தன் நிழலில் தகிப்பாறும் பறவை

(பிரமிள் படைப்புகளை முன்வைத்து உரையாடுதல்)

தமிழ்ச் சிந்தனையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியர்களில் புதுமைப்பித்தன், க. நா. சுப்பிரமணியம், மு.தளையசிங்கம், பிரமிள் மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோர் முதன்மையானவர்கள். இந்த தலைமுறையில் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சு.வேணுகோபாலைப் போல. படைப்பாளிகளாக மட்டுமின்றி விமர்சகர்களாக நிறைய எழுதியிருக்கிறார்கள். வாழ்ந்த காலத்தை முழுமையாக எதிர்கொண்டிருக்கிறார்கள். எதிர்கொண்ட விதங்களை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

புதுமைப்பித்தன் அவர் காலகட்டத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார். இலக்கினை மட்டுமே உற்று நோக்கி, காற்றில் பறக்கும் வேட்டை நாயின் ஆவேசப்பாய்ச்சல் அது. அப்பாய்ச்சல் இந்தியாவின் பிற மொழிகளில் மிகத் தாமதமாக ஏற்பட்ட நவீனத்துவ பிரக்ஞையை, முன்கூட்டியே தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்தது என்கிறார் ஜெயமோகன். அதுவே தமிழ்ச் சிந்தனையில் பாரதுாரமான பாதிப்புகள் ஏற்பட கால்கோளாக அமைந்திற்று. சிறுகதைகளில் சிகரங்களை உண்டாக்கிற்று. நாவல் கலையில் உடல் சிறுத்துப்போன சவலைப்பிள்ளைகளை உலகத்தரம் என்று கொண்டாடத் துாண்டிற்று.

பாரதியிடம் இருந்த லட்சியவாதம் புதுமைப்பித்தனில் ஒளிக்குறைந்து காணப்பட்டது. அது ஒருவிதத்தில் லட்சியவாதத்தை மறுக்கும் லட்சியவாதம். உன்னதங்களை ஐயப்படும் உன்னதநோக்கு. இருளோடு பழகிப் பழகி இருளை மட்டுமே இயல்பென்று காணும் தரிசனம். அகால மரணம் புதுமைப்பித்தனை மட்டுப்படுத்திற்று. அதனால் அவர் முழுமையாக நிகழ வாய்ப்பில்லாமல் போயிற்று. பிறப்பால் அமைந்த சைவ மரபினை நவீனத்துவ கறார் தன்மையோடு அவர் நேர்கொண்ட பயணம் பாதியில் முடிந்தது.

பாரதிக்குப்பின் தமிழ்ச் சிந்தனையில் ஏற்பட்டிருந்த புழுதிப்படலத்தை அதிகம் கலைத்தடுக்கிய ஆளுமை புதுமைப்பித்தன். அவரோடு செயல்பட்ட அத்தனைப் படைப்பாளிகளையும் விட அவரின் சொற்களுக்கு அணைந்து விடாத கொதிப்பு இருக்கிறது. அடுத்த தலைமுறையில் சுந்தர ராமசாமி அதை ஊதி ஊதி பெருந்தீ என்றாக்கினார். அணுக்கத் தொண்டராக இருப்பினும் ஆளுமைக்குறைவினால் ரகுநாதனிடம் புதுமைப்பித்தனின் பாதிப்பு நல் விளைவுகளாக வெளிப்படவில்லை.

புதுமைப்பித்தனிடம் காணப்படாத முழுமை நோக்கினை தன் பார்வையாக கொண்டிருந்த படைப்பாளுமை மு.தளையசிங்கம். பாரதிக்குப்பின் இத்தரத்தில் செயல்பட்டவர் அவர் ஒருவரே. ஆங்கிலக்கல்வி அளித்த இறக்கைகளை கொண்டிருந்தாலும், அவரின் கால்கள் இந்திய மண்ணில் ஆழ்ப் பதிந்திருந்தன. இந்திய மரபும் அதன் தத்துவநோக்கும் மு.தளையசிங்கத்திடம் பூரணம் கொண்டது. பிரபஞ்ச யதார்த்தம் என்றும், சர்வோதயம் என்றும் மு.தளையசிங்கம் மானிட விடுதலை குறித்து கனவுகள் கண்டார். அக்கனவுகளின் செயல்திட்டமாக மெய்யுள் பிறந்தது. முன் சுவடற்ற பயணத்திற்கே உரிய தடுமாற்றங்களும், துல்லியமாக, திசைகளைச் சுட்டாத மயக்கங்களும் கொண்டிருந்தாலும் மெய்யுள் பொருட்படுத்தத் தக்கவேண்டிய முயற்சி. மு.தளையசிங்கத்தின் மறைவிற்கு பின் தமிழ்ச் சிந்தனை உலகம் அவரை உறைய வைத்து விட்டது. அது. இன்றுவரை இடையறாமல் நீளும் குளிர்காலத்துயில். புதுமைப்பித்தனுக்கு வாய்த்ததைப் போன்று அப்போஸ்தலர்களும், இலக்கிய மடங்களும் மு.தளையசிங்கத்திற்கு அமையவில்லை. மு.தளையசிங்கத்திடம் காணப்பட்ட புரட்சிகரம் கூட தோழர்களை ஈர்க்கவில்லை. அரவிந்தர், அத்வைதம், மெய்யுள் போன்றவை மரபினை பெருஞ்சுமை எனக் கருதும் மனங்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை போலும்.

ஓர் இளம் வாசகனுக்கு பிரமிளிடம் கற்றுக்கொள்ள அசலான தருக்கத் தருணங்கள் இருக்கின்றன. செந்தழல் ஆட்டமென பிரமிளிடம் காணப்படும் விவாத நடனம் உக்கிரமானது. பொதுப்புத்தியில் நல்லியல்பாக கொண்டாடப்படும் மனப்பாவனைகளில் உள்ளுறைந்து நிற்கும் மேட்டிமை நோக்கினை பிரமிளைப் போன்று சுட்டுவிரல்கொண்டு விலக்கி, அப்பால் தள்ளிவைத்து அடையாளம் காட்டிய வேறொருவர் தமிழில் இல்லை. முரண் இயக்கத்தின் வலுவான எதிர் தரப்பாக பிரமிளுக்கு தமிழ்ச் சிந்தனைப் பள்ளியில் என்றுமே ஓர் இடம் உண்டு. பிரமிளின் மனக்கோணல்களைப் பூதாகரப் படுத்தி, அவரின் முக்கியத்துவத்தை இல்லாமல் ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜி.நாகராஜனை பொறுத்துக்கொண்டவர்கள்தாம் நாம். பிரமிள் உயிர்த்தெழுவதை நம்மால் வரவேற்க இயல்வதில்லை. காலந்தோறும் அவர் சிலுவையில் ஏற்றப்படுகிறார். தாக்கீதுகள் தயார் செய்யப்படுகின்றன. மீள் பரிசீலனை அவர் விசயத்தில் மட்டும் அநீதியாகக் கொள்ளப்படுகிறது.

அவரை எதிர்கொள்ளும் துணிவின்றி, புறக்கணிப்பின் ஊடாக கடந்து செல்ல முயற்சித்தது சென்ற தலைமுறை. ஓரளவு வெற்றியும் பெற்று விட்டது. இந்தத் தலைமுறையிலும் பிரமிளைப் பொருட்படுத்தும் குரல்கள் மிக அரிதாகவே இருக்கின்றன. பிரமிளின் முக்கியத்துவம் இலக்கியச் செயல்பாடுகளில் படிந்திருக்கும் சனாதனப் போக்குகளை சுட்டிக்காட்டிய தருக்கங்களில் உள்ளது. எதிர் தரப்புகளையும் பொருட்படுத்திய விரிந்த பார்வையில் உள்ளது. புரட்சிகரத்தை நிராகரித்தாலும் கூட புரட்சிகரம் கொண்டுவந்து சேர்த்த மேன்மைகளை விதந்தோதும் பெருந்தன்மையில் உள்ளது. மனித வாழ்வை பூரணமாக்கும் விழைவுகளில் உள்ளது.

பிரமிளை அறிவது மின்னலை மிக அருகே காணும் பரவசத்திற்கு இணையானது. கணநேர ஒளிப்பாய்ச்சல் என்றாலும் அதில் நாம் அடைவது பிரபஞ்சத்தையே ஒட்டு மொத்தமாக காணநேரிடும் விஸ்வரூபத் தரிசனம்.

***

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *