மழைப்பாடல் – வாசிப்பனுபவம்

மழைப்பாடல் நாவலை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய எண்ணம் வெண்முரசு நாவல்களின் வடிவம் என்பது புராண வடிவிலான வரலாற்று நாவல் என்பதுதான் . பாரத போர் நிகழ்ந்த காலத்தை வரலாற்றில் வைத்து பார்க்கும் நோக்கம் கொண்டவை இந்நாவல்கள் என்று தோன்றியது . புராண வடிவம் எனினும் இந்த நாவலின் நாயகர்கள் , நிகழ் சூழல் எதுவும் மண்ணில் நிகழ்ந்த வரலாறாக, நிகழ சாத்தியமான வரலாறாக அதேசமயம் புராணத்தின் அமானுஷ்ய தன்மையை இழக்காமல் இந்நாவல்கள் நிகழ்த்தி காட்டுகிறது கூடவே இதிகாசத்தின், காவியத்தின் மென்மை குணங்களையும் கொண்டு மிக உச்ச இலக்கிய ( காவிய ) தருனங்களாக நாவல் இருக்கிறது. கூடவே ஒவ்வொரு விசயத்திலும் அந்த விசயத்திற்கு புராண பார்வையையும், யதார்த்த பார்வையையும் அடுத்தடுத்து அளித்தது கனவும், நனவும் என அமைந்துள்ளது.

பாரத நிலத்தில் ஒரு பெரிய பேரரசிற்கான கனவு தோன்றிய காலம், நிகழ்ந்த களம் என மழைப் பாடல் நாவலை சொல்லலாம்.

முதற்கனல் நாவலை விட இந்நாவல் யதார்த்த பார்வையில் இருக்க கூடிய நாவல் என்று சொல்லலாம், அம்பையின் கண்ணீர்தான் பேரழிவிற்க்கான முதல் கனல் என எண்ணுவது இந்த மண் அளித்த ஒரு லட்சிய வாத மனநிலையின் வெளிப்பாடு, பெண் கண்ணீர் விட்டால் அதற்கு காலம் பதிலளிக்கும், திருப்பி அடிக்கும் என எண்ணும் ஒருமனநிலை .

ஆனால் மழைப்பாடல் போரை யதார்த்த தளத்தில் நின்று அணுகுகிறது, போர் நல்லது என்கிறது, போரினால் பேரரசு உருவாகும், அது மக்களுக்கு நன்மை அளிக்கும் என்கிறது, எனவே போர் அவசியம் என்று நினைக்கிறது , போரினை உதிரமழை என கொண்டாடுகிறது. இந்த உதிரமழையை வரவேற்கும் பாடலாகத்தான் இந்த மழைப் பாடல் நாவல் அமைந்திருக்கிறது. இந்த உதிரமழையை, போரினை நிகழ்த்த போகிற பாண்டவர்களும், கௌரவர்களும் பிறக்கும் நிகழ்வை கொண்டதே இந்நாவல் .

கிட்டத்தட்ட இந்த நாவலை பாரத போரிற்க்கான ஊற்றுமுகத்தை காட்டும் நாவல் என்று சொல்லலாம். திருதராஷ்டிரன் தன் தம்பி விரும்புகிறான் என்ற போது அவன் விருப்பத்தை நிறைவேற்றுகிறான், விட்டு கொடுக்கிறான், ஆனால் பிறகான அந்த களத்தில் மருமகனுக்காக சகுனியும், மகனுக்காக குந்தியும் வந்து அமர்கிறார்கள் , இருவருமே பாரத வர்ஷத்தை ஆளும் கனவை கொண்டிருப்பவர்கள், பெரிய கனவினை கொண்டவர்கள். இவர்கள் இருவர் சார்ந்த சித்திரங்கள் நாவலில் மிக அழகாக மலர்ந்து வருகிறது .

குந்தி ஒரு இடையர் தலைவரின் மகள், ஆனால் அவளில் பாரத வர்சத்தின் சக்ரவர்த்தினி ஆகும் கனவு இருக்கிறது. அதற்காக அவளுக்கு வரும் வாய்ப்புகளை அவள் எவ்வாறு பயன்படுத்தி பாண்டுவின் மனைவியாக ஆகும் வரை அவள் வந்து சேர்ந்த பாதையை இந்நாவல் சுவாரஸ்யமாக பேசுகிறது. தன் மகன்கள் வழியாக அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள மைந்தர்களை பெற்று கொள்ளும் காலம் வரை வந்து நாவல் முடிகிறது .

சகுனி இயல்பிலேயே (இள)அரசன், அளவற்ற நிதி, வணிக வழிப்பாதை அளித்த சுங்க நிதி இருக்கிறது . பாரதத்தை ஆளும் வாய்ப்பு மட்டும்தான் தேவைப்படுகிறது, அது தமக்கையால் அமையும் சூழல் வருகிறது . தமக்கை பாரத சக்ரவர்த்தினி ஆவதை விரும்புகிறான், அது இயலாமல் ஆகும்போது அவள் மகன் வழியாக அந்த வேட்கையை அடைய அவள் மைந்தனுக்காக காத்திருக்கிறான், அம்மைந்தர்கள் பிறக்கிறார்கள்!

இந்நாவல் முன்வைக்கும் இன்னொரு விரிவான சித்திரம் என்பது உலகம் கடல் வணிகம் வழியாக வளர்ந்து நின்ற, உருவாகி வந்த காலம். கடல் கடந்த வணிகம், நாடுகள் கடந்த வணிகம் அளித்த சுங்கம் வழியான நிதி எல்லாம் சேர்ந்து சிறு நாடுகளை பேரரசாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது என்று கூட சொல்லலாம் , வணிகம் அளித்த உபரி நிதிதான் சௌபாலனை பெரிய கனவை நோக்கி செல்லும் சாத்தியத்தை உருவாக்கியது .

2

இந்த நாவல் இன்னொரு தளத்தில் நின்று இந்த மனிதர்களின் வாழ்வு என்பது ஆடல் என்கிறது, மனிதர்களுக்குள் மோதல்களை நிகழ்த்தி அம்மையும், அப்பனும் தங்களுக்குள் விளையாடி கொள்கிறார்கள், அந்த விளையாட்டின் சதுரங்க காய்கள்தான் தேவர்கள், மனிதர்கள் என சொல்கிறது . இந்த பாரத போரும் ஒரு ஆடல்தான் என இந்நாவல் சொல்ல வருவதாக நான் புரிந்து கொண்டேன், தேவர்கள் (இந்திரன், சூரியன் என…) மண்ணில் பிறந்து இந்த ஆடல்களை (மோதல்களை  நிகழ்த்தி கொள்கிறார்கள் என்கிறது .

இந்த நாவலில் வரும் பாத்திரங்களில் ஆடல் என்பதை நான் புரிந்து கொண்டது அம்பிகையும், அம்பாலிகையும் பாண்டு இறந்த சமயத்தில் மீண்டும் சேர்ந்து கொள்ளும் இடத்தில்தான், இதுவரை தங்களுக்குள் ஏதேதோ புகுந்து கொண்டு தங்களை எதிரெதிர் இடத்தில் நிறுத்தியது என்கிறாள் அம்பிகை, இதெல்லாம் மாயை இப்போது இவள் என் தங்கையாக இருப்பது மட்டுமே நிஜம், இவளுக்கு நான் மட்டுமே, எனக்கு இவள் மட்டுமே என்கிறார். ஒரு கனவில் இருந்து விழித்தெழுந்தவர்களாக அப்போது அவர்களை எண்ணிகொண்டேன். இந்த கனவுதான் சிவசக்தியின் ஆடல் போல, கூடவே இதை ஆடல் என்பதை முழுமையாக உணர்ந்தவளாக அம்பிகை, அம்பாலிகையுடன் சென்ற சத்யவதி  இருந்தாள், முன்பு தன்னிடம் இருந்த நோக்கம், கனவு, செயல்களை முற்றிலும் உதிர்த்து விட்டு நின்றது அவள் சத்யவதி எனும் பாத்திரத்தில் தான் ஏற்று நடித்த வேடம், அந்த வேடத்தில் எந்தந்த பணிகளை செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்தேன், அந்த வேடத்தில் நான் செய்ய வேண்டிய பணி முடிந்தது என்ற மனநிலைக்கு வந்திருந்தாள். இது இறைவனின் ஆடல் எனும் நாவலின் துவக்க பகுதி சொல்லும் சிவசக்தியின் விளையாடல் என்பதை ஞாபகபடுத்தியது.

3

சத்யவதி பாத்திரம் சார்ந்து இணையத்தில் இருந்த கதையை தேடினேன், அதில் உபரிசரன் என்ற மன்னனின் விந்து மீனில்  இறங்கி மீன் பெற்ற மகள் என சத்யவதியை சொல்கிறது. ஆனால் இந்த வெண்முரசு சத்யவதியை மீனவனின் மகளாக, மீனவகுல பெண்ணாக மட்டுமே காட்டுகிறது. இப்படி ஒவ்வொரு மாந்தர்களின் புராணப் பின்னனி நீக்கப்பட்டு அல்லது பின்னிற்கு தள்ளப்பட்டு முன்வைக்கப்படுகிறது. சத்யவதி சாதாரண மீனவப் பெண் என்றால் திருதராஷ்டிரன், பாண்டு உட்பட அடுத்தடுத்த சந்ததிகள் எல்லோரிலும் மீனவ குருதி இருக்கிறது .

புராண அம்சக் கதைகள்  மற்றும் முந்திய பிறப்பு கதைகள் வழியாக பிறப்பு அடிப்படையிலான உயர்வு கட்டமைக்க பட்டிருந்தது, வெண்முரசு அதை உடைக்கிறது, அப்படி உடைப்பதன் வழியாக பிறப்பு அடிப்படையிலான உயர்வு மனநிலையை உடைக்கிறது! வெண்முரசை எதிர்க்கும் சிலர் முன்வைக்கும் கருத்து என்பது புராணத் தன்மையை நீக்கி மாந்தர்களை வெண்முரசு தரையில் நிறுத்துகிறது என்பது, இப்படி செய்வதன் வழியாக கதை மாந்தர்களின் மேன்மையை கீழிறக்குகிறது என, ஆனால் சத்யவதி, பீஷ்மர், குந்தி போன்றவர்களின் புராணக் கதை  பின்னனிகளை நீக்கி பார்க்கும் போது இந்த காவியம் இன்னும் மேன்மை கொண்டதாக ஆவதையே நான் உணர்கிறேன், ஒரு சாதாரண மீனவப் பெண் அரசி ஆகிறாள், ஆகும் சாத்தியம் முன்பு இந்த மண்ணில் இருந்திருக்கிறது என்பது எத்தனை மேன்மைக்குரிய விசயம்!

4

இந்த நாவலில் வரும் பெண்களின் பாத்திர வடிவங்கள் மிக ஆர்வமூட்டுவன, அவ்வளவு விதவிதமான வாழ்கையை கொண்ட, வித விதமான எண்ணங்களை கொண்ட பெண்கள் இந்நாவலில் வருகிறார்கள். நான் பெண்களிடம் இல்லாத ஒரு பண்பு  பெருந்தன்மை என எண்ணுவேன், ஆனால் இதில் வரும் காந்தாரி தன்னை அவமதித்த (குதிரை சவுக்கு) மகத நாட்டை தனது பெருந்தன்மை குணத்தால் கடக்கிறாள், எனக்கு காந்தாரி சார்ந்த துவக்க பகுதிகளில் மிக உயர்ந்த தன்மை கொண்ட பாத்திரமாக தோன்றியது, அப்போதைய மனநிலை, திருமணத்திற்கு முடிவெடுக்கும் இடம், மகதத்தின் அவமதிப்பினை கடந்த இடம், பாலையில் சகோதரனுடன் குதிரைகளில் அலைந்தவாரே பேசிய இடங்களில் எல்லாம் இந்த காந்தாரியின் பாத்திரம் மிக உயர்வான நிலையில் இருந்தது என்று தோன்றியது, திருமணத்திற்கு பிறகு அஸ்தினாபுரி வந்த பின் அந்த பாத்திரம் கீழிறங்கியதாக உணர்ந்தேன். அதாவது அந்த பெருந்தன்மையை இழந்தவளாக, ஆனால் அடுத்தடுத்த நாவல்களில் காந்தாரி எவ்வாறு இருப்பாள் என்று தெரியவில்லை. இந்த நாவல் வாசித்த வரை இவ்வாறு எனக்கு தோன்றியது .

குந்தி பாத்திரம் கிட்டத்தட்ட சினிமா நாயகன் வேடம் போல, உறுதி, இரக்கமற்ற தன்மை என்ற ராவான ஒரு பாத்திரம், அவளுக்கு துவக்கத்திலேயே சக்ரவர்த்தினி ஆகும் கனவு இருந்தது, அப்படியாக ஆக அவள் உறுதியுடன் அதேசமயம் தெளிவும் நிதானமும் கொண்டு உறுதியான அடிகளுடன் நடந்து வருகிறாள் என்று தோன்றியது . போர் நிகழ குந்தியின் விட்டுகொடுக்காத இயல்பு ஒரு முக்கிய காரணம் .

இவர்கள் தாண்டி நிறைய பெண் பாத்திரங்கள் நாவலில் விதவிதமான வண்ணங்களில் வருகின்றனர். அம்பிகை, அம்பாலிகை தொடங்கி நிறைய பெண்கள், இவர்கள் தவிர இவர்களின் சியாமை, அனகை… போன்ற முதன்மை தோழிகள். இங்கு இருவரை மட்டும் சொல்லி இதை கடக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருத்தி குந்தியின் அன்னை மகிஷி, காட்டுப் பெண், மிக மிக வலுவான பெண், அதேசமயம் மிக மிக அமைதியான பெண்ணும் கூட, இவளது பாத்திரம் நாவலில் மிக சிறப்பாக வந்துள்ளது. இன்னொருத்தி விதுரனின் அன்னை சிவை, இவளும் துவக்கத்தில் மிக துடிப்பான ஒரு பாத்திரம், திருமணத்திற்கு பிறகு மிக ஒடுங்கி போன பாத்திரமாக நாவலில் ஆகி விடுகிறது, சித்தம் இழந்து விடுகிறாள். சாதாரண சூதப் பெண்ணாக இருந்தபோது அவளிடமிருந்த வண்ணம் அவள் அரசி நிலைக்கு வந்த பிறகு முற்றிலும் வடிந்து போய் விடுகிறது. அவள் இழந்தது என்ன என்பதை அவளது தோழியின் வாழ்வு வழியாக நாவல் சொல்கிறது, இவளுக்கும், சம்படைக்கும் அணங்கு பிடித்தது, பீடை பிடித்தது என்கிறார்கள், இவர்கள் தாங்கள் இழந்ததை உணர்கிறார்கள், அந்த உணர்தல் அவர்களை நிலைகுலைய செய்கிறது, அதுதான் இவர்களை சித்தம் இழக்க வைக்கிறது. விதுரன் அறைக்கு சென்று சிவை வீரிட்டு அழுவது அவள் இழந்தது என்ன என்பதை சொல்கிறது, அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் அவர்களின் மகன்கள் எனும் துணை இருந்ததது, அது அவர்களை மூழ்காமல் இருக்க வைத்தது, அந்த ஒரு பிடிப்பு அவர்களுக்கு மன துணையாக இருந்தது, சிவைக்கு அதுவும் இல்லாமல் ஆகியது . ஓரளவு நூறு நாற்காலிகள் காப்பனுடன் சிவையை ஒப்பிட்டு பார்க்க முடியும் என்று தோன்றுகிறது, அவன் அதிகாரி நிலைக்கு வந்தாலும் அவனை சுற்றியவர்கள் அவனை அவன் சாதி வழியாகவே பார்த்தார்கள், அந்த மதிப்பையே அளித்தார்கள், சிவைக்கும் அதுதான், அரசி நிலைக்கு வந்தாலும் கடைசி வரை சூத நிலையிலேயே பார்க்கப்பட்டாள்!

5

நாவலின் பிரதான இடங்கள் என்பது பாண்டவர்களின், கௌரவர்களின் பிறப்பு நிகழ்வுதான். மிக அழகான இடங்கள் அவை, புராணத் தன்மையையும் இழக்காமல் அதே சமயம் மண்ணில் நிகழும் யதார்த்த சாத்திய நிலையிலும் இருக்கும்படியாக பிறப்பு நிகழ்வினை சிறப்பாக சித்தரித்திருக்கிறார். கர்ணன், தர்மன், அர்ஜூனன் அனைவரும் புராண அம்சப்படி இதிலும் சூரிய, எமதர்ம, இந்திரனின் மைந்தர்கள்தான், அதே சமயம் குந்தி தனக்கு தேவையான குணங்கள் கொண்ட மகன்களை பெற அந்த சாத்தியங்களை கொண்ட ஆண்கள் (கௌதமர், பலாசரர், சரத்வான்) வழியாக அடைகிறாள். அந்த புராணத் தன்மை அவர்கள் பிறப்பு நிகழ்வு வழியாக, அப்போதைய புறச் சித்திரங்கள், குந்தியின் மனநிலைகள், குழந்தைகளின் குணங்கள்,  செயல்கள், சுற்றி நிகழும் இயற்கை நிகழ்வுகள் வழியாக சிதையாமல் அழகாக சித்தரிக்கிறார், அதுவும் அர்ஜுனனின் பிறப்பின் சமயம் நிகழும் வானவில்கள், இடி சத்தங்கள், நந்ததேவி மலை, பஸ்பவதி நதி, பனித் தூரல், மழை உச்சியில் இருந்த மலைவாழ் மக்களின் வழிபடு ஓவியம், குகை வாழ்வு என எல்லாம் சேர்ந்து இந்திர மைந்தனின் வரவை உச்ச கொண்டாட்ட நிகழ்வாக சித்தரித்து காட்டுகிறது.

கலியின் வருகையாக துரியோதனின் வருகையை, கலி கோவிலில் நிகழும் பூஜை, அங்கிருந்த நரிகள் ஊருக்குள் வருவது என அமானுஷ்ய திகிலுடன் நாவலில் நிகழ்கிறது, அவன் பிறப்பே அவன் எதை நிகழ்த்த போகிறான், மற்றவர்கள் அவனை எப்படி அணுகுவார்கள் என்பதையெல்லாம் சொல்லி விடுகிறது.6.

6

இந்த நாவல் மக்கள் எப்படி சிறு கூட்டமாக வளர்ந்து பின் பெரிதாகி எப்படி ஒரு அரசாக,  நாடாக பரிணமிக்கிறார்கள் என்பதை யாதவர்களின் கதை மூலம் சொல்கிறது . எண்ணிக்கையும், வளமும் எப்படி அவர்களுக்குள் சத்திரிய நாடாளும் வேட்கையை அளிக்கிறது, மாற்றுகிறது என்பதை சொல்கிறது. மேலும் குலங்கள் இணைவதை சூரசேனர், மகிஷி திருமணம் வழியாக இந்நாவல் அழகாக சொல்கிறது . அதுவும் மகிஷியின் குலம் யாதவ குலத்துடன் இணைவது சுவாரசியம், யாதவ நோக்கில் அவர்கள் தாழ் குடிகள், ஆனால் மகிஷியின் குடியின் நோக்கில் இவர்கள் தீண்ட பட கூடாதவர்கள், இந்த இயல்பை இப்போதும் சில மலைவாழ் மக்களிடம் பார்க்கலாம், அவர்களை பிறர் ஒதுக்குகிறார்கள் என்று நினைக்கிறோம், உண்மையில் அவர்கள் பிறரை ஒதுக்குவார்கள், தள்ளி நிறுத்துவார்கள். உண்மையில் சாதி, குல அடுக்கு என்ற ஒரு வரிசை இருக்கிறது, அதை மக்கள் கடைப்பிடித்தனர் என்பதையே சரியான பார்வை அல்ல, ஒவ்வொரு குலமும், அது பழங்குடி சமூகமாக இருந்தாலும் சரி, பட்டியல் சமூகமாக இருந்தாலும் சரி தனது குலத்தை மற்ற குலத்தை விட உயர்வாகவே எண்ணுகிறது, தங்களை விட பிற குலங்களை தாழ்வாகப் பார்க்கிறது. எந்த அளவில் அவர்கள் சூழலை வென்றெடுக்கிறார்களோ அந்த அளவு அது வெளிப்பார்வைக்கு தெரிய வருகிறது!

மேலும் குலம் என்பதை பாண்டுவின் பார்வையில் அது மரணத்தை வென்றெடுக்கும் வழி, தனிமையை இல்லாமல் ஆக்கும் வழி , நாம் இப்போது குலம் என்பதை சாதி எனும் பார்வையில் பார்க்கிறோம், அது தீங்கானது என்கிறோம், ஒரு நோக்கில் அது கண்டிப்பாக தீங்கானது ஆனால் இன்னொரு விதத்தில் பாண்டு பார்வையாக நாவலில் வரும் நோக்கில் இந்த சாத்தியங்களை அளிக்க கூடியதும் கூட.

7, 8, 9

திருதராஷ்டிரன் ஒரு இடத்தில் தான் விலங்கினத்தில் பிறந்திருந்தால் கண்பார்வை இல்லாததால் கைவிட பட்டு பிறந்த சமயத்திலேயே இறந்திருப்பேன் என்கிறார், இந்த வரிகள் என்னை அலைகழிய வைத்தது, மானுடனின் மகத்தான நகர்வு என எண்ண வைத்தது. இன்றைய தொழில் சாத்தியங்கள், பிற சாத்தியங்கள் உடலை ஒரு பொருட்படுத்த தக்க விசயமாகவே இல்லாமல் ஆக்கி விட்டன.

திருதராஷ்டிரன், பாண்டு இவர்களின் திருமண நிகழ்வுகள் வழியாக அரசுகள் எப்படி தங்களை இணைத்து பெரிதாக்க முயற்சிக்கின்றன என்பதையும் இந்நாவல் காட்டுகிறது .

ஆதி கால சடங்குகள், மற்றும் இரு கலாச்சார சடங்குகள் தங்களை ஒருவரை ஒருவர் பாதிக்காத வகையில் எப்படி நிகழ்த்தி கொள்கின்றன என்பதை திருதராஷ்டிரன் திருமண நிகழ்வுகள் வழியாக காண முடிகிறது. ஏதும் தாலப்பனை வரும் பகுதிகள் எல்லாம் அற்புதமானவை .

இந்த நாவலில் ஏராளமான படிமங்கள் வழியாக மாந்தர்களின் மனநிலைகள் மற்றும் பாத்திர வடிவங்கள் சார்ந்து பேசப்படுகிறது. பசித்த அதே சமயம் முயற்சியை சிறிதும் விடாத ஓநாய் (சகுனி), பூத்து தனியாக நிற்கும் தாலப்பணை என.

இந்நாவலின் ஒரு  சார்வாக ரிஷி வருகிறார் ,  அவர் பேசும் கருத்துகளை பார்க்கும் போது சமகாலத்தில் பேசப்படும் ஈவேரா/பகுத்தறிவு  பார்வைகளை விட பல மடங்கு மேம்பட்ட ஒன்றாக இருக்கிறது, முற்றிலும் நடைமுறை விவேகம் கொண்டது இந்நாவலில் உள்ள சார்வாக ரிஷியின்  கருத்துகள், கண்ணிலாதவன் மன்னனாக கூடாது என்கிறார், அந்த குறை அவரில் தாக்கம் செலுத்தும் அது அந்த குறையற்ற மக்களுக்கு எதிரான மனநிலைக்கு அவரை கொண்டு செல்லும். இதை சமகாலத்தில் இட்டு பார்த்தேன், திருமணம் செய்யாத இரு பெண்கள் முதலமைச்சர் ஆகியிருகிறார்கள், ஜெயாவிடம் இருந்த பாதுகாப்பற்ற உணர்வுதான் அவரை அவ்வளவு சொத்துக்கள் சேர்க்க வைத்தது என்று தோன்றும், மேலும் மம்தாவின் மூர்க்கம் இந்த இரண்டு குணங்களின் வெளிப்பாடும் இவர்கள் திருமணம் செய்யாதவர்களாக இருந்ததால் விளைந்தது என்று எண்ணுகிறேன், இவர்கள் சாதாரண பெண்கள் போல திருமணம் ஆனவர்கள் என்றால் இந்த இயல்பு இருந்திருக்காது. ஆனால் மனித மனதை இப்படி வகைப்படுத்த முடியுமா என்று சந்தேகிக்கிறேன், குறைகளை கடந்த ஆளுமைகளும் இருக்கிறார்கள் !

மேலும் சார்வாக ரிஷி இந்த சமூகம், கடவுள் எல்லாம் உண்மையை மறைப்பவை, மனிதன் இதையெல்லாம் புறம் தள்ளி வெட்ட வெளியில் நிற்க வேண்டியவன் என்கிறார். உண்மையை நேராக எதிர்கொள்ள வேண்டும் என்கிறார், வாழ்க்கை என்பது உலகியல் இன்பம் தாண்டி எதுவுமில்லை என்கிறார். எனக்கு அவர் மனிதன் மீண்டும் மிருக மனநிலைக்கு திரும்ப வேண்டும் என சொல்கிறார் என்று நகைச்சுவையாக எண்ணினேன்! ஆனால் நடைமுறை விவேகம் என்பது ஒரு எல்லைவரை பொருட்படுத்த கூடிய மிக அவசியமான ஒரு நோக்கு என்றே நினைக்கிறேன்.

இந்நாவலில் நிகழ்வுகள் வழியாக செல்லும் சொல்லப்படாத காதலும் ஒன்று உண்டு, அது விதுரன், குந்தி இடையே நடப்பது. இருவரும் எதுவும் பேசிக் கொள்வதில்லை, எண்ணிக் கொள்வதில்லை ஆனால் உணர்ந்து கொள்கிறார்கள், அதுவும் விதுரனின் காதல் தேவி மீதான ஆராதனை, சமர்ப்பணம், சென்னி சூடுதல்தான்! அந்த தன் முதல் இரவு பின்பான காவியத்தை பாரசரரின் தேவிஷ்யம் காவியம் வாசிக்கும் இடம் இதை காட்டுகிறது . இதில் இருந்த சுவாரசியம், அதாவது அவ்வாறு நான் உணர்ந்து கொண்டது, இதை அப்போதே விதுரனின் மனைவி உணர்ந்து கொள்கிறாளோ என, ஏனெனில் இந்த இடத்தில் எனக்கு சிறு பீடமாவது கிடைக்குமா, இருந்தால் அது போதும் என்பது போல ஏதோ சொல்கிறாள். இது என் வாசிப்பு யூகம்தான், தவறாகவும் இருக்கலாம், உண்மையில் மறைவாக சொல்லப்படும் விசயங்களில் எனக்கு இந்த வாசிப்பு சிக்கல் இருக்கிறது. பெரும்பாலும் இவ்வகையான இடங்களை தலைகீழாகவோ, அல்லது அதீதமாகவோ எண்ணிக்கொள்வேன்!

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *