ஹிமாலயம்( சவுக்கத்) – பயண நூல் வாசிப்பனுபவம்

1
இந்தியாவில் பயணம் செய்ய விருப்பம் கொண்டவர்களுக்கும், ஆன்மீக தளத்தில்
பயணிப்பவர்களுக்கும் பெரும் கனவாக இருப்பது இமய மலை.  இந்த பயண நுால் ஹிமாலயத்தை
எழுதியவர் ஆன்மீக தேடல் கொண்ட பயணி. எனவே இந்நூல் ஒரே சமயத்தில் இமயத்தின்
அழகையும் , ஆன்மீக தளத்தில் அதன் இருப்பையும் பேசுகிறது . இந்நூலின் தனிச்சிறப்பு
இதுதான் . இந்நூல் எழுதிய சவுக்கத், நாராயண குரு மரபைச்  சேர்ந்தவர்.  குரு நித்ய சைதன்ய யதி
யின் மாணவர் . யதியின் இறுதிக் காலத்தில் உடன் இருந்தவர் . யதியின் மறைவு ஏற்படுத்திய  வெறுமையைத்  தாண்டிச் செல்ல, அடுத்த தேடலாக இமயத்திற்கு பயணித்தவர் . இந்த பயண
அனுபவத்தையே இந் நூலில் எழுதி இருக்கிறார் .

சவுக்கத் ஒரு துறவி ( இந்த நூலில் ) என்பதால் இமயத்தில் வசிக்கும் துறவிகளின்
உலகம் பற்றிய சித்திரம் மிக விரிவாக வருகிறது.  அங்கு வசிக்கும்  துறவிகளின் , பாபாக்களின் , மடங்களின் ,மதங்களின் ட்ரஸ்ட்களின் இயல்புகளை வாசிக்கும் நம்மால் மிக நெருங்கி அறிந்து கொள்ள முடிகிறது . பொதுவாக இயற்கையை ரசிக்கும் சுற்றுலாக்களில் ஹோட்டல்களில் தங்குவோம், இம்மாதிரியான பயண நூல்களில் பெரும்பாலும் இயற்கையின் அழகை மட்டுமே காண நேரிடும்.  மாறாக இந்நுாலில் சவுக்கத் மற்றும் அவருடன் சேர்ந்து பயணிக்கும் இன்னொரு பெண் துறவி காயத்ரி
ஆகிய இருவரும் பயணங்களிடையே  தங்க நேரிடும் இடங்கள் என்பது ஆசிரமங்கள் மற்றும் இமயத்துறவிகளின் இருப்பிடங்கள்.  இதன் காரணமாக வாசிக்கும் நம்மால் இமயத்தின் ஆன்மீகத் தேடல் கொண்டவர்கள் வசிக்கும்  உலகையும்  அறிய முடிகிறது .

உதாரணமாக இவர்களின் வழிபோக்கில் நடுவே கண்ட ஒரு பாபாவின் குகைக்குள் அவரின் வேண்டுதலுக்கு இணங்கி அங்கே தங்குகிறார்கள்.  அந்த குகை இருவர் உறங்கும் அளவிற்கே வெளி உடையது .  மேலும் விரிப்புகளோ, போர்த்த உபரி கம்பளிகளோ இல்லை.  பாபா தன்னுடைய கிழிந்த கம்பளியை  அவர்களுக்குத் தருகிறார்.  மேலும் அவர்களுக்காக உணர்வு தயாரிக்கும்போது தேவையை விட இருமடங்கு அதிகம் தயாரிக்கிறார்.  எதற்கு என்று பார்த்தால் குகைக்கு அடியில் பள்ளம் இருக்கிறது, அதில் எண்ணற்ற எலிகள் இருக்கின்றன, அதற்கும் சேர்த்து தயாரித்து இருக்கிறேன் என்கிறார்.   எலிகள் வெளிவந்து தங்களைக் கடிக்குமோ என்று இவர்கள் இருவரும் பயந்த போது “அவை வெளியே வராது“  என்று தைரியம் அளிக்கிறார். இவர்களுக்காக தொலை தூரத்திற்கு போய் உணவு பொருள் வாங்கி வருகிறார் ! இரவு சரியான கம்பளிகள் இல்லாமல் எப்படி உறங்குவது என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருக்க, பாபா கனல் அடுப்பை குளிர் காய்வதற்காக பற்றவைக்கிறார்.  இரவு முழுதும் உறங்காமல் அடுப்பை ஊதி நெருப்பை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார் !

இந்த நூலில் காணக்கிடைக்கும் பாபாக்களின் பொதுக் குணம் என்பது அவர்களது பற்றின்மை , குழந்தைத்தனம் ,  உணவு தங்கும் இடம்  வழங்கி , இறைவனுக்கு நிகராக
போற்றி  விருந்தினர்களுக்குத் தேவையானவைகளை செய்து கொடுப்பது போன்றவையே.  ஒவ்வொரு பாபாக்களின் குணம், ஒவ்வொருவிதமான  தனித்துவத்துடன் இருக்கிறது . குறைந்தது 30 பாபா / துறவிகளின் சித்திரங்கள் இந்நுாலில் வருகிறது. ஒரு நல்ல நாவலை விட சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்.  அவர்களின் குண நலன்கள் மிக உயர்வானவை .

இமயம் பற்றிய வருணனைகள் /சித்தரிப்புகள், இமயத்தில் இருக்கும் நதிகள் ,தடாகங்கள் பற்றிய
வருணனைகள்/சித்தரிப்புகள் இந்நூலை இலக்கிய தகுதி அடையச் செய்யும் முக்கிய பகுதிகள், அந்த அளவு  வாசிக்கும் போது நாமும் இமயத்தில் நின்று நேரில் காணும் அனுபவத்தை இந்நூல் வழியாக அடைகிறோம் . வெறும் காட்சி அனுபவமாக இல்லாமல் அவைகளைப் பார்த்து அவர் அடைந்த மன எழுச்சிகளையும் நம்மால் அவர் எழுத்துகள் வழியாக அடைய முடிகிறது . மாபெரும் மலைகள் , இயற்கையின் மாபெரும் விஸ்வரூப அழகின் முன் பேச்சிழந்து நாமும் நிற்கிறோம் . ஒரு மனிதன் அடைய முடிகிற , அடைய வேண்டிய முக்கியமான ஒன்று இயற்கையின் இந்த மாபெரும் தரிசனத்தை ,அழகை நேரில் ,அருகில் நின்று தரிசிப்பதுதான். இந்த மனநிலையில் இருந்து சவுக்கத் அடையும் மன உச்சங்கள் ,அறிதல்கள் இந்நூலில் இருக்கின்றன , அவைகள் இந்த தரிசனங்களை இன்னும் அடுத்த கட்ட தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அவை இருப்பது ஆன்மீக தளத்தில்.

இந்த நூலில்  நடராஜ குரு ஒரு வரி சொல்வதாக வருகிறது. “ இமயத்தை காண்பவன், பின்பு கடவுள் இல்லை என்று அசொல்ல மாட்டான், சொல்வோனால் என்றுமே கடவுளை காண முடியாது”; சவுக்கத் இமயத்தை காண்பது கடவுளை காண்பதாகதான் முன்வைக்கிறார். இந்நூலில் இன்னொரு வரி வருகிறது, “சவுந்தர்யத்தின் முன் நின்று கடவுளை காணும் போது கடவுள் இல்லை என்று சொல்லி விட முடியாது”என. நம் கண் முன்  நம்ப முடியாத மாபெரும் அழகு, திடப் பொருளாக நின்று கொண்டிருக்கும் போது, அவ்வளவு சவுந்தர்யத்துடன் படைத்த இறைவனை நாம் இல்லை என்று மறுத்து விட முடியாது  (உண்மையில் மாபெரும்,பேரன்பு போன்ற  வார்த்தைகள் எனக்கு எப்போதும் அதீத நடிப்பு கொண்ட வார்த்தைகள் என்றே தோன்றும் , ஆனால் இமயத்தை குறிப்பிட மாபெரும் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அதீதமற்று இயல்பான ஒரு வார்தையாகவே தோன்றுகிறது ) .

நித்ய சைதன்ய யதி மற்றும் அவரை முன்வைக்கும் ஜெயமோகன் போன்றவர்களிடம் ஒரு
இயல்பை காண முடிகிறது.  இவர்கள் ஆன்மீகத்தை அறிவியல் பூர்வமாக அணுகி முன் செல்பவர்கள். நம்பிக்கை வழியாக அல்ல, அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து பின் அதை அனுபவத்தில் உணர்ந்து அதன் வழியாக தெய்வத்தை நோக்கி செல்பவர்கள். இந்நூல் எழுதிய சவுக்கத்திடமும் இந்த இயல்பை அப்படியே காண முடிகிறது . எந்த நூலிலும் , எந்த மத பிரிவிலும் உள்ள நல்லவற்றை அடைய தனக்கு எந்த மனத் தடையும் இல்லை என்கிறார். அவை நல்லவையா
என்பது மட்டுமே முக்கியம் என்கிறார்.  மேலும் எந்த புராணத்தையும் இவர் அப்படியே ஏற்று
கொள்வதில்லை. அவைகள் தத்துவார்த்த கதைகள் என்கிறார்.  அதன் பின்னுள்ள தத்துவத்தை
உணர்ந்து கொள்வதே அதை சரியாக உள்வாங்கும் முறை என்கிறார்.  இந்திய மரபில் இருக்கும்
எல்லாவற்றிற்கும் பின்னிருக்கும் தத்துவார்த்த கருத்துக்களையே இந்நூலில் தொடர்ந்து
முன்வைத்து செல்கிறார்.  எதற்கும் அவருக்கென்று தனியாக ஒரு தனித்துவம் கொண்ட விளக்கம்
இருக்கிறது . சுருதி,ஸ்மிருதி யை கூட அவர் வேறு விதத்தில் அணுகுகிறார் . வெறும்
வார்த்தைகளாக இருக்கும் போது அவை ஸ்மிருதி கள் , அவை ஒரு குரு வழியாக ,அல்லது வேறு
வழியில் அதன் உண்மையான அர்த்தம் மனதில் ஏறும் போது அது ஸ்ருதி யாக மாறுகிறது
என்கிறார் . மேலும் பிரம்மச்சரியம் , கிரகஸ்தம் , வானபிரஸ்தம், சந்நியாசம் என்பதை இவர்
இன்னொரு வழியில் விளக்குகிறார். அதாவது மனம் முன்னேற்றம் அடையும் படிக்கட்டுகள் என
இதை பிரிக்கிறார். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார், ஒரு அறையில் நான்கு பேர்
இருக்கிறார்கள் ,வெளியில் இருந்து உள்ளே வந்த ஒருவர் இந்த நான்கு பேரையும் திட்டுகிறார் ,
உள்ளே இருக்கும் நால்வரும் அவர்களின் மன பக்குவங்களுக்கு ஏற்பே நான்கு விதமாக தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்துகின்றனர் , ஒருவர் அவரை அடிக்க போகிறார் ,ஒருவர் அமர்ந்தவா
ரே திட்டுகிறார் ,ஒருவர் ஏன் இப்படி அவர் நம்மை திட்ட வேண்டும் என்று யோசிக்கிறார் ,இப்படி ..
இப்படி எதிர்வினை ஆற்று வதன் பின்னிருக்கும் மனநிலையை ஆராய்வதை பிரம்மச்சரிய நிலை
என்கிறார். இப்படி ஆராயும் போது சிக்கல் நம் மனதில்தான் இருக்கிறது என்று உணரும்
நிலையை கிரகஸ்தம் என்கிறார் . அதாவது நம்முள் என்பதை கிரக என்பதாக ! அதன் பிறகு
தீர்வாக நாம் நம்மை வெளியில்( உயரத்தில் , ஆகாயத்தில் ,வானத்தில் ) தள்ளி நின்று நம்
குறையை ஆராயும் இயல்பை வானபிரஸ்தம் என்கிறார் ! அடுத்து அந்த குறையை உணர்ந்து , நம்
மனப் பற்றை அகற்றி கொண்டால் அந்த சிக்கல்களில் இருந்து வெளியேறலாம் என்பதை உணர்ந்து
விட்டு விடுதலை சந்நியாசம் என்கிறார் !

மேலும் தெய்வ உருவங்களை ,அந்த உருவங்கள் பின்னிருக் கும் தத்துவார்த்த காரணங்களை
,உதாரணமாக விநாயகர் என்றால் ஏன் யானைத் தலை ,எதற்கு அவ்வளவு பெரிய காது , எதற்கு
யானைமுகனுக்கு எலி வாகனம் , அதன் பின்னிருக்கும் விளக்கங்கள் என்ன என்பதையெல்லாம்
சொல்லி செல்கிறார் . இவைகளை உணர்ந்து பின் வழிபடும்போது மட்டுமே நம்மால் முழுமையாக
ஈடுபட முடியும் என்கிறார் .

சிவன், பார்வதி ,விநாயகர் மூவரையும் நம் மனதிற்குள் நிகழும் விசயங்களாக இவர் சொல்லும்
பகுதிகள் சுவாரஸ்யமான வை , அதை திரும்ப சொல்லும் போது கொஞ்சம் பிழை இருந்தாலும்
அர்த்தங்கள் மாறி விடும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன் !

பயணம் என்பது நம் அளவில் தேதி வாரியாக இந்த தேதியில் இந்த நேரத்தில் இங்கு இருக்க
வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவோம் . அது சற்று முன்னும் பின்னும் நகர்ந்தாலும்
திட்டங்களில் பெரிதாக மாறுபாடு இருக்காது . ஆனால் சவுக்கத் மற்றும் காயத்ரியின் பயணம்
இதற்கு நேர்மாறான து.  வழியில் புதிதாக ஏதும் கண்டால் பயண திட்டத்தை மாற்றி கொண்டு
அங்கு செல்கிறார்கள். இரவு அங்கேயே தங்க விரும்பினால் அங்கேயே தங்கி கொள்கிறார்கள்.
பயணத்தில் கால நிர்ணயமோ , இட நிர்ணய மோ எதுவும் இல்லை , அந்த அந்த இடத்தை
இருந்து முழுதும் அனுபவித்து நகர்கிறார்கள்.  இவர்கள் துறவி வாழ்க்கைக்கு புகுந்தவர்கள்
என்பதால் , எந்த கட்டுப்பாடுகளும் , எந்த பணிகளும் இல்லாதவர்கள் என்பதால் இவர்களால்
எந்த அவசரமும் இன்றி எந்த பிடுங்களும் இன்றி குழந்தைகளைப் போல எதையும் யோசிக்காமல்
அந்த நேர மகிழ்ச்சியை மட்டும் மனதில் கொண்டு அதற்கேற்ப இயங்க முடிகிறது ! பயணத்தின்
மிக உயர்வான நிலை இதுதான் .

இவர்கள் முக்கியமாக சக பயணிகள் , சந்திக்கும் மனிதர்களோடு நெருங்கிப் பழகுகிறார்கள் , அதன்
வழியாக அம்மக்களின் மனநிலையும் நம்மால் அறிய முடிகிறது.  முக்கியமாக காஷ்மீரி
இளைஞர்களின் , அங்கிருக்கும் கிராம மக்களின் ,அங்கிருக்கும் இராணுவத்தினரின்
மனநிலைகளை நம்மால் மிக நெருக்கமாக உள்ளார்ந்து அறிய முடிகிறது . இதில் சவுக்கத்
அவர்களுக்கு இந்தி தெரியாது , காயத்ரி இந்தி அறிந்தவர் , காயத்ரி வழியாகத்தான் சவுக்கத் பிறருடன் உரையாடுகிறார் . ஒரு பயணத்தில் அந்த பகுதியின் மொழி அறிந்து வைத்திருப்பது
அந்த பகுதி மக்களின் பேசி அறிய மிக முக்கியமானது , ஒருவேளை காயத்ரிக்கும்
இந்தி தெரியாது போயிருந்தால் இந்நூல் அளவில் பாதியாக சுருங்கி இருக்கும் !

இந்த நூலில் வரும் இமயத்தில் இருக்கும் பூஜாரிகளும் சுவாரஷ்யமானவர்கள் .நூலின்
ஆரம்பத்தில் யமுனோ த்ரியில் வரும் ராம்பால் எனும் பூஜாரி ஒரு நாவல் கதாபாத்திரம் போல
வந்து செல்கிறான் . அன்பு ,கோபம் ,அக்கறை என எல்லா குணங்களும் அவனைப் பற்றிய
சித்திரத்தில் வந்து செல்கிறது !

இமயத்தில் இருக்கும் ஹேம் குண்ட் சாஹிப் என்ற பகுதியில் இருக்கும் குருத் வாரா பற்றிய
வரலாறும் ,அதன் அழகும் ,ஆன்மீகமும் இந்நூலில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.  ஆனால்
அதை படித்து முடித்த போது ,எப்படி ஆன்மீக பின்புலம் சொல்லப்பட்டாலும் , அந்த குருதுவாரா
மிக சிறந்த ஆன்மீக தளம் என்றாலும் கூட அது இமயத்தில் அந்த இடத்தில் வந்து அமர்ந்ததை ஒரு
ஆக்கிரமிப்பு செயலாகவே நான் பார்க்கிறேன். 1936 ஆம் ஆண்டில்தான் அந்த குருத்து வாரா
தோன்றுகிறது , 1932 சமயத்தில் அமிர்தசரசில் இருந்த ஒரு சீக்கிய மததலைவர் குரு கோவிந்த்
சிங் சுயசரிதை( விசித்திர நாடகம் ) வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது ,அதில் இமயத்தில் 7
சிகரங்கள் சூழ்ந்த ஒரு தடாகத்தின் அருகில் தவம் செய்ததாக வருகிறது . இவர் வாசித்து அந்த
இடம் தேடி அங்கு போய் குருத்துவாரா அமைக்கிறார் , ஆனால் அந்த இடம் ஏற்கனவே
லோக்பால் என்று சொல்லப்பட்ட புராண , ஆன்மீக தளம் , ஆன்மீக யாத்திரை நிகழும் தளம் ,
இந்த குருத்து வாரா துவங்க முனையும் போதே அங்குள்ள மக்களால் எதிர்க்கப் படுகிறது. பிறகு
சமாதானம் பேசப் பட்டு அங்கு லட்சுமணன் கோவிலும் குருத்துவாரா வும் அருகருகில்
கட்டப்படுகிறது . இப்படி செய்வது அதன் பழமையை ,மாறா தன்மையை சிதைப்பது போலவே
என்னளவில் பார்க்கிறேன். இனி ஆண்டுகள் செல்ல செல்ல அது குருத்து வாரா தளமாகவே
பார்க்க படும் ,இப்போதே இந்த நூலிலே யே அந்த பகுதி குருத்து வாரா பெயரில் தான் அழைக்க
படுகிறது.

இந்த நூல் எனக்கு அளிக்கும் சித்திரம் என்பது இந்த மண்ணின் ஆன்மா எப்படியானது
என்பதுதான் . இயற்கையை வென்றெடுப்பது அல்ல , இயற்கை முன் பணிவுடன் நின்று
வணங்குவதன் வழியாக இறைவனை நோக்கி செல்வது , சவுக்கத் சென்ற இந்த யாத்திரை நூல்
அப்படியான ஒரு பயண அனுபவத்தை வாசிப்பின் வழியாக எனக்களித்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *