ஆயிரம் காந்திகள் – நூல் வாசிப்பனுபவம் – பகுதி 1

சுனீல் கிருஷ்ணன் எழுதிய  “ஆயிரம் காந்திகள்” எனும் நூல் காந்திய தரிசனங்களை தங்கள் வாழ்வியல் செயல்பாடுகளாக கொண்டு வாழ்ந்த, வாழ்கின்ற ஆளுமைகளை பற்றி விரிவாக பேசுகிறது. அதன் வழியாக காந்திய சிந்தனைகளை ஆழமும் விரிவும் கொண்டு முன்வைக்கும் நூல்.  இந்த நூலில் பேசபடும் மூன்று ஆளுமைகள் (ஜெ.சி. குமரப்பா, சுந்தர்லால் பகுகுணா மற்றும் லாரி பேக்கர் ) பற்றிய என் புரிதல்களை இக்கட்டுரையில் தொகுத்துள்ளேன், அடுத்த பாகத்தில் இந்நூலில் இருக்கும் பிற ஆளுமைகள் பற்றியும், மது ஏற்படுத்தும் சிக்கல்கள் சார்ந்த என் புரிதல்களை எழுத உள்ளேன்.

1. ஜே. சி. குமரப்பா:

குமரப்பா பற்றி இந்த நூலில் மூன்று கட்டுரைகள் இருக்கின்றன. ஒன்று அவரது வரலாறு மற்றும் கொள்கைகள் சார்ந்த சுருக்கமான வரலாறு. தனிமனிதன் பற்றிய குமரப்பாவின் சிந்தனை, இன்னொன்று அவரது பொருளியல் நோக்கு சார்ந்த  விரிவான அலசல்.எனக்கு தனிமனிதன் சார்ந்த கட்டுரை முக்கியமான தெளிவுகளை அளித்தது. மேற்கு தனிமனிதனின் சுதந்திரம் பற்றி பேசுகிறது என்றால் இவர் தனிமனிதனின் தார்மீக சமூக/ உலக கடமைகள் சார்ந்து முன்வைத்து செல்கிறார். அதாவது சமூகம் என்பது தனி மனிதர்களின் தொகுப்பு, சமூகம் சிறந்ததாகவும், மேம்பட்டதாகவும், இயற்கைக்கு தீங்கிழைக்காததாகவும் இருக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு தனி மனிதனும் அவ்வாறு இருக்க வேண்டும் என்கிறார், தனிமனிதர்கள் மாறும் போது சமூகமும் மாறி விடும் என்கிறார். ஒரு அழகான உவமையை முன்வைக்கிறார், பேராழி வட்டம் போல, தனிமனிதனை சுற்றி முதல் வட்டம் அவன் குடும்பம், அடுத்த வட்டம் அவனைச் சுற்றி இருக்கும் சமூகம் வட்டம் அதன் , பின் அவன் கிராமம், பிறகு தேசம் , எல்லையாக புவி. இதில் மேலான நன்மைகளுக்காக தனி மனிதன் சமூகத்தில் கரைந்து கொள்கிறான், சமூகம் கிராமத்திருக்காக கரைந்து கொள்கிறது, இப்படி ஒவ்வொரு வட்டமும் அடுத்து தன்னை சுற்றி இருக்கும் வட்டத்திற்காக தன்னை கரைத்து கொள்கிறது, முடிவில் அது உலக நன்மையில் முடிகிறது.

மேற்கின் தனிமனித சுதந்திரம் என்பது தனது நன்மைக்காக உலகை, உலகின் நன்மையை பற்றிய பொறுப்பை பொருட்படுத்துவதில்லை, ஆனால் தனிமனிதன் பற்றி இவரது கோட்பாடு அத்தகைய பொருட்படுத்துதலயே முக்கியமாக முன்வைக்கிறது. உதாரணனமாக கார் ஓட்டுவது சுதந்திரம் என்றால் அது அளிக்கும் தீமையான நச்சு புகை சார்ந்த பிழையை அவன் பொறுப்பேற்க வேண்டும், நச்சு புகை தராத, சூழலுக்கு தீங்கிழைக்காத வழியை நோக்கி செல்வதே குமரப்பாவின் தனிமனித நோக்காக இருக்கும்.

குமரப்பாவின் காந்திய பொருளியல் நோக்கு சார்ந்த நீள்கட்டுரை எனக்கு முக்கியமான திறப்புகளை அளித்தது. நான் ஒரு உற்பத்தி பொருளின் மதிப்பு என்பது அந்த பொருளின் தரம் சார்ந்த ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அந்த பொருளின் மதிப்பில் அது எவ்வாறு செய்யப்பட்டது என்பதோ, யார் செய்தார்கள் என்பதோ உள்ளடங்க கூடாது என்று எண்ணினேன். அந்த பொருளின் மதிப்பு அந்த பொருளின் தரத்திற்குள் இருப்பது மட்டுமே சரியான மதிப்பீடு என்று இதுவரை எண்ணினேன். உதாரணத்திற்கு இரண்டு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று தன் தரத்தை முன்வைத்து சந்தையில் போட்டி இடுகிறது, இன்னொரு பொருள் அந்த சந்தையின் போட்டியில் இருக்கிறது, அதில் தன் பொருளின் தரம் சார்ந்த மதிப்பீட்டை வைப்பதற்கு பதிலாக தன் தயாரிப்பின் பின்பான அதில் உற்பத்தியில் ஈடுபடுபவருக்கு கிடைக்கும் நன்மை, மற்றும் அது உற்பத்தி செய்யப்படும் உருக்க( உணர்ச்சிகர ) சூழல் எல்லாம் முன்வைக்கிறது என்றால் அது மிக தவறானது என்று நினைத்தேன், ஒரு மாதிரியான இரைஞ்சுதல் என்று எண்ணினேன், இப்படியான வழி மதிப்பற்றது, இழிவானது என்று எண்ணினேன், கவுரவுமும், சுயமதிப்பும் கொண்ட ஒருவர் தன் உற்பத்தி பொருளின் மதிப்பையே சந்தையின் போட்டியில் முன்வைப்பாரே தவிர தன் பின்னணியை விற்பனைக்கான இறைஞ்சுதலாக வைக்க மாட்டார் என்று எண்ணினேன். இந்த கட்டுரை என்னிடமிருந்த இந்த பிழையான பார்வையை அழித்தது. ஒரு உற்பத்தி பொருள் என்பது வெறும் அதன் தரத்தோடு நின்று விடுவதில்லை, அந்த பொருள் உருவாக்கத்தினால் ஏற்படும் சூழியல் மாறுபாட்டையும் உள்ளடக்கியது. உதாரணமாக பெரிய உற்பத்திசாலை வழியாக வரும் உற்பத்தி பொருள் எனில் அதன் மூலப்பொருள் என்பது இயற்கையிலிருந்து அளவுக்கு அதிகமாக உறிஞ்ச பட்டதாக இருக்கும், ஏனெனில் பெரிய உற்பத்திசாலை என்பது மனித சக்தி அல்ல எந்திர சக்தி, இந்த எந்திர சக்தி என்பது கட்டுக்குள் நிற்கும் ஒன்றல்ல. இந்த பெரிய உற்பத்திசாலையுடன் ஒரு கிராம பொருளியல் உற்பத்தி பொருளுடன் ஒப்பீடுவோம், இங்கு உற்பத்திக்கான சக்தி என்பது மனித சக்திதான், மனித சக்தி என்பது எல்லைக்குட்பட்டது, எனவே இதனால் இயற்கையில் இருந்து அதிகம் உறிஞ்ச முடியாது, இந்த இயலாமை என்பது இயற்கையின் நலனுக்கு, இயற்கை கெடாமல் நீண்ட காலம் இருப்பதற்கு உகந்த ஒன்று.  கிராம பொருளியலின் இயலாமை என்பது இந்த கிராம பொருளியலின் உற்பத்தி பொருளை, பெரிய உற்பத்திபொருளை விட மதிப்பு மிக்கது ஆக்குகிறது. அதாவது இது பொருளின் மதிப்பு சார்ந்து அல்ல, அது தாண்டிய விளைவுகள் மதிப்பை சார்ந்து உருவான ஒன்று.  ஒரு பொருளின் மதிப்பு என்பது அது எந்த அளவு இயற்கையில் இருந்து குறைவாக எடுக்கப் படுகிறதோ, இயற்கையை கெடுக்காமல் இருக்கிறதோ,  இயற்கையின் இயல்பான போக்கிற்கு ஒத்து போகிறதோ அது நல்ல பொருள் என்றும், ஒரு பொருளின் மதிப்பு முதன்மையாக இதனைக் கொண்டே மதிப்பிட வேண்டும் என்றும் சொல்கிறார், இந்த விதத்தில் ஒரு பொருளை அணுகினால், இந்த வரிசையில் கிராம பொருளியல் மற்றும் மனித உழைப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட மூலபொருட்கள் கொண்ட உற்பத்தி பொருட்கள் மற்றும் மனித சக்தியினால் உற்பத்தி செய்யப் படும் பொருட்கள் மற்றும் அதிக உற்பத்தியை அளிக்க திராணியற்ற குறுந்தொழில்கள் போன்றவை பெரிய உற்பத்தி தொழிற்சாலைகளின் உற்பத்தி பொருட்களை விட மதிப்பு உடையதாக ஆகின்றன.

குமரப்பாவின் மற்றொரு முக்கியமான அவதானமாக  அன்றாட வாழ்க்கையில் ஆன்மீகம் அகலும் போது மனிதன் வெறுமைக்குள் வீழ்கிறான் என்பது இருக்கிறது. அதாவது ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் இயங்க ஆன்மிகம் அவனுக்கு மன பலத்தை, வாழ்க்கைக் கொண்டாட்டங்களை (விழா, இன்னபிற ) அளிக்கிறது, நெறி பிறழாத வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது, நிம்மதியை அளிக்கிறது என்கிறார் (அல்லது நான் அவ்வாறு புரிந்து கொண்டேன் ). அன்றாட வாழ்க்கையில் ஆன்மிகம் வழியாக கிடைக்கும் இந்த வாய்ப்புகள், துணைகள், கொண்டாட்டங்கள் இல்லாமல் ஆகும்போது அவன் வெறுமைக்குள் சென்று விடுகிறான். அதீத சடங்கு சார்ந்த மூட நம்பிக்கைகளுக்குள் செல்லாத அதேசமயம் ஆன்ம வலுவை, துணையை நிம்மதியை அளிக்கும் ஆன்மிகம் மனிதனுக்கு அவசியம் என்கிறார். எந்திரம் மூலமான தொழில் உற்பத்தியில் ஈடுபடும் மனிதனுக்கு பொருளை உருவாக்குவதால் கிடைக்கும் இன்பம் / திருப்தி இல்லாமல் ஆகிறது எனும் ஒரு விவாதம் உண்டு, இளம் மார்க்ஸ் இதைப் பற்றி பேசி இருக்கிறார் . குமரப்பா சமூக சூழலில் வைத்து மனிதனின் மனநிலையை, அவனுக்கான தேவையை ஆராய்கிறார் என்றால் இளம் மார்க்ஸ் உற்பத்தியில் ஈடுபடும் மனிதனின் தேவையை, அவன் இழப்பதை ஆராய்கிறார். இரண்டு வகையான  சிந்தனைகளுமே மனிதனின் மீதான அக்கறையினால் உருவானவைகள்.  எஸ்.என். நாகராஜன் ஒருபடி மேலே சென்று மார்க்சியத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்க முயற்சிக்கிறார், அவரின் வைணவ நோக்கும் மார்க்சியமும் சேர்த்து முன்வைக்கும் பார்வை இவ்வகையிலானதுதான்.

ஒருவர் தனக்கு அனுபவமில்லாத ஒன்றை மதிப்பிடும் போது அதை சரியானதோ என்று சந்தேகிப்பேன், குமரப்பா கிராம பொருளியல் சார்ந்து சொல்லும் போது அது அவர் மேற்கை, தொழிபுரட்சியின் சாத்தியங்களை, நன்மைகளை உணராத, அடைய முடியாத விரக்தியினால் உருவான எதிர்ப்பாக இருக்கலாம் என்று எண்ண முடியும், ஏனெனில் மண்ணின்மைந்தன் மாதிரியான பல போக்குகள் அப்படியான மனப்போக்கில் விளைந்தவை. ஆனால் குமரப்பா லண்டனில் படித்தவர், பின்பு அங்கு நான்காண்டு காலம் பணியாற்றியவர், பின் இந்தியா வந்து ஒரு ஆங்கில கம்பெனியில் பணியாற்றியவர்,  தானே ஒரு நிறுவனம் துவங்கியவர், அதன் பின் அமெரிக்கா சென்று கற்றவர். மேலும் அவரது பொருளியல் சிந்தனைகளுக்கு பின்புலமாக அவரது கணக்கவியல் படிப்பும் வணிக நிர்வாகவியல் படிப்பும் இருக்கின்றன, வெறும் கிராம பொருளியல் சார்ந்த கண்மூடித்தனமான பக்தர் அல்ல அவர், பெரிய தொழிற்சலைகள், அதன் பின்னணி, சந்தை, பொருளியல் சாத்தியங்கள் பற்றிய ஞானம் கொண்டவர், இரண்டு தரப்பையும் அறிந்து அதில் சிறந்த தரப்பு என கிராம பொருளியல் சார்ந்த ஆதரவு தளத்தில் வந்தவர். இந்தியா முழுதும் அலைந்து கிராம பொருளியல் சார்ந்து கண்டறிந்தவர். இப்படியான அனுபவ பின்புலம் கொண்ட ஒருவர் முன்வைக்கும் போது அதை முழு மனதுடன் நம்மால் ஏற்க முடிகிறது.

எனக்கு குமரப்பாவிடம் பிடித்த இன்னொரு விஷயம் ஆவது குணாதிசியம்,முன்பே அறிவிக்காமல் வந்தார் என்பதால் காந்தியை காண மறுக்கிறார், தான் செய்து கொண்டிருக்கும் பணி கெடும் என்கிறார், முடித்த பிறகு நானே வந்து பார்க்கிறேன் என்கிறார். செலவு கணக்குகள் பார்க்கும் போது காந்திக்கு கூட சலுகை அளிக்க மறுக்கிறார், ஒருவருக்கு அளிக்கப்படும் சலுகை முன்மாதிரியாக அமைந்து அனைத்தையும் குலைத்து விடும் என்கிறார். எந்நிலையிலும் சமரசம் செய்து கொள்ள மறுக்கிறார். இதை எழுதும்போது பிடிவாதம் என்பது ஒரு முக்கிய காந்திய குணம் என்று தோன்றுகிறது!

குமரப்பாவின் பல அவதானிப்புகள் மிக முக்கியமானவைகளாக தோன்றுகின்றன, வெறும் பொருளியல் நோக்கிலான சித்தாந்தம் விரைவில் வீழ்ந்துவிடும் என்கிறார், இதை படித்த போது சோவியத் ரஷ்ய உடைவு மனதில் வந்து போனது. ஆனால் மார்க்ஸ்யத்தை குமரப்பா எதிர்க்க வில்லை, அதிகாரமற்ற மார்க்சியம் நல்லது. மார்க்சியம் வெறும் உற்பத்தி நோக்கில் அல்லாமல் இயற்கை, மனித நலன்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என சொல்கிறார் என்று எண்ணுகிறேன், ஏனெனில் ரஸிய பொருள் உற்பத்தி நோக்கை சரியில்லை என்றவர் சீனாவின் விவசாய உற்பத்தியை ஆதரிக்கிறார். மனிதனின் தேவைகள் அத்யாவசிய தேவைகள் (உணவு ) நிறைவேறுவதுதான் பிரதானம் என்கிறார். விவசாயம் அதை கொடுத்து விடுகிறது, அது தாண்டி பெரும் அளவிலான தொழிற்சாலை உற்பத்தி முறைகளை அவர் ஏற்க வில்லை. இந்திய பசுமை புரட்சியை ஏற்கிறார், இதில் சூழியல் கெடுதல் இல்லை என்பதால். இவர் பொருளியல் முறைகள் என ஐந்து முறைகளை வகுக்கிறார், ஓட்டுண்ணி பொருளியல், சூறையாடும் பொருளியல், தன்முனைவு பொருளியல், ஒருங்கிணைவு பொருளியல், சேவை பொருளியல் என. ஒவ்வொன்றும் பற்றியும் அவர் அளிக்கும் உவமைகளும் விளக்கங்களும் படு ஸ்வாரஷ்யமானவை, தெளிவுகள் அளிப்பவை!

குமரப்பா அளிக்கும் இன்னொரு முக்கிய அவதானம்  மற்ற உயிரினங்கள் தாண்டி மனிதனுக்குள் இருக்கும் வித்யாசம், அதன் வழியான பொறுப்பு என்பது. மிருகங்கள் தங்கள் உள்ளுணர்வு அளிக்கும் பாதையில் இருந்து விலகும் திறன் இல்லாதவை என்பதால் அவை இயற்கைக்கு தீங்கு அளிக்கத்தாவை, இயற்கை அளித்த பாதையில் மட்டும் செல்பவை என்கிறார், ஆனால் மனிதனுக்கு மேலதிகமாக சிந்திக்கும் ஆற்றல் இருப்பதால் இயற்கை அளித்த வழியிலிருந்து விலகி செல்கிறான் என்கிறார், ஆனால் அப்படி விலகி சென்றாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்கிறார், இயற்கை அதை இழுத்து  சரிசெய்து கொள்ளும், இயற்கை தன்னை தக்கவைத்துக் கொள்ள கருணையற்றும் இரக்கமற்றும் நடந்து கொள்ளும், எனவே அதனுடன் மோதல் கூடாது என்கிறார், சுனாமி, சென்ற ஆண்டுகளில் வந்த புயல்காற்று அளித்த சேதாரங்களை யோசித்தால் இவர் சொல்ல வருவது எளிதில் புரியும்.

2.சுந்தர்லால் பகுகுணா :

ஆயிரம் காந்திகள் நூலின் துவக்கத்தில் வரும் காந்தியர் சுந்தர்லால் பகுகுணா. 13 வயதிலேயே அகிம்சை போராட்டங்களுக்குள் வந்து விடுகிறார், தன் 94 ம் வயதில் இறக்கிறார், 79 வருட கள அனுபவம்! எனக்கு இவர் பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது கிடைத்த முதல் மகிழ்ச்சி இவர் குடிக்கு எதிராக போராடி இருக்கிறார், பாதிக்க பட்ட பெண்களை கொண்டு அவர்களுக்காக அமைப்பை உருவாக்கி இருக்கிறார் என்பது, மக்கள், முக்கியமாக பெண்கள், குடும்பம் பாதிக்க படும் மிக முக்கியமான இடர்களின் காரணங்களில் ஒன்று இந்த மது போதை.  குடும்ப தலைவன் போதையில் விழுந்தால் அதன் பாதிப்பை மொத்த குடும்பமும் அனுபவிக்கும். குடி தவறு என்பதை மத நம்பிக்கை  எனும் காரணம் அல்லாது பாதிப்புகள் வழியாக உணர்ந்து மதுவை எதிர்க்கும் பெரும்பாலானோர் காந்திய சிந்தனையில் வந்தவர்களாகவே இருக்கின்றனர், இவர்கள் நேரடி அனுபவங்களால் உணர்ந்த ஒன்றையே எதிர்க்கவோ, ஆதரிக்கவோ செய்கிறார்களே தவிர மதம் போன்ற நம்பிக்கை வழியான காரணங்களினால் அல்ல, பகுகுணா தெஹ்ரி அணைக்கு எதிராக முன்வைக்கும் வாதங்கள்  அறிவுபூர்வமாகவே இருக்கின்றன. இது காந்தியம் சார்ந்த முக்கியமான நல்ல அம்சம், கண்மூடித்தமான நம்பிக்கைகளால் அல்ல,  சரியான காரணங்களை கொண்டு காந்திய போராட்டங்கள் முன்வைக்க படுகிறது. அந்த காரணங்கள் முன்வைக்கப்படும் போது அது சரியானது என்றோ, தவறான பார்வை என்றோ நம்மால் விவாதிக்க, ஏற்க மறுக்க முடியும். ஆனால் நம்பிக்கை கொண்டு ஒரு விஷயம் முன்வைக்க படும் எனில் அங்கு விவாதத்திற்கான வெளியே இல்லை.

பகுகுணா திருமணத்திற்கு சம்மதிக்க மனைவியிடம் சமூக பணி ஆற்ற வேண்டும் என்பதை நிபந்தனையாக வைக்கிறார், இதை படித்த போது புன்னகைத்தேன், காந்தியின் / காந்தியனின் பிரத்யேக குணம் இது!

பகுகுணா பங்கேற்ற சிப்கோ இயக்கம் கிட்டத்தட்ட வெற்றி அடைந்த போராட்டம், ஆனால் தெஹ்ரி அணைக்கு எதிரான போராட்டத்தில் தோற்கிறார். இந்த கட்டுரையில் இதற்கான காரணம் சொல்லப்படுகிறது, சாதாரண மக்கள் மரம் வெட்டப்பட்டதால் நேரடியாக பாதிக்க படுகிறார்கள், சூழ்நிலை மாற்றம், காடு அழிவால் மேய்ச்சல் பாதிப்பு, நீர் இன்மை என. இந்த பாதிப்புகள் இவர்களை போராட வைக்கின்றன. ஆனால் அணை கட்டுவதால் உருவாகும் பாதிப்பு என்பதை மக்கள் உணர வில்லை, எனவே போராட்டத்திற்கு பெருவாரியான மக்கள் ஆதரவு இல்லை. காந்தி இந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று எண்ணினேன், ஊடகம் வழியாக அணை கட்டுவதன் பாதிப்புகள் பற்றி தொடர்ந்து பேசி இருப்பார், எழுதி இருப்பார், மக்கள் ஆதரவை திரட்ட எல்லா வழிகளிலும் முயன்றிருப்பார், பிறகு மக்களை திரட்டி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார், அதில் முன்னின்று இருப்பார், இந்த போராட்டம் சார்ந்த நோக்கை ஒரு படிமம் வழியாக மக்களிடம் கடத்தி இருப்பார், அப்படியான ஒரு படிமத்தை கண்டடைந்து அதை தொடர்ந்து முன்வைத்திருப்பார் ( உப்பு படிமம் போன்று ).

நிஜத்தில் ஜனநாயக யுகத்தில் அதிகாரத்தை மண்டியிட செய்வது மக்கள் ஆதரவு எனும் விஷயம், எந்த அளவு மக்கள் ஆதரவு தருகிறார்களோ அந்த அளவு அதிகாரம் இறங்கி வரும், செவி சாய்க்கும். மக்களை திரட்ட, அதிகாரத்திடம் நிமிர்வுடன் உரையாட எனும் தளத்தில்தான் உண்மை எனும் அம்சம் உடனிருக்கும். ஒருவேளை அதிர்ஷ்டம் இருக்கும் பட்சத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உண்மையை ஏற்பவராக,சரி என உணர்ந்தால் ஒப்புக்கொள்ள கூடியவராக இருந்தால் அப்போது உண்மை எனும் அம்சம் பலன் தரும், உதாரணமாக இந்திரா சுற்றுசூழல் சார்ந்து விழிப்புணர்வு பெற்று சுற்றுசூழல் நலன் சார்ந்த சட்டங்களை இயற்றியதை சொல்லலாம்.

பகுகுணா உண்மை இருக்கும் பட்சத்தில் அது வெல்லும் என்று நம்புகிறார், அதனால்தான் பாகிரதி நதிக்கரையில் தனியாக தன் மனைவியுடன் சேர்ந்து பல வருடங்கள் சோர்வடையாமல் போராடுகிறார். இதை போன்ற ஒன்றுதான் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டமும், இன்னொரு உதாரணம் கங்கை மாசுப்பாட்டை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் துறவியின் போராட்டமும். மக்கள் ஆதரவும்,பொது கவனமும் எல்லாம் சேர்ந்து இருக்கும்போதுதான் இந்த போராட்டத்திற்கு வலு இருக்கும். அரசு பொருட்படுத்தும். ஆனால் காந்தியர்கள் என் நோக்கில் தற்கொலைப்படையாளிகள் போன்றவர்கள், கடைசி துளி வரை போராடுபவர்கள், அவர்களின் ஆன்மபலம் என்பது தங்கள் போராட்டத்தில் இருக்கும் உண்மைதான், நியாயம்தான். இதிலிருந்து கொஞ்சம் விலகி யதார்த்தம் உணர்ந்து போராடும் காந்தியர் என்பது காந்திதான், வெறும் நியாயத்தை மட்டும் வைத்து கொண்டு அதிகாரத்திடம் செல்லாமல் அதனோடு மக்கள் ஆதரவு என்பதையும் இணைத்து செல்கிறார்,  மக்கள் ஆதரவை பெற பல வழிகளிலும் முயற்சிக்கிறார். இப்படி அடையப்படும் மக்கள் ஆதரவுடன் நியாயம் நிற்கும் போது அதிகாரம் பணிந்து ஆகவேண்டும். காந்தியின் வெற்றி சூத்திரம் இதுதான். மக்களை விழிப்புணர்வு அடைய செய்வது. அவர்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பது. அதன் வழியாக அவர்களிடம் தார்மீகத்தை உண்டுபண்ணுவது. இறுதியில் வென்றெடுப்பது.

பகுகுணா முன்வைக்கும் தீர்வுகள் எல்லாம் சிறப்பானதாக இருக்கின்றன. மூன்று கருதுகோள்கள் மிகவும் தனித்துவமானவை. அவை, சிக்கனம், சுற்றுசூழலை அழிக்காமல் இருக்க மாற்று பொருட்களை /விஷயங்களை கண்டடைதல் ( உதாரணமாக மரத்திற்கு மாற்று கண்டடைவதன் வழியாக மரம் வெட்டுவதை தவிர்த்தல் என ) மூன்றாவது காடு வளர்ப்பு, அதன் மூலம் மனிதனின் அத்யாவசிய தேவை பூர்த்தியாவது தாண்டி காடு மனிதனை, அவனது குணத்தை மேம்படுத்துகிறது என்று சொல்லி அந்த காரணங்களை அடுக்குகிறார்.

மேலும் மனிதனின் அதீத நுகர்வை காரணங்கள் கொண்டு எச்சரிக்கிறார், அந்நோக்கில் ஒரு முக்கிய அவதானிப்பாக  ஆசையையும், தேவையையும் பிரித்தறிய வேண்டும் என முன்வைக்கிறார்.

3.லாரி பேக்கர் :

குமரப்பா காந்திய பொருளியல் சிந்தனைகளின் தத்துவ பின்புலங்களை அளித்தவர் (theary )என்று வகைப்படுத்தினால் லாரி பேக்கரை காந்திய பொருளியல் சிந்தனைகளின் செயல்பாட்டு வடிவம் ( practical )  அளித்தவர் என்று வகைப்படுத்தலாம்.  கட்டிடத் துறையில் காந்திய பொருளியல் சாத்தியங்களை கண்முன் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியவர்.

ஏழைகள், வறியவர்கள் உட்பட எல்லோருக்குமான சாத்தியம் என்பது மண் வழியாக கட்டப்படும் கட்டிடம்தான் என்றார். மண் எங்கும் இருப்பது, விலைஅற்றது. எனவே மண் பயன்படுத்தும் போது கட்டிட செலவு மிகமிக குறையும். மேலும் சிமின்ட் மற்றும் இரும்பு இரண்டையும் கட்டிடம் அமைக்க பயன்படுத்துவத்தை தவிர்க்கிறார். என் தொழில் சார்ந்த உதாரணம் வழியாக இதன் பின்புலத்தை சொல்கிறேன். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட இரண்டு கொரானா அலைகளுக்கு முன்பு இரும்பு பைப்களின் விலை கிலோ 60 ரூபாய் என்று இருந்தது, இப்போது கிலோ 90ரூபாய் வரை உயர்ந்து விட்டது. இரும்பை மூல பொருளாக கொண்டு இயங்கும் என் பணியில் இப்போது உற்பத்தி பொருளின் விலையே இதனால் மாறி விட்டது. இந்த இரும்பின் விலை மீதான கட்டுப்பாடு என்பது என் கையில் இல்லை, எந்த விதத்திலும் இரும்பின் விலையை கூட்டவோ குறைக்கவோ என்னால் முடியாது. இந்த விலையை ஒட்டிதான் என் உற்பத்தி பொருளின் விலையை நிர்ணயிக்க முடியும். இரும்பை வாங்காமல் தவிர்ப்பது அல்லது குறைப்பது என்பது முடியாது. விலையை நிர்ணயம் செய்பவர்கள் இரும்பு உற்பத்தியாளர்கள், பெரும் தொழிற்சாலை முதலாளிகள். கிட்டத்தட்ட சிமின்ட்டும் இதே மாதிரியான மைய உற்பத்தி முறைதான். விலை கட்டுப்பாடு நம்மிடம் இல்லை பேக்கரின் தொழில்முறை என்பது மைய கட்டுப்பாட்டில் இல்லாத நம்மிடம் இருக்கும், எளிதில் கிடைக்கும், அருகில் இருக்கும் பொருட்கள் கொண்டு உருவாக்கப்படும் தொழில் முறை, காந்திய தொழில்முறை என்பது இதுதான். மைய உற்பத்திக்கு இணையான இவரது கட்டிடங்கள் இன்றும் தரத்துடன் நிற்கின்றன.

இன்று ஒரு பெரிய கட்டிட பொறியாளர் குறைந்தது 4 இன்ஜினியரிங் படித்த இளைஞர்களை உதவியாளர்களாக வைத்து இருப்பார், ஒரு பெரிய அலுவலகம் இருக்கும். ஆனால் ஏராளமான கட்டிடங்களை கட்டிய பேக்கர், உதவியாளர் என்று யாரையும் உடன் வைத்து கொள்ள வில்லை, அவரது அலுவலகம் என்பது அவருடைய தோள்பை மட்டுமே, அதில் வரைவதற்கான உபகரணங்கள் மட்டுமே இருந்தன. கட்டிடம் கட்டும் இடத்திலேயே கட்டிடதிற்க்கான வரைப்படங்களை வரைந்து கொத்தனார்களுக்கு தருகிறார், மேலும் இவருக்கு கொத்தனார் பணியும், தச்சு பணியும் தெரியும். காந்தியம் வீண்செலவுகளை தவிர்ப்பதை முக்கியமான ஒரு நோக்காக கொண்டிருக்கும் ஒன்று. இதை பேக்கரின் செயல்பாட்டில் அப்படியே காண முடிகிறது. காந்தியம் தாண்டி பேக்கரின் தனித்துவம் என்பது இதனுள் அழகுணர்வை சேர்த்தது என்று சொல்லலாம். தன்னளவில் ஒவ்வொரு பொருளும் அழகானவை, அதன் அழகை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதன் மூலம் அந்த அழகை இழக்காமல் கட்டிடத்திற்கு அழகூட்ட முடியும் என்று காட்டுகிறார். மேலும் இயற்கை அளிக்கும் கொடையை பயன்படும் முறையை தன் உருவாக்க முறையாகக் கொண்டிருக்கிறார், வெளிச்சம், காற்று என இரண்டும் தாராளமாக கிடைக்குமாறு கட்டிடத்தை வடிவமைக்கிறார், இதன் வழியாக நமக்கான தேவை செலவின்றி நிறைவேறுகிறது, சூழல் மாசுப்பாட்டையும் நாம் குறைக்கிறோம்.

மைய உற்பத்தி முறையை என்னளவில் முற்றிலும் விலக்க முடியாதும் என்றும் எண்ணுகிறேன், உதாரணம் கொரானா தடுப்பூசி, அதன் மைய உற்பத்தி முறை, அவ்வாறு உருவாக்க பட்டு பரந்த அளவில் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. நோய்தடுப்பில் இது பெரிய பங்காற்றுகிறது, இது மாதிரியான தளங்களில் மைய உற்பத்தி தலங்களின் பங்கை நாம் மறுக்க முடியாது.

சுனீல் எழுதிய பேக்கர் சார்ந்த கட்டுரைகளில் அவரது கவித்துவமான வாழ்க்கை வரலாறை அறிய முடிகிறது, அவரது மருத்துவ பணிகள், மனைவி பற்றி, அவர்களுக்கு இடையிலான அன்பு, காதல் பற்றி, இவர்களது தன்னலமற்ற சமூக சேவை பற்றி, பேக்கரின் குணஇயல்புகள், தனித்துவங்கள் பற்றி என நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.

இம்மூவர் பற்றி யோசிக்கும் போது இவர்களின் பொது இயல்புகளாக பணவேட்கை அற்ற, பொருளீட்டும் மனநிலையற்ற மன அமைப்பு கொண்டவர்கள், இயல்பாகவே காந்திய மனநிலை கொண்டவர்கள் என்றே தோன்றுகிறது.

*

ஆயிரம் காந்திகள் – சுனில் கிருஷ்ணன்

வெளியீடு: நன்னூல் பதிப்பகம், மணலி, திருத்துறைப்பூண்டி 610203.

விலை ரூ. 120

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *