தொல்குடித் தழும்புகள் – நூல் மதிப்புரை

தலைப்பு ஈர்த்ததால் இத்தொகுப்பை வாங்கினேன். அதற்கு முன் ஆசிரியரைப் பற்றியோ, மொழிபெயர்ப்பாளரைப் பற்றியோ அறிந்திருக்கவில்லை. முன்னுரை எல்லாக் கேள்விகளுக்கும் விடையானது.

செம்பேன் உஸ்மான் (1923-2007) ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை என்று உலகளவில் போற்றப்படுபவர். தனது 40வது வயதில் முதல் திரைப்படத்தை எடுக்கும் முன்னரே 3 நாவல்களையும்,இந்த சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருந்தார். உடலுழைப்புத் தொழிலாளியாக வாழ்வை ஆரம்பித்த அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டார்.

1960 ஆம் ஆண்டு செனெகல் பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றதும், பிரெஞ்சு குடியுரிமை, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், தொழிற்சங்க உறுப்பினர் ஆகியவற்றைத் துறந்து, இத் தொகுப்பை வெளியிட்டார். பிரெஞ்சு மொழியில் வெளியான இத்தொகுப்பு, பின்னர் 1975 ஆம் ஆண்டு லென் ஆர்ட்சன் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பெரும் இடைவெளிக்குப் பின்னர் 2019 ஆம் ஆண்டு தமிழில் லிங்கராஜா வெங்கடேஷ் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் முன்னுரையில் “ஆப்பிரிக்க பண்பாடும் வழக்காறுகளும் எப்போதுமே தமிழரின் வாழ்வியலுக்கு மிகவும் அணுக்கமாக இருப்பதை ஆப்பிரிக்க இலக்கியங்களை வாசித்தவர்கள் அறிவர்.”என்று குறிப்பிடுகிறார். அதைப் பற்றுக்கோடாகக் கொண்டு தான் வாசிக்கத் துவங்கினேன்.

காலனியாதிக்கத்தில் இருந்து மீண்ட ஒரு நாட்டில் இயல்பாக நிலவும் வறுமை, வேலையின்மை, நிலையில்லாத அரசுகள் போன்ற பிரச்சினைகள், மேற்சொன்னவை எளிய மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் என்பதாக இத்தொகுப்பின் கதைகள் அமைந்துள்ளன. எதிர்காலம் குறித்த பயம் ஏற்படும் போது எளியவரின் புகலிடம் மதமாக தான் இருக்கிறது. அந்த பயத்தை முதலீடாகக் கொண்டு சுரண்டுபவரின் சித்தரிப்பு போலி மீட்பன் கதையில் அழகாக வெளிப்படுகிறது. அவ்வாறு சுரண்டுபவரின் மன அழுத்தம், உழைப்பின்றி வந்த பொருள் தரும் துயரம் என துல்லியமான விவரிப்பு தந்த கதை. “கோட்டிக்காரனைப் போல” என்று நெல்லைத்தமிழ் வந்து விழுவது சுவாரஸ்யம்.

முன்னுரையில் குறிப்பிட்டது போல. தமிழரின் வாழ்வியல் சாயல் கதை மாந்தர்களிடம் பெரிதும் தென்படுகிறது. பிலாலின் நான் காவது மனைவி கதையில் வரும் சுலைமான், காமத்தில் மூழ்கி, நிறைவின்மையுடன் 3 மனைவிமாரையும் அடிக்கிறான். ஆனால், அப்பெண்களின் மீதுதான் தவறு இருக்கும் என்று தேற்றுகின்றனர் அக்கம் பக்கத்தினர்.இன்னும் கொடுமையாக, அந்த நல்ல மனிதனுக்கு மனைவிமார்கள் பெருந்துயரம் கொடுத்ததாக முடிவெடுத்து, நாலாவதாக ஒரு பெண்ணைப் பார்க்கத் துவங்குவதை என்னவென்று சொல்ல. வழக்கு தீர்க்க வரும் ஆலி (நீதிபதி) யின் குரல் ஆசிரியரின் குரலாகவே எனக்கு ஒலித்தது.

தாய் கதையில் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பிய பெண், அவளது மூன்று நாட்கள் கதையில் கணவனின் வருகைக்காக தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாது தயாராகும் பெண்ணின் (நூம்பே) சித்திரம், உலகளாவியது தான். பிரான்ஸிலிருந்து கடிதங்கள் கதையில் வரும் நஃபி யின் வாழ்வு, திருமணம் எனும் பண்டப் பரிமாற்றத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் பெண்களின் வாழ்வு தானே. இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்திருக்கும் “தொல்குடித் தழும்புகள்” கதை பூர்வகுடிகள் அடிமைகளானதை விவரிக்கிறது. எத்தனை துயரம் அவர்கள் வாழ்வில். அடிமையாகப் போவதில் இருந்து வெளியேற பெற்ற மகளின் ரத்தமும் வலியும் காணக் கூட தயாராகும் தந்தையின் கையறு நிலை படிக்கும் போதே கண்ணீர் பெருகுகிறது.

இத்தொகுப்பில் இருக்கும் 12 கதைகளும் செனெகல் நாட்டின் எளிய மக்களின் வாழ்வியல் பதிவுகள். மூலநூல் வெளியாகி ஏறத்தாழ 60 ஆண்டுகள் கழித்து, இத்தொகுப்பு தமிழில் வெளிவந்துள்ளது. வெளியீட்டாளரான கலப்பை பதிப்பகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். லிங்கராஜா வெங்கடேஷ் என்ற மொழிபெயர்ப்பாளரின் பெயரை இதற்கு முன் அறிந்ததில்லை . எளிமையான மொழி, தடையற்ற பிரவாகம், வாசிப்பை வசதியாக்குகிறது. பாராட்டுகள். பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள எளிய மக்களின் வாழ்வியலை அறியவும், 60 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திற்குள் பயணித்த மாறுபட்ட அனுபவம் பெறவும் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு.


தொல்குடித் தழும்புகள்

(சிறுகதைத் தொகுப்பு)

ஆசிரியர்: செம்பேன் உஸ்மான்

பிரெஞ்சு வழி ஆங்கிலத்தில்: லென் ஆர்ட்சன்

ஆங்கிலம் வழி தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ்

வெளியீடு: கலப்பை பதிப்பகம் (94448 38389)

விலை: ₹180/-

இணையத்தில் வாங்க

தொல்குடித் தழும்புகள் – Commonfolks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *