வாசிப்பின் புனித துக்கம்

பாதசாரியின் ‘காசி’ சிறுகதையை முன்வைத்து

இலக்கிய வாசிப்பு ஒருவரை மென்மைப்படுத்தும் என்பது கல்வியாளர் மு.வ.வின் வரி. மு.வ.எழுதிய வரிகளில் இருபதாண்டுகளாக என் நினைவில் நிற்கும் வரியும் இதுதான். வாசிப்பு தரும் மென்மை, போட்டிகள் நிறைந்த இவ்வாழ்வில் வெற்றிபெற உதவுமா? வாசிப்பென்பது வரமா சாபமா?

இக்கதையில் சொல்லப்படுகிற காசி தீவிரமாக வாசிப்புப் பழக்கம் உள்ள நீங்களாகக் கூட இருக்கலாம். நான் காசியாக இருந்து வருகிறேன். இக்கதை என்கதையும் கூடத்தான். காசியின் தத்தளிப்பு, அந்நியமாதல், பைத்தியப் பாவனைகள் என்னிடமும் உண்டு. அதை இப்போதெல்லாம் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அனுமதிக்கிறேன். வாசிப்பின் மீது பெரும் பித்துக்கொண்ட அத்தனைப்பேர்களுக்கான ஒரு இடுகுறிப்பெயர்தான் காசி. காசி ஓர் எச்சரிக்கை.  வாசிப்பு அளித்த சிறகுகளால் எவ்வி, மண்மீது காலுன்றி நிற்க இயலாத தடுமாற்றமும், தனக்கு விதிக்கப்பட்ட பயணத்தை மீறி பறந்து விரியும் வரமும் ஒருசேர வாய்த்த உன்மத்த நிலை. வாசிப்பு உங்களுக்குத் தருவது விண்ணோக்கிய  பயணத்தை விழையும் சிறகுகளை. உண்டு பெற்று மண்ணோடு போகும் எளிய மானிடவாழ்விற்கு தேவையற்ற சிறகுகள்.

வாசிப்பிற்குள் நுழைபவர்கள் இரண்டு ரகம். முதல் ரகத்தினர் வாசிப்பை ஒரு பொழுதுபோக்கு நடைமுறையாக நம்புபவர்கள். பொழுதுபோக்கு எழுத்திற்கு எப்போதும் நம்மை கிளுகிளுப்பூட்டும் ஒரே நோக்கம் மட்டுமே இருக்கும். அல்லது அன்றாடத்தின் அலுப்பினைப் போக்கும் அதிபயங்கர சுவாரசியங்கள் கொண்டிருக்கும். பால்யத்தில் நம்மை சாகச நாயகனாக்கி கற்பனையில் கண்டுகளித்திருக்கும் பகல் கனவுகளைப்போன்ற எழுத்துக்கள். அவ்வகை வாசிப்பு ராட்டினம் சுற்றுவதைப்போன்று. உற்சாகமும் உணர்வுப்பீறிடலும் பொங்கிவழிந்தாலும் சுற்றி முடிந்து நிலைகொள்ளும்போது நமக்குள் எந்தவித மாற்றமும் நிகழ்ந்திருப்பதில்லை. ஏறும்போது நின்ற அதே இடத்திற்கு மீண்டும் வந்து குதிப்போம்.

இரண்டாம் ரகத்தினர் வாழ்வை புரிந்துகொள்ள வாசிப்பைத் தேர்ந்தவர்கள்.  ஓரு விதத்தில் நம்மைச்சுற்றி ஆவிகளாக அலையும் ஆத்மாக்கள் நம்மோடு தங்களின் கதைகளைப் பகிர்ந்துகொள்வதைப் போன்றது.  . வாழ்ந்து கண்டடைந்த அவர்களின் அனுபங்களின் மூலம் நம் அகம் விரிவடைகிறது. நெகிழ்கிறது. ஆத்திரம் கொள்கிறது. அலுப்படைகிறது. அன்றாடத்தை மீறிச்செல்ல முயல்கிறது. வீங்கித் தருக்கித் திரிகிறது. ஒவ்வொரு சிறந்த படைப்பும் நமக்குள் ஒரு பரிணாம வளர்ச்சியை உண்டாக்கிவிடுகிறது.

கதைசொல்லியின் நண்பன் காசி. கல்லுாரியில் ஆரம்பிக்கும் நட்பு. வாசிப்பின் ருசி அவர்களை இணைக்கிறது. படிப்பு முடிந்தாலும் விட்டுவிடாமல் தொடர்கிறது. நேற்று காசியிடம் இருந்து ஒரு கடிதம் ”காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம்” என்ற நினைவோடையில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. . கதைசொல்லி அக்கடிதம் அளித்த கொந்தளிப்புகளால் காசியை நினைவில் இருந்து மீட்டி நமக்குச் சொல்லத்துவங்குகிறார். கதைசொல்லி அளிக்கும் தகவல்களின் ஊடாக காசியைப் பற்றி நமக்கு ஒரு சித்திரம் கிடைக்கிறது. காசி தீவிர வாசிப்பாளன். கொஞ்சம் கவிதைகள் எழுதியிருக்கிறான். எந்த ஒரு வேலையிலும் தன்னை ஒப்புக்கொடுக்க இயலாதவன். சதா காமம் கொண்டு அலைபவன். ஆனாலும்  பெண்களை கற்றுக்கொள்ளும் மனம் வாய்க்காதவன். வாசிப்பளிக்கும் ஞானத்தை பைத்தியத்திற்கான ஒரு நீரோடையாக்கி அதில் திளைத்து நீந்திக்களிப்பவன். தன்னை அசாதாரணம் என்று நினைத்து அகங்காரம் கனக்க சாதாரண வாழ்விற்குள் பொருத்திக்கொள்ள விரும்பாதவன். மொத்தத்தில் காசியின் மீது நமக்கு வந்துசேர்வது அச்சமும் வியப்பும் எரிச்சலும் கலந்த ஒரு கலவை மனநிலை.

ஒரு காலத்தில் நானும் வாசிப்பின் மீது எரிச்சலும் வெறுப்பும் அடைந்ததுண்டு. ஒரு நிரந்தர வேலையைத் தேடிக்கொண்டு எல்லாரையும் போல  சாதாரண வாழ்விற்குள் அடைக்கலம் புகுந்தால் போதாதா? என்ற எண்ணத்தில் ஐந்தாறு ஆண்டுகள் போட்டித்தேர்வு நுால்களைச் சுமந்து திரிந்தேன். இலக்கிய பித்தும் ஓஷோவும் துறவு மனநிலைக்கு என்னைத் தயார்செய்திருந்தார்கள். நம் புனைவு வெளியில் இருந்து அறிமுகம் ஆன ஜே.ஜே.யும் வீரபத்திர பிள்ளையும் என்னை உற்சாகப்படுத்தினர். செயலுாக்கம் குறைந்து ஒரு துறவியைப்போல இருந்துவிடும் மனநிலை அவ்வப்போது வந்துநிற்கும். ஆனால் அதற்கிணையாக பெண்ணுடல் மீதான பெரும் இச்சையும் குடும்பக்கடமைகளும் என்னை இந்த வாழ்விற்குள் நிலைக்கச் செய்தன. திருமணம் இன்றி பெண்ணுடல் நம்மண்ணில் சாத்தியமில்லை.

 பாதசாரியைப் போன்று படைப்பு மனநிலை மற்றும் வாசிப்பின் சுமை குறித்த பிம்பங்களை தமிழ்ப்புனைவுவெளியில் எழுதியவர்கள் மிகக் குறைவு. செந்துாரம் ஜெகதீசின் கிடங்குத்தெரு அவ்வகையில் முக்கியமான நாவல். கோபி கிருஷ்ணனின் மொத்த புனைவு உலகமும்  இதுதான். புதுமைப்பித்தனின் கதைகளில் எழுத்தாளரின் அன்றாடப் பாடுகள்தான் எழுதப்பட்டுள்ளன.

இக்கதையில் ஒரு இடத்தில் காசி இப்படிச்சொல்கிறான். பெரும்பாலான ஆண்களுக்கு பொருந்திப்போகக் கூடிய வரிகள்

 ”சிகரெட் பிடிக்கறதையும் மாஸ்டர்பேஷனையும்..எவ்வளவு முயற்சி பண்ணியும் நிறுத்தவே முடியலேடா குணா..சிகரெட்டால எனக்கு ஒண்ணுமேயில்ல. நிகோடின் நெஞ்சுக்குள்ளே பரவி எதுவு’ம் பண்றதா தெரியலே…பால் வராத மொலக்காம்பை உறிஞ்சற மாதிரித்தான் அது எனக்கு. மாஸ்டர்பேஸன்லேயும் ஒரு விஷயம் பல பேர் மாதிரி கைகொண்டு இல்லே. தலையணையை அணைச்சுட்டு..தாயான முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகளத்தான் நினைவிலே அடைச்சு”  என்கிறான் காசி.

அதே போன்று வேலை குறித்து காசி இப்படிச் சொல்கிறான்.

”இல்லடா குணா..எனக்கு வந்து ஜாப் ஒத்து வரலைடா..எந்த ஜாப்புமே ஒத்து வராது..என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலே..தினம் தினம் தினம் ஒரே நேரத்திலே அத அதச் செய்யறது, செயற்கையா டாண்ணு ஒரே நேரத்திற்கு எந்திரிக்கிறது. செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப்புடிச்சிட்டு வெளிக்கு உட்கார்றது, கன் டயத்துக்கு குளியல்..கட்டுப்பாடான தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா…வெறுத்து, குமட்டி…இதுக்கு மேலே பொறுப்புன்னா பயம் வேறே..அதிகாரி உருட்டல்..ஓவர் டைம்..அப்பா”

வாசிப்பு சாபமாக அமைந்துவிட்ட ஒருத்தன்தான் காசியா? அவனுக்கு வாசிப்பு வரமாக அமையாமல் போனதேன்.? என்பதே இக்கதையை படித்து முடித்ததும் எனக்குள் எழுந்த கேள்வி. முற்றாக அகவுலகத்தில் வாழ்ந்தாலும் நம் வேர் புறஉலகத்தில் சஞ்சலமற்று நிலைத்துநிற்கும் விதத்தில் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே காசி நமக்கு அளிக்கும் பாடம். அந்தவிதத்தில் இச்சிறுகதை மிக முக்கியமானது. இலக்கியம் நோய்க்கு மருந்துதான். மருந்தின் பக்கவிளைவுகளைப் பற்றிய கதை இது. மனிதனாக இருப்பதே ஒரு நோய்தான் என்கிறார் ஓஷோ.

இக்கதை மீனுக்குள் கடல் என்கிற தொகுதியில் உள்ளது. மிகக் குறைவாகவும் மிகச்செறிவாகவும் எழுதிய நம் முன்னோடிகளில் பாதசாரி முக்கியமானவர். தமிழினியின் பருவகாலத்தில் வெளியிடப்பட்ட தொகுப்பு.  

(காமம் செப்பாது கண்டது மொழிமோ- இராயகிரி சங்கர்  தொகைநுாலில் இருந்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *