பன்னெடுங்காலம் முன்னம், புதுமுகங்களை வைத்து ஒரு படம் தயாரிக்க எண்ணியிருந்த கோவை சினிமா டிஸ்ட்ரிபியூட்டர் சைட் அண்ட் சவுண்ட் சிம்ம சுப்பையாவிடம் கதை சொல்லப்போனபோது, யாரை ஹீரோயினாகப் போடலாமென்றார். நான் ஏதோ வார இதழில் வந்திருந்த கீரனூர் கிளி  பட நாயகியின் படத்தைக் காட்டி இவர் என்றேன்.

முரளி கதாநாயகனாக நடித்த அந்தப் படத்துக்கு முன்னும் பின்னரும், கீரனூர் எந்தத் திசையிலிருக்கிறதென்றே நான் அறிந்திருந்தேனில்லை.

ஆண்டுகள் பின்னர், கோவை ‘சங்கமம்’ அன்பரசு

இவர்தான் கீரனூர் ஜாகிர் ராஜா என்று அறிமுகப்படுத்தியபோதும் கீரனூரை அறிந்திருந்தேனில்லை. ஆனால், கீரனூர் ஜாகிர் ராஜாவை துருக்கித் தொப்பி மூலம் அறிந்திருந்தேன்.

என் மனத்தில் தோழர் ஜாகிர் ராஜா ஆழப் பதியக்  காரணமானதற்கான பிரத்யேகிதை  கீரனூர் கிளி ஹீரோயினுக்கே இயல்பாகப் போய்விடுகிறது.

ஜாகிர் ராஜாவின் எழுத்துகள் இஸ்லாமிய விளிம்பு நிலை மக்களைப் பெரிதும் பேசுபவை என்பது  இலக்கிய ஆர்வலர்களுக்குத் தெரிந்த செய்திதான். ஆனால் அவரின் படைப்புகளின் தலைப்புகள், பிறவற்றிலிருந்தும் மிகுந்து மாறுபட்டு, என்னைத் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டே இருந்தன. எத்தனை வித்தியாசமான தலைப்புகள்! தமிழ் இலக்கிய வெளி பழகியிராதத் தலைப்புகள்! துருக்கித் தொப்பி, கருத்த லெப்பை, வடக்கே முறி அலிமா, ஜின்னாவின் டைரி,மீன் குகை வாசிகள்….எவ்வளவு வசீகரம் பாருங்கள்!

போன்றே, ஜாகிர் ராஜாவும்.

எழுத்தாளத் தோரணை, எழுத்தாளச் செருக்கு, எழுத்தாள மிடுக்கு என்று சொல்லப்பட்டு வந்த எவற்றையும்  சுமந்துகொண்டிராத – அந்நியமில்லாத – எளிய தோற்றம். நடை, சம்பாஷணை….

அவர் கம்யூனிஸப் பின்புலனில் உருவானவர் என்பதே அதன் பின்னணிக் காரணியென்று நான் கருதுகிறேன்.

கோவை வெங்கிட்டாபுரத்தில் பூபேஷ்குப்தா படிப்பகம் நிறுவப்பட்ட நாள்களில், நான் கோவை காட்டூர் ஏஐடியூசி தியாகிகள் நிலைய வளாகத்தின் மில் தொழிலாளர் சங்கத்திலும், பொறியியல் பொதுத்தொழிலாளர் சங்கத்திலும் முழு நேர ஊழியனுக்குரிய ஊதியம் பெறாத முழு நேர ஊழியனாகவே இருந்தேன். பள்ளி, பின்னர் கல்லூரி நேரம் போக மீதிப் பொழுதுகளிலெல்லாம் அங்கேயே வாழ்ந்து  கிடப்பேன். அங்கு அன்றாடம் சந்திக்கும் தோழர் ப்ரூக் பாண்ட் புருஷோத்தமன் எல்லாரையும் ஈர்க்கும் சிரிப்புக்கும் பாவனைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர். அவர்தான் பூபேஷ்குப்தா படிப்பகக்தில் வைத்துத்  தம்மை உருவேற்றினார், மார்க்சியம் சொல்லிக்கொடுத்து உருவாக்கினார் என்று ஜாகிர் ராஜா பின்னாளில் சொன்னபோது – எங்களுள் நெருக்கம் இயல்பாகக் கூடிவந்தது.

இன்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால் அனுசரணையுள்ளவராக சிலரால்  பார்க்கப்படும் தோழர் ஜாகிர் ராஜா, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பீடமான வெங்கிட்டாபுரம் பூபேஷ் மன்றத்தில் , தோழர் புருஷோத்தமனால் மார்க்சிய ஞானஸ்நானம் பெற்றவன் நான்” என்று எங்களிடம் சொன்னது இப்போதும் செவிகளில் இருக்கிறது.

இதில் ஒரு சுவைச் செய்தி இருக்கிறது. இதே வெங்கிட்டாபுரம் பகுதியில் – கு,ராமகிருட்டிணன் தலைமையிலான திராவிடர் கழகத்தின் பெரியார் படிப்பகத்தில் ஒரு கருப்புச்சட்டைக்காரனாக செயல்பட்டு வந்த இளைஞர் ஜாகிர் ராஜா, பத்தடி தூரமே தாள்ளியிருந்த பூபேஷ் மன்றத்தில் காலடி வைத்து, தோழர் புருஷோத்தமனால் இடதுசாரி சிந்தனையாளராகப் பரிணாம உருமாற்றம் பெற்றார் என்பதுதான் அது.

சங்கமம் தோழர் அன்பரசுடன் அடிக்கடி சென்னைக்கு வருகை புரியும் ஜாகிர் ராஜாவை இலங்கை சார்ந்த ஈபிஆர்எல்எப் அமைப்பின் முன்னணித் தோழர் குகன் என்கிற நடராசா கமலாகரனின் வீட்டில்தான்  பன்முறை சந்தித்திருக்கிறேன். என் திரைப்பட அலுவலகத்தில் ஓரிருமுறையும்.

குகன் வீட்டு மொட்டை மாடியின் உற்சாக மாலைப் பொழுதுகளின் கிறக்கத்தில் நாங்கள் உரையாடிய நாள்களினூடேதான், தோழர் ஜாகிர் ராஜா  ஒரு விடுதலைப்புலி ஆதரவாளர் என்பதறிந்து ஈபிஆர்எல்எப் ஆதரவு இயக்கமான யூசிபிஐ சார்ந்த நாங்கள் திடுக்கிட்டு அயர்ந்து, பின்னர் தொடரலானோம். கருத்துப் போர்க்களம் வெம்மை மிக்கதாயிருக்கும். ஆனால், தோழமை பலப் புரிதல்களைக்  கிளர்ந்தெழச் செய்யும் ரசவாதம் அங்கே நிகழும்.

அந்தத் தருணம் இருக்கிறதே, தோழமை வெளி என்று அதற்குப் பெயர், அது விடுதலைப் புலிகளின் அகராதியில் கடைசி வரை வாய்க்கவேயில்லை ; அல்லது வாய்க்க தமிழ்நாட்டுப் போராளிகள் அவர்களை அனுமதிக்கவில்லை என்பது இன்றளவும் என் போன்றோர் வருத்தமாயிருக்கிறது.

நான், அன்பரசு போன்ற இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு புலி எதிர்ப்புணர்வை சொல்லிச்சொல்லி ஊட்டிய தோழர் தா.பாண்டியனே, பின்னாளில், ராஜிவ் படுகொலைக்குப் பிற்பாடு தமிழகத்தில் நெடுநாள் வீழ்ந்திருந்த புலி சாகச உணர்ச்சிகரங்களுக்குப் பிறகான ஈழ ஆதரவுத் தொனியை  மீண்டும்  கிளர்ந்தெழச்செய்யும் அரசியலை கைக்கொண்டார் என்பது காலம் விளைத்த முரண்.

எவ்விதமோ, ஜாகிர் ராஜா ஈழ அரசியலைப் புரிந்துகொண்டு கொந்தளிப்புத் தணிந்ததில் எங்கள் பங்கும் உண்டு என்றே நான் கருதுகிறேன்.பின்னாளில், அன்பரசு மகன் திருமணத்துக்கு வருகை புரிந்த இலங்கை வடகிழக்கு மாகாண அரசாங்கத்தின் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் போன்றோருடன் இன்றைக்கும் நட்புறவு கொண்டவராக ஜாகிர் ராஜா இருக்கிறார்.

கருத்து முரண்  ஒருபோதும் பகை முரண் ஆகிவிடக்கூடாது என்கிற படிப்பினையை காலம் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அத்தன்மை தோழர் ஜாகிர் ராஜாவிடம் மிகுந்து, அனைவரிடமும் இணக்கம் காண முற்படுகிறவராகவே அவரை நிலைநிறுத்துகிறது.

பூபேஷ் மன்றத்தின் மூத்த தோழர்களாகிய சின்னக்கண்ணான், பாலண்ணன் போன்றோரை இன்றும் நினைவுகூரும் ஜாகிர் ராஜா, மன்றத்துடனான தன் பிணைப்பை, தொடர்ந்த தோழமையின்மூலம் கட்டமைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

இடதுசாரி அமைப்புகளாகிய தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தோழர்களோடும், தமுஎகச அமைப்புத் தோழர்களோடும் மாற்றுச் சிந்தனையாளர்களிடமும் தொடர்ந்து தோழமை பாராட்டி உரையாடி வருகிறார். இதுவே  அவரின் பண்புகளில் தலையாயது என்று கருதுகிறேன்.

கருத்துப்  போர் என்னும் வெம்மை, தோழமை எனும் நீரை பனிக்கட்டியாக்கி இறுகச் செய்யவேண்டுமே ஒழிய, திட நெருப்பாகி எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்கிவிடக்கூடாது.

அனைத்துத் தளங்களிலும்  கருத்துத் தீண்டாமை கடைபிடிக்கப்படும் இந்நாளில், கீரனூர் ஜாகிர் ராஜா தோழமைக்கு முன்னுரிமை கொடுக்கும் இலக்கியவாதியாக இருப்பதைச் சுட்டுவது என் வேலையாகிறது; அவரின் இலக்கியப் பன்முகங்களை மற்றவர்கள் எடுத்தியம்புவார்கள்.

தோழருக்கு சிறப்புப் பக்கம் வெளியிடும் மயிர் இதழ்த் தளத்துக்கு என் வணக்கமும் வாழ்த்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *