வலசைப் பறவையின் சிறகசைப்பு

சிவா கிருஷ்ணமூர்த்தி சிறுகதைகள் – வாசிப்பனுபவம்

புதிய குடியேறிகளை அங்கிருக்கும் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை எப்போதும்  ஆர்வத்துடன் கவனிக்கிறேன்.  சிவா கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைகளில் பெரும்பாலானவை இங்கிலாந்தில் ( மேற்கில் ) நிகழ்கிறது. இங்கிருந்து அங்கு சென்று வாழும் ஒருவரின் சிறுகதைகள் வழியாக அவரை அங்கிருக்கும் சமூகம் எப்படி அணுகுகிறது என்ற வினாவிற்கான பதிலை இந்த சிறுகதைகள் வழியாக என்னால் காண முடிகிறது. சிறு எதிர்ப்பு கூட அம்மக்களிடம் காணமுடிவதில்லை, மாறாக தங்களை போல ஒருவராக காணுகின்றனர்.  இது பெரிய மகிழ்ச்சியை எனக்களித்தது. சிவாவின் சிறுகதைகள் எனக்கு அளித்த முதல்பெரும் மகிழ்வான விஷயமாக இதையே  நினைக்கிறேன். அகதிகளை அனுமதிக்க கூடாது,  வெளிமாநிலத்தவர்கள் வேலைகளை அபகரித்து செல்கிறார்கள் என தினசரி இங்கு நடக்கும் அன்றாட விவாதங்களை கண்டு  மனம் சஞ்சலித்து எது சரி, எது தவறு என குழம்பி கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஒருவனுக்கு,  ஒருவர் கடல்கடந்து சென்று புதிய தேசத்தில் குடியேறி அம்மக்களுடன் சகஜமாகி, அம்மக்களும் சகஜமாக ஏற்று,  அம்மக்களின் வாழ்க்கையை,  அம்மக்களின் மன தவிப்புகளை கண்டுணர்ந்து முன்வைக்கிறார் என்பதே எனக்கு பெரிய ஆசுவாசத்தை அளிக்கிறது.

கிட்டத்தட்ட பாதி கதைகள் இது போன்ற குடியேற்ற சூழல்களில் நடக்கின்றன என்றால், பிற கதைகள் இங்கும் நிகழ்கின்றன. சிவா கிருஷ்ணமூர்த்தியின் பலம் என்பது கதையின் ஸ்வாரஸ்யத்திற்காக எதையும் திணிப்பதில்லை, அதைவிட மனித இயல்பினை அசலாக வெளிப்படுத்தும் தன்மை. சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதை நாயகனுக்கு  நல்லியல்பாக இருக்க வேண்டும் என்கிற கணக்குகளே இல்லை,  அப்போது தோன்றியதை, அதற்கடுத்து அது எப்படி பொருள் கொள்ள போகிறது என்று எண்ணாமல் தன் போக்கில் சொல்லி விடுகின்றான்.  பெண்ணை பார்த்ததும் ரசிக்க துவங்குவது போல,  எண்ணம் உதிக்க துவங்கியதுமே இயல்பாக  வெளிப்படுகின்றன,  அது துக்க விசாரிப்பு சூழலில் இருந்தாலும் சரி,  உயிர் பாதுகாப்பு சூழலில் இருந்தாலும் சரி,  கேட்பவர் மனசு நோகும் சூழலில் இருந்தாலும் சரி!

தனிப்பட்ட முறையில் மிக பிடித்த கதை என்றால் விக்ட்டோரியன் கதையை சொல்வேன்.  பேய் கதை என்று சொல்லலாம்,  பேய் கதைக்கே தேவைப்படும் பிரத்தியேக நூற்றாண்டு அளவு பழைமையான பங்களாவும் இதில் உண்டு,  ஆனால் பேய் பெண்ணல்ல ! இதை வாசிக்கும் போது பஷீரின் நீல வெளிச்சம் சிறுகதை ஞாபகம் வந்தது. பழைய பிரிட்டிஷார் பங்களா,  அதில் சில மாதம் தங்கும் ஒருவரின் அனுபவம்,  அசாதாரண எழுத்தாற்றல் மூலம்   உவமைகள்,  காட்சி வழியாக கதை சூழலை கண் முன் விரிக்கிறார். எனக்கு முடிவு மிக பிடித்தது.  இறந்தவருக்கு பயந்த சூழல் மாறி யாரையெல்லாம் அலமாரிகள் எங்கும் இறந்தவர்கள் இருக்கும் படியான பயந்த சூழல் யோசிக்கவே குதூகலம் அளித்தது. அந்த சூழல் மாற்றத்தை வீட்டை வாடகைக்கு விட்டவரே அளித்து விட்டு போகிறார் என்பதுதான் ஸ்வாரஸ்யம்! நூற்றாண்டு பாரம்பரியம், அதை விரும்பும் அம்மக்கள்,  அந்த புராதனத்தை விரும்பி,  அதன் ஒரு முகமாக ஆகும் அந்த ஜார்ஜ் (வீட்டின் உரிமையாளர்) எல்லாம் கதை விரும்பி திரும்ப வாசிக்க வைக்கின்றன.

இவரது உவமைகள் விசேஷமானவை, அதாவது வண்ணமயமானவையோ,  அதீதமாகவோ அல்ல, குழந்தை பார்க்கும் பார்வை போல கோக்குமாக்கானவை,  அதுதான் வாசிப்பில் புன்னகைக்க வைக்கும் ஸ்வாரஸ்யத்தை அளிக்கின்றன.  இலைகள் இல்லாத நெடிய மொட்டை மரத்தை தேய்ந்து போன சேவிங் பிரசுடன் ஒப்பிடுகிறார், ரயில்களில் ஸ்டாப்களில் வெளியேறுவார்கள் உண்ணிகளை வெளியேற்றுவதன் ஒப்பிடுகிறார், சுரங்க பாதைகளில் நெறுக்கியடித்தி வெளியேறும் மக்களை அமுத்தி எடுக்கும் டூத்பேஸ்ட்டுடன் ஒப்பிடுகிறார்!

வெகுளாமை கதை வாசித்த பிறகு ஏதோ தோன்றி இந்த தலைப்பின் அர்த்தம் தேடினேன்,  அது இந்த தலைப்பிற்குரிய திருக்குறளில் சென்று சேர்ந்தது.  அந்த குரல் கொண்டு இந்த கதையை யோசித்த போது இக்குறலுக்குரிய கச்சிதமான கதை என்று நினைத்தேன்.  ஒவ்வொருவரும் தன் வாழ்வை போட்டுப்பார்த்து ஆமாம் என்று சொல்லி தன் இயலாமை சூழலை கண்ணாடியில் பார்ப்பது போன்று உணர கூடிய சிறுகதை இது.  கதையின், அதை வாசிப்பவரின் சூழல்கள்தான் வேறுவேறு,  கதையிலிருக்கும் பேசப்படும் சிக்கல் என்பது ஒவ்வொருவரும் அனுதினமும் அனுபவிக்க கூடியவர்கள்தான் !

இரு கதைகள் பேசும் தளங்களும்,  கதை சூழலும், சொல்லும் எழுத்தாற்றலும் பெரிய எழுத்தாளரின் கை இது என்று சொல்ல வைக்கின்றன, ஒன்று மறவோம், இன்னொரு முதல் காலடி.  (சுவாரஸ்யமான கதைசொல்லி என்று வைரமணி நீரலைகளும்,  விக்டோரியனும் எண்ண வைக்கிறது).  முதல் காலடி மனித உந்துதல்,  அது அளிக்கும் தீவிரம்,  அதனால் அடையும் மனத்திருப்தி பற்றி பேசும் கதை,  பனிமலையேற்ற சூழல் வழியாக.  ஆபத்தினை பொருட்படுத்தாது செல்லும் மனம் தான் பிறர் எட்டாத உயர இடம் வந்ததும் திருப்தி கொண்டு திரும்பி கொள்கிறது. தன்னை தாண்டி செல்ல யாரும் இல்லை எனும்பொழுது பாதுக்காப்பு மனதில் பிரதானமாக வந்துவிடுகிறது, மேலும் இனி முடியாது உணர்ந்ததும் மனம் திரும்பி கொள்ளும் விந்தையும் அந்த மனநிலையும் கதையில் வந்து செல்கிறது. ஜெயமோகனின் திபெத்திய கதைகள் ஞாபகம் வந்தன பனிப்பிரதேசம் என்பதால்,  அதற்கு நிகரான காட்சி அனுபவத்தை இந்த கதையும் அளிக்கிறது.

சிவா கிருஷ்ணமூர்த்தியின் அயல் தேச சிறுகதைகளில் இருக்கும் முக்கியமான ஒரு விஷயம் என்பது அம்மக்களில்  இருக்கும்  உலகப்போர்கள் பின்பான பாதிப்புகள் பற்றி அறிய கிடைப்பது.  இவ்வகைகளில் முக்கியமான கதைகள் என “ம்ருத்யோ மா” மற்றும் ” மறவோம் “சிறுகதை. இரண்டுமே முற்றிலும் வித்தியாச தளங்கள் மறவோம் ஒரு கிளாசிக் தன்மை கொண்டது போல இருந்தது, என்னடா ஒரு நாவல் அளவுக்கு உண்டான விஷயத்தை சிறுகதையில் போட்டு படிக்க வைத்து கொல்றாரே னு தோன்றியது ! எவ்வளவு நல்ல படைப்பாக இருந்தாலும் அதை மற்றவற்றிலிருந்து ஒரு படி மேலே கொண்டு செல்வது நிராதரவானவனுக்காக,  குற்றமற்றவனுக்காக,  அநீதியில் சிக்கியவனுக்காக  நியாயம் காண முயலும் குரல்தான்.  மறவோம் அப்படியான ஒரு சிறுகதை !

ம்ருத்யோ மா கதையின் தலைப்பிற்கான அர்த்தத்தையும் தேடினேன் ! சுவையை உணர அதை தொட்டு ஒரு துளி எடுத்து நாக்கில் வைத்து அறிவது போல, இன்னொருவரின் கொடுந்துயரை,  தவிப்பை, சில மணித்துளி அதற்கு இணையான தவிப்பின் மூலம் அறியும் படியிலான கதை.  ஜெர்மானிய வதை முகாமில் இருந்து வந்த ஒருவரின் முகாம் கால தவிப்பை பற்றி,  அது உருவாக்கும் மன பாதிப்பை, மன மயக்கத்தை அறிய உதவும் கதை.  வதைமுகாமில் இருந்து வந்தவரின் மகனிடம் மன்னிப்பு கேற்கும் மனமும்,  சூழலை கண்டு தயங்கும் குணமும் இருக்கும்.  இது தந்தையிடம் இருந்து அவனுக்கு வருவது,  இது கதை சூழலில் அழகாக பொருந்தி வந்து விரியும்.

எனக்கு ஏன் இந்த சிறுகதைகள் பிடித்திருக்கின்றன என்று யோசிக்கும் அவை உண்மையை எந்த பூச்சும் இல்லாமல் யதார்த்தத்தை சொல்கின்றன எப்பதால்தான்.  அந்த மணியம் செல்வன் அப்படியான ஒரு கதை, இந்த முன்னாள் காதலியை அவள் மனதை எப்படியும் மாற்றி சொல்லி முடித்திருக்கலாம், ஆனால் அவர்கள் எண்ணங்கள், முக்கியத்துவங்கள் எப்படியானது என்ற யதார்த்தம் ஒன்று உண்டல்ல, அதை அப்படியே கொண்டுவந்து கதையை முடிக்கிறார் ! நிறைய கதைகளை சாதாரண யதார்த்தமா என்ன நடந்து முடிந்திருக்குமோ அந்த இடத்தில் கொண்டு வந்து முடிக்கிறார்.  அவைகள் சரியா தவறா என்பது வேறு விஷயம்,  மனித மனம் அப்படிதான் செயல்பட்டியிருக்கும் என்பதும் உண்மை. இதை எழுதும் போது கதை முடிவில் எதிரிலிருப்பவரின் மன உச்சத்தை,  மன நிம்மதியை காலி செய்யும் (மற்ற எதை பற்றியும் யோசித்தாத) மனம் கொண்ட ஒருவரை,  அதன் வழியாக பரவசம் அடையும் ஒருவரை பல கதைகளின் கண்டு கொள்ள முடிகிறது 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *