சுந்தர ராமசாமியின் பிரமிள் – நினைவோடையை முன்வைத்து
1.
ஞானியரின் துயரம் ஞானியரே அறிவர் என்கிறார் ஓஷோ. ஞானிகளுக்கும் துக்கம் உண்டு. மனதினை ஒரு கருவியைப்போல தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு நிலையே ஞானமடைதல். மனிதனை மனதானது நிரந்தரமாக ஆட்கொள்வதே மனிதனின் துக்கம். மனதின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் மனித இயல்பு நோய்க்கூறானது. துயர் மண்டியது. மனம் எண்ணங்களில் உயிர் வாழ்கிறது. எண்ணங்களை காம குரோத மோகம் என்னும் முக்குணங்கள் பீடித்திருக்கின்றன. மனதின் அரூப இருப்பாக அகங்காரம் உள்ளது. குழந்தமையைச் செரித்து பால்யத்தை நோக்கிப் பயணிக்கும்போது நாம் இழப்பது இயற்கையோடு ஏற்பட்டிருந்த ஒத்திசைவை.
மனிதனை அவனின் நோயிலிருந்து விடுவிக்கும் நோக்கம் கலை இலக்கியத்திற்கு உண்டு. கலை இலக்கியம் மனிதனை மேன்மைப்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை. வாசிப்பு மனிதனை மென்மையானவனாக மாற்றும் என்பது மு.வரதராசனின் அவதானிப்பு. தீவிர கலை இலக்கிய ஈடுபாடு எப்போதுமே அச்சத்தோடு எதிர்கொள்ளப்படுகிறது. ஒட்டுமொத்த புறச்சூழலும் அதற்கு எதிராக தடுப்பரண்களை எழுப்புகிறது. கலைஞன் ஓராயிரம் மீறல்களுக்கு பின்னரே நிகழ்கிறான். புறச்சூழலின் அழுத்தங்கள் அவனை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. பெருங்கும்பலுக்கு எதிரான தனித்த பயணி அவன். தனித்திருப்பதன் அத்தனைச் சாத்தியங்களும் அவனை மோதிக்கடக்கின்றன. காலத்தின் களிம்பு கலைஞனை பட்டை தீட்டுகிறது. கூர்மைகொள்ளச் செய்கிறது. சதா கொந்தளிப்பில் ஆவியாகி வான்நோக்கிச் சீற்றம் கொள்ள நிர்ப்பந்திக்கிறது. கலைஞனாக இருப்பது அவனுக்கு சாபமாகவும் அவன் எழுந்து வந்த மண்ணுக்கு வரமாகவும் அமைகிறது. கலைஞன் காலத்தின் குழந்தை. உடுமண்டலங்கள் அவனைப் பேணிக்காக்கின்றன.
2.
சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் பிரமிளைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். பிரமிளின் இறுதிக் காலத்தில் அவரை நேரில் கவனித்துக்கொண்ட ஒரு நண்பர் அதிர்ஷ்டவசமாக எனக்கு நண்பராக வாய்த்தார். அப்போது கரூரில் புரசல் வேலையில் இருந்தேன். என் அத்தான் ஒருவரின் மூலம் அந்த ஈரோடு நண்பர் அறிமுகமானார்.
”மாப்ள ஒரு புத்தகப் புழு” என்று அத்தான் என்னை அந்த ஈரோடு நண்பருக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிரமிள் குறித்த சில சித்திரங்களை அவர் அன்றெல்லாம் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவரோடு பேசியதில் இலக்கியம் சினிமா போன்ற கலைகள் மீது அவருக்கு ஆர்வம் இல்லை என்பது தெரிய வந்தது. ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் மீது மதிப்பும் ஓஷோ பெரிய படிப்பாளி மட்டுந்தான் என்று தள்ளி வைக்கும் பார்வையும் அவரிடம் காணப்பட்டது. கலை வடிவங்களை முற்றாக நிராகரிக்கும் மனநிலையில் அவர் இருந்தார். சத்ய ஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியைத் தான் பார்த்ததாகவும், அப்படத்தில் கொண்டாடும் விதத்தில் என்ன இருக்கிறது என்பது தனக்குப் புரியவில்லை என்றும் சலித்துக்கொண்டார். அச்சொற்கள் அப்போது எனக்கு அதிர்ச்சியும் நம்ப முடியாமையையும் அளித்தன. அந்த நண்பர் மணமாகி விவாகரத்து பெற்றிருந்தார். தன்னுடைய தேடலுக்கு அவை ஒத்துவரவில்லை என்பதால் லௌகீக உலகத்தை விட்டு வந்திருந்தார். ஞானந்தேடி அலைவதே தன்னுடைய இறுதி இலக்கு என்று கூறினார். பிரமிளின் சிலதனிப்பட்ட குணாதிசயங்களை சொற் சித்திரங்களாக வரைந்து காட்டினார். நம்ப முடியாத நிகழ்வுகளாக அவை இருந்தன. குறிப்பாக பிச்சைக்காரர்களிடம் பிரமிளுக்கு இருந்து வந்த பிரேமை. பிரமிளின் வாசகர்களுக்குள் நிரந்தரமாக பிரமிள் குடியிருந்து வருவதை அன்றுதான் முதன்முதலில் நேரில் கண்டுகொண்டேன்.
அந்நாட்களில் சுந்தர ராமசாமியைத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். அவரின் விரிவும் ஆழமும் தேடி கட்டுரைத் தொகுப்பு என்னை தீவிர இலக்கியத்தின் பால் ஆற்றுப்படுத்திற்று. இப்படி விழுந்து விழுந்து வாசிக்கிறோமே இது சரிதானா? வாழ்க்கைக்கு இதனால் எல்லாம் பயன் உண்டா? வெறும் கட்டுக்கதைகளை வாசித்து போதையடிமை போன்று, கதை நாவல் என்பனவற்றில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறேனா என்ற குழப்பமும் தடுமாற்றமும் கொண்டிருந்தேன்.வறுமையும் தாழ்வுணர்சியும் அளிக்கும் யதார்த்தத்தை நேர்கொண்டு வாழப் பயந்து தப்பித்துக்கொள்ள நான் அணிந்து கொள்ளும் முகமூடிதான் தீவிர வாசகர் என்பதா?. அக்காலத்திய குழப்பங்களை நீக்கி நம்பிக்கையை அளித்த நுால் சுந்தர ராமசாமியின் விரிவும் ஆழமும் தேடி கட்டுரைத் தொகுப்பு. அந்நுால் அளித்த உற்சாகத்தில் அவருக்கு கடிதங்கள் எழுதினேன். எதிர்பாராத விதமாக உடனே அவரிடம் இருந்து பதில் வந்தது.
பெரும்பாலும் பொது நுாலகங்களை நம்பி வாசித்து வளர்ந்த காரணத்தால் சில ஆசிரியர்களை வாசிக்கும் வாய்ப்பே அமையாமல் போனது. பிரமிளும் அந்த வகையில் வாசிக்க கிடைக்காதவராக இருந்தார். சமீபத்தில் கால சுப்பிரமணியம் பிரமிளின் அத்தனைப் படைப்புக்களையும் பெருந்தொகை நுாற்களாக தொகுத்தளித்த பின்னரே அக்குறை நீங்கியது. பிறிதொரு காரணம் சுந்தர ராமசாமியின் சொற்களின் ஊடாக அறியக் கிடைத்த பிரமிள், அவர் மீது ஒருவித ஒவ்வாமையும் உருவாகி இருந்தது.
தமிழ்ச் சூழலில் பிரமிள் குறித்த விரிவான அறிமுகம் அரிது. இன்று வரை அவரை கொண்டுவந்து சேர்க்கும் அக்கறையோடு அவரின் ஒரு சில வாசகர்களே செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். காஞ்சனை சீனிவாசன், கால சுப்பிரமணியம், பாலா கருப்பசாமி, மயன் ரமேஷ் ராஜா என்று சிலரே குறிப்பிடப்பட வேண்டியவர்கள். பிரமிள் கவிதைகளின் பெருமதி குறித்து பாலா கருப்பசாமி தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். படைப்பூக்கமும் கவித்துவமும் நிறைந்த சொற்கள். பிரமிளை இம்மண்ணில் நிலைப்படுத்தும் பங்கினை வாழ்நாள் நோக்காகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இதைத்தவிர்த்து வேறு எந்தக் குழுக்களில் இருந்தும் எந்தவித மதிப்பீடுகளும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை.
3.
சுந்தர ராமசாமியின் பிரமிள் நினைவோடை பிரமிளுக்கு நியாயம் செய்வதாகவே தோன்றுகிறது. பிரமிள் மீது பொதுவெளியில் பகிரப்படும் குற்றச்சாட்டுக்களை மட்டுமே சுந்தர ராமசாமி தன்னுடைய நினைவுகளாக பதிவு செய்து விட்டுப் போகவில்லை. பிரமிள் குறித்த முழுமையான சித்திரத்தை அவரின் ஆளுமையின் பல்வேறு கோணங்களை இந்த நினைவோடையில் பதிவு செய்துள்ளார்.
பிரமிளோடு நெருங்கிப் பழகி கசந்து, பின்னர் பிரிந்து சென்றவர்கள், அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஒரே விதமாகத்தான் இருக்கின்றன. ஆகவே அவற்றையெல்லாம் பிரமிள் என்ற தனித்த ஆளுமையின் விரும்பத் தகாத மீறல்களாகவே கருத வேண்டியுள்ளது.
சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ராஜமார்த்தாண்டன் ஆகியோரோடு பிரமிளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இலங்கையில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்த பிரமிள் இருபதுகளை ஒட்டிய இளைஞர். அந்த இளம் வயதிலேயே கலைஞனுக்குரிய அங்கீகாரமும் ஒளிவட்டமும் அவருக்கு எளிதாகக் கிடைத்திருக்கிறது. அறிவின் தீட்சண்யத்தால் அவர் முக்கியமானவராக அப்போதே அடையாளம் காணப்பட்டுள்ளார். எழுத்துவில் அவரின் கவிதைகளை வெளியிட்டு அவரை தன்னுடைய கண்டுபிடிப்பாகவே சி.சு.செல்லப்பா உடைமை கொண்டாட விரும்பி உள்ளார்.
சி.சு.செல்லப்பாவிடம் இருந்துவந்த இந்த மனநிலையை சுந்தர ராமசாமி குறிப்பிட்டுள்ளார். க.நா.சுப்பிரமணியத்திற்கு பிரமிள் மீது அப்போதே ஒவ்வாமை ஏற்பட்டு இருந்திருக்கிறது. க.நா.சுப்பிரமணியம் ஒருவரை ஒரு சொல் மூலம் நிலைநிறுத்தும் அதிகார மையமாக இருந்த காலம் என்கிறார் சுந்தர ராமசாமி. ஆனால் அவர் பிரமிள் குறித்து பொருட்படுத்தும் விதத்தில் ஏதும் எழுதியிருக்கவில்லை. க.நா.சுப்பிரமணியத்திற்கும் சி.சு.செல்லப்பாவிற்கும் இருந்த முரண்களும் இதற்கு காரணமாக இருக்கக் கூடும்.
பிரமிளின் கவிதைகள் ஆரம்பத்தில் இருந்தே புதிர் தன்மை நிறைந்தவையாகத்தான் இருந்திருக்கின்றன. எழுத்துவில் வெளியிட்ட சி.சு.செல்லப்பாவிற்கே பிரமிளின் கவிதைகளின் மீது புகைமூட்டம் உண்டு. ந.பிச்சமூர்த்தி சி.சு.செல்லப்பாவிற்கு பிரமிளை புரிந்துகொள் உதவியிருக்கிறார். சுந்தர ராமசாமியும் இதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கிருஷ்ணன் நம்பிக்கும் இதே நம்பிக்கை. ஆனாலும் பிரமிளின் கவித்துவம் அவரைத் தவிர்க்க முடியாத ஒரு படைப்பாளுமையாக நிலைநிறுத்தி உள்ளது.
சிவராமூவை நேரில் பார்ப்பதற்கு முன்பே தனக்கு அவர் மீது கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ஏற்பட்டு இருந்தது என்று தான் சுந்தர ராமசாமி பிரமிள் நினைவோடையைத் தொடங்குகிறார். ஜே. ஜே. மீது பாலுக்கு இருந்ததும் இதே விதமான ஈடுபாடுதான் என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. எஸ்.பொ.வின் தீ நாவல் சார்ந்து எழுந்த விவாத்தின் மூலமாக பிரமிள் அறிமுகம் ஆகிறார். சிவராமூவுடன் ஓருயிரும் ஈருடலும் ஆன பின்னர் இதைப்பற்றி தான் விவாதித்து இருப்பதாக சுந்தரராமசாமி தெரிவிக்கிறார் பிரமிள் அவருக்கு எதிரான ஒரு விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ளக் கூடியவர் அல்ல என்றும் தன் முழு மூளையையும் தன்னை நியாயப்படுத்துவே வீணாக்கிக் கொண்டுருப்பார் என்றும் பிரமிளின் விமர்சனப்பாங்கை சுட்டுகிறார் சுந்தர ராமசாமி. வெற்றி பெற வேண்டும் என்கிற ஆத்திரந்தான் பிரமிளின் நோக்கமாக இருக்குமாம்.
சிவராமூ தீ பற்றி எழுதியிருந்த கடிதத்திற்கு ஒரு பதிலை மு.தளையசிங்கமும் எழுதியிருக்கிறார். தளைய சிங்கம் சொல்லியிருந்த விசயங்களுக்கு மேலாக அதில் ஒருதார்மீகமான குரல் இருந்தது என்கிறார் சுந்தர ராமசாமி. இந்த தார்மீக அம்சம் இல்லாத ஆற்றல்கள் மீதோ, சாமர்த்தியங்கள் மீதோ தனக்கு அடிப்படையான மரியாதை கிடையாது என்று சொல்லி பிரமிள் விமர்சனம் மீதான தன் மதிப்பீட்டை எழுதுகிறார்.
தமிழ் இலக்கியச் சூழலுக்குள் பிரமிள் வருகை பலவிதமான எதிர்வினைகளை உண்டாக்கி இருக்கிறது. சுந்தர ராமசாமி, நகுலன், சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி போன்றோருக்கு பிரமிள் வியக்கத்தக்க ஆளுமை. கு.அழகிரிசாமிக்கும், பார்த்தசாரதிக்கும் ஒவ்வாமையை அளிக்கக்கூடியவர். கு.அழகிரிசாமி ”முதலில் அந்தாளை தமிழ் படிக்கச் சொல்லும் அதற்கு அப்புறம் சிந்தனை மயிர் எல்லாம் பார்க்கலாம்” என்று சொல்லி பிரமிளை நிராகரிக்கிறார். ஆனால் கசடதபற குழுவினரான வெங்கட் சாமிநாதன், அசோகமித்ரன், ஞானக்கூத்தன், ந.முத்துச்சாமி போன்றோருக்கு பிரமிள் மீது பாராட்டுணர்வு இருந்திருக்கிறது.
பிரமிளுக்கு ஓவியனாகும் கனவுதான் முதன்மையானது. சென்னைக்கு வந்த நோக்கமே அதுதான். பாரிஸ் செல்லும் வாய்ப்பினை ந.முத்துச்சாமி மூலம் தொடர்ந்து முயன்றிருக்கிறார். ஓவியராக அவர் பரிணமிக்கும் வாய்ப்பிற்காகத்தான் சென்னையில் நண்பர்களுடன் வாழ்ந்திருக்கிறார். ஆனால் கடைசி வரை அவருக்கு பாரீசில் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை.
சுந்தர ராமசாமி பகிர்ந்து கொள்ளும் சில நினைவுகளில் இருந்து பிரமிளின் விசித்திர குணஅமைப்பு நமக்குத் தெரியவருகிறது. எந்த இலக்கியக் கூட்டத்திலும் பிரமிள் கொண்டிருக்கும் மௌனம், கிருஷ்ணன் நம்பியின் ஊரில் தங்கியிருந்த நாட்களில் பிரமிள் தான் தங்கியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த சிறுவனை அடித்ததாக எழுந்த புகார், சுந்தர ராமசாமியின் மகளை சென்னையில் சினிமா தியேட்டர் அருகே சந்தித்த போது சுந்தர ராமசாமியை நடிகராக கருதி பகடி செய்து பேசியது என நிறைய உதாரணங்களை சுந்தர ராமசாமி தருகிறார். பிரமிளிடம் ஒருவித வக்கிரம் உண்டு. வெளிப்படையாகச் சொல்வதானால் சிறுவயதிலேயே ஒரு மனநல மருத்துவரிடம் அவர் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்கிறார் சுந்தர ராமசாமி.
கசடதபற நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கியக் கூட்டத்தில் சுந்தர ராமசாமி ஒருமுறை பிரமிளைச் சந்திக்கும்போது அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறார். ஆனால் பிரமிள் அதைப் பொருட்படுத்தாதவராக இருந்து விடுகிறார். அச்செயல் சுந்தர ராமசாமியை பாதித்து விடுகிறது. அதன்பின்னர் பிரமிளைச் சந்திக்க அவருடைய அறைக்குச் சென்றபோது சுந்தர ராமசாமி அவரை வணங்கவில்லை. இது குறித்து பிரமிளிடம் கேட்டபோது தன் மனதில் அலட்சியம் எதுவும் இருக்கவில்லை என்றும், சம்பிரதாயங்களைத் தவிர்ப்பது தனது வழக்கம் என்றும் பிரமிள் விளக்கம் அளிக்கிறார். அவ்விளக்கம் தனக்கு பிடித்திருந்து என்கிறார் சுந்தர ராமசாமி. பிரமிளை சந்திக்க விரும்பி நாகர்கோவில் வந்து அவரைச் சந்திக்காமலே திரும்பிச் செல்ல நகுலனுக்கும் நேரிடுகிறது.
ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் வெளிவந்து பரவலான வாசகக் கவனத்தைப் பெற்ற போதுதான் பிரமிளுக்கு சுந்தர ராமசாமியின் மீது உச்சமான வெறுப்பு ஏற்பட்டு கடுமையாக விமர்சனங்கள் எழுகின்றன. பிரமிள் தன் அத்தனைச் சக்தியையும் திரட்டி ஜே.ஜே.சில குறிப்புகளை நிராகரிக்கிறார். பிரமிள் தனது வசைகளின் மூலம் சுந்தர ராமசாமியை அழித்துவிட முடியும் என்று நினைத்தார். அவர் தாக்கி எழுதினால் அந்நாவல் அழிந்து போய்விடும் என்று உத்தேசித்திருந்தார் என்கிறார் சுந்தர ராமசாமி. பிரமிளின் விமர்சனத்தை சுந்தர ராமசாமி எதிர்கொள்ளவில்லை. அவரின் எந்த ஒரு விமர்சனத்திற்கும் அவர் எதிர்வினையாற்ற வில்லை. அதற்குக் காரணம் பிரமிளின் விமர்சனத்தில் அரசியல் நோக்கங்கள் இருந்தன என்கிறார் சுந்தர ராமசாமி.
ஒருவிதத்தில் இந்நுால் முழுக்க பிரமிளின் இருளான பக்கங்களே உறைந்து உள்ளன. பிரமிள் மீது பிரியமும் ஈடுபாடும் கொண்டு அவரை நெருங்கி்க்கொண்டே இருப்பவர்களைப் போல அவரிடம் ஒவ்வாமை கொண்டு விலகிச் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கையும் எப்போதும் இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. பிரமிள் நடத்தைகளில் ஆரம்பத்தில் ஒருவித பிராமணிய மனோபாவம் இருந்தது. அவர் ஆங்கிலத்தில் கடிதங்கள் எழுதுவார் என்றும், அது அக்காலத்திய பிராமணிய மனோபாவம் என்றும் இலங்கையின் முதல் நிலைச் சாதியாக இருந்து வந்தவர் தமிழகம் வந்த பின்னர் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது போன்று உணர்ந்திருக்கலாம் என்றும் அதுவே கூட பிரமிளின் பிராமணிய வெறுப்புக்கு ஒரு தோற்றுவாயாக இருந்திருக்கக் கூடும் என்று சுந்தர ராமசாமி சந்தேகிக்கிறார். இந்நோக்கை மறுப்பதற்கில்லை.
தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவர்தான் பிரமிள். ஆனாலும் அவர் ஒரு மைனர் பொயட் தான் மேஜர் பொயட் இல்லை என்று கூறி பாரதியோடும் கம்பனோடும் பிரமிளை ஒப்பிடுகிறார் சுந்தர ராமசாமி. பிரமிளுக்கு ஒரு மேஜர் பொயட்டாகும் தகுதி உண்டு. அவரது சுபாவத்தினால் அது சாத்தியம் ஆகாமல் போய்விட்டது. அவரின் திறன் சண்டையிடுவதிலேயே அதிகம் வீணாகி விட்டது. மேலும் பிரமிளுக்கு பாரதி அளவுக்கு சமூக அக்கறை கிடையாது என்று வரையறை செய்கிறார் சுந்தர ராமசாமி.
இன்றும் தமிழ்ச் சூழலில் பிரமிள் மீது இரண்டு விதமான மனநிலைகள் பாவிக்கப்படுகின்றன. முற்போக்கு முகாமினைச் சேர்ந்தவர்கள் அவரை வாஞ்சையோடு அணுகி கொண்டாடுகிறார்கள். பொதுவுடைமை தத்துவத்தின் மீது பிரமிளுக்கு இருந்த விமர்சனங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளக் காரணமாக இருப்பது கடைசிக்காலத்தில் பிரமிளிடம் வெளிப்பட்ட பிராமண மனோபாவத்தை கண்டித்த எழுத்துக்கள்தான். மற்றொரு பிரிவினருக்கு பிரமிள் மீது வழிபாட்டுணர்வு இருக்கும் அளவில் அவரின் படைப்புக்களோடு போதிய பரிச்சயம் இல்லை.
இந்நுால் பிரமிளை நெருங்கிச் சென்று புரிந்து கொள்ள ஒரு துாண்டுதலாகவே இருக்கிறது. பெருங்கவிஞர் ஒருவரை, அவரின் பன்முகத்தன்மையை முழுதாக உள்வாங்கிக் கொள்ள சுந்தர ராமசாமி தரும் சித்திரங்கள் வலுச்சேர்க்கும் விதமாகத்தான் உள்ளன.
4
இன்றில் நின்றுகொண்டு முன்னோடிகளின் சொற்களை கற்க விரும்பும் ஒருவனுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. ஒருபுறம் வாசிப்புச் சவாலைத் தராத, அரசியல் கொள்கைகளுக்காக எழுதப்பட்டுள்ள, ஆழமும் விரிவும் அற்ற சோகையான படைப்புகள். மறுபுறம் நுட்பமும் மேலதிக கவனமும் இடைவிடாத உழைப்பும் கோரும் செவ்வியல் ஆக்கங்கள்.
ஆரம்ப வாசகன் கிளுகிளுப்பூட்டும் படைப்புகள் மீதே ஈர்ப்பும் பிரியமும் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதையும் தாண்டி அவன் தீவிர இலக்கியத்தின் பக்கம் வருவான் எனில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் குழுச்சண்டைகளைக் கண்டு திகைத்துப் போவான். ஒரு குழு கருத்தியல் எதிரியாக கருதும் பிற குழுக்களின் மீது வைக்கும் விமர்சனங்களால் குழம்பிப்போவான். சந்தர்ப்ப வசத்தால் அவனுக்கு அறிமுகமாக நேரிடும் ஒரு குழுவின் பார்வைக்குள் தன் வாசிப்பை மட்டுப் படுத்திக்கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். சுஜாதாவின் சொற்களைக் கொண்டு சொல்வதானால் பசித்த புலியாக இருக்கும் வாசகனே அதையெல்லாம் தாண்டி வெளியே வரச்சாத்தியம் உள்ளவன்.
புதுமைப்பித்தன் கல்கி என ஆரம்பித்த இக்குழுக்களின் சமர். பின்னர் எழுத்து, கசடதபற வானம்பாடி என்று உக்கிரம் கொண்டது. இன்று முற்போக்கு, வலதுசாரிப்போக்கு என்று பொங்கி நுரைத்துக்கொண்டு இருக்கிறது. வெறுப்போடு உரையாடும் முகங்கள் இலக்கியச் சூழலில் அளிக்கும் பின்விளைவுகள் பாதகமானவை. அவை ஒரு தரப்பின் நல்லதுகளை இல்லாமல் ஆக்குகின்றன. இருட்டடிப்பு செய்கின்றன. சாரு நிவேதிதாவை சமகால உதாரணமாகச் சொல்லலாம்.
ஈழத்தின் ”முற்போக்கு சர்வாதிகாரத்தில்” இருந்து தப்பித்து ஓடியவர் என பிரமிளை மு.தளையசிங்கம் மதிப்பிடுகிறார். அந்தளவிற்கு ”முற்போக்கின் சர்வாதிகாரம்” அந்நாட்களில் ஈழத்தின் சிந்தனைத்தளத்தில் வலுவான ஒரு தரப்பாக செயல்பட்டிருக்கிறது. நகைமுரணாக இன்று தமிழகத்தில் பிரமிளைக் கொண்டாடும் குறுங்குழுக்களில் முற்போக்கினரும் உள்ளடங்கி இருக்கின்றனர்.
பிராமண மனோபாவத்தை கண்டறிந்து அவற்றை நையப்புடைக்க பிரமிள் எழுதிக்குவித்த நுாற்றுக்கணக்கான பக்கங்களே அதற்குக் காரணம். இன்று பிராமண மனோபாவம் என்பது காலாவதியாகி விட்ட கண்டுபிடிப்பு. பிராமண மனோபாவம் என்பதை கருத்தியல் வல்லாண்மையாக பிரமிள் கருதினார். அம்மனோ பாவம் கொண்டிருந்தவர்களை பாசிசத்தின் முகங்கள் என அடையாளப்படுத்தினார். அந்நோக்கில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், அசோகமித்ரன் என தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளை நிராகரிக்கும் முடிவிற்கு வந்து சேர்கிறார்.
.சுந்தர ராமசாமியை, வெங்கட் சாமிநாதனை, அசோகமித்ரனை வாசிக்காமல் இருந்துவிடும் ஒருவனுக்கு நவீனத்துவத்தின் சாதனைகளை அனுபவமாக்கி கடந்துபோகும் ஊழ் அமையாமல் போகும். அதே போன்று பிரமிளை ஒதுக்கி வைப்பது சிந்தனையின் மின்னல் வெட்டுக்களை அறிமுகம் செய்துகொள்வதில் இருந்தும், கண்டடைதலின் பரவசத்தில் இருந்தும் துண்டித்துவிடும். ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு யுகமாற்றத்தின் புலரியாக இருக்கிறது.
நாட்டார் கலைகளுக்கு உரிய அங்கீகாரங்களை தமிழ்ச்சூழலில் பெற்றுத்தந்தவர்களில் முக்கியமான பங்களிப்புச் செய்தவர் வெங்கட் சாமிநாதன். யாத்ரா காலகட்டத்தை நன்றியோடு நினைவு கூர வேண்டியுள்ளது. வெங்கட்சாமிநாதன் வில்லிசை மற்றும் பாவைக்கூத்திற்கு ஆற்றிய பங்களிப்பை சோ.தர்மன் வரவேற்று, பாராட்டி உள்ளார். மனந்திறந்து எழுத்தில் பதிவு செய்துள்ளார். பாவைக்கூத்தும், வில்லிசையும் பிராமணிய மனோபாவத்திற்கு உவப்பானவை அல்ல.
சம காலத்தில் இடைநிலைச்சாதிய – பட்டியலின சாதிய மனோபாவங்களும் தீவிரப்பட்டு வருகின்றன. அரசியல், வணிகம், கல்வி போன்றவற்றில் இடைநிலைச்சாதிகளின் ஆதிக்கமும், அரசூழியத்தில் பட்டியலினச் சாதியினரின் மேலாண்மையும் நடைமுறையில் உள்ளன. பிராமணர்கள் மீது எழுப்பிய, முன்வைத்த அதே குற்றச்சாட்டுக்களை இடைநிலை – பட்டியலின சாதியினர் மீதும் எழுப்ப முடியும். இவற்றையும் கருத்தில் கொண்டே சமூக நீதியின் அவசியத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. ஒரு நோக்கில் இன்று பிராமணிய மனோபாவம் என்பது அது சுட்டி நின்ற இனக்குழுவினரிடம் மட்டும் இல்லாமல் பொதுவாக அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்றி “அடைந்த” அத்தனைப் பேரிடமும் காணக்கிடைக்கிறது. பொது எதிரியாக ஒரு இனக்குழுவினைச் சுட்டிவிட்டு பிற இனக்குழுக்கள் மேற்கொள்ளும் ஜனநாயக விரோப் போக்குகளைக் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது.
இந்நோக்கில்தான் பிரமிளும் சுந்தர ராமசாமியும் தேவையாக இருக்கின்றனர். அவர்களை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியுள்ளது. கொள்ள வேண்டியவற்றையும் தள்ள வேண்டியவற்றையும் பகுப்பாய்வு செய்ய வேண்டியதே நம் காலத்தின் அறைகூவல்.