட்டி மோதுகிறார் என்பதை கவனிக்க இயலும். தனித்தனி கதைகளாக சில கதைகள் உருபெறாமல் போயிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது அந்த சலனத்தை கண்டுகொள்ள இயலும். எழுத்தாளர் முட்டிக்கொள்ளும் வினா எத்தகையது,  எத்தனை விடாப்பிடியாக, தீவிரமாக, கலாப்பூர்வமாக அந்த வினாவை தொடர்கிறார் என்பதே இன்று எனக்கு எழுத்தாளரை மதிப்பிட முக்கிய கருவியாக உள்ளது. என் நோக்கில் ஜாகிர் இரண்டு முக்கியமான கேள்விகளை தொடர்கிறார். அமைப்புக்கும் தனிமனிதனுக்குமான உறவு சார்ந்தது முதன்மை கேள்வியெனில், நுண்னுணர்வு கொண்ட கலை மனத்திற்கு நிலையாமையும் அலைக்கழிப்பும் அருளப்பட்டது ஏன் எனும் கேள்வி இரண்டாவது. ஜாகிரின் எழுத்தில் கதைசொல்லி- இலக்கியவாதி என இருவரும் தொழில்படுவதை கவனிக்க முடிகிறது. முதல் கேள்வியை கதைசொல்லியாகவும் இரண்டாம் கேள்வியை இலக்கியவாதியாகவும் எதிர்கொள்கிறார்.

மனிதகுலம் அமைப்புகளை ஏன் உருவாக்குகிறது? உதிரி உயிரினங்களாக எஞ்சியிருந்தால் இன்றைய சாத்தியத்தை அது எட்டியிருக்க முடியாது. அமைப்புகளை உருவாக்க கற்பனைத்திறனும் படைப்பூக்கமும் தேவைப்படுகிறது. அமைப்புகள் வழியே மனிதகுலம் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டது. மரணத்திற்கு விளக்கம் தேடிக்கொள்ள முற்பட்டது. அமைப்புகளை முற்றிலும் எவராலும் எக்காலத்திலும் நிராகரிக்க இயலாது. ஏனெனில் அது மனித ஆழ்மனங்களின் கூட்டு கண்டடைவு. அமைப்புகள் உள்ளே வெளியே என தெளிவான வரையறைகளால் ஆனது. இரண்டும்கெட்டான்களை கணக்கில் கொள்வதில்லை. அறம் என்றும் விதி என்றும் உருவாக்கி செறிவாக்கி பரிணாமம் அடைகிறது. மனிதர்களின் சிருஷ்டி மனிதர்களுக்கே எதிராக ஆகுமென்றால்? எப்போதும் அப்படித்தானே. இறுக்கி, சுருக்கும் சர்ப்பங்களாக ஆகும்தோறும் நெகிழ்த்தவும் உடைப்பு ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. கலையும், மெய்யியலும், இலக்கியமும் இந்த நெகிழ்வுகளை காலந்தோறும் உருவாக்கி வந்தன.

நவீன இலக்கியம் தனி மனிதனை அலகாக கொண்டது. மனிதர் உருவாக்கிய அமைப்புகளின் இறுக்கத்தை உதிரியான தனி மனிதனின் விசனங்கள் வழி நெகிழ்த்த முற்படுகிறது. இலக்கியம் ஒரு அறிவுதரப்பை உருவாக்குகிறது. அமைப்பு ஐயம் கொள்கிறது. ஏற்க மறுக்கிறது. பாதுகாப்பின்மையை அதிகரிக்காது எனும் உத்தரவாதத்தை கோருகிறது. மெல்ல ஏற்பு உருவாகி வந்ததும் அமைப்பு அந்த மாற்றத்தை தனதாக்கிக் கொள்கிறது. எழுத்தாளர் உதிரிகளின் பிரதிநிதி. அவர்களின் குரலை ஒலிக்க செய்வதே அவர் பணி. இந்த பின்புலத்திலிருந்து கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புலகத்தை அனுக முடியும். அவர் தான் சார்ந்த தமிழ் இஸ்லாமியர் எனும் அடையாளத்தில் நின்றபடி விமர்சன குரல்களை எழுப்பி வருகிறார். இஸ்லாம் எனும் அமைப்புக்கும் தனிமனிதருக்கும் இடையேயான முரண்பாடுகளே அவரை சலனப்படுத்துகிறது. ஆக்கப்பூர்வ எதிர்குரலுக்கும் புறக்கணிக்கும் விமர்சன குரலுக்கும் வேறுபாடுண்டு. பின்னதுடன் நாம் உரையாட ஏதுமில்லை. அமைப்புகளின் நியாயத்தையும் இருப்பையும் ஏற்றுக்கொள்வதோ புரிந்துகொள்வதோ இல்லை. முன்முடிவுகளும் காழ்ப்புகளும் நிறைந்ததாக இருக்கவும் கூடும். ஆனால் ஆக்கப்பூர்வ எதிர்குரல் அமைப்பிற்குள் இருந்தபடி அதன் எல்லைகளை விஸ்தரிக்க முயல்கிறது. ஜாகிரின் குரல் அழித்தொழிப்பை கோரவில்லை, மாறாக உள்ளிருந்து எழும் விமர்சன குரலாக ஒலித்து உரையாடலை கோரி நிற்கிறது. உதாரணமாக ‘நரகத்திலிருந்து ஒரு குரல்’ கதையின் நாயகன் அபுவிற்கு நோன்பிருக்க வேண்டும் எனும் ஆவல் உள்ளது, நோன்பு அவனை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் எனும் நம்பிக்கையும் உண்டு, ஆனால் நாவடக்கமற்றவன். பசி பொறுக்கவோ ருசி மறுக்கவோ முடியாத சபலமும் உள ஊசலும் கொண்டவன். நரகம் நிச்சயம் எனும் பிரசங்கமும் நோன்பின் மகத்துவமும் அதை ஒருபோதும் தன்னால் கடைப்பிடிக்க முடியாத எனும் தனது உளதிட்பமின்மையால் விளைந்த குற்ற உணர்வும் அவனை அலைக்கழிக்கிறது. ஒரு பலவீன மனமுள்ள தனிமனிதனுக்கு இந்ந அமைப்புக்குள் குற்ற உணர்வின்றி உலவ முடியாதா? என்பதே அவர் எழுப்பும் கேள்வி.

உலகியலுக்கு உதவாத வாழ்வை சமூகம் எப்படி மதிப்பிடுகிறது எனும் பெரும் கேள்வியாக இதை வளர்த்தெடுக்கலாம். ஷோபா சக்தியின் தொடக்ககால நாவல்களான ‘ம்’ ‘கொரில்லா’ குறித்து நண்பர் ஈரோடு கிருஷ்ணனுடன் உரையாடிய போது ‘லட்சியமற்று மனிதர் வாழக்கூடாதா?’ எனும் கேள்வியை ஷோபா எழுப்புகிறார் என்றார். இந்த கேள்வியை ஜாகிர் படைப்புலகத்திலும் பொருத்தி பார்க்கலாம்.  மேற்சொன்ன கதையின் நீட்சியாக ‘இயல்பு’ எனும் கதையைக் காணலாம். தந்தையின் நினைவுநாளன்று பிச்சைக்காரனுக்கு அன்னதானம் அளிப்பதற்காக கேரியரை சுமந்துக்கொண்டு அலைகிறான். ஆனால் அன்று வேறொரு பிரமுகர் வீட்டு விழாவில் இலவச அன்னதானம் அளிக்கப்படும் செய்தி கண்ணில் படுகிறது. ஆகவே எல்லோரும் அங்கு சென்றிருப்பார்கள் என்பதை உணர்கிறான். கொண்டு சென்ற கேரியரில் இருந்த உணவின் வாசம் அவனை ஈர்த்தது. பிரித்து நிதானமாக உண்டுவிட்டு திரும்புகிறான். அவனுக்காக சமைத்த உணவை வேறொரு பரதேசி வீடுதேடி வந்து உண்டு சென்றார் என கதை முடிகிறது. தந்தையின் மீது பிரியமில்லாதவன் இல்லை, அவருக்காக உணவை ஏறியிறங்கி வெயிலில் சுமந்து செல்கிறான், ஆனாலும் அவன் உள சலனத்திற்கு பணிகிறான். இக்கதை அமைப்பிற்கும் தனிமனிதனுக்குமானதல்ல,  தந்தை மகன் எனும் தனி மனிதர்களுக்கு இடையேயானது. மறுமையிலிருக்கும் தந்தை இம்மையிலிருக்கும் மகனை புரிந்து கொள்கிறார். வேறு வடிவில் உணவேற்று அவனை குற்ற உணர்வடையாமல் மீட்டு ஆசிர்வதிக்கிறார். அவன் உண்டது தந்தையின் பிரசாதமென ஆகிறது. ஜாகிரை மனிதர்களை கொண்டாடும் ‘மானுடவாதி’ (Humanist) என வகைப்படுத்தலாம் என தோன்றுகிறது. ‘சைத்தான் மீது எறிந்த கல்’ கதையில் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்தபாவை சைத்தான் எவ்வாரேனும் நெறி பிறழ வைக்க முயல்கிறது. யாத்திரையின் ஒரு சடங்காக சைத்தான் மீது கல்லெறியும் சடங்கு நிகழ்கிறது. ‘தொடர் தொழுகையால் கிடைத்த சாந்த சொரூபத்தை சைத்தானுக்காக மாற்றிக்கொண்ட முகங்கள்’ கையில் கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு ஆக்ரோஷமாக சைத்தானை தாக்கினர். அதுவரை சைத்தானை வென்று வந்த‌ முஸ்தபா அப்போது ‘ஹாஜிகளுக்கு இப்படி ஒரு ஹிம்சையான சடங்கு தேவைதானா என்றும் கூட ஆண்டவனிம் கேட்டார்.’ அவரது தடுமாற்றம் கண்டு சைத்தான் கூட்டம் கும்மி கொட்டி சிரித்தன. தனிமனிதராக அந்த சந்நத ஆட்டத்தில் தன்னை விலக்கிக்கொள்கிறார். மெல்லிய ஊசலாட்டமும் விலக்கமுமே நெரிசலில் சிக்கி உயிர் விட காரணமாயிருந்தது. ஐயமும் சஞ்சலமும் சைத்தானின் இயல்புகள் அல்லவா. ‘நீஸா என்றொரு சிநேகிதி’ எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று. இறந்துபோன தோழி நூருன்னிஸாவின் நினைவாக ஒரு ஆட்டுக்குட்டியை வளர்க்கிறாள் அவளது தோழி ஆயிஷா. வினோதமான அவளது ஈர்ப்பு எவருக்கும் விளங்கவில்லை. ஊரில் இல்லாத போது அந்த ஆட்டை அவளது அத்தா விற்றுவிடுகிறார். அதுவும் நூருன்னிசாவின் தந்தைக்கே. ‘இறந்துவிட்ட தன் மகளின் பெயர் சூட்டி அந்த ஆடு நீஸாவென அழைக்கப்பட்டுக் கொண்டிருந்ததெல்லாம் அந்த மனுஷனுக்குத் தெரியும். தெரிந்து என்ன பிரயோஜனம். மகளாவது மனைவியாவது அவர்களைப் பொறுத்தவரை அது வாயற்ற ஒரு ஜீவன். வியாபரத்துக்கான பிராணி. அதன் இறைச்சி மட்டுமே அவர்களின் குறி.’ என அங்கலாய்க்கிறாள். அவளது உணர்வை பைத்தியக்காரத்தனமானது என்றே எல்லாரும் கருதுகிறார்கள். அவளை பைத்தியம் என்றே கருதுகிறார்கள். தோழியின் நினைவாக ஊனுணவை தவிர்க்கிறாள். வினோதமாக நோக்கப்படுகிறாள். ஆயிஷாவும் பொதுபோக்கிலிருந்து விலகிய ஒரு உதிரிதான்.

‘தேய்பிறை இரவுகள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பக்ரீத் ஆடுகள்’ பரம்பரை கசாப்புக்கடைக்காரரான சுலைமான் ராவுத்தரின் கதையை சொல்கிறது. ஊரின் பெரிய கையான ஏ.எம்.எஸ் முதலாளி அவரை தூக்கி நிறுத்தியவர். திருமணத்திற்கு கொமறுகள் அடுத்தடுத்து நிற்கிறார்கள் பக்ரீதின் போது வெட்டப்படும் ஆடுகளை நம்பி பிழைப்பை ஓட்டுபவர். ஏ.எம்.எஸ் முதலாளி ஒவ்வொரு ஆண்டும் முப்பது நாற்பது கிடாய்களை வாங்குபவர். அதற்காக முன்பணமும் கொடுத்துவிடுவார். ஆனால் அந்த ஆண்டு கைகாசை மொத்தமாக முடக்கி ஆடுகளை பத்திவந்தாலும் கூட அவரிடமிருந்து பெரிய ஆர்வம் வெளிப்படவில்லை. தொழில் சுணக்கம் என பேச்சு. பெரியவர் குர்பானிக்கு ஒட்டகத்தை கொண்டு வந்து இறக்குகிறார். ‘குறிஞ்சி நிலத்தில்’ அகலமான பாதங்களை வைத்து முதல்முறையாக ஒட்டகம் நடந்தது’. சுலைமான் ராவுத்தர் வேப்பங்குச்சி கசப்பு மாறாமல் அண்ணாந்து பார்த்தார் எனும் புள்ளியுடன் கதை நிறைவடைகிறது. ஒட்டகத்திற்கும் தமிழகத்திற்குமான பொருந்தாதன்மையை சுட்டுகிறது.

 ‘கொமறு காரியம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கசாப்பின் இதிகாசம்’ இந்த கதையின் தொடர்ச்சியாக இணைத்து வாசிக்கப்பட வேண்டியது. எனது சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இக்கதைக்கு நிச்சயம் ஓரிடம் உண்டு. முந்தைய கதையில் கைவிடப்பட்டதாக உணரும் கசாப்புக்கடைக்காரரின் கோணத்திலிருந்து ஒட்டகத்தின் வருகை பேசப்படுகிறது. தனி மனிதனின் அங்கலாய்ப்பு, கசப்பு தோல்வியாக மட்டும் வெளிப்படுகிறது. ‘கசாப்பின் இதிகாசத்தில்’ அபாரமான பகடி கைகூடி வந்துள்ளது. மொழியின் துடிப்பையும் துள்ளலையும் உணர முடிகிறது. ஒட்டகம் இங்கே வேறொன்றின் குறியீடாக ஆகிறது. ஒரே நிகழ்வின் வெவ்வேறு சாத்தியங்களை எப்படி வெற்றிகரமான கதையாக்குகிறார் என்பதை ஒரு எழுத்தாளராக இவ்விரு கதைகளைக் கொண்டு நோக்கும் போது பெரும் கற்றல் வாய்ப்பை அது நல்குகிறது. ஒட்டகத்தின் வருகை கசாப்பு கடைக்காரரின் வாழ்வாதார சிக்கல் எனும் புள்ளியை ‘பக்ரீத்தின் ஆடுகள்’ கைக்கொள்கிறது. ஆனால் அதுவல்ல சிக்கல். ஒருவர் ஒட்டகத்தை இங்கே ஏன் தருவிக்க வேண்டும்? அதன் பின்புள்ள உளவியல் என்ன? என கதையின் கோணத்தை தலைகீழாக்குகிறார். ‘எது ஒன்றிலும் ஒரு அரபு முத்திரை இருக்க வேண்டும். வளைகுடா வாசனை வீசவேண்டுமல்லவா? அப்போதுதானே உன்னை முஸ்லிம் என்று ஒப்புக்கொள்வார்கள். என்ன உன்னுடைய மூதாதையர்கள் கொங்கு மண்டலத்தில் உள்ளொடுங்கிய பட்டிக்காட்டில் விவசாயம் செய்து கொண்டிருந்த குடியானவர்கள். உண்மைதான். உன் முகரக்கட்டையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தாலே அது தெரியும்.’ ஜாகிர் தனது கதைகளின் ஊடாக தொடர்ந்து இந்த விவாதங்களை எழுப்பி வருகிறார். உருது இஸ்லாமியர்களுக்கும் தமிழ் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான பாகுபாடு, தமிழ் இஸ்லாமியர்களின் தாழ்வுணர்வு குறித்து வெவ்வேறு கதைகளில் பேசுகிறார். உள்ளூர் பண்பாட்டுடன் முயங்கி உருவான தமிழ் இஸ்லாமின் இடம் இறக்குமதி கூறுகளால் சுருங்கி வருவதை குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். ஒட்டகம் அரேபிய கூறுகளின் வருகையின் குறியீடாக பரிணாமம் கொள்கிறது.  யார் இறக்குமதி செய்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஆன்மீகத்துக்கு தன்னை முழுதளித்து வாழ்பவர் அல்ல, ‘வட்டி உசேன்’ இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வட்டி தொழிலை புரிபவன் தனக்கான இடத்தை வேண்டி அதை இங்கே கொணர்கிறார். பள்ளிவாசல் ஜூம் ஆ பயானில் வட்டி வாங்குவது பாவம் என முழங்கிய 37 பேஷ் இமாம்களை ஊருக்கு திருப்பியனுப்பி விடும் அளவுக்கு செல்வாக்கு உடையவர்.

“ஆதியில் இப்ராஹிம் நபி தன் பிள்ளை இஸ்மாயிலை குர்பானி தரத்துணிந்த மாதிரி உசேன் தன் மகனையா குர்பானி கொடுக்கப் போகிறார்?” எனும் நக்கலான கேள்வியுடன் தான் கதை நகர்கிறது. குர்பானிக்கு ஒட்டகம் என முடிவான செய்தியை மனைவி உம்மு சல்மா கேட்டதும் அவர் முகம் சுண்டி ‘இம்முட்டூண்டு’ ஆகிவிட்டது. ஒட்டகங்கள் கூட்டங்கூட்டமாக வாயில் மிதிப்பதாக கனவு காண்கிறாள். அவளுக்கு ஒட்டக இறைச்சி பிடிக்கவும் பிடிக்காது ‘செத்து நாறும் பெருச்சாளியின் நெடியைக் காட்டிலும் தூக்கலாக அதன் நெடியை உணர்ந்து’ வாந்தி எடுத்தவள். ‘ஒட்டகம் அறுப்பது எப்படி’ என்ற தலைப்பில் ஒளிபரப்பு உள்ளூர் தொலைகாட்சிகள் தயாராக வந்தனர். இப்போது எப்படி ஒட்டகத்தை அறுப்பது? முன்னபின்ன அறிமுகமும் அனுபவமும் இல்லை. ஸ்டூலை போட்டுக்கொண்டு நின்றவாக்கில் அறுக்க முயல்கிறான் ஒருவன். பிறகு காலை கட்டி படுக்க வைக்க வேண்டும் முடிவெடுக்கிறார்கள். சுவற்றோடு சாய்த்து தரையில் தாட்ட முயல்கிறார்கள். அருந்ததிய இளைஞர்கள் உதவ வந்தால் அதை கசாப்புக்காரர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ‘மொதலாளி பன்னி அறுக்குற அவுனுகளுக்கும் ஆடு அறுக்குற எங்களுக்கும் வித்தியாசம் இல்லையான்னு அண்ணே ஃபீல் பன்றாரு…’ என தயங்குகிறார்கள். அறுப்பதற்கு முன் ஒட்டகம் என்னை கொல்லாதீர்கள் என பேசத்தொடங்குகிறது. ‘தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒட்டக இறைச்சியைத் தொடவோ சாப்பிடவோ தைரியமில்லை. வெந்து போயிருந்த இறைச்சியும் கூட துடித்தபடி பேசிக்கொண்டிருந்தால் அதைத் தின்ன யாருக்குத்தான் மனம் வரும்?’ என கதை முடிகிறது. சாருவின் கதையொன்று நினைவுக்கு வந்தது. மாட்டுக்கறி உண்டு புரட்சி செய்ய செல்லும்போது பெரும்பாலானவர்கள் கறியை அப்படியே குப்பையில் எறியும் இரட்டைநிலையை சித்தரிக்கும்.

‘வட்டி உசேன்’ போலவே ‘வட்டி குலாம்’ என்றோரு பெயரும் கதைகளில் வரும். ”ராட்சஸப் பறவைகளின் சிறகுகள்’ கதையில் வட்டி குலாமின் மய்யித்து அடக்கம் செய்யப்படுவதற்கு முன் சக்கரை மோதினார் உமிழ்ந்த சளிகட்டுடன் அடக்கம் செய்யப்படுகிறது.  மதத்தின் லட்சியங்களுக்கும் நடைமுறை கபடங்களுக்கும் இடையேயான முரண்பாட்டை ஜாகிர் கதைகளில் தொடர்ந்து சுட்டுகிறார். சகோதரத்துவமும் சமத்துவமும் லட்சியம் என்றால் நடைமுறையில் அப்படி உள்ளதா? ‘கருத்த லெப்பை’ ‘மீன்காரத்தெரு’ ‘மீன்குகைவாசிகள்’ வழியாக இஸ்லாமிய சமூகத்திற்குள் நிலவும் பாகுபாடுகளை அடையாளப்படுத்துகிறார். ‘கருத்த லெப்பை’ ராவுத்தர்களுக்கும் லெப்பைகளுக்கும் இடையேயான சிடுக்குகளை பேசுவது. ‘கொமறு காரியம்’ கதையில் ஆதிலா  ‘எந்த பெண்ணுக்கும் வராத கனவை’ காண்கிறாள். ‘பள்ளிவாசலில் இமாமின் இடத்தில் நின்று ஆதிலா தொழுகிறாள். அல்ல, தொழவைக்கிறாள். பல்லாயிரம் ஆண்களும் பெண்களும் இவளைப் பின்தொடர்ந்து அணிவகுத்து நிற்கிறார்கள், தொழுகிறார்கள். ஒரு பேரதிசயம் நிகழ்கிறது. குரான் வசனங்களை அழகுத் தமிழில் ஓதுகிறாள். அர்த்தம் புரிந்ததால் தொழுகையாளிகளின் முகத்தில் அத்தனை பரவசம்.’ ஜாகிரின் குரலை சீர்திருத்தவாதியின் குரலாகவே வகுத்துக்கொள்ள முடியும். ஜாகிர் பெண்களின் பாடுகளை மிகவும் கரிசனத்தோடு பலகதைகளில் கையாண்டுள்ளார். ‘பாவம் அவள் பெயர் பரக்கத் நிஷா’ தலாக் வாங்கியதற்கு பின்பான வாழ்க்கையை சித்தரிக்கிறது. அவளைப்போலவே தலாக் வாங்கிய ஆமினாவை சந்திக்கிறாள். ஆமினாவின் மகள் பானுவும் நிஷாவின் மகன் மன்சூரும் சேர்ந்து விளையாடத்தொடங்குகிறார்கள். பிள்ளைகள் விளையாட்டை அனைவரும் லயித்து கவனிக்கிறார்கள். பானு சோறு வடிப்பதாகவும் மன்சூர் உண்பதாகவும் பாவனை செய்கிறார்கள். மன்சூரின் பாவனை சட்டென மாறுகிறது. “நாயி திங்குமா இந்த சோற..இப்படி சோறாக்குனா நீ எனக்கு வேணாம் .. போடி ஆத்தா வீட்டுக்கு. உனக்கு தலாக் கொடுத்துட்டேன்..தலாக் தலாக் தலாக்..முத்தலாக்” என கண்களை மூடிக்கொண்டு மகன் கத்தியதை கண்டு உடல் பதற ஆவேசமாக அவனை அடிக்கிறாள் அம்மா பரக்கத் நிஷா. இந்த குழந்தை விளையாட்டு வழியாகவே என்ன நடந்திருக்கும் என்பது நுட்பமாக சித்தரிக்கப்படுகிறது. ‘குடமுருட்டி ஆற்றின் கரையில்’ வரும் திருமண தரகர் புவ்வா தலாக் செய்தவர்களுக்கு மணப்பெண் தேட மாட்டாள். ‘மீன்குகைவாசிகள்’ நாவலில் மும்தாஜ் பேகம் தனது கணவர் நைனார் முகமதிற்கு குல்உ அளித்தவள் என்பது சொல்லப்படுகிறது. குல்உ, தலாக்கை போல பெண் ஆணுக்கு அளிக்கும் மணவிலக்கு. மிக அரிதானது. மும்தாஜ் ஊருக்குள் வரும்போது நைனார் அவளை வேட்டையாடுவது போல விரட்டுகிறான். நைனாரின் போக்கிரித்தனத்துக்கு பயந்துகொண்டோ அல்லது குல்உ கொடுத்தவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என கருதியோ மொத்த ஊரும் வேடிக்கை பார்க்கிறது.  ‘நாச்சியா’ கதையில் கதீஜா நாச்சியா வெளிநாட்டில் பணியாற்றும் ரகுமானை மணந்துகொள்கிறாள். ஆறு மாதங்களுக்கொருமுறைதான் அவன் ஊருக்கு வருவான். மாமனார் மாமியார் அம்மா அப்பா பிள்ளைகள் என எவருமில்லை. வீடும் ஆளரவமற்ற புறநகர் பகுதியில். சிறைபிடிக்கப்பட்ட தேவதைபோல தூர்த்து போன மரச்சன்னல் மட்டுமே அவள் உலகம்.

‘மீன்குகைவாசிகள்’ நாவலில் நசீர் ஆமினாவிடம் சொல்வான் ‘கலை எப்பவுமே பாவமாகாது ஆமி, அதப் புரிஞ்சிக்காம புறக்கணிக்கிறதுதான் பாவம்.’ நசீர் ஒரு ஓவியன். அவனுக்கு மறைஞான தரிசனம் வழி கிடைத்த காட்சிகளை வரைந்து வைத்திருப்பான். ஆனால் அதை வெளியே காட்ட துணிந்ததில்லை. ‘கருத்த லெப்பையிலும்’ ராதியம்மா கனவுக்கு உருவமளிக்க முயல்வான். அடிப்படைவாதத்தை எள்ளும் கதை என ‘இப்படியாக சினிமாவானது என் சமூகத்தில்’ கதையை குறிப்பிடலாம். ஊருக்குள் சினிமா தியேட்டர் வருவதற்கு ஜமாத்தார்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பிறகு ஒஉ வழியாக ஊருக்குள் சினிமா நுழைகிறது. அடுத்த சிக்கல் ‘இஸ்லாமிய இளஞ்சிட்டு’ எனும் அடைமொழியை நதியாவிற்கு இடக்கூடாது என பிரச்சனை எழுகிறது. சினிமா ஹராம் என சிக்கந்தர் ஹஜ்ரத் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகளில் பிரச்சாரம் செய்தவரும் கூட வேறு வழியின்றி பொழுது போக்குவதற்கு ‘இஸ்லாமிய இளஞ்சிட்டு’ அடைமொழியை வெள்ளைத்தாளில் மறைப்பது எனும் சமரசம் எட்டப்பட்ட பிறகு திரைப்படம் காண வருகிறார். ‘உருவம்’ கதையில் உருவப்படங்கள் உள்ள வீடுகளுக்கு ‘மலக்குமார்கள்’ வருவதில்லை என்று பிரசங்கம் செய்யும் மௌலவியின் கண்காணிப்புக்கு அஞ்சி திருமண புகைப்படத்தைக்கூட ஒளித்து வைக்கிறார்கள். மௌலவியின் இறந்துபோன இளம் மனைவியின் புகைப்படம் அவரிடம் இருப்பதாக கனவு கண்டதும் விசாரிக்க செல்கிறார்கள். இறுக்கம் தகர்ந்து நெகிழ்வான உச்சத்தில் கதை முடிகிறது. வயதாகி ஓர்மை குறைந்து அவளது முகம் நினைவிலிருந்து மறைந்து கொண்டிருப்பதாக கவலை கொள்கிறார் மௌலவி. ‘வாஸ்தவத்தில் நான் இப்படிப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் நாளா மனசில கொழப்பம். இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு படம் கெடச்சுட்டாப் போதும்னு இப்பத் தோணுது ஏன்னு தெரியல…எல்லாம் அல்லாஹ் அறிவான்…’ என்று குமுறி அழுகிறார் மௌலவி. சடங்குகள் நம்பிக்கைகளின் ஊடே ஒளிவிடும் மனிதத்தன்மையை அடையாளம் காண்கிறார் ஜாகிர். ‘காஃபிர்’ கதையும் மனிதர்களுக்கு இடையேயான புரிதலையும் நல்லிணக்கத்தையும் அடிப்படையாக கொண்ட கதைதான். ராமசாமி முதலாளியின் கீழ் பணிபுரியும் அப்துல்லா சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களுக்கு பூ வைப்பதை தனது வழக்கமான பணியாக கொண்டவன். அவனது அத்தாவிற்கு தெரியவந்தது. அத்தா காசிம் ராவுத்தர் மார்க்க விவகாரங்களில் கெடுபிடிகளை கடைபிடிப்பவர். ‘ஒரு காஃபிர எனக்கு புள்ளையா தந்துட்டியேடா யா அல்லாஹ்’ என வருந்துகிறார். பிடிவாதத்தில் இறுகியவர் ‘நீ ஒண்ணும் பெருசா தப்பு பண்ணிடலே. வறும வறுமதாம் ஒன்ன அந்தக் காரியம் பண்ண வச்சது. எனக்கு புரியுது..‌’ என சொல்லிவிடமாட்டாரா என ஏங்குகிறான். தனது செயலை பரிசீலிக்கும் போது  ‘அப்படியானால் இந்த நாட்டில் எத்தனை லட்சம் காஃபிர்கள்…!’ என யோசிக்கிறான். விபூதியுடன் நேர்காணலுக்கு செல்லும் முருகேஷ் பள்ளிவாசலின் மினார்களை நிமிர்ந்து ஒரு கணம் நோக்கி கண்மூடி மனதார வேண்டிக்கொண்டு இயல்பாக கடக்கிறான். அவனது அடையாளத்திற்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. பெரிய குழப்பம் ஏதும் அவனுக்கு இல்லை. மறுநாள் அவனது அக்கா பெரிய பூச்சரத்தை இலையில் பொதிந்து கொடுக்கிறாள். தந்தையிடம் ஒரு ஏற்பு நிகழ்கிறது. இந்த குறுகிய கால மனமாற்றம் நடைமுறை சாத்தியமற்ற விருப்ப கற்பனை என தோன்றினாலும் கூட இனிமையானதே. ‘அடையாளம்’ கதையில் சிறுமிகளான மாரிக்கும் பாத்திமாவுக்கும் நட்பு துளிர்க்கிறது. “மாரி தான் நோன்பிருக்கப் போவதை பாத்திமாவிடம் சொன்னாள். பாத்திமா ஆச்சரியம் கொண்டு மாரியைத் தழுவினாள். பதிலுக்கு மாரியுடன் கோயிலுக்குப் போய் விபூதியை நெற்றியில் அப்பிக் கொண்டு வந்த பாத்திமாவுக்கு நன்றாகத் தீயில் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் உடம்பின் பல பாகங்களிலும் சூடு கிடைத்தது. தோழியின் காயங்களைக் கண்டு பதறிப் போனாள் மாரி. இது மாதிரி விஷயங்களில் தன்னைக் கட்டுப்படுத்தாத பாட்டனை நினைத்து வியந்துபோனாள். பாத்திமாவிடம் கேட்ட போது “எனக்குப் புரியில மாரி. இனிமே நீ என்னைப் பார்க்க வர வேணா. வந்தீன்னா ஒனக்கும் சூடு போட்டுரும் எங்கம்மா. நா போறேன்” என்று கையசைத்துக் கொண்டே பிரிந்து போனாள்.” இவ்விரு கதைகளிலும் வெளி பண்பாட்டு தாக்கத்துடன் ஒப்பிடுதல் நிகழ்கிறது. அடையாளங்கள் சார்ந்து எழுப்பப்படும் பாதுகாப்பின்மை கேள்விக்கு உள்ளாகிறது.னஆறூ  ‘எடுப்பு’ கதையில் சுடலை எனும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் ‘நாயவிட கேவலமாக நடத்துகிறார்கள்’ என கதைசொல்லியின் நாணாவிடம் புலம்புகிறான். சுடலையின் மனைவியுடன் நாணாவுக்கு உறவு உண்டு. நாணா சுடலையை இஸ்லாமியனாக மாறச்சொல்கிறார். அவனும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறான். விஷயம் பரவுகிறது. கதைசொல்லி ‘சுடலையை நினைத்தால் எனக்குப் பாவமாயிருந்தது. புதிய வேஷம் போட்ட பிறகு இந்த மேடையில் அவன் என்ன பாடுபடப் போகிறானோ. என்னால் என்ன செய்துவிட முடியும். நாணாவை எதிர்க்கும் அளவு எனக்கேது திராணி?’ என வருந்துகிறான். சுன்னத் பற்றி எவனோ பயமுறுத்த பின்வாங்கி சில நாட்கள் தலைமறைவாகிவிட்டு விபூதி பட்டையுடன் திரும்புகிறான்.

சமூக விமர்சனம், தனி மனிதருக்கும் அமைப்புக்கும் இடையேயான கதைகளை எழுதும்போது எளிதாக முற்போக்கு தரப்பாக சுருங்கிவிடும் அபாயம் உண்டு. ஆனால் ஜாகிருக்குள் இருக்கும் கதைசொல்லி தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட பல அமானுட தருணங்களையும் கதையாக்குவதன் வழி அத்தகைய வகைப்படுத்தலுக்கு ஆட்படாதிருக்கிறார். ‘பௌர்ணமிக் கிணறு’ நல்ல காட்சியனுபவம் அளித்த பேய்க்கதை. ‘அமானுஷி’ ஏறத்தாழ காரைக்கால் அம்மையார் கதையை போன்றது. ரஜியாவின் கணவில் நாகூர் ஆண்டவர் வருவார். அவ்வப்போது அருள்வாக்கு உதிர்ப்பாள். அவளை மணமுடிக்க இருந்த முஜிக்கு இது தொந்தரவாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் நிக்காஹை நிறுத்திவிடுகிறான். அபாரமான காதல் கதையாக நிறைவடைகிறது. ‘மீன்குகைவாசிகள்’ நாவலில் வரும் வள்ளி பீவி ஈருசுரூக்காரியாக ஆவதும், அவளது தர்காவிலிருந்து எழும் அழுகை ஒலியும் அமானுட அனுபவத்தை அளிப்பவை. ஜாகிர் பல ஆண்டுகளாக எழுதி வரும் ‘வெள்ளத்தாயி வம்சத்தார்’ நாவலுக்காக சில கள பயணங்கள் மேற்கொண்டபோது ஏற்பட்ட அமானுட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘குடமுரூட்டி ஆற்றங்கரையில்’ ஆண்டகையின் அற்புதம் சித்தரிக்கப்படுகிறது. ஜின்னாவின் டைரியில் பக்கீர்களின் வாழ்க்கை சித்திரம் கிடைக்கிறது. ‘சாமானியனைப் பற்றி குறிப்புகள்’ நாவலில் கரியமீனா மய்யத்தை குளிப்பாட்டும் காட்சி மிக விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலின் அபாரமான பகுதிகளில் ஒன்று.

தமிழ் இலக்கியத்திற்கு முதன்மையான பங்களிப்பை செய்தவர் இலக்கியவாதியை விட கதைசொல்லி ஜாகிர் என சொல்லிவிட முடியும். ‘மீன்காரத்தெரு’ ‘மீன்குகைவாசிகள்’ போன்ற நாவல்களிலும் ‘கசாப்பின் இதிகாசம்’ ‘காஃபிர்’ ‘உருவம்’ ‘கொமறு காரியம்’ ‘ஹலால்’ போன்ற சிறுகதைகளினூடாக  நமக்கு கிடைக்கும் கதை மாந்தர்களும் சூழல் விவரனையும், மைய முரண்களும் தமிழ் இலக்கிய பரப்பில் வேறு எவராலும் பேசப்படாதது, சற்று துணிந்து சொன்னால் பேச முடியாதது என்றுகூட சொல்லத்தோன்றுகிறது. எனினும் அவர் இலக்கியவாதியாக வெளிப்பட்ட ‘ஜின்னாவின் டைரி’ ‘குட்டிச்சுவர் கலைஞன்’ போன்ற கதைகள் எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தமானவை. புதுமைப்பித்தன், நாஞ்சில்நாடன், ஜாகிர்ராஜா என்றொரு வரிசையை வாசக மனம் வரையறை செய்கிறது. நாஞ்சிலுக்கு நேர் தொடர்ச்சி என சொல்லத்தோன்றுகிறது. பசியையும் அவமானங்களையும் எழுதும்போதும் இலக்கிய உலகம் சார்ந்த பகடிகளை கையாளும்போதும் இந்த தொடர்ச்சியும் தனித்தன்மையும் புலப்படுகிறது. மிக குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ‘அடையாளம்’ ‘ராஜ மீன்’ ஆகிய கதைகளை சொல்லலாம். ‘அடையாளம்’ கதையில் பாட்டனை பராமரிக்கும் 14 வயது மாரி நோன்புக்கஞ்சிக்காக காத்திருந்து காலி பாத்திரத்துடன் திரும்புகிறாள். ‘ராஜமீனில்’ ஆயிஷா மன்ஜிலின் அனீபா ராவுத்தரின் வீழ்ச்சி சித்தரிக்கப்படுகிறது. தொட்டுக்கொள்ள கறி இல்லாமல் அவதிப்படுகிறார். பள்ளிவாசல் ஹவுஜ் தடாகத்தில் வசிக்கும் பொன்னிற ராஜமீனை வேட்டையாடுகிறார். ‘ரெட்டை மஸ்தானருகில்’ கதையின் ஹசன் மாமு ஜவுளிக்கடையில் கணக்கப்பிள்ளை என எண்ணி செல்பவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கும். மீசை இழந்து சேலையை விரித்து காட்டும் பெண் தன்மையுள்ள சிப்பந்தியாக, கேலிக்குள்ளாகும் நபராக இருப்பார். ‘ஜின்னாவின் டைரியில்’ நூலகத்தில் புத்தகம் திருடி மாட்டி அவமானப்படும் பனுவலின் சித்திரம் தொந்தரவு செய்யும்.

 குட்டிச்சுவர் கலைஞன் எனும் தலைப்பே பெரும் கிளர்ச்சியை அளிப்பதாக உள்ளது. ஒரு மனநிலையின், ஒரு காலகட்டத்தின் படிமம் என்பதுபோல. சாம்ராஜின் ‘குணசேகரன்’ கவிதை நினைவுக்கு வருகிறது. முன்னுரையில் எழுதுகிறார் ‘சாப்ளினின் எல்லா கோமாளித்தனங்களுக்குள்ளும் புதையுண்டிருந்தது பெரும் துக்கம். மானுட துக்கங்களுக்குள்ளிருந்துதான் மகத்தான படைப்பு ஊற்றெடுக்கிறது.’ இலக்கிய லட்சியவாதமும் சிறுபத்திரிக்கை சூழலும் பகடிக்குள்ளாக்கப்பட்டாலும் கூட அவை லட்சியவாதத்தையே முன்வைக்கின்றன. எதையும் கோராது, எதையும் பெறாது வாழ்ந்து மறைந்த எத்தனை எழுத்து வாழ்வுகளை நாம் அறிவோம். பன்னீர் வஸந்தனும் பனையோலையும் சேர்ந்து நடத்தும் பதிப்பகத்தைப் பற்றிய சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல். கைகாசை போட்டு நட்டமடைவதையே குறிகோளாக கொண்ட உலகியல் சாமார்த்தியமற்றவர்கள். அவர்களோடு யதார்த்தன் எனும் எழுத்தாளரும் சேர்ந்துகொள்கிறார். அவர் அவரது சகாவான குட்டிச்சுவர் கலைஞனின் மரணத்தை அறிவித்து அவரது படைப்புகளை பற்றி பேசுகிறார். குட்டிச்சுவர் கலைஞனின் பிணத்தை விவரிக்கிறார் ‘மரணத்தின் வாயிலாக அவன் சற்றே நிம்மதி கொண்டிருக்க வேண்டும். சவக்கிடக்கையில் அவன் முகம் அப்போதுதான் பூத்த ஒரு மலரைப் போன்றிருந்தது.’ யாரும் அறியாத மரணம். நாவலின் ஒரு பகுதியில் யதார்த்தன் உணர்வெழுச்சியுடன் பேசிக்கொண்டிருக்கையில் அதை பனையோலை பதிவு செய்வார். சட்டென ஆத்திரமடைந்து விடுவார் யதார்த்தன். ஏன் என யோசித்தேன். இன்று பதிவுசெய்யப்படாத இலக்கிய கூட்டங்களே இல்லை. நாம் ஒவ்வொருமுறையும் சர்வதேச தமிழ் சமூகத்தை நோக்கி‌ பேசியாக வேண்டிய பாவனையை கைக்கொள்ள வேண்டியுள்ளது. யதார்த்தனின் எரிச்சலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த செயல் இழிந்த, பொருத்தமற்ற செயலாக தென்படுகிறது. கலைஞர்கள் எந்த எல்லைவரை சமரசம் செய்துகொள்ளலாம் என ஏதும் வரையறையுள்ளதா என்ன? ‘அறைச்சுவர்கள் சிரிக்கின்றன’ சிறுகதையில் சினிமாவில் வாய்ப்பு தேடும் தீவிர இலக்கிய பரிச்சயமுள்ள சலீமுக்கும் தொழில்நுட்பம் மட்டும் போதும் என எண்ணும் சிகரனுக்கும் நிகழும் உரையாடலை கவனிக்கலாம்.  வணிக கலையின் சமரசங்களைப் பற்றி காட்டமாக சலீம் பேசிக்கொண்டிருக்கிறான். சிகரன் பதிலுக்கு ஒரு கேள்வி எழுப்புகிறான் “எதுலதான்யா விற்பனை இல்ல, எல்லாமே விற்பனைக்குத்தான். நீ எழுதுற கவிதை புஸ்தகம் பத்தாயிரம் காப்பி போச்சுன்னா வேணான்னுவியா.” என கேட்பான்.

 சுய இன்பன் எனும் புனைபெயரில் இயங்கிய எழுத்தாளர் அரளிப்பூவின் நேர்காணல் உண்மையில் உள்விவாத தன்மை கொண்டது. ஜின்னாவின் டைரியில் வரும் அல்லாபிச்சையுடனான நேர்காணலும் சிறப்பான பகுதி. சிந்தனைகளை விவாதமாக்க நேர்காணல் ஒரு நல்ல உத்தி. ஆனால் புனைவில் அது ஒரு தப்பிக்கும் வழிமுறை என்பதே என் பொது எண்ணமாக இருந்தது. ஏனெனில் நேர்காணல் வடிவில் நாம் எதையும் நிகழ்த்திக்காட்டுவதில்லை. எல்லாமே சொல்லப்படுவதால் வாசக இடைவெளி இயல்பாக உருவாவதில்லை. அல்லா பிச்சை நேர்காணலில் அவரை நேர்கண்டவர் சிறுபத்திரிக்கை ஆள் என்பது தெரிகிறது. வெளிவந்ததும் கூட ஒரு சிற்றிதழில்தான் ஆனால் இடையிடையே நேர்கண்டவரின் அசட்டு எதிர்வினைகள், உடல்மொழி விவரிப்புகள் வெகுஜன இதழின் பாணியை கடைப்பிடிக்கிறது. இவ்வகையான‌ எல்லைகளை கடந்து ஜாகிரின் நேர்காணல் பகுதிகள் சில அபாரமான புனைவுதருணங்களை தொடுகிறது. அரளிப்பூ நேர்காணல் நீண்டுக்கொண்டே சென்று சட்டென ‘சரி போதும்’ என முடிந்த உணர்வையளித்தது. ‘குட்டிச்சுவர் கலைஞனின்’ அதே தரிசனம்தான் ‘எழுத்தாள்னா பொறுப்புணர்ச்சி வேணுமப்பா’ கதையிலும் தென்படுகிறது. ஜக்காரியா எனும் எழுத்தாளரின் இரண்டு அணுக்க வாசகர்கள் அவரது மரணத்தால் நிலைகுலைகிறார்கள். அவரை அடக்கம் செய்துவிட்டு திரும்புகையில் ஜக்காரியா ‘எழுத்தாளன்ன பொறுப்புணர்ச்சி வேணாமா’ என சொல்லியபடி முடிக்காத நாவலை தொடர்கிறார்.

ஜெயமோகனின் ‘அம்மையப்பம்’ கதையில் வரும் தச்சரால் ஏணி கூட்ட முடியாது. ஏணி ஏறிசெல்வதற்குரியது. ஆனால் அவர் அபாரமான சிற்பத்தை செதுக்கிச் செல்வார். கலைஞர்களின் வாழ்வின் பயன்மதிப்பை அளவிடுவதற்கு நம்மிடம் உலகியல் வெற்றிகளைத் தவிர வேறு அளவைகள் உள்ளனவா? ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’ தொகுப்பில் ‘லவ்கீஹா’ என்றொரு கதையுள்ளது. லவுகீகம், உலகியல்- பெண் உக்கிர தெய்வமாக வடிவம் கொள்கிறாள். கதை முழுக்க அவளது இயல்புகள் சுட்டப்படுகின்றன. ‘கற்பனா லோகத்தை அபகரிக்க வந்தவள்’ ‘காலகாலமாக லவ்கீஹா ஆயிரக்கணக்கானவர்களைக் காவு வாங்கிக் களித்திருக்கிறாள். அதுவும் கலைஞர்களிடம் விளையாடுவதென்றால் அவளுக்கு ரொம்பவும் விருப்பம்.’  ‘அவள் சுழற்றுகிற வாளுக்கு கண் குருடு. அது லட்சம் அப்பாவித் தலைகளைக் கொய்திருக்கிறது.’ ‘காரணமே இல்லாமல் கண நேரத்தில் எங்கள் வீடு வன்முறைக் களமாக மாறிவிட கதவிடுக்கில் மறைந்து களிநடமாடுகிறாள்.’ ‘சிறகுள்ள ஜீவன்களை லவ்கீஹா வெறுக்கிறாள்.’ உப்பு புளி விசாரம் பாரதி தொடங்கி இன்று எழுதுபவர்கள் வரை எல்லோரையும் தீண்டியிருக்கிறது. ‘என்னை கவலைகள் தின்னத்தகாதென்று நின்னை‌ சரணடைந்தேன்’ என பாடியவன் தானே பாரதி. தனது ஆற்றாமையை‌ கதைகளில் இறக்கிவைப்பதைத் தவிர படைப்பாளி வேறென்ன செய்துவிட இயலும்.

யாசகஜீவி எழுதும் பெருநாவல் எனும் சிந்தனையே ‘ஜின்னாவின் டைரி’ நாவலை முக்கியத்துவம்  வாய்ந்ததாக ஆக்குகிறது. ஜின்னாவின் டைரியின் சில பகுதிகளை சிறுகதைகளாகவும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆண் பெண் உறவு சித்தரிப்பின் எல்லா வண்ணங்களும் பேசப்பட்டுவிட்டன. ஜாகிரின் தனித்தன்மை என்பது ஆண்- ஆண் உறவுகளின் வெவ்வேறு வண்ணங்களை எழுத்தாக்கியது என சொல்லலாம். கருணையற்ற தந்தையுடன் மகனுக்கு இருக்கும் உறவாக இருக்கலாம், கலவியில் சென்று முடியும் எழுத்தாளன் அணுக்க வாசகனின் உறவாக இருக்கலாம், சகோதரர்கள், நண்பர்கள், நட்பின் மேல் மெல்ல களிம்பு படிந்து விலகும் தருணங்கள், ஒட்டுண்ணிகள், சுரண்டல்கள், வன்மமா என எல்லாவற்றையும் சித்தரித்துள்ளார். இத்தனை கவனத்துடன் வேறு சமகால தமிழ் எழுத்தாளர்கள் ஆண் – ஆண் உறவின் வெவ்வேறு பரிமாணங்களை எழுதியதாக எனக்கு தெரியவில்லை. ‘வெண்ணிற மதுவகை’ மதுக்கூட நட்பையும் பிரிவையும் சொல்கிறது. தன்னை காதலித்த ஆனால் தான் காதலிக்காதவளின் கணவனுக்கும் தனக்குமான மதுக்கூட நட்புறவும் அதில் தான் காதலித்தவன் தன்னை காதலிக்காமல் இருந்ததற்கு வேறொருத்தியை காதலித்ததுதான் காரணம் என அறிய நேர்ந்ததும் கணவனை கண்டித்து அவர்களது உறவை பிரித்துவிடுகிறாள் என்பது வினோதமான கதைகளம். இவ்வகை கதைகளில் ‘ஒரு புளிப்பான காதல் கதை’ தற்பால் ஆண் காதலர்களின் கதையை சொல்கிறது. காதலும் பிரிவும், பொருந்தா திருமண உறவுக்குள் சிக்கியிருக்கும் நிலையும் சித்தரிக்கப்படுகிறது. ‘வடக்கேமுறி அலிமாவில்’ பாலன் தர்மன் ஆகிய இரு துணை இயக்குனர்களுக்கும் இடையேயான உறவு பொறாமை எரிச்சல் அன்பு நட்பு என பல்வேறு நிறங்களை சூடிக்கொள்கிறது.

குட்டிச்சுவர் கலைஞன், ஜின்னாவின் டைரி ஆகிய நாவல்களில் வைக்கதகுந்த படைப்பு ‘வடக்கேமுறி அலிமா’. அலிமா எனும் ஆளுமையின் வாழ்க்கை புனைவாகிறது. நேர்காணல், கடிதம், நினைவலைகள் என பல்வேறுபட்ட வடிவங்களை நாவல் கையாள்கிறது. அலிமாவுக்கு கமலாதாஸின் சாயல் உண்டு. பொதுவாக அப்பல்லோவியர்கள் டைனோசியர்கள் என கலைஞர்களை இரண்டாக வகைப்படுத்தலாம். அப்பல்லோ சூரிய கடவுள். அப்பல்லோவியர்கள் ஒளியின் பக்கம் நிற்பவர்கள். டைனோசியஸ் மதுவின் கடவுள், கொண்டாட்டமும், கட்டற்றத்தன்மையையும் கொண்டவன். டைனோசிய கூரைதான் நாம் ட்ரான்ஸ்கிரஸிவ் தன்மையுடன் இணைத்து புரிந்துகொள்கிறோம். அலிமா ‘கபறு களியாடுகிறாள்’ அதாவது மயான ஆட்டம். நாடோடியாக, பிச்சியாக, சினிமா நடிகையாக, எழுத்தாளராக பரிணாமம் கொண்டபடி இருக்கிறாள். ஜாகிரை டைனோசியராகவே வகைப்படுத்த முடியும். என் நோக்கில் அவரது கதைசொல்லல் முறையும் மொழியும் அபாரமாக வெளிப்பட்ட நாவல் என ‘வடக்கேமுறி அலிமாவை’ சொல்லலாம். சிதறுண்ட கதை வடிவங்களில் உள்ள மிக முக்கியமான சிக்கல் என்பது கதைமாந்தர்கள் மனதில் ஆளுமையாக வளராமல் போய்விடுவார்கள். ஆனால் அலிமாவின் அத்தனை மிகைநடத்தைகளுடன் நம்முள் உருகொள்கிறாள். இதுவே அவரது சிறந்த நாவல் என தயங்காமல் சொல்வேன். அமைப்புகளின் மீதான எதிர்ப்பு முழு வீரியத்துடன் வெளிப்பட்ட ஆக்கம். ‘உவகம் முழுவதுமே கலைஞர்களுக்குக் கிடைக்கின்ற பட்டம் ‘பைத்தியம்’ அல்லவா?’ என கேள்வியெழுப்புகிறாள். தன்னை ‘சைத்தானின் தோழி’ என பறைசாற்றிக்கொள்கிறாள்.

இலக்கியவாதியாக அவர் எழுதிய கதைகளில் பகடி சில கதைகளில் ஈர்க்கக்கூடியதாக வெளிப்படுகிறது. வேறு சில கதைகளில் சுத்தமாக எடுபடவில்லை. அடுத்தடுத்த தொகுப்புகளில் இலக்கிய சர்ச்சைகள் தொடர்பான கதைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கவனிக்கிறேன். ‘தேய்பிறை இரவுகள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகள் துண்டு துண்டாக உள்ளன. சினிமா வாய்ப்பு தேடி அலைந்த நாட்கள் குறித்தவை. ஜாகிர் அடிப்படையில் ஒரு சிறுகதையாசிரியர் என்பது அவரது நாவல்களுக்கு தனித்துவத்தையும் எல்லையையும் அளிப்பதாக தோன்றுகிறது. தெறிப்புகளாக வாழ்க்கை தருணங்கள் மிளிர்கின்றன. லவ்கீஹாவின் அதீத அன்பும் ஆசியுமா அல்லது வேறு காரணிகளா என தெரியவில்லை, இதுவரை ஒரு பெரிய உலகை நாவலில் அவரால் சித்தரிக்க இயலவில்லை. அது வருங்காலத்தில் நிகழும் என ‘வெள்ளத்தாயி வம்சாவழியினர்’ பற்றி அவருடனான உரையாடல் எனக்கு உணர்த்தியது. ‘அம்மையும் இரண்டு பெண் குட்டிகளும்’ போன்ற சில கதைகள் அனுபவங்களாக நின்று விடுகின்றன. எழுத்து சார்ந்த கதைகளில் எனக்கு ‘காஃப்காவின் நண்பன்’ மிக அணுக்கமாக இருந்தது. காப்காவின் உருமாற்றம் தொடர்பான விவாதம் கதைக்குள் நிகழ்கிறது. மறு எல்லையில் ‘பஷீரிஸ்ட்’ என தன்னை அறிவித்து கொள்கிறார். பஷீரூமே தனது பயணத்தை காஃப்காவிலிருந்தே தொடங்கினார். ஜாகிரின் கதைகளை வாசிக்கும் போது வேறொரு பண்பாட்டு பின்புலத்தைச் சேர்ந்த வாசகனாக எனக்கு அவர் காட்டும் உலகம் வசீகரமாக உள்ளது. அவரது அதே பண்பாட்டு பின்புலத்தைச் சேர்ந்தவர்களால் அவரது கதைகள் எப்படி வாசிக்கப்படுகிறது என தெரிந்துகொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வ எதிர்வினையாகவா அல்லது அவதூறாகவா, பண்பாட்டு சலனங்களை எளிமைப்படுத்துகிறார் என சொல்வார்களா என்றெல்லாம் சிந்தனைகள் தோன்றின. சில கதைகளை வாசிக்கும் போது ஆனாலும் இவருக்கு துணிச்சல் அதிகம் என தோன்றாமல் இல்லை. அவரது இந்த துடுக்குத்தனமே படைப்புகளின் ஆதார விசை என தோன்றுகிறது.

ஜாகிரின் சமகாலத்தைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களுடன் அவரது படைப்புலகை ஒப்பிட்டு நோக்கலாம் என தோன்றியது. எம். கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால் மற்றும் எஸ். செந்தில்குமார் ஆகியோர் அவருடன் இணைந்து பயணிக்க தொடங்கியவர்கள். இவர்கள் அனைவருமே அப்பல்லோவியர்கள். ‘கசாப்பின் இதிகாசத்தையோ’ ‘வடக்கேமுறி அலிமா’ போன்ற ஒரு கதையை டைனோசிய கூரு இல்லாமல்  எழுத முடியாது என தோன்றியது. அவ்வகையில் அவர் இன்னும் தமிழ் சூழலில் ஆழ்ந்து வாசிக்கப்படவில்லை எனும் எண்ணமும் ஏற்பட்டது. இத்தனைக்கும் அவர் தொடர்ந்து பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுவருகிறார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் அவரது படைப்பு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார்கள். சமயங்களில் இவையெல்லாமே கூட வாசகர்களை படைப்பாளியிடமிருந்து விலக்கிவிடும். டைனோசிய கூருக்கு உள்ள முக்கியமான எல்லை என்பது அதன் நிலைகொள்ளாதன்மை. டைனோசியர்கள் சிகரங்களுக்கும் பாதாளங்களுக்கும் இடையே ஊசலாடியபடி இருக்கும்போத அப்பல்லோவியர்கள் சமதரையிலிருந்து மெல்ல ஏறத்தொடங்குவார்கள். விழுந்தாலும் மீண்டும் தரைக்குதான் வருவார்கள். பஷீர் ஜாகிருக்கான சமதரையை உருவாக்கியளிப்பார் என நம்புகிறேன்.

தமிழ் இலக்கியப்பரப்பு குட்டிச்சுவர் கலைஞர்களின் உற்பத்தி கூடம். அங்கீகாரமெல்லாம் கிடக்கட்டும் ஊன்றி வாசிப்பதும் விவாதிப்பதுமே குட்டிச்சுவர் கலைஞர்களின் உற்பத்தியை தடுக்கவல்ல வழிமுறை. லவ்கீஹாவை எதிர்கொள்ள படைப்பாளி அங்கிருந்துதான் ஆற்றலை பெறுகிறார். ஜாகிர் இன்னமும் ஆழமாக, இன்னமும் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். இந்த சிறப்பிதழ் அதற்கொரு தொடக்கமாக இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *