துருக்கித் தொப்பி-நாவல் இளம் எழுத்தாளரின் பார்வையில்

துருக்கி தொப்பி என்ற பெயர் படித்த போது இதே பெயர் ஜெயமோகனின் பத்து லட்சம் காலடிகள் கதையில் வருவதும் அந்த கதை துப்பறியும் கதை என்பதாலும் இந்த நாவலை வேறு விதமாக எண்ணி இருந்தேன் , ஆனால் இந்த பெயரின் நாவலின் ஒரு முக்கிய குறியீடு , மிக பெரிய வசதியானவர்கள் அன்று அணியும் தொப்பி இது ,அப்படி அணிந்த ஒருவரின் குடும்பம் வாழ்ந்து வீழ்ந்த கதையை சொல்லும் நாவல் இது .

நான் வாசிக்கும் ஜாகிர் ராஜாவின் முதல் புதினம் இது , அவரை இஸ்லாமிய மக்களின் வாழ்வினை இலக்கியத்தில் கொண்டு வரும் எழுத்தாளர் என்று எண்ணி இருந்தேன் . இவர் படைப்புகள் வழியாக இஸ்லாமியர்களை அணுகி அறிய முடியும் என்று நினைத்தேன் , அந்த நோக்கில்தான் துருக்கி தொப்பி நாவலை வாசிக்க துவங்கினேன் . படிக்க ஆரம்பித்து சில பக்கங்கள் நகரவே இது வெறும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை என்று குறுக்கி பார்க்க முடியாது என்று தோணியது , இது எல்லா குடும்பங்களிலும் இருக்கும் இயல்புகள் தான் , மனநிலைகள்தான் , பெயர்கள் மற்றும் சில பழக்க வழக்கங்கள் மட்டுமே வேறுபடுகிறது , மனித வாழ்க்கை என்பது பொதுவானதுதான் என்று தோன்றியது . ஜாகிர்ராஜாவை வெறும் இஸ்லாமிய மக்களின் வாழ்கையை எழுதும் எழுத்தாளன் என்று வகை படுத்த கூடாது என்று நினைத்தேன் . இதை எழுதும் போது தோன்றியது , இப்படி மதம் சார்ந்து பிரித்து வாழ்க்கை என்று சொல்வது இஸ்லாமிய உலகத்தை மட்டுமே குறிப்பிட படுகிறது , கிறிஸ்துவ வாழ்கையை சொல்லும் எழுத்தாளன் என்று வகைப்படுத்தி நான் பார்த்தது இல்லை , வட்டாரத்தை , சாதியை குறிப்பிட்டும், தலித்தியம் ,பெண்ணியம் என்றும் குறிப்பிட்டு வகை படுத்தி பார்த்திருக்கிறேன் , ஆனால் மதம் சார்ந்து தமிழில் இஸ்லாமினை மட்டுமே அப்படி வகை படுத்துவதை பார்க்கிறேன். உண்மையில் இப்படி வகை படுத்தி பார்க்கும் அளவுக்கு தனித்துவமும் இந்த நாவலில் ( பழக்க வழக்கங்களில் ,மாறாக மனித இயல்புகளில் அல்ல ) நிறைய காண முடிகிறது .

இந்நாவலை ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வளர்ச்சி வீழ்ச்சியை சொல்லி செல்லும் நாவல் என்று சொல்லலாம் , அதனூடாக மனிதனின் ஆசைகள், காம மயக்கங்கள் ,அது உருவாக்கும் பிரச்சினைகள் ,வீழ்ச்சிகள் , மேலும் மனித உறவில் இருக்கும் நெருக்கங்கள் ,இடர்கள் என எல்லா வற்றையும் பேசுகின்றன . வாய்ப்புகள் கிடைக்கும் போது மனிதர்கள் தவறு செய்ய தயங்குவதே இல்லை என்பதை காட்டும் பல பகுதிகள் இந்த நாவலில் உண்டு , ஒரு உதாரணம் தன் அறைக்கு வரும்  தன் பேரனின் பாலுறுப்பை தடவி அனுபவிக்கும் தாத்தா என ..
இந்த நாவலில் இஸ்லாமியர்கள் தன் முந்திய தலைமுறைகளில் இந்துக்களாக இருந்து அந்த உறவு சார்ந்து இன்னும் பிணைப்பு தன் பூர்வீக ஊரிடம் இருக்கும் சித்திரம் வருகிறது , முன்பு ஆடுமாடு மேய்த்து பிறகு மதம் மாறி வணிகம் செய்து செல்வந்தர்களாக மாறிய குடும்பம் இந்த கதையில் வரும் கேபிஷே என்பவரின் குடும்பம் . நாவலின் களம் இவரது குடும்பம்தான் .இஸ்லாமிய வாழ்க்கை என்று குறிப்பிடும் போது இவர்களின் திருமண இயல்புகள் , விழா கொண்டாட்டங்கள் , நம்பிக்கைகள் என இருப்பவர்கள் எல்லாம் நாவல் வழியாக விரிவாக காண முடிகிறது . முக்கியமாக பிறை காணும் ஆர்வம் , பிறை கண்ட பிறகே ரம்ஜான் நோன்பு தொடங்கும் , இந்நாவலில் ஆட்கள் குழுமி நின்று வானில் பிறையை தேடும் காட்சி வருகிறது . நான் இஸ்லாமிய பகுதியில் வளர்ந்தவன் என்பதால் இப்படி பிறை பார்க்க நின்று குழுமி நின்று வானை ஆர்வமாக நின்று பார்க்கும் ஆட்களை பார்த்து இருக்கிறேன் , பண்டிகையை வரவேற்கும் பரவசம் அவர்கள் முகங்களில் தெரியும் . இந்த நாவலில் இந்த பகுதி சிறுவர்களும் பெரியவர்களும் வர அந்த பகுதி நன்றாக வந்திருந்தது .

என் இதுவரையான புரிதலில் இஸ்லாமிய சமூகத்தில் ஆணுக்கு பெண் வரன் கிடைப்பது என்பது பிரச்சினை இல்லாது எளிதில் அமைய கூடிய ஒன்று , அவர் ஏற்கனவே திருமணம் செய்து தன் மனைவியை தலாக் செய்து இரண்டாம் திருமணத்திற்கு பெண் தேடுபவர் என்றாலும் ! அப்படியான ஒரு நிகழ்வு இந்த நாவலில் வருகிறது , இதில் வரும் நூர்ஜகானின் தங்கை திருமணம் அப்படியான ஒன்று , தன் மனைவியை தலாக் செய்திருந்த ஹஜ்ரத் இவரை மணக்கிறார் , திருமண பெண்கேட்பு, திருமண நிகழ்வு எல்லாம் மிக எளிமையாக சட்டென்று முடிந்தது விடுகிறது .
இந்த நாவலில் இஸ்லாமில் இருக்கும் உள் பிரிவுகள் ,அவர்களின் சில பழக்க வேறுபாடுகள் அறிய முடிகிறது  . இராவுத்தர் பிரிவு மாட்டிறைச்சி உண்ண மாட்டார்கள், ஆட்டிறைச்சி மட்டும் உண்ணுவார்கள் ,லெப்பை பிரிவு மக்கள் மாட்டிறைச்சி உண்ணிவார்கள் என்பது , இதை அறிந்த போது நான் இளம் வயதில் வசித்த கோட்டை மேடு பகுதியில் இருந்த முத்து ராவுத்தர் ஹோட்டல் ஞாபகம் வந்தது , ஆரம்பத்தில் அங்கு பீப் கிடையாது , பெரிதாக விற்பனையும் அங்கு இருக்காது , ஹோட்டலில் லுங்கி ஹல்வா எல்லாம் வைத்து இருப்பார்கள் , பின்பு அடுத்த தலைமுறை அந்த ஹோட்டலில் மாறியதும் பீப் வந்தது ,  ஹோட்டல் விற்பனை அதிகமானது ,இன்று hmr என்ற பெயரில் ஏகப்ட்ட கிளைகளுடன் அந்த ஹோட்டல் நிறுவனம் வளர்ந்து பெரிதாகி உள்ளது ! முன்பு ஏன் பீப் இல்லை இந்த ஹோட்டலில் என்று யோசித்து இருக்கிறேன் ,ஏனெனில் அருகில் ஆபிதா ,கடுப்பன் கடை போன்ற இஸ்லாமியர்கள் நடத்தும் ஹோட்டல்களில் பீப் இருந்தது, இங்கு முத்து ராவுத்தர் கடையில் இல்லை , ஆட்டிறைச்சி இருந்தது, ஏன் அப்போது இல்லை என்பதற்கான காரணத்தை இந்த நாவல் படித்த போதுதான் உணர்ந்தேன் .
நாவலின் முதன்மை பாத்திரம்  என்று எனக்கு தோன்றியது நூர்ஜஹான் தான்  . இந்த பாத்திரத்தில் வரும் குண மாறுபாடுகள் ஆச்சிர்யம், அதிர்ச்சி எல்லாம்  அளித்தது , தேவதை போல புகுந்த வீடு வருகிறாள் , ஆனால் முதல் குழந்தை பிறந்த வுடன் அம்மை வந்து அழகு பெருமளவு போய் விடுகிறது !  குழந்தையை தன்னிடம் தர காளி போல பொங்குகிறாள்,ஆனால் பிறகு அதே மகனை வெறுத்து ஒதுக்குகிறாள்! மேலும் அவளது திருமணம் முன்பு இருந்த அப்பாஸ் மீதான காதல் , கணவர் மீதான அன்பு , பின் ரூபனுடன் இருக்கும் தகாத உறவு என அவள் பாத்திரம் கொள்ளும் வண்ணங்கள் நாவலில் மாறி கொண்டே இருந்தன , அதுவும் முதல்  மகனிடம் அவர் கொள்ளும் வெறுப்பு உக்கிரம் ,எந்த மகனுக்காக உக்கிரம் கொண்டு தெருவில் இறங்கி போராடினாலோ, பின்பு அதே உக்கிரத்துடன் அவனை வெறுக்கிறாள் !
பொதுவாக நான் இதுவரை வாசித்த புதினங்களில் தகாத காம நோக்கு சார்ந்த விசயங்கள் பூடகமாக சொல்ல பட்டிருக்கும் , ஆனால் ஜாகிர் ராஜா அதை எல்லாம் நேரடியாக போட்டு உடைத்து சொல்கிறார் . ரஹமதுல்லா தன் அம்மா மீது மனதில் ஏற்படும் காமத்தை பற்றி சொல்லி செல்லும் இடம் , அம்மா தன் மகனின் தன் மீதான காம பார்வை பற்றி தன் கணவனிடம் குறை சொல்லி நிற்கும் இடம் எல்லாம் எனக்கு சற்று அதிர்ச்சி அளித்தன! இது போன்ற விசயங்கள் எல்லா வற்றையும் நேரடியாக அப்பட்டமாக சொல்கிறார் . மேலும் கதா பாத்திரங்களும் கூட எந்த தயக்கமும் அற்று அப்பட்டமாக தங்கள் ஆசையை வெளிப்படுத்துகின்றனர் , நிகழ்த்துகின்றனர், மல்லிகா தன்னை விட சிறுவனான ரஹ்மதுல்லாவை துரத்தி பிடித்து அடைகிறாள், உண்மையில் இது எல்லாம் படிக்க எனக்கு ஆச்சிர்யங்கள் அளித்தன.
பூடகமாக பேசும் இடங்களும் இருக்கின்றன , அவை மிக ஷார்பான இடங்கள் . ஒன்று கேபிஷே துருக்கி தொப்பி அணியும் இடம் , அதில் கேபிஷே வின் ஏமார்ந்து விட கூடிய குணமும் வெளிப்படும் , கடையின் முதலாளி கேபிஷேவின் பெயரை குறித்து வைக்கும் இடத்தில் அவன் கேபிஷேவை ஆசை வார்த்தை பேசி ஏமாற்றி விட போகிறான் என்பதையும் நாவல் சொல்லாமல் சொல்லும் .  இன்னொரு இடம் சிக்கந்தரின் கோபம், ரூபனின் காலை உடைத்தது எல்லாம்  ,அது அவன் நூர்ஜஹான் மீது கொண்டிருக்கும் காமத்தின் விளைவு என்று யூகிக்க முடியும் . இது போல பூடகமாக சொல்லும் பகுதிகள் நாவலில் நிறைய உண்டு .நாவலில் இருக்கும் பெரிய இன்னொரு இழை என்பது தகாத உறவுகள் , முக்கியமாக நூர்ஜஹானின் தந்தை குட்டிலெவை , இவர் குறத்தியிடம் கொண்டிருக்கும் உறவு , இது நாவலில் ஜொலிக்கும் இடம் , முதல் இடம் குறத்தியை அடித்த பின்பு அவளுடன் அவன் கணவன் கொள்ளும் உறவு , அந்த இடத்தில் அவன் செய்யும் ஒரு விசயம் . இன்னொன்று குட்டி லெவை மகளின் மகன்களுக்கு சுன்னத் செய்யும் விழாக்கு பணம் இல்லாமல் இருக்கும் போது , முடிவில் 100 ரூபாய்யுடன் வருவான், அது அவனுக்கு குறத்தி கொடுத்ததாக இருக்கும் என நினைத்தேன் !
நாவலின் முக்கிய பாத்திரம் கேபிஷே, ஆனால் அந்த பாத்திரம் என்னை அவ்வளவு கவர வில்லை . இசை , வாசிப்பு என்று இருந்தாலும் குணத்தில் சிறிய மனிதர் என்று தோன்றியது , காம வெளிப்பாடு காரணமாக அல்ல , ஆனால் ஏதோ விதத்தில் சிறிய மனிதர் என்று தோன்றியது , ஆச்சிரியம் அவரிடம் இருந்த ஒரு இயல்புதான் , அவருக்கு பெண்கள் சார்ந்த உறவு , விருப்பம், ஈர்ப்பு எல்லாம் இருக்கிறது , அதே சமயம் அவர் சிறுவர்களை வைத்து ஒருபால் உறவு கொள்பவராகவும் இருக்கிறார் !

இதில் ஒரு பாத்திரம் ( அத்தாவுல்லா) அன்றைய சமகால அரசியல் நிகழ்வு சொல்ல படுகிறது , திமுக தோற்றம் , அண்ணா , கருணாநிதி ,எம்ஜியார் கட்சியில் இருந்து பிரிந்து செல்வது எல்லாம் கதாபாத்திரங்கள் வழியாக பேச படுகிறது . எனக்கு அத்தாவுல்லா அண்ணாதுரை தனிநாடு கோரிக்கையை கைவிட்டது காரணமாக துக்கம் கொண்டான் என்பது அதிர்ச்சி அளித்தது , நான் திமுக இந்திய ஒருங்கிணைவிற்க்குள் நின்று சுயாட்சி பேசும் இப்போதைய நிலையே முன்பும் கொண்டிருந்தது என்ற மனபிம்பம் இருந்தது , ஆனால் தனி நாடு பிரிவு மனநிலையில் இருந்து இப்போதைய சுயாட்சி நிலைப்பாட்டிற்கு வந்தவர்கள் என்ற போதம் இதை படித்த போதுதான் அடித்தது . இந்த கட்சியை சேர்ந்த அப்போதைய இளைஞர்கள் தனிநாடு கணவில்தான் இருந்திருப்பார்கள் என்று யோசிக்கும் போதே மனதில் பதபதைப்பு உருவாகிறது .
இந்நாவலின் இன்னொரு சிறப்பு ரஹமத்துல்லா பாத்திரம் ,சிறுவன் , சிறுவனுக்குரிய ஆர்வம் , ஏமாற்றுத்தனம், வெளிப்பாடு எல்லாம் அவனில் பிரமாதமாக அவனில் வெளிப்படுகிறது . இந்த நாவலில் என்னை நான் உணர்ந்த இடம் இவனுள்தான் , இவனளவு திருட்டுதனங்கள் செய்யா விட்டாலும் இவன் அளவு சுற்றி திரிவது ,தந்தையிடம் மானா வாரியாக அடி வாங்கியது எல்லாம் நானும் அடைந்திருக்கிறேன் !
நாவலின் உயர்ந்த இடம் என்று நான் எண்ணியது குட்டி லெவை கனவில் அம்மாவுடன் உரையாடும் இடம் , படிக்கும் போது என்ன முன்பு இறந்து விட்ட இவன் அம்மா இந்த பத்தியில் வருகிறாலே என்று எண்ணினேன் ,படித்து பக்கங்கள் செல்ல செல்லத்தான் அந்த பகுதி அவனின் கனவு என்று புரிந்தது , இந்த பகுதி எனக்கு மிக பிடித்து இருந்தது .
நாவலில் நான் குறை என எண்ணியது , புனைவு உலகம் என்ற விதத்தில் இந்த உலகில் நான் முழுமையாக செல்ல முடிந்தது , இதில் இருந்த உணர்வு நிலைகள் எல்லா வற்றிலும் கவனிக்க ,கலக்க முடிந்தது . புனைவு ஆசிரியர் எனும் நோக்கில் ஜாகிர் ராஜா சிறப்பானவர் என்று தோணியது , உண்மையில் நாஞ்சிலின் சிஷ்யர் என்று தோன்றியது , என்ன ஒன்று நாஞ்சில் கதையில் விரிவான சித்தரிப்புகள் இருக்கும் , இவர் சற்று குறைவான சித்தரிப்புகள் வழியாக உலகை கண் முன் கொண்டுவந்து விடுகிறார் . நான் முன்பு வேறு ஒரு மதிப்பு மிக்க எழுத்தாளரை வாசித்து இருக்கிறேன் ,அது ஒரு சிறுகதை தொகுப்பு , அதில் பிராதன விசயம் காமம் ,அது மனிதர்களில் உருவாக்கும் சிக்கல்கள் . எனக்கு இது சற்று சலித்து விட்டது , காமம் மற்றும் மனித உறவுகளில் இருக்கும் மோதல்கள் இவை தாண்டி புனைவுகளில் பேசு பொருள் இருக்காதா என்று எண்ணம் உருவானது , இந்த துருக்கி தொப்பி படிக்கும் போதும் இது காமம் மற்றும் மனிதனின் குண மாறுபாடுகளால் வளர்ச்சி வீழ்ச்சி என செல்கிறது என்று உணர்ந்த போது சற்று ஏமாற்றம் ஏற்பட்டது , மேலும் நாவலை இழுத்து செல்லும் மைய முடிச்சு ( அடுத்து என்ன நிகழ இருக்கிறது ) இந்த நாவலில் இல்லை , இந்த நாவல் மிக சில பக்கங்களில் ஒரு அத்தியாயம் என ஒரு நிகழ்வு அல்லது கதாபாத்திரம் பற்றிய சித்தரிப்பு என சொல்லி செல்லும்வகையில் வடிவமைக்க பட்டிருந்தது , உண்மையில் இந்த வடிவம் சற்று எனக்கு புதியதாக ஆர்வம் தரும் வகையில் இருந்தது . ஆனால் ஜாகிர் ராஜா என்று எண்ணியதும் இவருக்கு இருக்கும் சிக்கல்கள் சார்ந்து இதில் பேச பட்டிருக்கும் என நினைத்தேன் , அதாவது பெரும்பான்மை சமூகம் வேறொரு பண்பாட்டை பழக்க வழக்கத்தை கொண்டிருக்கும் போது , இவர் அதற்கு வேறான ஒரு பண்பாட்டை கொண்டிருக்கும் பின்னணியில் இருந்து எழுத வந்திருக்கும் இவர், இந்த இரண்டு பண்பாடு கொள்ளும் இணைவுகள் ,இடர்கள் பற்றி எழுதி இருப்பார் என்று நினைத்தேன் , அப்படி எழுத்தாளனிடம் அவர் எழுதுவதை கொண்டு நாம் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர நம் எதிர்பார்ப்பை அவரிடம் காண்பது தவறு என்றாலும் எனக்கு இந்த எண்ணம் இருந்தது !மேலும் இந்த இஸ்லாமிய கலாச்சாரம்,  இஸ்லாமிய ஆன்மீகம் , இஸ்லாமிய ஆன்மீகம்  பிற மதங்களின் ஆன்மீகத்துடன் கொள்ளும் உறவுகள் விலகல்கள் இது எல்லாம் அறியும் ஆர்வம் எனக்கு உண்டு , இது  இந்த நாவலில் சில பகுதிகளில் இருந்தது,  முக்கியமாக ரஹமத்துல்லா  சர்ச் வாசலில் கிறிஸ்துவுடன் பேசும் இடம் , மேலும் ஈசா நபிக்கும் ஏசுவுக்கும் உள்ள ஒற்றுமை என .

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  1. விமர்சனம் நாகரிகமாக உள்ளது.அருமையான சித்தரிப்பு.