முதற்கனல் – வாசிப்பனுபவம்

முதற்கனல் நாவல் வெண்முரசு நாவல் வரிசையின் முதல் நூல், ஆனால் தனியாகவும் இந்நூலை காண இயலும், ரசிக்க இயலும், அப்படியான ஒரு முயற்சி இந்த கட்டுரை

முதற்கனல் நாவலில் வரும் மாந்தர்கள், நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் காரண இழையாக காமத்தை காண முடிகிறது. மேலும் இந்த பாரத கதை ஒட்டி கூடவே நாகங்களின் உலகங்களும் அவை இந்த பாரத கதையின் பாத்திரங்களை இயக்குகின்றன என்றும் சொல்கிறது. இவைகள் தாண்டி இந்த நாவலின் சட்டகம் என்பதும் கூட நாகமும் அது குறிப்புணர்த்தும் இச்சையும் அகங்காரமும் தான். இது இருக்கும் வரைதான் மண்ணில் வண்ணங்கள் இருக்கும் என்று நாவல் சொல்கிறது. அந்த வண்ணங்கள் என இந்த பாரத கதையின் துவக்கமும், பாரத போரின் துவக்க காரணமும் இந்நாவலில் நிகழ்கிறது.

ஜனமேஜயன் போர் மற்றும் அழிவிற்கான காரணம் என்பது மனிதனின் இச்சையே எனும் நிலைப்பாட்டில் வந்து, அக்குணம், அக்குணத்தை மனிதரில் ஏற்றும் நாகங்களை அளிக்க மாபெரும் யாகம் நடத்துகிறார், நாககுல சிறுவன் ஆஸ்திகன் அதை தடுத்து வாழ்வின்,  உலகின் வண்ணங்கள், எழுச்சிகள், வீரியங்கள் என்பது இச்சையின் விளைவுதான் என்கிறார், பிறகு வியாசர் வந்து ஆஸ்திகனின் கூற்று உண்மை என்று சொல்கிறார், முக்குனங்களின் ஆடலே வாழ்க்கை, ஒன்று பிரிதொன்றை நிறைவு செய்கிறது என்கிறது, உலகின் தோற்றமே, இயங்கு விசையே அப்படியானது என்கிறார். பிறகு நாகங்கள் யாகத்தின் விளைவால் அழிவின் விளிம்பில் இருந்து மீண்டும் வளர்ந்து பரவுகின்றன.வியாசர் ஆஸ்திகன் சொன்னதை காவியம் வழியாக பாத்திரங்கள் வழியாக சொல்ல துவங்குவதாக நாவல் துவங்குகிறது, வியாசர் காவியத்தை தன்னிலிருந்து துவங்குகிறார்.

மேலே நான் சொன்ன கதை சுருக்கத்திற்கான காரணம் எனக்கு நாவல் படித்த பிறகு இந்த கதை மாந்தர்களின் வாழ்வில் ஊடுருவி செல்லும் திரி என்பது காமமும் அகங்காரமும் என்று தோன்றியதுதான். அம்பை கொற்றவையாவது தன்னை, பெண்மையை மறுப்பது என்பதால்தான் என்பதும் பீஷ்மர் அம்பையை மறுப்பது காம மறுப்பு என்பதால் என்பதும் அடிப்படையில் காமத்தின் காரணமான ஈர்ப்பும் மறுப்பும்தான். விசித்திரியவீரியன் இறக்க, சித்ராங்கதன் இறக்க, எல்லாம் காமம் சார்ந்த ஏதோ ஓர் விளைவுதான். இங்கு கண்ணகி கொற்றவை ரூபம் கொள்வது அநீதியால் தன் கணவன் இறந்தான் என்பதால், அதன் ஆழத்தில் அநீதி எனும் அம்சம் இருக்கிறது, அதற்கு கொற்றவை ரூபம் கொள்வது என்பதில் இருக்கும் நியாயம் புரிந்து கொள்ள என்னால் முடிகிறது, ஆனால் அம்பை விஷயத்தில் பீஷ்மர் துரோகம் செய்தவர் அல்லது அநீதி செய்தவர் என்று சொல்ல முடியாது, அம்பையின் அன்பை ஏற்க மறுத்தார், அந்த தருணத்தில் கணிந்து நிற்கும், ஏற்பை முன்வைக்கும் பெண்ணின் மனதை இழிவு இயல்பாக அந்த தருணத்தில் வெளிப்படுத்தினார், வெறும் அந்த தருண மனநிலை மட்டும்தான் அது, அதற்கு முன்போ, பின்போ அப்படியானவர் அல்ல பீஷ்மர், அந்த ஒரு தருணம் அம்பையை கொற்றவை ஆக்கியது, பெறும் அழிவிற்கான முதல் காரணத்தை, முதல் கணலை அளித்தது. இந்த ஒரு காரணம் இவ்வளவு பெரிய தாக்கத்தை அளிக்கிறது என்பது எனக்கு ஆச்சிரியம், மனிதனுள் இருக்கும் இச்சையே இந்த காரியங்களை நிகழ்ந்துகிறது, வாழ்வின், மனதரின் குணங்கள், வெளிப்பாடுகள் என்பது இந்த இச்சையால்தான் கட்டமைக்க படுகின்றன என இந்நாவல் காட்டுவதாக புரிந்து கொள்கிறேன்,  இச்சைகள் உச்சம் கொள்ளும் போது போர் தவிர்க்க முடியாதது ஆகிறது, ஆஸ்திகன் நோக்கில் அதுவும் வாழ்வின் ஒரு வண்ணம்தான்… இவ்வாறுதான் இந்நாவலை இப்போதைக்கு புரிந்து வைத்து கொண்டிருக்கிறேன், என் புரிதல்கள் பிழையாகவும் இருக்கலாம் 🙂

இந்நாவலின் மகத்தான தருணம் என்பது விசித்திரியவீரியன் இறப்பிற்கு தயாராவதை சொல்லலாம், எவ்வளவு இயல்பாக ஏற்று கொள்கிறார் பார்க்கிறார் என்பதை வாசிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அகத்தியர் இறப்பை எதிர்கொள்ள கற்று கொடுப்பதும் ( மனதிற்கு ) அதை விசித்திரிய வீரியன் உள்வாங்குவதும் மகத்தான இடங்கள்.  இந்நாவலின் ஆசிரியர் ஒவ்வொரு பாத்திரமும் அப்பாத்திரத்தின் பின்னணியும் பேச்சிலும் கூட எவ்வளவு அழகாக கொண்டு நிறுத்தும் ஆற்றல் பிரமிப்பானது, இதிலேயே அகத்தியர் விசித்திரியவீரியனிடம் முடிவில் ”அஞ்சனமேனி அரிவை ஓர் பாகத்தன் கழலையே எண்ணிக்கொண்டிரு” என்பார், திருமந்திரத்தில் வரும் வரி இது. போலவே இன்னொரு இடத்தில் தமிழ்நிலத்தை சேர்ந்த பெருஞ்சாத்தன் வருவார். அவர் எழுதியதாக சொன்ன இருநூல்களின் பெயர்களை இணையத்தில் தேடி பார்த்தேன், பெயர் மட்டும் அரியப்படும் நூல் கிடைக்காத பழந்தமிழ் நூலின் பெயர் இது, இன்னூல் எழுதிய கவி இந்நாவலில் வருகிறார் வியாசனின் சமகாலத்தவராக! தங்கள் மொழியின் இருக்கும் காவியம் பற்றி பேசுகிறார், கடல்கொண்ட( மூழ்கிய)நிலத்தை அவை பாடுகின்றனவாக சொல்கிறார்.   இந்நாவல் ஆசிரியர் இதன் வழியாக தமிழ் மொழியின் தமிழ் எழுத்தின் காலத்தை வியாசன் காலம் வரை கொண்டு செல்கிறார்!

எனக்கு நாவலில் பிடித்த இன்னொரு பாத்திரம் சிகண்டி, இலக்கிற்கான தன்னை முழுதாக அர்ப்பணிப்பது, அதற்காக தன்னை மாற்றி கொள்வது எனும் படிமமாக இனி இந்நூலில் வரும் சிகண்டிதான் இருப்பார்! தன் அன்னைக்காக, அன்னையின் நீதிக்காக தன்னை அளித்தல், எந்த அளவு என்றால் தன் இயல்பு தன்மையான பெண்மையை அழித்து ஆணாதல் எனும் நிலை அளவிற்கு, அது தவிர வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை, எனக்கு அம்பையின் நீதி கோரல் என்பதை விட சிகண்டி தன் அன்னைக்காக நீதியை கோருதல் என்பது நெருக்கமாக இருக்கிறது, சிகண்டியில் தன்னை நிறுத்தி பார்க்கும் மையம் இல்லை, முற்றிலும் தன்னலமற்று இன்னொருவருக்கான நீதியை கோருவது என்று இருக்கிறது, இது அம்பையின் கணலை விட மகத்தானது, நியாயம் மிக்கது. சிகண்டியில் வராகியின் இயல்பினை அற்புதமாக ஏற்றி இருக்கிறார் ஆசிரியர், பிறப்பில் தொடங்கி எங்கும் சிகண்டியில் வராகி இருக்கிறார் குணமாக, வெறியாக!

சத்யவதி பாத்திரத்தில் எனக்கு பிடித்த அம்சம் என்பது வழக்கமான அம்மாக்கள் மாதிரி அல்லாமல் குரூரத்தை வெளிப்படையாக காட்டும் இயல்பு, அம்பிகையுடன் கூடல் கொண்டால் தான் இறப்பேன் என்று விசித்திரிய வீரியன் சொல்லும் போது அதை சற்றும் பொருட்படுத்தாமல் இருப்பது, சமகாலத்தை வைத்து யோசிக்கும் போது இப்படியான ஒரு சாத்தியம் ஒரு அம்மாவிற்கு கிடைத்திருந்தால் மகனையும் மகளையும் பழிவாங்க காலம் முழுதும் இதையே சொல்லி ஓட்டியிருப்பாள், கூடாமல் ஆக்கி இருப்பாள்! ஆனால் இங்கு சத்யவதி கிட்டத்தட்ட செத்தாலும் பரவா இல்லை, செல் என்று சொல்கிறாள். அவளுக்கு தேவை அவன் வழியாக இந்த பரம்பரை தொடர்ச்சி, அதை விசித்திரவீரியனிடம் நேரடியாகவே சொல்கிறாள். விசித்திரியவீரியனுக்கோ சத்யவதிக்கோ இறப்பு என்பது அஞ்ச கூடிய ஒன்றல்ல, விசித்திரியவீரியன் தயங்குவது இரு பெண்களும் மங்களம் இல்லாமல் போவது பற்றிதான், ஆனால் சத்யவதி அதை தாண்டி தனி மனிதர்களை பொருட்படுத்தாது நிகழ்வை, வரும் காலத்தை, காலத்தின் போக்கை மட்டுமே பார்க்கிறார், அதில் எதை நிகழத்தினால் சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை நிகழ்த்துகிறார்!.

இந்நாவலில் வரும் துணை கதைகள், எல்லாம் மிக வசீகரிக்கின்றன, முக்கியமாக பீஸ்மரின் அவரின் கதையையே அவரென்று அறியாமல் பகடியாக சொல்லும் சொல்லும் சூதன் வரும் இடம், அபாரம். பீஸ்மரில் தன்னுள் இருக்கும் அன்னை, சகோதரர்கள் சார்ந்த துயரத்தை இந்த சூதன் பகடி கதை வழியாக அகற்றுக்கிறார், பீஷ்மர் துயரம் நீக்கி நெஞ்சம் நிறைந்து சிரிக்கிறார். ஒரு கேலிகதை என்பது அது என்ன நிகழ்த்துகிறது என்பதை பொறுத்தே மதிப்படைகிறது, இங்கு பீஸ்மரை அந்த கேலிகதை மலர வைக்கிறது, துயரத்தை நீக்குகிறது!

தந்தை -மகன், அன்னை- மகன் இந்த இரண்டு அம்சங்களும் இந்த நாவலில் பல தருணங்கள் வழியாக உளவியல் சார்ந்து மிக விரிவாக காட்டுகிறது.

சித்ராங்கதன் -சத்யவதி : இதில் சித்ராங்கதன் இன்னொரு சித்ராங்கதன் எனும் கந்தர்வன் வழியாக இறக்கிறான், இந்த கந்தர்வன் சத்யவதியின் இளம்வயதில் கனவில் வந்த கந்தர்வன், இப்படியான ஒருவனைதான் தன் இணையனாக ஏங்கி கொண்டிருந்தாள்! இதன் இன்னொரு தலைகீழ் வடிவத்தை சத்தியவதியிடம் அவள் தோழியான சியாமையே சொல்கிறாள். அதில் அன்னையை தந்தையின் ஆணையின் காரணமாக கொள்கிறார் பரசுராமன், அந்த அன்னையிடம் நிழலாக கடந்த கந்தர்வன் பெயர் பரசுராமன் பெயரை ஒட்டிய பரசுவஜன்!

நீதி எது எனும் விவாதம் இந்த நாவலில் நிறைய இடங்களில் நிகழ்கிறது. கருணை கொண்ட செயல் ஏதும் நீதியானதுதான் என்று ஒரு இடத்தில் சொல்லப்பட்டது, இந்த கோணம் சரியானது என்று தோன்றியது.

நிறைய ஆச்சிரியங்கள் எனக்கு இந்நாவல் பீஸ்மரின் நெஞ்சை பிளக்க விரும்பிய அம்பை இறந்த பிறகு, சிகண்டி வெறி கொண்டு அலையும் காலத்தில் ஒரு கிராம பெண்ணாக வந்து அந்த கிராமத்திற்கு வழிப்போக்காக வரும் பீஸ்மரை என்னை மணந்து கொள்ளுங்கள், உங்களுக்கு ஆபத்து இருக்கிறது, உங்களோடு நான் இருந்தால் உங்களை என்னால் காக்க முடியும் என்று தோன்றுகிறது என்று சொல்கிறார்!

இன்னொன்று கங்கர்கள் யாரிடமும் சேராமல் மலை மீது இருக்கும் போது ஓர் குலமாக இருப்பவர்கள், பின்பு அஸ்தினபுரியுடன் இணைந்த பிறகு வணிக போக்குவரத்து என கொஞ்சம் வளரும் போது ஒரு குலம் இயல்பாக நான்கு வருணங்களாக பரிமணமிக்கிறது!

இந்த நாவலை இப்படி பலவற்றை பேச முடியும், முக்கியமாக நாவலில் வரும் கிளைகதைகள்,   தாட்சாயினி (சதி தேவி ), கார்த்தாயினி, மூன்று பருவ தேவதைகள் கதை, சந்திரனின் மூன்று கதைகள், இவை தாண்டி நாக சூத்தர்கள் சொல்லும் கதைகள் என.. மேலும் கவித்துவ எண்ணற்றவை இருக்கின்றன.

இந்த நாவலில் அடுத்தவற்காக தன்னை அளித்தல் பாத்திரங்கள் மிகுதி, பால்ஹிகன், பீஷ்மர், சிகண்டி என. இப்படி சுயநலமற்று இருப்பதால்தான் இவர்களை மிக பிடிக்கிறதோ என்று தோன்றுகிறது.

இந்த நாவலில் மிக பிடித்த இரு பாத்திரங்கள் யார் என என்னிடம் கேட்டால் இருவரை சொல்வேன் ஒன்று நிருதன், இன்னொருவர் ஸ்தானகர்!நிருதன் நாவலில் மிகச்சிறிய பாத்திரம், ஆனால் அம்பையை கொற்றவை ஆகும் முன்பே தேவியாக கண்டவர், அம்பையிடன் உங்களுக்கு அநீதி இழைத்தவர் முன்பு சங்கறுத்து சாகுகிறேன் என்று சொன்னவர், அம்பையை காண பித்தனாக காத்திருந்தவர், அம்பை தீக்குள் இறங்கிய போது துக்கம் தாளாமல் மனம் உடைந்தவர். ஒரு கதையின் மைய இழைக்குள் வரவே வாய்ப்பில்லாத ஒரு படகோட்டி, தன் செயலால் மைய கதாபாத்திரங்களை விட உயர்ந்து நிற்கிறார். இன்னொருவர் ஸ்தானகர், விசித்திரியவீரியனின் அமைச்சர், நண்பர். மிக உயர்ந்த பக்குவ மனமும் எதையும் அங்கதம் வழியாக அணுகும் இயல்பும் கொண்டவர், இவரை எது தனித்துவம் கொண்டவர் ஆக்குகிறது என்று பார்த்தால் தன்னை விசித்திரிய வீரியன்க்காக மட்டுமே முழுதாக அற்பணிக்கும், மற்ற யாரையும் தவிற்கும் இயல்பினால்தான், விசித்திரிய வீரியன் மறைந்த பிறகு உலக வாழ்க்கையை தவிர்த்து வனம் புகுகிறார். விசித்திரிய வீரியன் வீரனோ அல்லது பலசாலியோ அல்லது எல்லோரும் ஆராத்திக்கும் நாயகனோ அல்ல, ஒரு நோயாளி, ஆனால் அவரை நண்பராக, தன் தலைவனாக விரும்பி அவருக்காகவே மட்டும் வாழும், அந்த உறவையே மேலாக எண்ணும் இயல்பு ஸ்தானகரை மிக உயர்வான ஒருவராக காட்டுகிறது.

நாவலின் துவக்கமே நாக குல மானசா தேவியில் இருந்தான், அவள் தன் மகனுக்கு நாகம் வழியான பிரபஞ்ச தோற்றம் பற்றி சொல்கிறாள்.மேலும் இந்நாவல் முடிவு பகுதி மற்றும் பல இடங்களில் நாகம் சார்ந்த உலகங்கள் வருகின்றன, மொத்த பிரபஞ்சமுமே நாகங்களின் உலகங்களாக நாகங்களாக நாகர்களின் கதைகளில் இருக்கின்றன. நாகர் குல மனிதர்கள் நாகங்களுடன் மனிதர்கள் புணர்ந்து உருவானவர்கள் என்று வருகிறது. நாகங்களை காக்க நாகர்குல ஆஸ்திகன் வருகிறான், தட்ஸகன், வாசுகி, அன்னை கத்ரு என எண்ணற்ற நாககுல தெய்வங்கள், அனைகள், இவைகளின் உலகங்கள் இந்நாவலில் வருகின்றன, உண்மையில் என்னால் இவைகளை சரியாக உள்வாங்க இயலவில்லை, அந்த அளவு பிரமாண்ட உலகங்களாக இருக்கின்றன. இவைகளுக்கும் சத்ரியர்களுக்கும் தொடர் பகை இருப்பது போல, சத்ரியர்களை தொடர்ந்து நாகங்கள் நிலையில்லாமல் செய்கிறன போல இந்நாவலில் இருந்து புரிந்து கொள்கிறேன். இந்தியா முன்பு நாகாரகளின் நாடு, ஆதிக்குடியினர் நாகர்கள் என்று சொல்லப்படுவதைஎல்லாம் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்நாவலில் வரும் சத்ரிய நாக மோதலுக்கான காரணம் என்னவென யூகிக்க இயல வில்லை, மற்றபடி நாகங்களை இச்சை எனும் படிமமாக பார்க்கும் போது புரிந்து கொள்கிறேன், மாறாக அது தாண்டி நாகங்கள் ஏன் சத்ரியர்களை தொடர்கின்றன என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை, மேலதிக வாசிப்பில் அல்லது, அடுத்தடுத்த நாவல்கள் வாசிக்கும் போது எனக்கு அது புரிய வரும் என்று எண்ணுகிறேன்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *