ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

ஆ. மாதவனின் எட்டாவது நாள் – வாசகப்பார்வை

நவீனத்துவச் சாதனையார்களின் முக்கியப் பங்களிப்பென சிறுகதைகளையே சொல்ல முடியும்.  வாள் வீச்சு வித்தைபோலவோ, சிலம்பாட்டம் போலவோ மிகத்துல்லியமாக அவர்களால் அதன் வடிவத்தைக் கற்றுத்தேர முடிந்திருக்கிறது.  சுந்தர ராமசாமி,அசோகமித்திரன், ஜி.நாகராஜன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி போன்ற அத்தனை நவீனத்துவச் சாதனையாளர்களும் உலகத்தரமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள்.

மிகுந்த பிரக்ஞை பூர்வமான கதைமொழி. கதையைச் சொல்லிச் செல்லாமல் நிகழ்த்திக்காட்டும் படைப்பாற்றல். சொற்களை எண்ணி எண்ணித்தேர்ந்து சுண்டு விரல் கொண்டு சோதித்து பின்னர் பிண்ணிக்கோர்த்த பாங்கு. இராணுவ ஒழுங்கோடு இத்தனை சிரத்தையைக்கோரும் ஒரு கலைச்சாதனமாக நவீனத்துவர்கள் சிறுகதைகளின் இயல்பை மாற்றி விட்டுச் சென்றுள்ளார்கள்.

அவர்களைத் தொடர்ந்து எழுதவந்தவர்களில் ஜெயமோகன், எஸ்.ரா. வண்ணநிலவன், வண்ணதாசன், கோணங்கி, யுவன் சந்திரசேகர் போன்றோரிடம் மிகச்சிறந்த படைப்புமொழி உள்ளது. நாஞ்சில் நாடனின் படைப்புமொழி என்றுமே விஸ்தாரமானது. அவருக்கு ”ஒரு பொரியல்” என்றால் சமாதானமாகாது. பொரியலை  சமைத்துக்காட்டி அதன் வாசனையை நம் மூக்கின்மேல் விழச்செய்யும் விருப்பம்  எப்போதுமே உண்டு. பால்யத்தில் உணவின் மீது ஏற்பட்ட பெரும் காதலோ அல்லது பால்யத்தில் ருசித்து உண்ட பட்சனங்கள் இன்றைய உடனடி உணவுமுறையால் அழித்தொழிக்கப்பட்டது குறித்தோ விசனமோ? எது அவரை இப்படி ஆய்ந்து ஆய்ந்து எழுதச்சொல்கிறதோ? இது ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்கு உரியது. இன்று அவர் எழுதும் சிறுகதைகளுக்கு கட்டுரைகளின் சொற்பெருக்கு வாய்த்திருக்கிறது. அதுவும் ஒருவகை புதியபாணிச் சிறுகதையென உருமாற்றம் நிகழ்ந்துள்ளது. இலக்கியத்திற்கே இலக்கணம் என்பது தானே நம் தொல்காப்பிய மரபு.

 பெரும்பாலான நவீனத்துவர்களின் நாவல்கள் சிறுகதைகளின் ஒடுங்கிய முகங்களைக்கொண்டவை. உலக நாவல்களில் ஆல்பெர் காம்யுவின் அந்நியன், கோபோ ஏப் வின் மணற்குன்று பெண். தமிழில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள்,  ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து, ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே போன்றவை.  மொத்த நாவலும் ஒரு சிறுகதைக்குள் அடங்கிவிடும். நாவலெங்கும் சொல்லப்படும் சம்பங்கள்  நம்மை அந்நாவலின் முடிவினைநோக்கி இழுத்துச்செல்லும். முடிவினை நோக்கி விரைந்து செல்லும் இயல்பு சிறுகதைகளுக்கு உரியது. நாவலோ சந்தையை விரியும் கண்களோடு நின்று நின்று வேடிக்கைப் பாரத்துச் செல்லும் குழந்தைகளின்   விநோத உலகங்களைக்கொண்டது.

ஆனால் காலம் மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகிற அநேகம் சிறுகதைகளுக்கு நாவல்களைப்போன்ற விரிந்து கட்டற்று செல்லும் உள்ளடக்கம் வந்து சேர்ந்துள்ளது. எம்.யுவன், சுரேஷ்குமார இந்திரஜித், கே.என்.செந்தில் போன்றோரின் சிறுகதைகளை இவ்வடிவ வளர்ச்சிக்கான மிகச்சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம்.

பொதுவாக காத்திரமான படைப்பிற்கு விரிந்த வாழ்வியல் அனுபவங்களும் தொடர்ந்த வாசிப்பும் பயண அனுபவங்களும் அவசியமானவை என்ற மாறா நம்பிக்கை நம்மிடம் உண்டு. பெரும்பாலான படைப்பாளிகள் அதை நிறுவும் வண்ணம்  உலகமெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். தனுஷ்கோடி என்பது கோணங்கியின் ஒரு பயணச்சுவடாகவே தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  எல்லா விதிகளுக்கும் எப்போதும் விதிவிலக்குகளும் உண்டு. அவ்வகையில் ஆ. மாதவனைச் சொல்லலாம். மிகுதியும் தன் வாழ்நாட்களை திருவனந்தபுரத்தின் சாலைத்தெருவின் செல்வி ஸ்டோரில் செலவழித்தவர்.   அதனால் அவரின் படைப்புகளுக்கு எவ்விதக் கேடுகளோ, போதாமைகளோ வந்திடவில்லை. அவ்வியல்வினாலேயே ஒரு துப்பறிவாளனைப்போல சாலைத்தெருவின் அத்தனை உன்னதங்களையும், கீழ்மைகளையும் ஒற்றறிந்து அவரால் எழுதிவிட முடிந்திருக்கிறது.  அவரைப்போன்று  வணிகர்களின் இச்சையும் அவாவும் நிரம்பிய உலகத்தை தமிழில் எழுதிய பிறிதொரு படைப்பாளியென்று செந்துாரம் ஜெகதீசைச் சொல்லலாம். அவரின் கிடங்குத்தெரு நாவலிற்கு இந்த முகம் உண்டு.

சாளப்பட்டாணியின் இறப்பில் இருந்தே இக்கதையை ஆரம்பிக்கலாம். க.நா.சு.வின் பொய்த்தேவு நாவல் சோமு முதலியின் இறப்பிற்கு பின்பு கூடுதல் அழுத்தம் பெறுவதைப்போல. சாளப்பட்டாணியின் பரிதாபகரமான இறப்பே இச்சிறுகதைக்கு ஒரு காவியத்தன்மையை அளிக்கிறது. கிட்டத்தட்ட அது ஒரு படுகொலை. துவந்த யுத்தத்தின் இறுதி வெற்றி. சாலைத்தெரு முழுக்க ஒரு மாவீரனைப்போல திமிரித் திரி்ந்த சாளப்பட்டாணியை விசிலடிச்சான்குஞ்சுகள் நடுத்தெருவில் வீழ்த்திச் சாகடிக்கும் காட்சி உக்கிரம் கூடியது.  பெரும் ஆலமரம் ஒன்று புயலடித்து திடீரென கிளைகள் பதற நிலத்தில் விழுவதற்கு நிகரானது.

சாளப்பட்டாணி பதினான்கு வயதில் இருந்து ஐம்பது சொச்சம் வயதில் யானைக்கால்நோய் வந்து சாகும் வரையிலான கதையை நினைவோடை உத்தி மூலம் ஆ.மாதவன் காட்சிப்படுத்துகிறார். இக்கதையை ஒரு சிறந்த நாவலைப்போல விரித்து எழுதிச்செல்ல முடியும். அதற்கான விரிந்த காலத்தை தன்னுள் கொண்டுள்ளது. உதடுகள் மேல் இளம் புற்களென மீசை அரும்பும் வயதில் குடிகாரத் தந்தையை பிடறியில் அடித்து உதைத்து விட்டு சாலைத்தெருவிற்குள் தஞ்சமடைகிறான் பட்டாணி. பட்டாணி தன் குடும்பத்தை கைவிடும் காரணம் மிக பூடகமானது. தான் விரும்பும் ஒரு பெண்ணை அவள் ”ஒருமாதிரி” என்ற பெயர் எடுத்தவள் என்றாலும் கூட தன் தந்தை வைத்துக் கொண்டிருப்பதை அறியும் துயரமே அவனை விரட்டியடிக்கிறது.  அக்காக்களை மறந்துபோகிறான். அம்மா இறந்தால் அப்பன் சித்தப்பன் என்கிற வரி அவன் மனநிலையைச் சிறப்பாக  சித்தரிக்கிறது.

சாளப்பட்டாணியின் வாழ்வு சாமானியத்தன்மை கொண்டதல்ல. போகமும் குடியும் மிதமிஞ்சிய நாட்கள். ஓரிடத்தில் நிரந்தர இராத்தங்கல்  கிடையாது. சாலைத்தெருவின் சாத்திய கடைகளின் வாசல்திண்டுகளில் கழியும் பெரும்பாலான இரவுகள் அல்லது விடியும் வரை ”அவள்”களின் அணைப்போடு.

உப்பைத்தின்னவன் தண்ணி குடிச்சே ஆவணும் என்பதைப்போல சாளப்பட்டாணியின் முடிவும் அமைகிறது. சாலைத்தெருவின் அத்தனை நெஞ்சங்களும் சாலைப்பட்டாணியின் வீழ்ச்சியை ரசிக்கவே செய்கிறது. அது தடி எடுத்து தன்னை நிறுவிக்கொண்ட அத்தனை வன்முறையாளர்களுக்கும் உரிய முடிவே. எனில் இக்கதை நீதிக்கதையா?

சாளப்பட்டாணியின் வாழ்வில் எஞ்சியதென்ன? என்ற வினாவே இக்கதையைக் கனப்படுத்துகிறது. சந்தர்ப்பங்களே அவனின் இயல்பை தீர்மானிக்கின்றன. தம்புராட்டியின் காலிடுக்கு வாசனைக்கு ஏங்கியவனாக அவன் சாலைத்தெருவில் சுற்றித் திரிந்தவன். இருட்டிற்குள் ஒரு மோகினியால் தீண்டப்பட்டு சுகம் கண்டவன். அந்த இரவிற்கு பின்பே அவன் முட்டித்திரியும் காளையை போல உருமாறுகிறான். சல்லித்தனங்களை வளர்த்துக்கொள்கிறான். அந்த ஊக்கம்தான் அவனை துர்க்குணங்களின் நிரந்தர வாழ்விடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

யானைக்கால் நோயினை சிறுவயதிலே வலதுகையில் பெற்றுக்கொண்டவன் சாளப்பட்டாணி. அவனின் தீமைகளைப்போல அதுவும் நாளொரு வண்ணமும் வளர்ந்து  அவனை விழத்தட்டுகிறது. பலம் குன்றியவர்கள் குழந்தைகளைப்போல அழுது ஆதரவிற்காக ஏங்குவதை இக்கதையின் ஆரம்பக்காட்சி நமக்கு காட்டுகிறது. எவ்வளவு பெரிய சண்டியர் அவன். நம்முன் கண்களை கசக்கி அழுது கரைகிறான். சாலைத்தெரு பயல்களால் பந்தாடப்படுகிறான்.

      செல்வமும் உடற்வலுவும் எவ்வளவு கொண்டிருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்வென்பது ஒட்டுமொத்தமாக விரல்விட்டு எண்ணிவிடும் உச்சபட்ச நிகழ்வுகளைக் கொண்டதே என்பதை இக்கதை சொல்கிறது. தம்புராட்டியை கடும்மழையிரவில் கூடியதும், தன்னைத்தேடி வந்த விலைமகளை புணர்ந்து கொலை செய்ததும், புலிக்கடுவா வேசம் தரித்து பத்திருபது ஆடுகளை மொகரம் எட்டாம்பொறையன்று கடித்துச்சாய்த்த நினைவுகளும்தான் அவனுக்கு மிஞ்சுகின்றன.  கசாப்புக்கடை வேலையில் இருந்த போது எச்சில் பொறுக்கவரும் நாய்களை  காரணங்கள் ஏதுமின்றியே கத்தி தன்கையில் இருக்கும் ஒரே காரணத்திற்காக  ரணகளப்படுத்துவான் என்கிற நினைவு கூரல் நம்மையும் சங்கடப்படுத்துகிறது.

நோய்முற்றி மருத்துவர் எட்டுநாட்கள் அவனுக்கு இறுதிக்கெடு விதிக்கிறார். அந்த எட்டுநாட்களும் அவன் கிடையில் கிடந்து தன் மொத்த வாழ்நாட்களின் ஐந்தொகையினை எழுதிப்பார்க்கிறான் மனதிற்குள். அவனின் நினைவுகளின் வழியே ஒரு தலைமுறை சாலைத்தெருவின் பரிணாம வளர்ச்சியே வந்து செல்கிறது. வணிகர்களின் பிம்பங்கள் விரைந்து செல்லும் காலவெள்ளத்தில் விழுந்து கரைந்து செல்கின்றன. திருவனந்தபுரத்தின் ஒரு காலமாற்றத்தின் எழுத்து ஆவணங்கள் இவை.

கையில் அள்ளிய நீர்கொண்டிருப்பதும் கடல்தான் என்பதைப்போல சாலைத்தெருவின் மனிதர்களே இவ்வுலகமும் என்பதை நிறுவும் மிகச்சிறந்த கதை இது. ஆ.மாதவன் மனித மனதில் தீமைகள் உருக்கொள்ளும் அபூர்வ திருகல்களைப் பற்றி விரிவாக எழுதியவர். தஸ்த்தாவெஸ்கி  போல மனிதர்களின் குற்ற மனநிலையை இலக்கியப் படுத்தியவர். மனித வரலாற்றின் முன் தீமைகளை விழையும் மனித விருப்பங்களை நிறுத்தி, தீர்ப்பு வழங்கும் வாய்ப்பை நம்வசம் விட்டுச்சென்றவர். காந்தியிடம் மட்டுமின்றி சாளப்பட்டாணியிடமும் கற்றுக்கொள்ள  ஏதோ சில இருக்கத்தான் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *