இருத்தலும் இல்லாமல் இருத்தலும்

சம்பத்தின் ‘இடைவெளி’ நாவலை முன்வைத்து

சிறந்த நாவல்கள்  விரிந்த வாழ்க்கைச் சித்தரிப்புக்களையும், மனித வாழ்க்கையின் மொத்தச் சாரத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பவை. பகல்கனவை நிகழ்த்திக்காட்டி, யதார்த்தத்தின் இருப்பிற்கு துரோகம் இழைக்காதவை. நிஜத்தில் நாம் கண்டு கேட்டு கடந்து வந்திருக்கும் அத்தனை மாதிரிகளையும் மிக நெருக்கமாக அனுபவமாக்கும் மாயாஜால வித்தையே நாவல் கலை. அவ்வகையில் நாம் நாவலில் வரும் வாழ்க்கைக்குள், கதாபாத்திரங்களுக்குள் கூடுவிட்டு கூடுபாய்கிறோம். அப்பாத்திரங்கள் அடையும் வாழ்வின் சாரங்களை நமதென்றாக பெற்றுக்கொள்கிறோம்.

நாற்பதுகளைத்தாண்டிய வயது ஆண்களின் தடுமாற்றம் மிகும் பருவம். பால்யம் அளித்திருந்த நம்பிக்கைகள் பொய்யாய் பழங்கதையாகப்போய் உடல் வலுவிழந்து குடும்பம் தவிர்க்க இயலாத சுமையென்றாகி பெண்ணுடலை அலுப்பாக உணரும் நாட்கள் அவை. பெரும்பாலான ஆண்கள் நாற்பதுகளில் மதுவிற்குள் சென்று சரண் அடைகிறார்கள்.  மரபான ஆன்மீகத்தில் குதித்து தன்னை இழந்துவிடுகிறார்கள், விதவிதமான பெண்ணுடல்களை விரட்டித்திரிகிறார்கள். அவ்வயதி்ன் தத்தளிப்பை பேசும் படைப்பே இடைவெளி.

சாவு என்பது என்ன? அது மனிதன் மீது எவ்விதம் வந்தமர்கிறது? என்ற அடிப்படைக்கேள்விகளை அறிவியலோடும், ஆன்மீகத்தின் மீதும் மோதவிடுகிறார் சம்பத். சாவைத்தாண்டிவிட்டவன் என்று தன்னை நம்பும் தினகரன் சாவு என்பது தற்காலிக இடைவெளி என்று கண்டடைகிறான். கண்டடைதலின் பரவசம் ஒன்றே சம்பத்தை பலிகொள்கிறது. அவனை இயல்பானவன் என்பதில் இருந்து தனிமைப்படுத்துகிறது. தன்னை ஜீனியஸ் என்று கருதி அகங்காரம் வீங்கி அழியத்தொடங்குகிறான். அவ்வழிவை செறிவாக எழுதியிருப்பதே இடைவெளி நாவலின் இலக்கியப் பங்களிப்பு.

எண்பதுகள் தமிழில் இசங்கள் வந்து பதியனாகத்தொடங்கிய காலம். நவீனத்துவ சாதனைகள் வேர்ப்பிடித்து விருட்சங்களாக பேருருக்கொண்டு வீற்றிருந்தாலும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை புதிய இசங்கள் விடலைப்பருவ பையன்களைப்போல கிளர்ச்சி அடையச்செய்திற்று.  இருத்தலியல் சார்ந்த சிந்தனை தமிழ் இலக்கியத்தைப்பாதித்ததன் விளைவே இந்நாவல். குறிப்பாக பிரான்ஸ் காப்கா, ஆம்பெர் காம்யு போன்றோரின் தாக்கம்.

காப்காவின் விசாரணை, காம்யுவின் அந்நியன் போன்றவை யதார்த்தவாத நாவல்களின் சாதனைகளை புறந்தள்ளி எழுந்தவை. அன்று பெரும் பரவசத்தோடு கொண்டாடப்பட்ட அவை இன்றெல்லாம் அலுப்பான பிரதிகளாக இருக்கின்றன. அறிவுஜீவித்தனம் மட்டுமே ஒருபோதும் கலையாக பரிணமிப்பதில்லை என்பதன் சாட்சிகளாக அவை கடந்து செல்லப்படுகின்றன. தத்துவத்தை ஒரு உபகரணமாக நாவல் பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர தத்துவத்தை நம்பிமட்டும் ஒரு நாவல் எழுதப்படுமாயின் அது இம்மண்ணில் கால்ஊன்றி நில்லாமல் பறந்துகொண்டிருப்பதாகத் தோன்றும். வேரற்ற அதன் அந்நியத்தன்மை நம்மை ஈர்ப்பதில்லை. மனிதனுக்காக எழுதப்படும் நாவலில் மனிதனை இயக்கும் மதமும் பண்பாடும் தத்துவ நெருக்கடிகளும் உணர்வெழுச்சிகளும் தன்னை நிறுவிக்கொள்ளப்பயன்படும் தருக்கங்களும் கொஞ்சமாவது இருக்கவேண்டாமா?

இந்நாவலின் கதை  மிக எளிமையானது. தினகரனுக்கு  நடுவயது, நடுத்தர வா்க்க கணவன். டெல்லியில் இருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்து தோல் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வருகிறான். பத்மா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் அவனுக்கிருக்கின்றனர். அவனுக்கு கல்பனா என்ற வேறோரு பெண்ணுடன் தொடர்புமிருக்கிறது. இதனால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே அடிதடியும் சண்டைச்சச்சரவுகளும் நீடிக்கின்றன. பத்மாவிற்கு தன் கணவன் சாதாரணமாக எல்லாரையும் போல இருந்து தொலைத்தால் என்ன என்கிற ஆதங்கம். ஒரு கட்டத்தில் அவன் ஒரு  பைத்தியம் என்பதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்கிறாள். அவன் பைத்தியமாகக் காரணம் புத்தகங்கள்தான் என்றுநம்பி அவற்றின் மீது விரோதம் கொள்கிறாள். அவனுடைய அறிவுஜீவித் தோரணை என்பது கடன்வாங்கப்பட்டவைதானே அன்றி அவனுடைய இயல்பல்ல என்று அவன் இயங்கிக்கொண்டே இருக்கும் தருணத்தில் அவள் முகத்தில் அறைவதைப்போலச் சொல்கிறாள்.

அலுவலகத்தில் தினகரனுக்கும் அவனுடைய மேலதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் நாவலுக்கு உபரியானவை. தினகரனுக்கு நுட்பமான பார்வை இருக்கிறது. அதுதான் அவனின் பிரதானச் சிக்கல். அது அவனை அவன் இருக்கும் இடத்தில் பொருந்தவிடாமல் கால ஊஞ்சலில் எங்கெங்கோ தள்ளிக்கொண்டு சென்றுவிடுகிறது. காலம் இடம் என்று தன்னிலை மறந்துவிடுகிறான். இந்த அசாதாரண இயல்பு, பைத்தியம் என்கிற பாவனையை அவனுக்கு பரிசளிக்கிறது. இறப்பும் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதால் இந்நாவலில் சாவைப்போலவே காமமும் பேசப்படுகிறது. எல்லாப் பரவசங்களும் முடிந்துவிட்டாலும் பெண்ணுடலைப் புணரும்  பரவசங்கள் அவனை உற்சாகம் கொள்ளச்செய்கின்றன. “பத்மாவில் இயங்குவதுன்னா அது ஹெவன்தான் அது என்னமோ அந்த மார்பும் பொருமலும் திகட்டவே மாட்டேன் என்கிறது” என்று தினகரனைப் புலம்ப வைக்கிறது.

இந்நாவலை வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வியப்பென்பது வலுவான கதையோட்டமோ எதிர்மறை கதாப்பாத்திரங்களோ எதுவுமற்று விருவிருப்புக்குன்றாமல் வாசிக்கத்துாண்டிய கதையோட்டந்தான். சிந்தனையின் வசீகரம் என்று இதைச்சொல்வேன். வாசிப்பின் இடையே உச்சக்கட்ட வரிகளாக சில வந்துசென்று நம்மை வியக்கவைக்கின்றன. உதாரணமாக “எங்கோ நாமெல்லாரும் பாதிக்கப்பட்டவர்கள்தாம். கண்டதாலும் கேட்டதாலும் படித்ததாலும்தான். இல்லாததை எதை கற்பிதம் செய்துவிட முடியும்?எல்லா முக்கியமான எண்ண ஓட்டங்களுக்கும் நாம் மதிப்புக்கொடுத்தே ஆகவேண்டும்.”

மற்றொரு இடத்தில் ”சிந்திக்கும் ஆண்களைக்கண்டு பெண்கள் பயப்படுகிறார்கள் என்பதே அது. அதிகமாக சிந்திக்க வேண்டாம் என்று பெரும்பாலோர் இருந்துவிடுவதை ஒரு feminine quality என்று வைத்துக்கொள்ளலாம் என்று அவருக்குப்பட்டது. என்ன சான்ஸ் கொடுத்தாலும் பெண்கள் ஒரு ஐன்ஸ்டீன் வரை எண்ண முடியாது என்று அவர் நினைத்தார்.” என்று வருகிறது.

”ஏழ்மையை பற்றி எழுதி பேசி படம் எடுத்து காரும் பங்களாவும் வேண்டுமானால் வாங்கலாம். ஆனால் அதை அகற்றுகிறேன் என்று சொன்ன காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை மார்பில் வாங்கிக்கொண்டான். அவன் வரையில் அவன் கண்டதென்ன, லெனின்தான் எடுத்துக்கொள்ளேன். அவருக்குப்பிடித்தமான சகோதரன் துாக்கிலிடப்பட்டான்.—-உண்மையிலேயே சேவை மனப்பான்மை இருந்தால் சட்டையை கழட்டிப் போட்டுத்தான் ஆகவேண்டும் என்று நினைத்தார். அவ்வளவு பாலிடீஷ்யன்களும் வெறும் உடம்புடன் அலுவலகத்தில் நின்றால் நாடு எவ்வளவோ முன்னேறும் என்று அவர் நினைத்தார். இப்படி அநேக இடங்களில் அவர் நினைத்தார் என்று சிந்தனையோட்டத்தை நிலைப்படுத்த முயன்றுள்ளார்.

. இந்நாவலில் வரும் சில நுட்பமான வாழ்வியல் தருணங்கள் சாதாரணமாக நாம் கடந்துசென்றிருக்கக்கூடிய சிலவற்றின் முழுப்பரிமாணத்தை நமக்கு அழுத்திச்சொல்கின்றன. ஓர் இடத்தில் தினகரன் கால்நடையாக நடந்து பார்த்தசாரதி கோவிலை வந்தடைகிறார். அப்போது அவருக்குத் தோன்றும் எண்ணம். ”இங்கேயும் மனிதரா இருக்கிறார்கள் என்று பட்டது” இவ்வரிகள் அளித்த திறப்பு சகமனிதன் மீது நாம் எத்தனை அலுப்போடு இருக்கிறோம் என்பது. மாநகரங்களில் மனிதன் தனித்திருக்க ஓரிடம் இருப்பதில்லையோ என்ற பரிதவிப்பையும் உணர்த்தியது. அதன்பின் ஒரு பெட்டிக்கடையில் நடக்கும் ஒருவரி உரையாடல். கதாபாத்திரத்தின் மொத்த மனப்பாங்கையும் விரித்துக்காட்டுகிறது. ”பத்மநாபன் வெளியே நின்று கொண்டிருந்தான். வீட்டு முகப்பில் வைக்கப்பட்டிருந்த கடையில் வாழைப்பழம் பேரம் பேசிக்கொண்டிருந்தான். ”எடுத்துக்குங்க… எப்ப பார்த்தாலும் ஏன் பேரம் பண்றீங்க” என்று விற்பனையாளர் சலித்துக்கொள்ளும் காட்சி.

”எல்லோரும் இப்படித்தான் போர் அடித்து கனாட் பிளேஸிலும் மவுண்ட் ரோடிலும் நிற்கிறார்களோ? ஹா! கவலை இல்லை. இத்தனை ஜனங்களை போர்கூட தொற்ற அஞ்சும். அவ்வளவு ரசனை அற்ற ஜனங்கள்! சாவாடி செத்த ஜனங்க! எதையும் ஒப்புக்கொள்ளும் ஜனங்க! முதுகு எலும்பு இல்லாத ஜனங்க! என்ற சமூகவிமர்சனம் எப்போதுமே படிப்பாளிகளின் மரபுநோயாக இருக்கிறது. அது தினகரனிடமும் காணப்படுகிறது. எத்தனை ஆடினாலும் எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் மனிதன் இறுதியில் ஒன்றும் இல்லாமல் தானே ஆகிறான்? என்ற இருப்பின் அநித்தியம் தினகரனை ஓயாத சஞ்சலத்திற்கு ஆட்படுத்துகிறது. நம் மரபில் உலகே மாயம் வாழ்வே மாயம் என்று பிலாக்கணமாக வெளிப்பட்டுள்ளது.

இந்நாவலில் பல இடங்களில் கனவுகள் வருகின்றன. அவற்றிற்கெல்லாம் பெரியளவில் அர்த்தங்களோ,கதையோட்டத்தை வலுப்படுத்தும் படிமங்களோ நாவலில் பிணைந்து வரவில்லை. மனச்சிதைவின் வெளிப்பாடுகள் என்றோ அல்லது பித்துநிலையின் சமிக்ஞைகள் என்றோ அவற்றை எடுத்துக்கொள்ளவேண்டியதுதான். சிந்திக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன் என்கிற சார்த்தரி்ன் வரிகள் பொய்யாகிப்போகும் துயரம்தான் தினகரனின் ஆதாரப்பிரச்சினை. சாவு என்பது ஒரு இடைவெளி என்ற சொற்களின் மீது தியானத்தில் அமர்கிறார். ஒரு பிறவிக்கும் அடுத்துவரும் பிறவிக்குமான இடைவெளி  அல்லது பருவடிவிற்கும் கனவுநிலைக்குமான இடைவெளி என்று தேடிச்சலிக்கிறார். மனமும் சிந்தனையும் அறிவும் சுமைதான் என்பதை தினகரனுக்கு அறியவாய்த்தால் ஒருவேளை இதிலிருந்து அவர் விடுதலைப்பெறக்கூடும்.

ஒரு அறிவுஜீவியின் தத்தளிப்யையும் அவன் அடையும் இன்னல்களையும் பொருட்படுத்தி எழுதப்பட்ட படைப்பென்பதே இதன் முக்கியத்துவம். இதற்கிணையாக தமிழில் எண்பதுகளில் நகுலனின் நாவலையும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புக்களையும் குறிப்பிடலாம். சுந்தர ராமசாமியின் நாவல் மற்ற இரண்டையும் விட சிறந்தது.

இடைவெளி நாவலை கிரியா பதிப்பகம் 1984ல் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது. அதன்பின் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கடந்து தற்போது விருட்சம் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இப்பதிப்பின் பின்னுாட்டமாக நான் சொல்ல விரும்புவது. சம்பத்தின் புகைப்படத்தையோ, அவரின் வாழ்க்கைக் குறிப்புக்களையோ நுாலில் சேர்த்திருக்கலாம். சம்பத்தின் வாழ்க்கையை  அறிந்துகொண்டு இந்நாவலை வாசிப்பது நாவலுக்கு வேறொரு வாசகத்தளத்தை தரக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *