நெருங்கி வரும் சொற்கள்

அலகில் அலகு – கவிதைகள் – வாசிப்பனுபவம்

அலகில் அலகு கவிதை நூலை படிமங்களின் குவியல் எனச் சொல்லலாம்.  கிட்டத்தட்ட எல்லா கவிதைகளும் முழுக்க, முழுக்க படிமங்கள் வழியாகவே பேசுகின்றன.  ஒவ்வொரு கவிதையையும் எடுத்து மீட்டி மீட்டி வாசித்து, அந்த கவிதை என்ன சொல்ல வருகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.  கிட்டத்தட்ட  எல்லாமே அழகான தூய்மையான மாசற்ற படிமங்கள்  நிலவொளியில் ஜொலிப்பதை போன்று இருக்கின்றன,  இவைகளை காட்சியாக காணும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது.  மேலும் இந்த கவிதைகளின் பாடுபொருள்,   பிற சமகால கவிதைகள் பேசும் அன்றாடச் சிக்கல்களை,  விஷயங்களை விட்டு விட்டு முற்றிலும் வேறு வெளியில் நிற்கின்றன. அப்படி அன்றாடத்தை பேச முற்பட்டாலும் அதை வெளியில் நின்று   இக்கவிதைகள் காண்கின்றன.

வேதங்களில் வரும் ஆத்மா பற்றிய விவரணைகளில் ஒரு அழகிய உவமையான “ஒரு கிளி உண்கிறது, அதை ஒரு கிளி காண்கிறது” என்பதுதான் இந்த கவிதைகளை எழுதிய மனம் இக்கவிதைகளில் நிகழ்த்துகிறது.  இந்த உவமையின் அர்த்தம் என்பது மனம் இரண்டாக பிரிந்து ஒரு மனம் செயலில் ஈடு படுகிறது இன்னொரு மனம் அந்த செயலை வெளியில் நின்று காண்கிறது என்பதுதான்.  இந்த கவிதைத் தொகுப்பின் தலைப்பின் அர்த்தமே கிட்டத்தட்ட அதுதான்.  நீரில் தெரியும் தன்னுடைய பிரதிபலிப்பில் இருக்கும் அலகில் தன்னை தானே காண்கிறது .  இதற்கு இணையான இன்னும் இரண்டு உவமைகள் கூட இந்த கவிதைத் தொகுப்பில் உண்டு. ஒன்று காற்றில் பாய்கள் கிழித்து தனித்து நிற்கும் படகு தன்னைத் தானே நீரில் காணும் ஓர் இடம்,  இன்னொன்று நீரில் நீர்( மழைத்துளி ) விழுவது என வரும் வேறொரு இடம்.

முதல் கவிதையிலேயே தன் பாடுபொருள் எதை நோக்கியது எனச் சொல்லி விடுகிறார் கவிஞர்.  கிட்டத்தட்ட வேத ரிஷிகள் பேசிய பேசு தளத்தில் இருந்து துவங்குகிறார்.  முதல் கவிதையை பிரம்மத்தை, அதன் இருப்பை,  அதன் மகத்துவத்தைப் பேசுகிறது.  மாரியம்மன் கோவிலில் கரகம் எடுக்கும் நபர் நிதானமாக ஆடி பின் சில கணம் சன்னதம் எழுந்து குதித்தாடி, பின் கரகம் இறக்கி சாந்தமாக மாறுவதை போன்ற ஒரு அமைப்பில் இந்த கவிதை எனக்கு தோன்றியது !  மெல்ல மெல்ல ஓவ்வொன்றையும் சுட்டி அது அது என செல்லும் கவிதை பிறகு சிவனின் உக்கிர நடனத்தை கண் முன் விரிக்கிறது மிக சில சொற்களில் அழகாக. மிக அழகான கவிதை தருணமான  இந்த ருத்ர தாண்டவத்திற்கு நேர் எதிரான அமைதியான மிக மெல்லிய இருப்பான மலரின் மீது இருக்கும் நீர்த் துளியை உவமையாக்கி அனந்தசயனம் என்று வைத்து முடிக்கிறது. இதுவரை நான் வாசித்த கவிதைகளில் மிக நல்ல அனுபவத்தை, பரவசத்தை அளித்த ஒன்றாக  இந்த தருணத்தைப் பார்க்கிறேன்.

இந்த கவிதைகளின் பேசுதளங்கள் இப்படியான ஒன்று. இன்னொன்று  வெளியில் நின்று பார்க்கும் மனநிலை கொண்ட ஒருவன்,  அன்றாட வாழ்வில் இப்படி இருப்பதனாலேயே அடையும் சிக்கல்களையும் பேசுகிறது.  காதலியுடன் இருக்கும் ஒரு கவிதை ஒரு நல்ல அனுபவம்.  காதலியைக் கூட வைத்துக் கொண்டு,  காரில் செல்லும்போது குப்பைகள் எரியும், நாற்றமடிக்கும் இடத்தில் நிறுத்தி அதை சிவன்ஆடும் மயான வெளியாக கவிஞன் கண்டு மெய்மறந்து ரசித்து கொண்டிருப்பான், உடன் இருக்கும் காதலி ( அன்றாட மனநிலை கொண்ட ) எப்படி எடுத்து கொள்வாள் என்று எண்ணிக்கொள்ளும்போதே வாசிக்கும் நமது மனதிற்குள் புன்னகை குடிவந்து கொள்கிறது ! இந்த கவிதை முடியும் இடத்தில் வரும் அழகு,  வெண்யானை மீதேறி வந்தாலும் சுங்க சாவடியில் பணம் கட்டியாக வேண்டும் என்று முடியும். ஞானியாக இருந்தாலும்  அன்றாடத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கியாக வேண்டும் என்பதாக நான் எடுத்து கொண்டேன்.

வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் ஒரு அழகான கவிதை இருக்கிறது.   கிணற்று நீர் எடுத்து நெல்மணிகளை வளர்ப்பார்கள்,  கிணற்றில் நீர் குறைந்து அதில் வாழும் மீன்கள் பதைபதைத்து திரியும், இந்த கவிதையும் எனக்கு பிடித்த ஒன்று.

இன்னொன்று யானை மலர் கொய்து வீசும் கவிதை, அது அபாரமான விஷயங்கள் பேசும் கவிதை.  மத களிறு காற்றில் வெறிகொண்டு ஒற்றையாக அலைகிறது, பிறகு மெதுமெதுவாக சாளரங்கள் மூடுவது போல அமைதி கொள்கிறது,  அமைதி நிலைக்கு வந்தபின் வெண்மலரை பார்த்து நீல வெளியில் வீசுகிறது.  மன, மற்றும் வாழ்வு சார்ந்த போராட்டங்களை கடந்த ஒரு வாசகனால் இந்த கவிதைக்குள் நீண்ட தூரம் போக முடியும்.  மேலும் இவருக்கென விசேஷமான படிமம் என வெண்மலரை சொல்லலாம், தொடர்ந்து இந்த வெண்மலர் இவர் கவிதைகளில் அங்கங்கு வந்து கொண்டே இருக்கிறது.  அது சாந்தத்தை,  சாந்தமான மனதை குறிக்கும் அல்லது அதைவிட மேலான ஒன்றை குறிக்கும் படிமம் என்று நினைக்கிறேன்.  இந்த கவிதையில் தொடர்ச்சியாகவே இம் வெண்மலர் நீல வெளியில் நீந்தி செல்கிறது என்று வரும்.  நம் மனம் அப்படியான ஒரு எடையற்று, எந்த குழப்பங்களும் வெறியுமற்று நிதானமாக,   தான் எந்த நினைவுமற்று பஞ்சாக பறப்பது போல எண்ணி கொண்டேன்.  நீலம் என்பதே ஒரு மகத்தான பேரிருப்பதை உணர்ந்து அதில் நாம் ஒரு துளி என அறிந்து  வரும் நிதானம் என்று உருவகித்துக் கொள்கிறேன்.  இந்த வெண்மலர் நீல வெளியில் மிதப்பதை அவ்வாறே உள்வாங்கி கொண்டேன்.

சில அனுபவங்களின் கண்கொண்டு பார்க்கும்போது மனம் சிலிர்க்கும் அழகான உவமைகள்  நிறைய இருக்கின்றன.  அதில் ஒன்று கடற்கரையில் கார் கதவு திறந்ததும் பாய்ந்தோடும் நாய்க்குட்டி,  கையில் இருந்து நழுவி ஓடுவதை பலூன் உடைவதை போல என்று கவிஞர் சொல்கிறார்,  இதை வாசிக்கும்போதே அந்த அனுபவத்தை மீட்டிக் கொண்டு நம்மால் ரசித்துணர முடிகிறது.

சில கவிதைகள் நம் எல்லைகளை, அதைத் தாண்டி நம்மால் ஒன்றும் செய்யாம முடியாமல் திக்கற்று நிற்பதைச் சொல்கிறது.  ஒரு கவிதை சரியான ஒன்று என இருக்கும்போது நம்மில் இருக்கும் அமைதியும் உறுதியும், சரியானது இல்லை என்பதை உணரும்போது,  அதை செய்யும்போது நம்மில் வரும் பதைபதைப்பையும்  உறுதியின்மையையும் நிம்மதியின்மையையும் சொல்கிறது.  இன்னொரு கவிதை மனிதனின் எல்லையை, அதை தாண்டிய, ஒன்றும் செய்யமுடியாமல் வேண்டி நிற்கும் நிலையை அழகாக நான்கு வரிகளில் அப்படியே சொல்லி விடுகிறது.

மனதின் ஆசை

 அறிவின் காரணம்

 செயலின் விளைவு

தூய கண்ணீரில் மீண்டெழுதல்.

உயிரே உன் தாள் பணிகிறேன்.

2.

மனித வாழ்வில்  வற்றாத பேரின்பம் என்பது இவ்வுலகை,   இயற்கையை, இப்பிரபஞ்சத்தை ரசிப்பதுதான்.  எல்லையற்று விரிந்திருக்கும் இதை ரசிக்க கவிதை நமக்கு கண்களை அளிக்கிறது . இந்த கவிதைத் தொகுப்பில் இருக்கும் இக்கவிதை இப்படியான ஒரு பார்வையைக் கொண்டிருக்கிறது.  உண்மையில் இக்கவிதை காண்பிக்கும் விஷயம் போன்றே இக்கவிதையும் எளிமையையும் அழகும் கொண்டிருக்கிறது.

எக்கணம் பூத்தாள்

இவள்

சிறுமலர்

சிற்றிதழ் மலர

எதைக்கண்டு

சிரித்தாள்

இவள்.

 தவிர இந்த தொகுப்பில் நான் மிக  ரசித்த இன்னொரு நல்ல கவிதை

நிசப்தமான

 நடுக்கடலில்

 நின்றுவிட்ட

பாய்மரப்படகென கிடக்கிறது

சுயமற்றவனின் இருப்பு. பெரும்படமெடுத்தாடும்

 பாய்மரத்தை கிழித்தெறிந்து சிறுதோணியை

 சிதறடித்து சென்றுவிடுகிறது புயல்காற்று.

 தண்ணீரில்

தன்னை தான் நோக்கியபடி பெருங்கடலின் பரப்பை அளந்தலைகிறது சிறு தோணி.

ஓய்வின்றி ஓடித்திரிந்து

ஓரிரண்டு சிப்பிகளோடு கரையொதுங்கி

இளைப்பாறும் அவன் காதுகளில்

 கடல் அனுப்பிய மீன் ஒன்று

அதன் இரகசியங்களை  சொல்லிக்கொண்டிருக்கிறது.

கடல் – வாழ்வு,  படகு – அவன் எனக் கொண்டால், கடல் அனுப்பிய மீன் சொல்லும் ரகசியம் என்பதை வெகுவாக ரசிக்க முடியும், மேலும் தண்ணீரில் தன்னை நோக்கிய படி இருந்த படகு நிலை என்பது உயர் தியான நிலை.

இது தவிர வேட்டை விலங்கு கவிதையும் எனக்கு மிகப் பிடித்த ஒன்று, அந்தக் கவிதை எதிர்காலத்தில் பிரபலமாகும் என்று நினைக்கிறேன், அதற்குரிய கவர்ந்திழுக்கும் தன்மை, அக் கவிதையில் உண்டு,   அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் அளித்த ஞான உபதேசத்தை ஞாபகப்படுத்தியது.

 3.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப் போலவே இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் அன்றாடத்தை,  வாழ்வை,  பிரபஞ்சத்தை அகன்று நின்று காணும், ரசிக்கும்,  துணுக்குறும், பிரமிக்கும்,  என்னசெய்வது என்றறியாமல் நெட்டி நிற்கும் மனதின் வெளிப்பாடுகள்தான்.   இரு மனமாக பிரிந்து நின்று காணும் மனம் வழியாக இப்பிரபஞ்சத்தின் வாழ்வின் நம்மை மீறிய, நம்மை நிகழ்த்தும் பேரிருப்பின் இருப்பை கவிதைகள் வழியாக காட்டி செல்கிறார் என்று சொல்லலாம்.  உதாரணமாக சித்தரிப்பு வழியாக வெளிப்படும் வடிவம் கொண்ட புயல் வந்து சென்ற பிறகான ஒரு சூழலை சொல்லும் கவிதை கூடுகள்,  அதிலிருக்கும் குஞ்சுப்பறவைகள் எல்லாம் சிதறி பரவி மரண ஒலி எழுப்புகின்றன,  மரம் கூடற்று வெறுமை கொண்டு நிற்கிறது,  இந்த எதிர்பாரா வாழ்வை புரட்டி போடும் சூழலை அருகில் இருக்கும் ஒரு கலங்கரை விளக்கம் கண்டு கொண்டிருக்கிறது,  வெறும் காட்சியை காண்பவனாக !  இன்னொரு கவிதை இரவில் அலைகள் புரள்கின்றன,  இரவு அதை மவுனமாக பார்த்து கொண்டிருக்கிறது. பிரபஞ்ச நடனத்தை, வாழ்வு நிகழ்த்தும் நாடகங்களை அதை அகன்று நின்று காணும் கண் என்பது இந்திய மனம் வேத காலத்தில் இருந்து நிகழ்த்தி கொண்டு வரும் ஒரு யோகம் ( ஆழ்தல் ) என்று சொல்லலாம்,வேத ரிஷிகளின் மனதின் தொடர்ச்சி   நவீன கவிதைகளில் பல இடங்களில் காணப்படுவதைச் சுட்ட இயலும்,  ஞான மரபின் இத்தொடர்ச்சியே இக்கவிதைகளின்  முக்கியத்துவம்.

எனக்கு இக்கவிதைகள் பயன்படுத்தும் சொற்கள் பல மிக பிடித்திருந்தன, மேலும் சொற்களில் இருந்த அடுத்தடுத்த நெருங்கி விலகும் சொற் இணைவுகளும் பிடித்திருந்தன.  இரு வார்த்தைகள் வழியாக இரு எல்லைகளை ரம்மியமாக சொல்லிவிட இவரால் முடிகிறது.  ‘பெருவாழ்வும் துயரிலா துறவும் ‘ என முடியும் ஒரு கவிதைவரி.  அன்றாட வாழ்க்கைக்குள் சென்று உச்சம் கொள்வது என்பது பெருவாழ்வு எனக் கொண்டால், துறப்பது சார்ந்த எந்த துயருமல்லாத நிலை என்பதும் துறவு நிலையின் உச்சம்.  இது போன்ற பல சொல் இணைவுகள் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் காண இயலும்.  முதல் கவிதையே அவ்வாறானதுதான், ஒன்று நேர் எதிரான இன்னொன்றை சொல்லிக் கோர்த்து செல்லும் படியான அமைப்பு கொண்டது.

சில சமயம் வாழ்வு சம்பந்தமற்ற இதில்  நிறுத்தி வேடிக்கை பார்க்கும்,  நாம் மருண்ட எலி போல் எதிர்கொள்ள முடியாமல் திணறுவோம்,  இந்த நிலையினை கழுகின் கால்களில் மாட்டிக்கொண்ட முயல்குட்டியினை பற்றி வரும் கவிதை அழகாக சொல்கிறது, இந்த கவிதைக்கு இருக்கும் சிறப்பம்சம் தருமு சிவராமின் ஒரு பறவை வாழ்வை எழுதி செல்கிறது எனும் பிரபல கவிதை போல வரும் சொற்றொடர் இணைவுதான்,   கவிதை இப்படி முடிகிறது !

அறியாத அர்த்தங்கள் உலவும் உலகில் சிறகடித்து செல்கிறது

ஒருசில கணத்தில் நிகழும் காட்சியை  கொண்டு பெரிய பெரிய விஷயங்களை சொல்லிவிட கவிதைகளால் முடிகிறது என்பதை  சாமி ஊர்வதில் வைக்கப்படும் வானில் வெடித்து சிதறும் ஒரு மத்தாப்பு வெளிச்ச துளி கொண்டு அதை ஒரு பூவிதழ் ஆக்கி அது மலர்ந்து மறையும் கணத்திற்குள் மொத்த வாழ்வையும் பிரம்மாண்டமாக சொல்லி விடுகிறார்  சில வரிகளில்.  இக்கவிதையில் வரும்  பாதாள துக்கம் எனும் சொல் மனதிற்குள் தங்கி விட்டது.  துக்கம் எனபதே வருத்தம்தான்,  அது பாதாள துக்கம் எனும்போது எவ்வளவு ஆழமான துக்கம் ! சமூகங்களில் தண்டனைகளை வழங்கும் இடத்தில் கவிஞர்கள் அமர்ந்து விட கூடாது என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.

தோளில் சுமந்து செல்லும்

 தெய்வத்தின் வருகையை சொல்லும்

 வானில் வெடித்து சிதறும்

 வண்ண மத்தாப்பின் பூவிதழில் ஒன்று

 கனவையும் நிகழ்வையும்

 பெருமிதப்பையும் பாதாழ துக்கத்தையும்

இந்த நள்ளிருளில் சொல்லி பிரகாசித்து மறைந்துவிட்டது.

இன்னும் கண் விழித்து நான் என்ன செய்கிறேன்

அலகில் அலகு எனும் கவிதையில் ஒரு ஞான வார்த்தை என்பது நிலைத்த நீர் என்று நினைக்கிறேன்.  கணம் கூட நிற்காமல் ஓடும் நீரில் நிலைத்த நீரில் அமர்ந்த பட்சத்தில்தான் அலகில் அலகை காண்கிறது,  நிலைத்த நீர்  முக்கியமானதொரு படிமம்.

ஒரு பெண்ணை வர்ணிப்பது, எழுத முயற்சிக்கும் எனக்கு சுவாரஸ்யமான ஒன்று, எவ்வளவு வரிகள் எழுதினாலும் சரியான சித்திரத்தை சொல்லிவிட்ட நிறைவு கிடைக்காது,  ஆனால் இந்த கவிஞர் சில சொல் அடுக்குகள் வழியாக பெண்ணை அழகாக சித்தரித்து விடுகிறார், சொற்கள் மற்றும் அதில் தோன்றும் பெண் இரண்டுமே அழகாக இருக்கிறது.

கவிழ்மலர் விழியள்

தேனிதழ்த் திருமகள்

குளிரொளி முகத்தினள்

மெல்ல

அதிரும்

மந்திர மொழியவள்

உயிருடல் தீண்டிட

பிறக்கும்

அலகில் பெருங்காதல்

பெண்ணின் இயல்பினைச் சொல்லும் கவிதை கூட ஒன்றுண்டு, அதை படிக்கும்போதே மனதிற்குள் புன்னகை வந்து விடுகிறது.

புருவங்களிடையே

 சரியான மத்தியில்தான்

 பொட்டு இருக்கிறதா

என்பதிலிருந்து

ஆரம்பமாகும் அவள் குழப்பம்

மேலும் ஒரு அபாரமான விஷயம் பேசும் கவிதை  கடல் பற்றிய கவிதை,  அதில் நீரின் இருப்பை சொல்லிச் சென்று ( துமியாக துளியாக, அலையாக, கடலாக ) கடைசியில் அதில் இருந்து அகன்று வேறொன்றாகும், வேறு நிலைக்கும் உள்ளாகும் தருணத்தைச் சொல்கிறது,  சிப்பிக்குள் நுழையும் நீர் மாறுவது போல,  அதை மேலும் படிமங்கள் தந்து இன்னும் செறிவாக்குகிறார்.

கிளர்ந்தெழுந்தாடும் மனம் வனையும் விசித்திர பாவைகள். நிலைகொள்ளாமல் கிளைமேல் சிறகடிக்கும் பறவை.  திரியில் காற்றில் துடிதுடிக்கும் சுடர்

ஒரு மனிதனின் அன்றாட உலகில் இருந்து நகர்ந்து வேறொன்றிற்குள் அகப்படும்போது வரும் நிலையாக, தவிப்பாக பெருநிலையின் வழியாக இக்கவிதையை எதிர்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *