ஆயிரம் காந்திகள் – நூல் வாசிப்பனுபவம் – பகுதி 2

பாபா ஆம்தே:

காந்தியத்தின் மகத்தான அம்சம் என ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்ட, அடித்தள மக்களின் மீது இருக்கும் உண்மையான அக்கறை என்று சொல்லலாம். அரசியல் லாபங்களுக்காகவோ அல்லது வேறு எந்த ஆதாயங்களுக்காகவோ இல்லாமல் உண்மையான அக்கறையுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலெழ வேண்டும் எனும் எண்ணம் காந்தியத்தில் காண முடிகிறது. பல காந்தியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நிஜமான அக்கறையுடன் தங்களை முழுதாக அர்ப்பணித்து பணியாற்றினர். சுனிலின்  ஆயிரம் காந்திகள் நூலில் அவ்வாறு வெளிப்படும் ஓர் ஆளுமை பாபா ஆம்தே. பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்த இவர் அதையெல்லாம் துறந்து அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்து பணியாற்றியவர், அவர்கள் நலன்களுக்காக கூட நின்றார், அவர்களின் பணியில் சேர்ந்து ஈடுபட்டார், மேலும் பழங்குடி மக்களுக்காக சேவையாற்றினார்,  அக்காலத்தில் தீவிர நோயாக இருந்த தொழுநோயாளிகளுக்கு உதவிட காப்பகங்களை உருவாக்கினார், மேலும் அவர்களின் வாழ்வாதாரதிற்காக நிலம் எடுத்து அவர்களை விவசாயத்தில் ஈடுபட வைத்து,  வருமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். பாபா ஒருவருக்கு சேவை அளிப்பதை விட அவருக்கு உழைக்கும் வாய்ப்பை, உழைப்பை கற்றுத்தருவது சிறந்தது என்று கருதினார்.அதை நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார், ஆனந்தவனம் அப்படி தொழுநோய் கண்டு மீண்ட நபர்களின் உழைப்பில் உருவான ஒன்று, அங்கு கூட்டுறவு போன்று ஒன்றாக விவசாயத்தில் இறங்கி உற்பத்தியை சந்தைப்படுத்தி வெற்றி கணடார் .

உண்மையில் ஆம்தே போன்று ஒடுக்கபட்ட மக்களுக்காக போராடிய பல காந்தியர்களை ஆதாரங்களுடன் எடுத்து காட்ட இயலும், லக்ஷ்மண ஐயரின் ஒடுக்க ப்பட்ட மக்களுக்கான சேவை எல்லாம் மகத்தானது, வினோபாவின் பூமிதான திட்டமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிலம் அடைவது என்பதை நோக்கமாக கொண்டதுதான். காந்தி தன்னிடம் வந்த பலரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற பணித்தார், காந்தியின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அன்பும், நலன்விளைவும் மாசற்றது. ஆனால் இப்போதைய தலித் செயல்பாட்டாளர்கள் பலரும்  காந்தியின், காந்தியர்களின் சேவையை ஒப்புக்கொள்வதில்லை, சமீபத்தில் வாசித்த ஒரு நூலில் சுதந்திர போராட்ட காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயர்களை யாரும் பொருட்படுத்த வில்லை, அவர்களின் நோக்கம் நாட்டின் சுதந்திரத்தில் மட்டுமே இருந்தது என்றிருந்தது, ஏன் இவர்கள் காந்தியத்தின் பங்களிப்பை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர் என்பது எனக்கு புதிராகவே இருக்கிறது.

பாபா ஆம்தே பற்றிய சுனீலின் கட்டுரையில் இரண்டு முக்கியமான குறிப்புகள் இருக்கின்றன. ஒன்று பாபா ஆம்தேவை காந்தி பனை வெல்லத்தை பிரபலபடுத்தி மக்களிடம் கொண்டு செல்லுமாறு சொல்கிறார், அதில் அவரை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளச் சொல்கிறார், ஆனால் ஆம்தே அதில் ஈடுபட வில்லை, ஆனால் பின்னாளில் அதற்காக வருந்துகிறார், ஈடுபட்டிருந்தால் சர்க்கரைக்கு மாற்றாக பனைவெல்லத்தை உருவாக்கி எடுத்திருக்கலாம், கிராம மக்களுக்கு பெரிய தொழில்வாய்ப்ப்பாக அமைந்திருக்கும், சர்க்கரை லாபி இருந்திருக்காது, நிலத்தடி நீர் மட்டம் இறங்கி இருக்காது என்றெல்லாம் ஆம்தே அங்கலாய்க்கிறார்! இதில் எனக்கு காந்தியின் தொலைநோக்கு பார்வை, கிராம மக்களுக்கு எது சரியான விதத்தில் பயன்தரும், எது இயற்கையை கெடுக்காது என்பது சார்ந்த புரிதல்கள், முன்னுணர்தல்கள் எல்லாம் பிரமிப்பைத் தருகிறது.

இன்னொரு குறிப்பு ஆம்தே தொழுநோயாளிக்கு சேவையாற்ற முடிவெடுக்கும் தருணம் / நிகழ்வு. அந்த சமயத்தில் அவர் ஒடுக்கப்பட்ட, மலம் அள்ளும் பணி செய்யும் மக்களுக்காக பணியாற்ற அவர்களுடன் சேர்ந்து உழைக்கிறார், அப்படி அவர் மலம் அள்ளி சென்று கொண்டிருந்த போது துணியில்லாமல் உடல் அழுகி புழுக்கள் நெளிந்து கொண்டிருந்த சாலையில் கிடந்த ஒரு தொழு நோயாளியைப் பார்க்கிறார், அதிர்ச்சி அடைந்து  பயந்து வீட்டிற்கு ஓடுகிறார், தைரியசாலியான தான் இப்படி பயந்து நடுங்குவது சார்ந்து கடும் அதிர்ச்சி கொள்கிறார், பிறகு  அதற்காக நாணம் கொண்டு திரும்ப வந்து அந்த தொழு நோயாளிக்கு உதவுகிறார், அந்த நோயாளியின் பெயர் துளசி ராம். இதன் பிறகு தொழுநோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்து அவர்களுக்கு காப்பகங்கள், வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள் என அமைத்து தந்து பெரும்பணி ஆற்றுகிறார். ஒரு காட்சி ஒருவரை எந்த அளவு மாற்றி, எந்த அளவு பணியாற்ற வைக்கிறது என்பதை நினைக்க ஆச்சிரியம் ஏற்படுகிறது. ஆனால் இப்படி ஒருவர் மனம் மாறி பணியாற்ற அவர் மகத்தான மனம் கொண்டவராக இருக்க வேண்டும், இந்நூலின் காணும் ஒவ்வொரு காந்திய மாந்தரும் அத்தகைய மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்!

முன்பு வேறொரு இடத்தில் காந்தியத்தின் நன்மை என்பதில் ஒன்றாக எல்லா தரப்பையும் ஏற்பவர் காந்தி என்று எழுதி இருந்தேன், எந்த அரசியல் சார்பாளரும் அவர் நேர்மையானராக இருந்தால், அவரால் காந்தியை மறுக்க முடியாது. காந்தியோ, காந்தியர்களோ எல்லோருக்கும் இடமளிக்கும் இந்தியாவையே முன்வைத்தனர், மேலும் இந்திய ஒற்றுமை என்பது காந்தியர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது, ஆம்தே அப்படி இந்திய ஒற்றுமைக்காக இந்தியா முழுதிலும் மாபெரும் நடைபயணம் மேற்கொண்டார். Knit india எனும் சொல்லாடலை பயன்படுத்தினார். காந்தியத்தை மற்ற தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ள முடிவதும், காந்தியர்கள் எல்லா மக்களையும் ஒற்றுமையின் கீழ் கொண்டு வர முடிகின்ற இயல்பும் காந்தியத்தின் மிக விசேஷமான இயல்பு! யாரையும் எதிர் தரப்பாக காணாத ஒரு இயல்புதான் இப்படி எல்லாவித தரப்புகளையும், மக்களையும் ஈர்க்க வைக்கிறது, எதிர்க்க முடியாமல் ஆக்குகிறது!

ஆம்தே மேலும் பல சாதனைகள் செய்தவர், மேலும் விதவிதமான ஆளுமைகள் அவரில் இருந்தன, கவிஞரும் கூட , இன்னூல் ஆம்தே பற்றிய முழுமையான தெளிவான சித்திரத்தை அளிக்கிறது.

ஜர்ணா தாரா சௌத்ரி:

இப்போதைய பங்களாதேஷில் ( முந்திய வங்கத்தில் ) வாழ்ந்தவர், நவகாளி கலவர நிலத்தில் பிறந்தவர், அந்த கலவர சமயத்தில் இவருக்கு 8 வயது, கலவரத்தை நேரில் பார்த்தவர், அந்த ப்பகுதி காந்தி, காந்தியர்களால்( சாரு சௌத்ரி ) ஈர்க்கப்பட்டு காந்தியவாதி ஆகிறார், பெண்கல்விக்கு, அடித்தட்டு மக்களுக்கு மகத்தான பணிகளை செய்கிறார் . சமீபத்தில் 2019 ல் தான் மறைந்தார். இவர் பற்றிய விரிவான சித்திரத்தை இந்த நூல் அளிக்கிறது.

நவகாளி கலவரத்தை தடுக்க ச்சென்ற காந்தி அங்கு சென்று அமைதியை உருவாக்கிய பின் அங்கு இருந்த காந்தியர்களை சூழ்நிலையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்புகிறார்,இலவசமாக காந்திக்கு அளிக்கப்பட்ட 2500 ஏக்கர் நிலத்தை கொண்டு ஒரு காந்திய சேவை அமைப்பும் அங்கு உருவாக்க படுகிறது, சாரு சௌத்ரிக்கு பிறகு ஜர்ணா மறையும் வரை அவரே அந்த அமைப்பை வழிநடத்துகிறார், ஒரு கல்வி நிலையம் மற்றும் பல மக்கள் சேவைகள் என அந்த அமைப்பு மிக சிறந்த சேவையை அளிக்கிறது.

உண்மையில் நூலின் இருந்த இந்த பகுதி எனக்கு பதட்டம் அளித்தது. தானமாக பெறப்பட்ட 2500 ஏக்கர் நிலம் ( காந்திக்கு வழங்கியவர் ஹேமந்த் குமார் கோஷ் ) ஆக்கிரமிக்க பட்டு கடைசியில் போராடி 25 ஏக்கர்தான் மீட்க படுகிறது, வங்க பிரிவினைக்கு பிறகு தனி பங்களாதேஷ் உருவாகும் வரை காந்தியர்கள் ஒடுக்கப்படுகின்றனர், சாரு சௌத்ரி பங்களாதேஷ் உருவாகும் வரை ஜெயிலில் இருந்திருக்கிறார், பிறகே விடுதலை ஆகிறார். அஜித்குமார் தே, ஜீபன் தே. சாஹா, தேபேந்திர நாராயண சர்க்கார், மோகன் சட்டோபாத்யாய போன்ற முக்கிய காந்தியவாதிகள் கொல்லப்படுகின்றனர், காந்தியவாதிகள் இந்தியாவிற்கு உளவு சொல்கின்றனர் என்று ஒடுக்கப் படுகின்றனர்.  காந்திய சேவை அமைப்பு நடத்தும் கல்வி நிலையதிற்கு எந்த அரசு நிதி உதவியும் இல்லை.  இதையெல்லாம் படித்த போது அதிர்ச்சி அடைந்தேன் , இத்தகைய சூழலுக்குள் நின்று காந்தியவாதியாக, காந்திய சேவையாளராக பணியாற்றிய ஜர்ணா மீது பெரும் மதிப்பு உருவாகிறது.

ஜர்ணா கல்வி கற்காதவர், அதனாலேயே தன்னைப் போல மற்ற பெண்கள் இருந்து விடக் கூடாது என்றெண்ணி காந்தியர்களை, காந்தியத்தை அறியும் முன்னரே தன் 17 வயதிலேயே தன் சகோதரியுடன் இணைந்து பாடசாலையை ஆரம்பிக்கிறார். ஒரு அபாரமான நாவலில் வருவது போன்ற சோக தருணம் உண்டு!  இவர்களின் சேவையை அறிந்து இந்த பாடசாலைக்கு அரசு உதவி அளிக்க அரசு அலுவலர்கள்  வருகிறார்கள், அப்போது அங்கு வேலையில்லாது இருக்கும் ஒரு பட்டதாரி புகுந்து இந்த பெண்கள் படிக்காதவர்கள், எனக்கு அந்த வாய்ப்பை அளியுங்கள் என்று அந்த அரசு வாய்ப்பை பிடுங்கிக் கொள்கிறார்! இந்த சகோதரிகள் அதிர்ச்சி கொள்கிறார்கள், பிறகும் தொடர்ந்து சிலவருடங்கள் நடத்திய பிறகு நடத்த நிதி வசதி இல்லாமலாகி பாடசாலையை கைவிடுகிறார்கள். அதன்பின்னர் சாரு சௌத்ரியை கண்டு தங்களை காந்திய சேவை மையத்துடன் இணைத்து கொள்கிறார்கள்.

இவர்கள் தாண்டி இந்த நூலில் வரும் பிற ஆளுமைகள் வானதி வல்லபி சகோதரிகள், சசி பெருமாள்,டாக்டர். பி எம் ஹெக்டே, டாக்டர். ஜீவானந்தம் மற்றும் மலாலா.

சசி பெருமாள் மற்றும் பிரான்சிஸ் ஆசாத் காந்தி கட்டுரை குடியின் பிரச்சனைகளை தீவிரமாகப் பேசுகிறது, மேலும் அதை குறைக்கும் வழிகளை முன்வைக்கிறது. குடிக்கு கிடைத்த சமூக அந்தஸ்தை கடுமையாக விமர்சிக்கிறது. மிக முக்கியமாக, பரவலாக எல்லோரிடமும் சென்றடைய வேண்டிய கட்டுரை இது. சுனில் கிருஷ்ணனை ஏன் மிக முக்கியமான காந்தியர் என்று நினைக்கிறேன் என்றால் இவரால் சமூக இயல்பை, ஏதார்த்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது, எது சாத்தியமான வழி என்று காட்ட முடிகிறது. முழு மதுத் தடையை இவர் இந்த கட்டுரையில் முன்வைக்க வில்லை, இப்போதைக்கு சாத்தியமானதை முன்வைக்கிறார், நாகர்ப்புறங்களில் 2 லட்சம் மக்களுக்கு ஒரு டாஸ்மாக் கடை போதும் என்பது முக்கியமான முன்வைப்பு, மேலும் டாஸ்மாக் கடைகளை குறைப்பது, தூரத்தில் அமைப்பது போன்ற திட்டங்களை மட்டுமே முன்வைக்கிறார்.  சசி பெருமாள் சொன்னதாக சொன்னதை மேலும் விரித்து டாஸ்மாக் தரும் வருமானத்தை விட அது உருவாக்கும் இழப்புகள்தான் அளவில் அதிகம் என்பதை குடிகாரர்களின் உடல் கெடுதல், வேலை செய்யும் திறனை இழத்தல் போன்ற காரணிகளை முன்வைத்து விளக்குகிறார். மதவாதிகள் முன்வைக்கும் விவாதமற்ற கண்மூடித்தனமான எதிர்ப்பிற்கு பதிலாக இதன் குறைகளை விவாதத்திற்கு உட்படுத்தி ஆராய்கிறார், தீர்வுகளை முன்வைக்கிறார்.

வானதி வல்லபி சகோதரிகள் மற்றும் மலாலா ஆகியோர்களை எந்த விதத்தில் காந்தியர்கள் என்று சுனில் வகைப்படுத்துகிறார் என்பதில் எனக்கு ஆச்சிரியம் இருந்தது. மலாலாவின் அடக்குமுறைக்கு எதிராக நின்ற துணிவு மற்றும் பெண்கல்வி மீதான அக்கறை என இதையே சுனில் காந்தியமாக காண்கிறாரோ என்று எண்ணுகிறேன், இப்போது யோசிக்கும் போது அடிப்படையில் பிறர் நலன், அனைவருக்குமான சுதந்திர வெளி, நேர்மை, உண்மையை, சத்தியத்தை முன்வைத்தல் போன்றவையெல்லாம் காந்தியப் பண்புகள் என்பதாக கருதிக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

வானதி, வல்லபி இருவரிடமும் ,  தங்களைப் போன்று உடல் நலப்பாதிப்பில் இருந்த மற்றவர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம், உழைப்பு  எல்லாம் பிரம்மிப்பை உருவாக்குகிறது, லஞ்சம் தர மாட்டோம் எனும் துணிவும் அசரடிக்கிறது. இவர்களுக்கான ஊக்க சக்தி, முன்னுதாரணம் எனும் அளவில் காந்தி நிற்கிறார், இந்த நோக்கில் காணும் போது இவர்களும் காந்திகள் தான்.

ஹெக்டே கட்டுரையின் மொழிபெயர்ப்பு டாக்டர்.ஜீவானந்தம், இந்த கட்டுரைக்கு விமர்சன கட்டுரை சுனில். இந்த மூவரும் மருத்துவர்கள்!! இந்த கட்டுரை மருத்துவ துறையில் இருக்கும் ஊழல்களை பேசுகிறது, எப்படி நோய் என்பது பணம் பண்ண உதவும் தொழிலாக இருக்கிறது, அதற்காக என்ன வெல்லாம் செய்கிறார்கள் என்பதை விரிவாகப் பேசுகிறது. மருத்துவத்திற்கு எந்த அளவு போதும் என்ற எல்லையை சொல்லி, பணம் பறிப்புக்காக எந்த அளவு எல்லையைமீறிச் செல்கிறார்கள் என்பதை எல்லாம் விரிவாக பேசுகிறது.  இந்த கட்டுரையில் மருந்துகளின் அடிமையாக நோயாளி மாறுவது எனும் வரி இருக்கிறது. அதை என் சூழலுக்குள், எனக்குத் தெரிந்தவர்களுக்குள் போட்டு பார்த்த போது மலைப்பு உருவானது, தினசரி தொடர்ந்து மருந்து உண்ணும் நபர்கள் எனக்கு தெரிந்தவர்களே அநேகர் உண்டு, மருந்து நிறுவனங்களின் நோக்கில் இவர்கள் நிரந்தர வாடிக்கையாளர்கள், நிரந்தர வருமானம்! நிரந்தர வருமானத்தை அதிகரிப்பது என்பது நிலையான சொத்துக்களை வாங்கி குவிப்பதை போன்ற ஒன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *