காட்சி 1 :
இரு இளைஞர்கள் மேசைமேல் வைக்கப்பட்டிக்கும் நீர் நிரம்பிய கண்ணாடி தொட்டிக்குப் பின் நின்று அத்தொட்டிக்குள் நீந்தும் இனந்தெரியாத பயங்கர மீனைப் பற்றி விளக்குகிறார்கள். முட்களைப்போன்ற செதில்கள், கொலைவெறி பிடித்த ரத்தச்சிவப்பு கண்கள், படபடத்தபடி விரிந்தும் மூடும் செவுள்கள். தென்னமெரிக்க நதிகளில் மட்டும் வாழும் ஊன் தின்னி வகை. முழுக் குதிரையை வீழ்த்தக்கூடியது, மனிதர்களைத் தாக்கிய நிகழ்வுகள் அரிது ஆனால் நடந்திருக்கிறது, இரண்டு வரிசையில் ஐம்பதிற்கும் அதிகமாகக் கூறிய பற்கள். பயம் கலந்த வெறியில் ஒரு மூலையில் தாக்கத் தயாராக ஒதுங்கி நிற்கிறது மீன். இருவரில் ஒருவன் மெதுவாகக் கையை தொட்டிக்குள் விடுகிறான், மீன் தயங்குகிறது, மீனை வெளியிலிருந்து கம்பியால் தூண்டி ஊக்குவிக்கிறார்கள், அது மீண்டும் தயங்குகிறது. முடிவில் வேறு வழியில்லாமல் தன் கையை மீனின் வாய்க்குப் பக்கத்தில் எடுத்துச்சென்று அதை உசுப்பேற்றுகிறான், ஆத்திரத்தில் அதிவேகமாக மீன் அவன் கைகளைக் கடித்ததோடு விடாமல் பற்றிக்கொள்கிறது. வலியில் அலறுகிற இளைஞனுக்கு இன்னொருவனும் உதவியாளர்களும் உதவி, கையில் பற்றிக் கொண்டிருக்கும் மீனைப் பலவந்தமாக நீக்கி மீண்டும் நீரில் விடுகிறார்கள். இளைஞன் கையிலிருந்து ரத்தம் கசிகிறது. அவனைச் சுதாரித்துவிட்டு இன்னொருவன் தன் கையை தொட்டிக்குள் விடுகிறான். மீன் மீண்டும் கடிக்கிறது, அலறல், ரத்தம் இத்யாதி. இருவரும் கடி வாங்கியபின், கடியின் தீவிரம், ஆழம் , விட (இருந்தால்) வீரியம் போன்றவற்றிற்கு மதிப்பெண் கொடுக்கிறார்கள். இத்துடன் முடியவில்லை, அடுத்த பாகத்தில் மீண்டும் வேறு உடும்போ , தேளோ , பாம்போ , இன்னொரு மீனோ இருவரைக் கடிக்கவிருக்கிறது.
காட்சி 2 :
ஒருவனின் இடது தோளில் தேங்காய் அளவிற்கு வளர்ந்திருக்கும் கொப்பளத்தைச் சட்டைக்குள் பதுக்கினாலும் வெளிப்படையாகத் தெரிகிறது. அந்தக் கொப்பளத்தினால் அவன் படும் அவஸ்தைகளை, அவமானங்களை விளக்குகிறான். மருத்துவர் ஒருவரை அணுகுகிறான், மருத்துவர் அந்தக் கொப்பளத்தை மெதுவாக உருட்டி , அமுக்கி ,பிதுக்கிப் பார்த்துவிட்டு சில பரிசோதனைகள் செய்யச் சொல்கிறார். மருத்துவர் கொப்பளத்தை பற்றி நேயர்களுக்கு விளக்குகிறார். பிறகு நேரலையில் அறுவைசிகிச்சை செய்து அந்தக் கொப்பளத்தை அகற்றி, சதை பிண்டத்தை அவனுக்கே காண்பிக்கிறார் மருத்துவர். அத்துடன் முடியவில்லை, அடுத்த பாகத்தில் பெரிய , சிறிய கொப்பளங்கள், படர்தாமரை, தோல் நோய் எனத் தொடர்கிறது.
மேற்கண்ட காட்சிகள் ஆங்கில ஊடகங்களில் தற்போது ஒளிபரப்பாகும் கிங்ஸ் ஆப் பேயின் (Kings of Pain) மற்றும் டாக்டர் பிம்பிள் பாப்பர் (Dr. Pimple Popper) எனும் நிகழ்ச்சிகளின் வர்ணனைகள். பொது நுகர்விற்கு ஏற்றவை எனத் தீர்மானிக்கும் தணிக்கை வலையில் மேற்கண்ட நிகழ்ச்சிகள் சிக்காமல் தப்பித்ததில் ஆச்சரியமில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர்க்கஸ் ஆட்டத்தில் பிரத்தியேகமாக விந்தை மனிதர்கள் காட்சி (Freakshow) பார்க்க ஆர்வமாக வந்த சமுதாயத்திற்கு ஏற்ற நிகழ்ச்சிகளே மேற்கண்டவை. உடற்பிறழ்ச்சி உடையவர்கள், விந்தை மிருகங்கள், அமானுஷ்யச் சக்தி உடையவர்களைக் காட்சிக்கு வைப்பது சாமானியமாக இருந்த காலங்களில் மனித நேயம் மறந்து சக மனிதர்களைக்கூடக் காட்சிக்கு வைக்கப்பட்ட இதிகாசச் சுவடுகள் உண்டு. ரோமானியக் காலங்களில் க்ளாடியேட்டர்கள் மைதானத்தில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொல்லும் ஆட்டம், தேசியப் பொழுதுபோக்காகவே கருதப்பட்ட காலங்களைத் தாண்டி இப்போது அதே குணமுடைய நுகர்வு தேவைகளை இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் மனித உள்ளுணர்வின் ஏதோ ஒரு கோரல் நிறைவேற்றிக்கொள்கிறது. எப்போதும் இத்தகைய ஆட்டங்கள் மனித நுகர்விற்கு ஒவ்வாமை அளிக்கும் காட்சிகளாக இருந்ததில்லை. இன்னொரு மனிதனின் துயரம் அல்லது வலியினால் ஏற்படும் உவமைக்குத் தமிழில் வார்த்தை இல்லை (எனக்குத் தெரிந்தவரையில்) என்பதை நினைத்து ஓரளவிற்குச் சந்தோசம் கொள்ளும் அதே சமயம் ஜெர்மன் மொழியில் ஷாடென்ஃபிரௌடெ (Schadenfreude) என்ற ஒரு வார்த்தை இத்தகைய உணர்ச்சிக்கு நவீன உபயோகத்தில் கொடுத்திருக்கிறார்கள். இந்த வார்த்தையை ஆங்கிலம் இரவல் வாங்கிக்கொண்டிருப்பது இந்த உணர்ச்சியின் உலகளாவிய இருப்பிற்கு அத்தாட்சியெனலாம். ஷாடென்ஃபிரௌடெ என்ற வார்த்தை ஷாடேன் – துயரம் மற்றும் ஃபிரௌடெ – இன்பத்தின் புணர்வு (தமிழிற்கும் ஜெர்மன் மொழிக்கும் இத்தகைய இலக்கண, சொல்லாக்க அண்மைகள் அதிகம்!)
இருபத்துநான்கு மணிநேரம் இடைவிடாமல் ஓடும் இயந்திரமாகிவிட்ட தொலைக்காட்சிப்பெட்டி உற்பத்தி செய்யும் விசித்திரமான உருவமில்லா பண்டம், மனித நுகர்வின் முக்கிய பொருட்களில் ஒன்றாகிவிட்டது. இந்த பண்டத்திற்குச் சரியான தமிழ் வார்த்தை உண்டா என்பது தெரியவில்லை. தகவல் தொழில்நுட்பம் என்பது அர்த்தமுள்ள தரவைக் குறிக்கும். தொலைக்காட்சி அயராது கொடுக்கும் அணைத்து நிகழ்ச்சிகளையும் தகவல் என வகைப்படுத்துவது சரியல்ல. திறந்த அரங்கில் ஆயிரக்கணக்கில் தின்பண்டங்கள் நிரப்பி அதில் தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்குத் தகுந்தாற்போல கட்டணம் செலுத்தி உண்ணும் விருந்தை ஆங்கிலத்தில் பூஃபெ (Buffet) என்பார்கள். தொலைக்காட்சி நிறுவனங்கள் அத்தகைய பூஃபெவைத்தான் நேயர்கள் முன்னே விரித்திருக்கிறார்கள், தேவையானவற்றை மட்டும் பார்க்கலாம் என்ற முறையில் தவறேதுமில்லையெனினும் நிகழ்ச்சிகளின் கருத்தாக்கத்தில் மேம்பாடு தேவையோ எனத் தோன்றுகிறது.
ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி சேனல்களின் ஆக்கத் தேவையை நிவர்த்திசெய்யக் கற்பனை எல்லைகளை மீறும் கட்டாயத்தில் கருத்தாக்கத் துறையினர் சில சமயம் பதிப்பேற்றத்தின் சாராம்சத்தை மையப்படுத்துவதை மறந்து சில வினாடிகள் நீடிக்கும் சிற்றின்ப உணர்ச்சிக்குப் படைப்புக்களைக் கொடுத்துவிடுகிறார்கள். அறிவியல், செய்தி , விளையாட்டு , ஆன்மீகம் , வாழ்க்கைமுறை , இதிகாசம் எனப் பல்வேறு பிரிவுகளில் ஒளிபரப்பப்படும் பதிவேற்றங்களில் பெரும்பாலும் பொழுதுபோக்கு பிரிவில்தான் நுகர்வு சிக்கல்கள் ஏற்படுகிறது. மனிதச் சிந்தனையின் பல்வேறு பரிமாணங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் வர்த்தகப் போட்டியில் வரம்புகள் ஏதேனும் உண்டா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்ற பதிலே சரியானது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கட்டாய எச்சரிக்கைச் செய்தி ஒவ்வொரு பாகத்திற்கு முதலிலும் ஒளிபரப்புவது, வயதுவந்தோர் வலைத்தளங்களுக்குள் நுழைவதற்கு முன் ’18 வயதாகிவிட்டதா?’ என்ற கேள்விக்குச் சமம். பார்க்கவேண்டும் என வந்தபின் ‘இல்லை’ என வெளியே வருபவர்கள் யாரேனும் உண்டா?.
நேரடியாக மேஜைக்கு (OTT) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்வது கடினம் மட்டுமின்றி முடியாததும்கூட. நேரலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சில கசப்பான சம்பவங்கள் நடந்தால் அதன் பின்விளைவுகளைக் கட்டுப்படுத்துவது கடினம் . ஆனால் அத்தகைய நிகழ்வுகள் விளம்பரங்களாகிவிட வேண்டுமென்றே இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்பவும் தயாரிப்பாளர்கள் தயங்குவதில்லை. விளம்பரத்தில் நல்ல / கேட்ட என்ற பிரிவுகள் இல்லை என்பது புதிய தத்துவம். தொலைக்காட்சியிலிருந்து மட்டுமின்றி சமூக ஊடகங்களிருந்து (குறிப்பாக யூ டியூப்) கிடைக்கப்பெறும் அறிதுயில் நிலை ஒருவிதப் போலி தெரிதலைக் கொடுத்துவிடுகிறது. ஆழமான புரிதலுக்குப் பதில் மேலான தெரிதலே விளைவு . பெரும்பாலும் மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிகழ்ச்சிகளின் தாக்கம் இந்தியச் சமூகத்தில் கண்டறியும் அளவிற்குப் பெருகியிருக்கிறது. கொரியக் காதல் தொடர்கள், அமேரிக்க வணிகக் குடும்பங்களின் கதைகள், மேற்கத்திய இதிகாசம் , கலாச்சாரம் உலகமயமாக்கலின் விளைவாக நேரடி மேஜையின்மேல் தமிழ் தொடர்கள், பிற மொழி நிகழ்ச்சிகளுடன் பார்க்கக்கிடைக்கும்போது அதன் நுகர்வின் பின்விளைவுகள் இந்தியச் சமூக எதார்த்த நிலைகளில் காலூன்றாமல் மாய உலகில் கொண்டு போய் விடுகிறது.
தற்போதைய தொலைக்காட்சி பதிவேற்றங்களுக்கு நுகரும் சமுதாயத்தின் மதிப்பமைப்புகளே தணிக்கைகள். சமீபத்தில் உலகளாவிய புகழ் பெற்ற ஆங்கிலத் தொடரான கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) இஸ்லாமியத் தேசங்களில் உள்ளடக்கத்திற்காகத் தணிக்கை செய்யப்பட்டது மட்டுமின்றி துருக்கியில் அதனைத் தழுவி இன்னொரு தொடரும் வெளியாகி, அண்டை நாடான பாகிஸ்தானில் அரசு அங்கீகாரமும் பெற்றது விசித்திரமானது. மனிதனுக்கு இயல்பாகவே கதை கேட்கும் உணர்வு இருக்கிறதென்கிறார் கார்ல் யங் (Carl Jung ). கதைகளைக் கேட்பதும் சொல்வதும் மானுடத்தை தனிப்படுத்தும் செயல்கள் என்கிறார். நவீன யுகத்தில் அத்தகைய தேவைகளைப் பூர்த்திசெய்வது தொலைக்காட்சி மற்றும் சினிமா மட்டுமே. இதனால் நல்ல இலக்கியம் , நாடகம் (நேரடி ) , இசை போன்றவற்றிற்கு இடம் குறைந்துகொண்டே வருகிறது. இலக்கியம் சம்பந்தமான முழுநேரத் தொலைக்காட்சி சேனல்கள் தமிழிலோ அல்லது வேறு மொழிகளிலோ இருப்பதாகத் தெரியவில்லை.
நிகழ்ச்சிகளின் தேர்வு முறை (TRP) மிகவும் மர்மமான நேயர் விமர்சனங்களைப் பொருட்படுத்தாத, எளிதில் ஏமாற்றக்கூடிய , புள்ளிவிவர வியலில் அடிப்படையில்லாத பித்தலாட்டம். இதில் பாதிக்கப்படுபவர்கள் நேயர்களே. எண்பதுகளில் தூர்தர்ஷன் துவங்கிய காலம் நேயர்கள் எழுதிய விமர்சன கடிதங்களுக்கு நிலையத் தலைவர் பதிலளிக்கும் போக்கு முற்றிலும் மாறி தற்போதைய தொலைக்காட்சி ஒளிபரப்பு மேலிருந்து கீழே பலவந்தமாக திணிக்கப்படுபவை.